திங்கள், 25 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 3


3 கோடி பக்தர்கள் கங்கையில் புனித நீராடல்
பாகுபாடின்றி மக்கள் சங்கமித்தனர்
(பிப்ரவரி 11, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில், தை அமாவாசை புனித நீராடலில், 3 கோடி மக்கள் பங்கேற்றனர். அதிகாலையில், ஆயிரக்கணக்கான நாகா சாதுக்கள், கங்கையில் நீராடி அணிவகுப்பாக நடந்து சென்ற காட்சி, மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

உ.பி., மாநிலம் அலகாபாத், பிரயாகையில் கடந்த, ஜன., 14ம் தேதி துவங்கிய கும்பமேளா, வரும் மார்ச், 10ம் தேதி வரை நடக்கிறது.கும்பமேளாவின் உச்சக்கட்டமான, தை அமாவாசை நீராடல், நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கரையை காணவில்லை:

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் குவிந்த, 3 கோடி பேர், இந்த நீராடலில் நேற்று பங்கேற்றனர். நேற்று மட்டும், 2 கோடி பேர், அலகாபாத்திற்கு வந்தனர். அரசியல் லாபம் அல்லது அதிகாரம் இன்றி, எல்லாத்தரப்பு மக்களும் பங்கேற்றனர்.

யாத்ரீகர்கள் கூட்டத்தில், கங்கை கரையே காணாமல் போனது போன்ற, தோற்றம் ஏற்பட்டது.

கடும் குளிருக்கும், கொட்டும் பனிக்கும் அசராத மக்கள், தங்கள் குடும்பங்களுடன், கங்கை கரையில், ஆங்காங்கே வெட்ட வெளியில் தங்கினர்.

நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு, துறவிகளின் நீராடல் துவங்கும் என, மாநில அரசு அறிவித்திருந்தது. எனினும், நேற்று அதிகாலை, 3:00 மணி முதலே, மக்கள் கங்கையில் நீராட துவங்கினர்.

சரியாக, 5:30 மணிக்கு, மகாநிர்வாணி அகாடாவை சேர்ந்த, நாகா சாதுக்கள், ஊர்வலமாக கங்கை கரைக்கு வந்தனர்.

குழப்பம் இல்லை:

துறவிகள், தங்கள் முகாம்களில் இருந்து புறப்பட்டு, திரிவேணி சங்கமத்தை அடையும் வரையிலான பாதைகள், முன்பே கும்பமேளா நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்ததால், துறவிகளின் ஊர்வலம் எவ்வித குழப்பமுமின்றி, திரிவேணி சங்கமத்தை அடைந்தது.

இந்த நீராடல் புனிதமானது என்பதால், துறவிகள் தங்கள் முகாம்களிலேயே, முதலில் நீராடி விட்டு, பின் கங்கைக்கு வந்து, ஓரிரு முறை முழுக்குகள் போட்ட பின், ஈர உடையுடன் கரையேறினர்.

நீராடிய பின், மகா மண்டலேஸ்வரர்கள் எனப்படும், துறவிகளின் தலைவர்கள், அலங்கரிக்கப்பட்ட ரதங்களில், பல்வேறு பாதைகள் வழியாக சென்று, தங்கள் முகாம்களை அடைந்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் வழியெங்கும் கூடி நின்று, அணிவகுத்து செல்லும் துறவிகளுக்கு, வணக்கம் செலுத்தி வழிபட்டனர். கூட்டமாக கங்கையில் நீராடி, தங்கள் முகாம்களுக்கு திரும்பினர்.

நாகா சாதுக்கள், துறவிகள், மக்கள் ஆகியோரின் புனித நீராடல் நேற்று மாலை வரை தொடர்ந்து நடந்தது.

கங்கை கரையில், பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என்ற மாநில அரசின் உத்தரவு, கெடுபிடியாக கடைப்பிடிக்கப் பட்டதால், கோடிக்கணக்கான மக்கள் குவிந்த போதும் கூட, கரையிலோ, கங்கையிலோ, ஒரு பிளாஸ்டிக் பையை கூட, காண முடியவில்லை.

வெளிநாட்டினர்:

தை அமாவாசை அன்று, நீராடுவதற்காக, பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், அரியானா, பஞ்சாப், தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட, வெளிநாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

இவர்களில், உ.பி., மாநிலத்தின், எழுத்தறிவில்லாத, ஏழை விவசாயிகளே, அதிகம். அவர்கள் தங்கள் குடும்ப பெண்கள், குழந்தைகள், முதியோருடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க, உற்சாகமாக வந்திருந்தனர்.

ஆடம்பரமாக வலம் வந்த நித்தி:

கும்பமேளாவின் நேற்றைய முக்கிய நீராடலின் போது, பிரதான அமைப்பான மகாநிர்வாணி அகாடா உள்ளிட்ட, பல்வேறு அகாடாக்களின் துறவிகள், மிக எளிமையாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் கங்கை கரைக்கு வந்தனர்.

ஆனால், "10 வது செக்டாரில்' தங்கியிருந்த நித்தி, தங்க பல்லக்கில், தங்க கிரீடம் அணிந்து, இருபுறமும், வெள்ளியில் செய்யப்பட்ட சூலங்கள், கதை, வேல், கத்தி, வஜ்ராயுதம், மணிகள் பொருத்தப்பட்ட தண்டம், தங்கவிசிறி, அன்னம், நந்தி பொருத்தப்பட்ட தங்க செங்கோல்கள் ஆகியவற்றை, சீடர்கள் ஏந்தி வர, அதிகாலையில் கங்கை கரைக்கு வந்து சேர்ந்தார்.

அவரது ரதத்தில் நான்கு புறமும், "ஸ்பீக்கர்கள்' பொருத்தப்பட்டு, அவற்றில், "நான் கடவுள்' சினிமா பாடலான, "ஓம் சிவோகம்', நித்தியின் புகழ் பாடும் தமிழ், இந்தி பாடல்கள், காதை கிழிக்கும் விதத்தில் ஒலிபரப்பப்பட்டன.

அணிவகுப்பின் போது, நித்தியை பார்த்த வடமாநில மக்கள், சிலர், "மகாராஜா போல் இந்த துறவி செல்கிறார்' என்றனர்.

மின்வெட்டு காணோம், சாப்பாடு விலை குறைவு:

30,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்த போதிலும், ஓரிடத்தில் கூட, தடியடி நடக்கவில்லை. மாறாக, வழி தெரியாமல் தவித்த யாத்ரீகர்களுக்கு வழிகாட்டி உதவினர்.

போதுமான கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
கும்பமேளா நடக்கும் இடத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சாதாரண நாட்களில் ஒரு விலை, கூட்டம் குவிந்தால் ஒரு விலை என்பது சகஜம். ஆனால் அலகாபாத்தில், டீ 5 ரூபாய்க்கும், சாப்பாடு 20 ரூபாய்க்கும் கிடைத்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, கோடிக்கணக்கில் மக்கள் குவிந்த போதும் கூட, தேவையற்ற பதட்டம், எரிச்சல், கோபம், அடிதடி, தள்ளு முள்ளு ஆகியவற்றை காண முடியவில்லை.

நித்யானந்தா மேலும் வளரவேண்டும்':
நேரில்சந்தித்த ஜெயேந்திரர் ஆசிர்வாதம்

(பிப்ரவரி 11, 2013)

நித்யானந்தா பல்வேறு பணிகள் ஆற்றி வருகிறார். அவரும் அவரது நிறுவனமும் மேன்மேலும் வளர வேண்டும் என, ஆசீர்வதிக்கிறேன்' என, நித்யானந்தாவை கும்பமேளாவில் நேரில் சென்று சந்தித்த, காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூறிஉள்ளார்.

மதுரை ஆதீன விவகாரத்தில், நித்யானந்தாவை ஜெயேந்திரர் குற்றம் சாட்டியதை அடுத்து, அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்தார் நித்யானந்தா.பின்பு, இருதரப்பும் சமாதானமானதின் பேரில், அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

சந்திப்பு:

இந்நிலையில், உ.பி., மாநிலம் அலகாபாத், பிரயாகையில் நடந்து வரும் கும்பமேளாவில், கடந்த, 8ம் தேதி, நித்யானந்தாவை, ஜெயேந்திரர் நேரில் சென்று சந்தித்தது, சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கும்பமேளா நடக்கும் கங்கை கரையில், "10வது செக்டாரில்' நித்யானந்தாவின் முகாம் உள்ளது. திரிவேணி சங்கமத்தின் அருகில், "12வது செக்டாரில்' ஜெயேந்திரர் முகாமிட்டு உள்ளார்.

கடந்த, 8ம்தேதி மாலை, 4:00 மணிக்கு, ஜெயேந்திரர், நித்யானந்தாவின் முகாமிற்கு வந்தார். அவரை வாசல் வரை வந்து வரவேற்ற நித்யானந்தா, உள்ளே அழைத்துச் சென்று, தங்க சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

மற்றொரு தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்ட நித்யானந்தா, ஜெயேந்திரரை வரவேற்று பேசினார். அதில், அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கும், எனக்கும் கடந்த, 10 ஆண்டுகளாக தொடர்பு இருக்கிறது. சில விஷமிகள், தவறான தகவல் கொடுத்து, அந்த உறவை சீர்குலைக்க முயன்றனர்.

இனி, எங்கள் உறவு, ஆசார்யரின் இனிமையான ஆசீர்வாதத்துடன் தொடரும்.இவ்வாறு, நித்யானந்தா பேசினார்.
இதையடுத்து ஜெயேந்திரர் பேசியதாவது:

பல ஊர்களில், ஆசிரமங்கள் அமைத்து, நித்யானந்த தியான பீடம் தொண்டாற்றி வருகிறது. நித்யானந்தாவிற்கும், காஞ்சிபுரம் மடத்திற்கும் பல ஆண்டுகளாகத் தொடர்பு இருக்கிறது.

ஆசீர்வாதம்:

அவர் ஸ்தோத்திரங்கள், தியானங்கள் போன்ற பல பணிகளை செய்து வருகிறார். நித்யானந்த சுவாமியும், அவர் தியான பீடமும் விசேஷமாக மேன்மேலும் வளரவேண்டும் என, ஆசீர்வதிக்கிறோம்.

இவ்வாறு, ஜெயேந்திரர் பேசினார்.

இருவரது சந்திப்பையும், நான்கு நிமிட நேரத்திற்கு, "எடிட்' செய்து, நித்யானந்தா தரப்பு, "யூ டியூப்'பில் வெளியிட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate