செவ்வாய், 10 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 2


3-12-13 அன்று, அரசிடம் இருந்து அறிவுறுத்தல் தெரிவிக்க கால அவகாசம் தேவைப்படும் என, அரசு வழக்கறிஞர் தெரிவித்ததால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் தொடர்ந்தனர்.


ஆறுமுக சாமிக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா,
பொது தீட்சிதர்களின் முறையற்ற கோவில்  நிர்வாகத்தால், இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 45ன் கீழ், ஆணையர் பிறப்பித்த செயல் அலுவலர் நியமனம் செல்லும்.
பொது தீட்சிதர்கள், சிதம்பரம் கோவிலை நிறுவவில்லை என்பதால், அதனை நிர்வாகம் செய்யும் உரிமையை அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 26 வழங்கும் பாதுகாப்பின் கீழ், பெற முடியாது. அதற்கு அவர்களுக்கு தகுதி இல்லை.
என வாதிட்டார்.

நீதிபதிகள் குறுக்கிட்டு,
பொது தீட்சிதர்கள், கோயிலின் உரிமையாளர்கள் என்ற தகுதி, பிரிவு 26ன் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பிற்கு தேவையற்றது. 
 சொத்துரிமையை நிரூபித்தால் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும் என்பது போன்ற விதிகளை, அரசியல் நிர்ணய சட்டம் எப்போதும் கூறவில்லை.
மேலும், முந்தைய வழக்கில், பிரிவு 26ன் படி, பொது தீட்சிதர்கள், சீர்மரபினர் என, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதனையும், கோயில் நிர்வாக உரிமையையும், பிரிவு 26 விதிக்கும் தடையை நீக்கினால் மட்டுமே, பறிக்க முடியும். 
ஆனால், பிரிவு 26ன் கீழ் அவர்கள் சீர்மரபினர் என்ற பிரிவுக்குள் வருவதால், அவர்களது நிர்வாக உரிமையைப்  பறித்து, செயல் அலுவலர் நிர்வாகம் செய்ய சட்டத்தில் இடம் இல்லை.
என, கூறினர்.

ஆனால், தனி நீதிபதி தனது தீர்ப்பில், பொது தீட்சிதர்களும், செயல் அலுவலரும் இணைந்து செய்யும், இணை நிர்வாகம் ஒன்றை உருவாக்கவும் அதற்கு, 19 விதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வழக்கறிஞர் கூறினார்.

அவற்றை வாசிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

அவை படித்துக் காட்டப்பட்ட உடன், 19 விதிகளில், பொது தீட்சிதர்களுக்கு இடம் எங்குள்ளது என்றும், அவர்களிடம் எந்த நிர்வாக உரிமை  மீதம் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினர்.
பொது தீட்சிதர்கள், கோயில் நிலங்களை விற்றதாக உள்ள குற்றச்சாட்டின் மீது, 1987ல் இருந்து விசாரணை செய்து, உண்மை கண்டறியப்பட்டு, நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டதா?
கோயில் நகைகள் களவு பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
அவ்வாறு எந்தவித விசாரணையும் செய்யாமல், குற்றச்சாட்டுகளை எந்த வகையில் நிரூபிக்கப்பட்ட குற்றம் என்று கருத முடியும்?
என்று கேட்டனர்.

வழக்கறிஞர் துருவ்மேத்தா, தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புகளை படித்துக் காட்டி, திரும்ப திரும்ப அவரது வாதத்தை மீண்டும் மீண்டும் எடுத்துரைத்தார்.

இந்து சமய அறநிலையத் துறை சட்டப் பிரிவு 107,  சீர் மரபினருக்கு தனது சட்டத்தில் இருந்து விலக்கு அளித்துள்ளதால், அதனை மீறி, பிரிவு 45ன் கீழ், செயல் அலுவலரை எவ்வாறு நியமனம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு,
பிரிவு 45 ஐயும், பிரிவு 107 ஐயும், இணைந்து செயல்படுத்த முடியும். பிரிவு 107, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 26, சொல்வதைத் திரும்பச் சொல்வதால், அது, அறநிலைய சட்டத்திற்கே  மிகுதியானது.
பிரிவு 45 உம், பிரிவு 107 உம், சட்டத்தில் உள்ள மற்ற பிரிவுகளுக்கு அப்பாற்பட்டது என்ற வாசகத்துடன் துவங்குவதால், இரண்டையும் இணைத்து பயன்படுத்த முடியும். அதனால் முரண்பட்ட சட்ட விளைவு நேராது
என, துருவ்மேத்தா வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள்,
பிரிவு 45, எந்த காலம் வரை செயல்அலுவலர், பொறுப்பில் இருப்பார் என, காலவரையறை குறிப்பிடவில்லையே?
சாதாரணமாக, கூட்டுறவு சங்கங்களுக்கு நியமனம் செய்யப்படும் அதிகாரிகளுக்குக் கூட காலவரையறை குறிப்பிடப்படுகிறதே! 
1987ல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், காலவரையறை குறிப்பிடப்படாமல் உள்ளதே? நிரந்தரமாக எந்த நிர்வாகத்தையும் அரசு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? 
1987 உத்தரவு, எந்த வகையில் சட்டரீதியாக செல்லும்? 
என, கேட்டனர்.

ஆறுமுக சாமிக்கு வாதாடிய மற்றொரு வழக்கறிஞர் கான்சால்வேஸ்,
1951ல் வழங்கப்பட்ட தீர்ப்பில், தேவையற்ற வகையில், பொது தீட்சிதர்கள், சீர்மரபினர் என தவறாக தீர்ப்ப வழங்கப்பட்டு விட்டது.
காசி விஸ்வநாதர் கோயில் வழக்கின் தீர்ப்பு மற்றும் இதர உச்சநீதிமன்ற தீர்ப்புகள் படி, பொது தீட்சிதர்கள் சிவனை வழிபடுவதாலும், எந்த ஒரு குருவின் கீழும் இல்லாத பிரிவினர் என்பதாலும், அவர்களை சீர்மரபினர் என கருத இயலாது
என, வாதிட்டார்.

அவருக்கு பதிலளித்த நீதிபதிகள்,
சீர்மரபினர் என்ற அரசியல் நிர்ணய சட்ட பாதுகாப்பு பெற்ற விளக்கமே, மேலை நாடுகளில் இருந்து பெறப்பட்டது.  பிராட்டஸ்டன்ட் வகுப்பினர் சீர்மரபினரா? 
என, கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து, பிரிவு 45ல் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைக்கும் விதி எங்கு உள்ளது என்று கேட்டனர். அதற்கு அரசு தரப்பால் பதில் அளிக்க முடியவில்லை.

பொது தீட்சிதர்களின் வழக்கறிஞர் வெங்கட்ரமணி எழுந்து, அந்த மாதிரி எந்த விதியும் இல்லை என, தெரிவித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அந்த தகவலை தாங்களே கண்டறிந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், அப்படி ஒரு பிரிவு இருந்தால் அதை தெரிவிக்கும்படியும், அரசு தரப்பிடம் கேட்டுக் கொண்டனர்.

இது, பிரிவு 45ன் முக்கிய குறைபாடு என்றும் குறிப்பிட்டனர்.

இந்து மதத்தின் முக்கியத்துவம், அதன் எல்லா பிரிவுகளையும் உள்ளடக்கி கொள்ளும் விசேஷ தன்மை ஆகியவற்றை நீதிபதி பாப்டே, கூறினார். கான்சால்வேஸ் அதை ஏற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate