சனி, 23 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 1


தினமலர் நாளிதழின் இணை ஆசிரியரின் அனுமதியின் பேரில், நான், என்னுடன் பணியாற்றும் கிராபிக்ஸ் டிசைனர் கார்த்திக், புகைப்பட கலைஞர் சத்திய சீலன் மூவரும் கும்பமேளாவில் பங்கேற்க அலஹாபாத் சென்றோம்.

அந்த அனுபவங்களை தனித்தனியாக பதிவிடுவேன்.அதற்கு முன்பாக தினமலர் நாளிதழில் கும்பமேளா தொடர்பாக வெளிவந்த எனது செய்திகளை இங்கே அடுத்தடுத்து பதிவிடுகிறேன்.

தை அமாவாசைக்கு தயாராகிறது அலகாபாத்

(பிப்ரவரி 08, 2013)

கும்பமேளாவின் முக்கிய தினமான, வரும் 10ம் தேதி, தை அமாவாசையை முன்னிட்டு, இந்தியா முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் அலகாபாத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்தியாவின் முக்கிய விழாக்களில் ஒன்றான கும்பமேளா, கடந்த ஜன., 15ம் தேதி துவங்கியது. மொத்தம், 55 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் மிக முக்கிய நீராடல் தினமான, தை அமாவாசை , வரும் 10ம் தேதி வர உள்ளது.

3 கோடி பேர் :

அன்றைய தினம், மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் நீராடலுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுவதால், போதிய பாதுகாப்பு, அடிப்படை வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கும்பமேளாவிற்காக, கங்கை கரையில் மொத்தம் 4,700 ஏக்கர் பரப்பளவு, 14
செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இது கும்பமேளா சேத்திரம் எனப்படுகிறது.

இந்த செக்டார்களில் ஆயிரக்கணக்கான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், நூற்றுக்கணக்கான துறவு சம்பிரதாயங்களை சேர்ந்தோரின் கூடாரங்கள், திரிவேணி சங்கமத்தின் அருகில் இடம் பெற்றுள்ளன.

திரிவேணி சங்கமத்தின் வடக்கில் பல கி.மீ., தூரம் முன்பே துவங்கும் இந்த கூடாரங்கள், சங்கமத்திற்கு தெற்கிலும் பரவியுள்ளன. கூடாரங்கள் பல சேர்ந்து ஒரு வளாகமாக உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் உள்ளேயே அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை, குளியலறை, சமையலறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

சங்கமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், வடஇந்திய துறவு மரபை சேர்ந்த, 10 அகாடாக்கள் மற்றும் பிற துறவு பிரிவுகளை சேர்ந்த துறவிகளின் கூடாரங்கள், அருகருகே அமைந்துள்ளன.

துறவிகளின் அணிவகுப்பு :

இந்த கூடாரங்களில், தங்கியிருப்போர் அதிகாலை 3:00 மணி முதல் கங்கையில் குளியலை துவங்கி விடுகின்றனர்.

அந்தந்த துறவு மரபை சேர்ந்த துறவிகள், கொடிகளுடன் வரிசையாக கங்கைக்கு நீராட செல்லும் காட்சியை காண்பதற்காகவே, கடுமையான பனி கொட்டும் அதிகாலையிலும், பாதைகளின் இருபுறமும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வரிசையாக நிற்கின்றனர்.

செக்டார்களின் மைய பகுதிகளில் செல்லும் பாதைகளில், சி.ஆர்.பி.எப்., வீரர்கள் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களும், போலீச õரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர்.

ரூ.20,000 நதிக்கரையின் ஒரு புறம் கழிவுநீர், குளம்போல் தேங்கியிருப்பதால், வாகனம் மூலம், தினசரி மாலையில், கொசு மருந்து புகை அடிக்கப்படுகிறது.

தை அமாவாசைக்காக, அலகாபாத்தில் உள்ள தங்குமிடங்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இதற்காக, கங்கை கரையின் இருபுறமும் உள்ள தங்குமிடங்களில், வாடகைக்கு வசிப்போரை, தற்காலிகமாக இடம் மாற்றி விட்டு, அந்த அறைகளை யாத்ரீகர்களுக்கு அதிக தொகைக்கு வாடகை விடுகின்றனர்.

இதனால், ச õதாரண நாட்களில், 200, 300, 400 ரூபாய் வாடகைக்கு கிடைத்த இடங்கள், தற்போது 2,000 முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரை வாடகைக்கு விடப்படுகின்றன.

 இந்த அறைகளிலும், ஓட்டல்கள் போல் பல்வேறு வசதிகள் இருக்காது. பெரும்பாலான இடங்களில், பலருக்கு, ஒரு கழிப்பறை என்ற ரீதியில் தான் இருக்கின்றன.

தர்ம சத்திரங்கள் :

இருப்பினும், அலகாபாத்தின் பிரயாகை ஒரு புண்ணிய தலம் என்பதால், இங்கு தர்மச õலா என்ற பெயரில் பல ச த்திரங்கள் இயங்குகின்றன.

இவை பல நூற்றாண்டுகளாக அலகாபாத்தில் தொடர்ந்து செ யல்பட்டு வருகின்றன. இவற்றில் மிக குறைந்த வாடகைக்கு தங்கும் இடங்கள் கிடைக்கின்றன.

ஆனால், பெரும்பாலான ஏழை யாத்ரீகர்கள், கங்கை கரையின் இருபுறமும் உள்ள பாதையோரங்களில் குடும்பத்துடன் தங்கி கொள்கின்றனர்.

பூரி, கிழங்கு :

கும்பமேளா நடக்கும் செக்டார்களில், நூற்றுக்கணக்கானோர் அன்னதானம் செய்து வருகின்றனர்.

அன்னதானத்தில், பூரி, கிழங்கு, சப்பாத்தி, சப்ஜி எனப்படும் பருப்புடன் கூடிய கிழங்கு ஆகியவை யாத்ரீகர்களுக்கு வழங்கப்படுகின்றன. அனைத்து தரப்பினரும் இவற்றை வாங்கி உண்பதை புண்ணியமாக கருதுகின்றனர்.

இது தவிர துறவிகளின் கூடாரங்களிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 

1 கருத்து:

Translate