புதன், 11 டிசம்பர், 2013

சிதம்பரம் கோயில் வழக்கில் நடந்தது என்ன? - சுப்ரீம்கோர்ட் விவாதங்கள் - 3


பொது தீட்சிதர்களுக்கு வாதம் செய்ய, 5-12-13 அன்று பிற்பகலில் வாய்ப்பு தரப்பட்டது.

அவர்கள் சார்பில், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சி.எஸ்.வைத்தியநாதன், தற்போதைய சட்ட ஆணைய உறுப்பினர் கே.வெங்கட்ரமணி ஆகியோர் ஆஜராகினர்.


5-12-13 அன்று மதியம் விசாரணை துவங்கியது. முதலில் வாதாடிய வெங்கட்ரமணி,
பொது தீட்சிதர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் எந்தக் காலத்திலும்  நிரூபிக்கப்பட்டதில்லை. அவை குற்றச்சாட்டுகள் என்ற நிலையில் மட்டுமே உள்ளன.
1982 முதல் தொடர்ந்த குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. 1982 முதல், 2006 வரை, பல்வேறு காலகட்டங்களில், கூறப்பட்ட  குற்றச்சாட்டுகள் வேறுபட்டுள்ளன.
என, தெரிவித்தார்.

அப்போது நீதிபதி பாப்டே,
1951க்குப்பின், 1982ல் தான் அறநிலையத் துறை குற்றம் சுமத்தியதா?
என கேள்வி கேட்டு விளக்கத்தினைப் பெற்றார்.

தொடர்ந்து பேசிய வெங்கட்ரமணி,
எவ்வளவு சிறிய சீர்மரபினராக இருந்தாலும் அவர்களது பாரம்பரிய பழக்க வழக்கங்கையும் மத ரீதியான உரிமைகளையும் எந்த ஒரு பெரும்பான்மையானவர்களும் அடக்குவதற்கோ, பறிப்பதற்கோ உரிமை இல்லை.
அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு  26ன், அ,ஆ, இ மற்றும் ஈ உட்பிரிவுகள் தனித்தனியாகத்தான் கையாளப்பட வேண்டும்.
பிரிவு 26 இ மற்றும் ஈ மட்டுமே சேர்ந்து பார்க்கப்படும். பிரிவு 26 இ மற்றும் ஈ, குறிப்பிட்ட மத நிறுவனத்தை நிறுவ வேண்டும் என்று கூறுவது, 2,500 ஆண்டுகளாக கோயிலை நிர்வாகம் செய்து வரும் பொது தீட்சிதர்களுக்குப் பொருந்தாது.
எப்படி பார்த்தாலும், பிரிவு 26 அளிக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பொது தீட்சிதர்கள் போன்ற சீர்மரபினருக்கு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பொருந்தாது.
பிரிவு 107, பொது தீட்சிதர்களுக்கு அறநிலையத் துறை சட்டம் பொருந்தாது என விலக்கு அளித்துள்ளதால், பிரிவு 45ன் கீழ் நியமிக்கப்பட்ட செயல் அலுவலரின் உத்தரவு பொது தீட்சிதர்களைக் கட்டுப்படுத்தாது.
செயல் அலுவலரை நியமிக்க, மற்ற பிரிவுகள் சட்டத்தில் உள்ள போது, அந்த சட்டப் பிரிவுகளில் இயற்கை நீதி மேல் முறையீட்டு வாய்ப்பு, உரிமையியல் வழக்கு மூலம் எதிர் கொள்தல் ஆகிய அடிப்படை சட்ட பாதுகாப்புகள் உள்ளதால், அவற்றை தவிர்த்து, பிரிவு 45ஐ மட்டுமே பயன்படுத்தி, கோயில்களை அறநிலையத் துறை அறமற்ற வகையில் சட்டவிரோதமாக எடுத்துக் கொண்டு வருகிறது.
என, வாதிட்டார்.

அதையடுத்து, வழக்குடன் இணைக்கப்பட்ட பிரிவு 45ஐ, அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 32ன் கீழ் எதிர்த்து, பொது தீட்சிதர்களின் நீதிப்பேராணை மனு 544/2009 ஐ, வழக்கறிஞர் வைத்தியநாதனின் வேண்டுகோளின்படி, உச்சநீதிமன்றத்தில், இந்து சமய அறநிலையச் சட்டத்தினை எதிர்த்து, தயானந்த சரஸ்வதி தாக்கல் செய்த நீதிப் பேராணை வழக்கு எண் 476/2013 உடன் இணைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

(முடிந்தது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate