செவ்வாய், 17 டிசம்பர், 2013

மார்கழி பஜனை - பேட்டையில் உற்சாகம்


2004 அல்லது 2005ம் ஆண்டு என நினைக்கிறேன், பேட்டையில், மார்கழி மாத பஜனையை ஆரம்பிக்கலாமே என, எனக்கு தோன்றிற்று.

1960-70களில், பேட்டையில் அப்போதிருந்த பெரியவர்கள் சிலர், பத்து பதினைந்து பேர், மார்கழி மாத பஜனையை நிகழ்த்தினர் என நான் கேள்விப்பட்டிருந்தேன். அவர்கள் என்ன பாடிச் சென்றனர் என்பது எனக்குத் தெரியவில்லை.



பால்வண்ணநாதர்

ஒப்பனாம்பிகை

ஆனால் இந்த முறை நான் தீர்மானமாக இருந்தேன்; மார்கழி மாத பஜனையில், திருமுறை மட்டும் தான் இடம் பெற வேண்டும்; திருவாதிரை பத்து நாட்களில், திருப்பள்ளியெழுச்சியும், திருவெம்பாவையும் இடம் பெற வேண்டும் என்‌று.

முதலில், மீனாட்சி சுந்தரம்  அண்ணனிடம் கேட்டேன், `நான் மட்டுமாவது வீதியில் பாடிக் கொண்டு செல்லத் தயார். என்னுடன் வருகிறீர்களா?' என.

உண்மையில் நான் அப்போது அந்த மனநிலையில் உறுதியுடன் இருந்தேன். மீனாட்சி அண்ணன் உடனே உற்சாகமாக,`ஏ! என்னடே கேள்வி இது? நானும் வாரம்ப்பா` என்றார்.

அந்த ஆண்டு, மார்கழி மாதப் பிறப்பன்று, நான், மீனாட்சி சுந்தரம் அண்ணன் இருவரும் மட்டும், திருமுறையை தாளமிட்டுப் பாடிக் கொண்டு, இரண்டு தெருக்கள் வழியாக வந்தோம்.

தகவல் பரவியது. மறுநாள், எங்களுடன் மேலும் மூன்று பெண்கள் இணைந்து  கொண்டனர்.

அடுத்தடுத்த நாட்களில், சிறுவர்கள் சிறிது சிறிதாக பஜனையில் சேர்ந்து கொண்டனர். அந்த ஆண்டே, கிட்டத்தட்ட ஐம்பது சிறுவர்கள் பங்கேற்றனர்.

அடுத்தாண்டில், அது நுாறைத் தாண்டியது. 2007ல் நான் சென்னைக்கு வந்தேன். இன்று வரை, மார்கழி பஜனையை, மீனாட்சி அண்ணன், உற்சாகமாக நடத்தி வருகிறார்.

நேற்று மாதப் பிறப்பன்று அதிகாலை, 5.00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து, 5.30 மணிக்கு கோயிலுக்குச் சென்றேன். அப்போதே 25க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், மற்ற நபர்கள் வந்திருந்தனர்.

அதிகாலையில் வெள்ளை சார்த்தியில் வீதியுலா சென்றிருந்த நடராஜரும் அப்போதே கோயில் திரும்பிவிட்டார்.

அதன் பின், பஜனை தொடங்கியது. இந்த முறை, சிறுமியர்கள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். சிறுவர்களைக் கட்டுப்படுத்தி, கூட்டத்திற்குள் கொண்டு வருவதுதான், சவாலான விஷயம்.

அதை, மாரிமுத்து, உலகநாதன் கவனித்துக் கொண்டனர். கோயில் வீதியுலா பாதை தான், பஜனைப் பாதையும். அதில், ஒரு குறிப்பிட்ட துாரத்திற்கு பேருந்து செல்லும் சாலை உள்ளது.

நேற்று, அந்த சாலையில், சிறுவர்களை பதனமாகக் கூட்டிக் கொண்டு போனது, கொஞ்சம் சிக்கல் பிடித்த காரியமாகத் தான் இருந்தது.

எல்லா சிறுவர்களும், திருப்பள்ளியெழுச்சியையும், திருவெம்பாவையையும் மனனமாகப் பாடினர், பூபாளத்தில்.

டவுசர் போட்டிருந்த சிறுவர்களுக்கு, மாரிமுத்து கோயில்  பட்டுகளை எடுத்து உடுத்தக் கொடுத்தார். பளபளவென பட்டுடுத்தி, நீறும், கண்டிகையும் அணிந்த சிறுவர்கள் நான்கைந்து பேர் வரிசையில் முன்னணியில் நிற்க மற்றவர்கள் பின்னால் அணிவகுக்க, நேற்றைய பஜனை, வெகுசிறப்பாக நடந்தது.

கோயில் வாசலில்  ஒரு சிறுவன் என்னிடம்,`எண்ணே! அப்பா  வேட்டி கட்டிட்டு வரலாமா?' என்றான்.

`தாராளமா'

`வேட்டி இல்லேன்னா?'

`துண்டு கட்டிட்டு வா'

`சரி'

மற்றொரு சிறுவன், மீனாட்சி அண்ணனை கொடிமரம் அருகில் வழிமறித்து, `மீனாட்சி மாமா! போன வருஷம், பஜனைய லேட்டாத்தானே  முடிச்சியோ. இன்னிக்கு ஏன் ஆறரைக்கே  முடிச்சிட்டியோ?' என்றான்.

`ஏல, வழில யாரும் பால் கொடுக்கலை. பிள்ளேள்ளாம் வேகமா வந்துட்டுல்லா!'

இந்த பதில் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவன் அடிக்கடி குறுக்கு கேள்விகள்  கேட்டு துளைத்தெடுப்பான் என, அண்ணன் என்னிடம் சொன்னார்.

மொத்தத்தில் எனக்கு, பேரானந்தம். இந்த சிறுவர்களுக்கு சமயக் கல்வியை முறையாக கற்றுக் கொடுத்தால் அவர்கள் தான், நாளைய நமது செல்வம்.

கீழே, பஜனைப் படங்களைப் பார்க்கலாம்.

கொடிமரம் முன்பு ஆஜர். உடன் மீனாட்சிஅண்ணன்

கோயில் வாசலில், சிறுவர்களை ஒழுங்குபடுத்துகிறார் மாரிமுத்து

உச்சினிமாகாளி அம்மன் கோயில் முன்பு. (இடமிருந்து) உலகநாதன், ஆறுமுகம், சிறுவர்கள், மாரிமுத்து, மீனாட்சி சுந்தரம்



1 கருத்து:

  1. கண்கொள்ளாக் காட்சி...கலந்து பண்களைக் கேட்கும் ஆசை எல்லை மீறுகிறது..

    பதிலளிநீக்கு

Translate