திங்கள், 9 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? சுப்ரீம் கோர்ட் விவாதங்கள் - 1


(சிதம்பரம் கோவிலை எப்படியாவது, தன் வசப்படுத்தி விட வேண்டும் என, தமிழக அரசும், அறநிலையத் துறையும் கங்கணம் கட்டி கொண்டிருக்கின்றன.

அதை முன்னிட்டு, தமிழ்த் தேசியம் பேசுவோர், முற்போக்குவாதிகள், நடுநிலையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என, அனைவரும், தில்லை தீட்சிதர்களைக் குறிவைத்து தாக்கத் துவங்கியுள்ளனர்.



2009ல் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில், அரசு சிதம்பரம் கோவிலை தனது கையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கியது.



அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில், சுப்ரீம்கோர்ட்டில், 26-11-13 முதல் 5-12-13 வரை இறுதிவிசாரணை நடந்து முடிந்துள்ளது.

அது தொடர்பாக, தமிழ், ஆங்கில நாளிதழ்களில், சில செய்திகள் வெளியாகின. அதைப் பார்த்து விட்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி, `தீட்சிதர்கள், இடையூறு விளைவிக்க எண்ணுகின்றனர். அதற்கு இன்றைய தமிழக அரசு துணைபோய்விடக் கூடாது என்பது தான் நம்முடைய விருப்பம்' என, லாவணி பாடியிருக்கிறார்.

சிதம்பரம் நடராஜர் கோவில், சிவனடியார்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கு சொந்தமானதுதான் என்பது, தீட்‌சிதர்களுக்கே உடன்பாடான கருத்து தான்.

அந்த கோவிலுக்குள் இன்று எந்த ஜாதியாரும் சென்று, நடராஜரை வழிபடலாம். அதற்கு தீட்சிதர்கள் தடைவிதிக்கவில்லை.

பூசைக்காலத்தின் போது மேடையில், பிராமணர்களுக்கே அனுமதி இல்லை என்னும் போது, ஆறுமுக சாமி போன்றோருக்கு மட்டும் எப்படி அனுமதி அளிக்க முடியும்?

இன்றும், தமிழகத்தில் நியமமாக நித்யாக்னி காரியம் நடக்கும் ஒரே கோயில்
சிதம்பரம் நடராஜர் கோவில் தான்.




இந்த வழக்கில்,  பத்திரிகைகளில் வேறு விதமாக செய்திகள் வெளிவந்தன. வழக்கின் போது உடனிருந்த என் நண்பர் ஒருவர், உண்மையில் நடந்த விவாதங்களை தொகுத்து என்னிடம் அளித்தார்.

அவற்றை அவரது அனுமதியின்பேரில், இங்கு பதிவிடுகிறேன். அரசும், அரசுத் துறைகளும், இந்துக்களுக்கு எதிராக எப்படி வீரதீரமாக செயல்படுகின்றன என்பதற்கு இந்த விவாதங்களே சான்று.

இங்கு நான் பதிவிட்டிருப்பது அவர் தந்த தொகுப்பின், செம்மைப்படுத்தப்பட்ட (எடிட்) வடிவம்.

இதே விஷயம் குறித்து, இன்று (9-12-13) தினமலர் சென்னை பதிப்பில் வெளியாகியுள்ள சிதம்பரம் கோவில் வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் சுவாரசியமான விவாதங்கள் என்ற தலைப்பிலான செய்தியிலும் காணலாம். )

உச்சநீதிமன்றத்தில், சுப்ரமணியம் சுவாமி, பொது தீட்சிதர்கள் தாக்கல் செய்தி சிறப்பு அனுமதி மனுக்கள், உரிமையியல் மேல்முறையீடாக மாற்றப்பட்டு, விசாரணை 26-11-13 அன்று துவங்கியது.

முதலில், சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்த சுப்ரமணியம் சுவாமி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்பு, பொது தீட்சிதர்களுக்கு சாதகமாக வழங்கப்பட்ட 1951ம் வருடத்திய தீர்ப்பு, பின் உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், தற்போது 2009ல் தீட்சிதர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது வழங்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு, முன் வழக்கு தீர்ப்பு தடை என்ற சட்ட கோட்பாட்டினால் பாதிக்கப்பட்டது என்று சுவாமி வாதிட்டு, அதற்கு ஆதரவாக உச்சநீதிமன்ற தீர்ப்புகளை அளித்தார்.

நீதிபதி பானுமதி 2009ல் வழங்கிய தீர்ப்பில், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டதை, நீதிபதிகள் சவுகான், பாப்டே ஆகியோர் சுட்டிக் காட்டி, அந்த வகையில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்ற தனி நீதிபதிக்கு சட்டத்தில் இடம் உள்ளதா, அதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும் என, கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு சார்பிலும் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இணைந்துள்ள தனிநபர்கள் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் துருவ் மேத்தா, சரியான பதில் அளிக்கவில்லை.

மேலும், துருவ் மேத்தா திரும்ப திரும்ப பல தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வாதிட்டுக் கொண்டிருந்தாரே தவிர, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அடிப்படை கேள்விகளுக்கு பதில்  அளிக்கவே இல்லை.

ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில், தீட்சிதர்கள் சீர்மரபினர் எனவும்,  சிதம்பரம் சபாநாயகர் கோவிலில் நிர்வாகம் செய்யும் உரிமை உள்ளவர்கள் எனவும் தீர்மானம் செய்யப்பட்டு விட்டது.
அந்த முடிவிற்கு எதிராக, பின்னால் நடந்த வழக்குகளில், அவற்றை மீண்டும் மறு ஆய்வு செய்வதற்கும், அதுபற்றிய விசாரணையை துவக்குவதற்கும் எந்த வழியில் சட்டத்தில் இடம் உள்ளது?
மேலும், 2,500 ஆண்டுகளாக, கோவிலை நிர்வாகம் செய்து வரும் சீர்மரபினர்களை, கோவிலில் அவர்களது உரிமையைப் பறித்து, செயல் அலுவலரை எந்த வகையில் நியமனம் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது?
தீட்சிதர்கள் தவறு இழைத்தால், அதை நடைமுறையில் உள்ள சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கும் உரிமை எப்போதும் அரசுக்கு உள்ளது. 
அந்த உரிமை, பொதுநிறுவனங்கள், பொது வழிபாட்டுக் கூடங்கள் ஆகியவற்றில் நடைபெறும் தவறினை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை. 
அந்த ஒழுங்குபடுத்தும் உரிமை உள்ளபோது பொது தீட்சிதர் என்ற சீர்மரபினர்களின் உரிமையைப் பறித்து கோவிலுக்கு செயல் அலுவலரை ஏன் நியமிக்க வேண்டும்?
விசாரணையை மிகவும் எளிதாகவும், சுருக்கமாகவும் முடிப்பதற்காக, தமிழக அரசை அணுகி ஒழுங்குபடுத்தும் உரிமை உள்ளதால், செயல் அலுவலரை நியமனம் செய்யும் உத்தரவை திரும்ப பெற்றுக் கொள்ளலாமா என்பதற்குரிய அறிவுரை பெற்று, 3-12-13 தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate