திங்கள், 17 டிசம்பர், 2012

அறுபத்து மூவர் விழாவும் அறியப்படாத உண்மைகளும்


மயிலாப்பூர் என்றாலே நினைவுக்கு வருவது அறுபத்து மூவர் விழா தான். தமிழகத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளும் விழாக்களாக, சமய விழாக்கள் வளர்ந்ததன் பின்னணியில் தான் இந்த அறுபத்து மூவர் விழாவையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கல் திருமேனிகள்

கி.பி.,7ம் நுõற்றாண்டில் உருவான பக்தி இயக்கத்தின் உச்சக்கட்டமான சோழப் பேரரசு காலத்தில், அனைத்து சிவாலயங்களிலும் அறுபத்து மூவர் கல் திருமேனிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருவிழாக்களில் அவர்களின் உற்சவ திருமேனிகள் வீதியுலா வந்தன.

இவ்வகையில், பழைய கபாலீச்சரத்திலும், அறுபத்து மூவர் உற்சவ திருமேனிகள் இருந்து வீதியுலாவும் நடந்திருக்கக் கூடும். மயிலை அறுபத்து மூவர் விழாவுக்கு கிடைத்துள்ள பிரபலம் குறித்த தொன்மையான இலக்கிய குறிப்புகளோ, கல்வெட்டுகளோ இதுவரை கிடைத்ததாக தெரியவில்லை.

இப்போதைய கபாலீசுவரர் கோயில் கட்டப்பட்ட பின், குன்றக்குடி ஆதீனத்தின் அமிர்தலிங்கத் தம்பிரானால் எழுதப்பட்ட மயிலைத் தலபுராணத்திலும், அதன் பின் மயிலை நாதமுனி முதலியாரால் இயற்றப்பட்ட மயிலைத் தலபுராணத்திலும் அறுபத்து மூவர் விழா பற்றிய குறிப்புகள் இல்லை.

விழா முக்கியத்துவம்

அங்கம் பூம்பாவையாக்கிய வரலாற்றைக் குறிப்பிடும் நாதமுனி முதலியார், அறுபத்து மூவர் விழா பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அமிர்தலிங்கத் தம்பிரான் இரண்டையுமே குறிப்பிடவில்லை.

எனினும், பிற்காலத்தில் மயிலைத் தலத்தின் மீது பாடப்பட்ட பல்வேறு சிற்றிலக்கியங்களில் இவ்விழா பற்றி குறிப்பு இருக்க வாய்ப்புள்ளது. அதன் அடிப்படையில், இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்த விழாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

கபாலீசுவரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் ஆகிய மூவர் மீதும் பல்வேறு இலக்கியங்கள் உருவாகியுள்ளன என்றாலும், அறுபத்து மூவர் விழா பற்றி தனியார் ஓர் இலக்கியம் உருவாகவில்லை.

அதேநேரம், குஜிலி இலக்கியம் என்று சொல்லப்படும் சிந்து, நொண்டி நாடகம் போன்ற வெகுஜன இலக்கியங்களில் இவ்விழா பதிவாகியிருக்கிறது.

ஓவிய காட்சி

கடந்த 1852ல் மயிலைத் தெற்கு குளக்கரையில் சித்திரச் சத்திரத்தைக் கட்டிய வியாசர்பாடி விநாயக முதலியார், தமது சத்திரத்தில் அறுபத்து மூவர் விழா பற்றிய ஓவியங்களையும் வரையச் செய்துள்ளார்.

அதில், அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதத்தைக் காண அறுபத்து மூவரும் எழுந்தருளியதாக காட்டப்பட்டுள்ளது. இதுதான் இன்றும் இவ்விழாவின் பின்னணியாகக் கூறப்பட்டு வருகிறது.

கடந்த 1888ல், திருப்பாற்றுõர் சின்னையா நாடர் பிரஸ் என்ற பதிப்பகம் வெளியிட்ட, திருமயிலை அறுபத்து மூவர் வழிநடைச் சிந்து என்ற, இரண்டு பக்க குஜிலி இலக்கியம், இவ்விழாவிற்காகவே பாடப்பட்டது.

இவ்விழாவிற்கு அந்தக் காலத்திலேயே வடசென்னையில் இருந்து மக்கள் வண்டி கட்டி மயிலைக்கு வந்துள்ளனர் என்பதை சிந்து குறிப்பிடுகிறது.

இதில், கணவன், மனைவி இருவரும் வடசென்னையின் செங்கான்கடை என்ற இடத்தில் இருந்து புறப்பட்டு மயிலைக்கு வருகின்றனர். வரும் வழியில் உள்ள முக்கிய பிரபலமான இடங்களை மனைவிக்கு, கணவன் காட்டி விவரித்துக் கொண்டே வருகின்றான்.

புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அருணாசலேசுவரர் கோயில், அதற்கடுத்த தர்மராஜா கோயில், யானை கவுனி, சிந்தாதிரிப்பேட்டை பாலம், கடைத் தெரு, ராயப்பேட்டை, அம்பட்டன் வாராவதி, அப்பர் மடம் ஆகிய இடங்கள் வழியாக இருவரும் வருகின்றனர்.

நுõல் குறிப்புகள்

இறுதியில் மயிலைக்கு வந்து அறுபத்து மூவர் விழாவைக் கண்டுகளிக்கின்றனர். நுõலின் துவக்கத்தில்,"அறுபத்து மூவரையும் அங்கம் பூம்பாவையையும், கபாலீசர் வருகிற காட்சியையும் காணலாம்...' எனச் சொல்லும் கணவன், முடிவில்,"மயிலை நகர் வந்தோம்... கபாலீசர் வருகிறார் பார் தங்கமே கண்டு தரிசிப்பாய்' என மனைவிக்கு அறிவுறுத்தி வழிபடுகிறான்.

இந்த அரிய சிறுநுõலை, ஏ.கே.செட்டியார் தமது "தமிழ்நாடு' என்ற பயணத் தொகுப்பு நுõலில் சேர்த்து வெளியிட்டுள்ளார். அதேபோல், 1911ல் ஜெனரல் பப்ளிஷர்ஸ் கம்பெனி என்ற பெயரில் செயல்பட்ட பதிப்பகம் ஒன்று, மயிலை கபாலீசுவரர் கோயில் பற்றி வெளியிட்ட சிறு நுõலில், அறுபத்து மூவர் விழா எவ்விதம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது என்பதும், வடசென்னை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் குவிவதும், காணும் இடமெல்லாம், நீர், மோர், உணவு தானம் நடப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் உலா

மேலும், 1906 அல்லது 1907ல் இருந்து தான், அறுபத்து மூவர் விழாவில், திருவள்ளுவரின் உற்சவ திருமேனியும் சேர்ந்து உலா வந்தது என்பதும் இந்நுõலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிறுவனமயமாக்கப்பட்ட சைவ சமயத்தின் பல விழாக்கள், கோயில் சார்ந்த இடங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டாலும், அவை குறிப்பிட்ட வட்டத்தைத் தாண்டி பல தரப்பு மக்களையும் ஈர்க்கக் கூடிய வலிமை பெற்றிருக்கின்றன.

சங்கரன்கோயில் ஆடித் தபசு, ஆழ்வார் திருநகரி 11 கருட சேவை, ஸ்ரீவில்லிபுத்துõர் ஆடிப்பூர விழா, போன்றவை போல, மயிலை அறுபத்து மூவர் விழாவும் வெகுஜன விழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது என்பதையே இத்தகவல்கள் காட்டுகின்றன.

(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 5-4-12)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate