புதன், 27 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 5


கங்கையில் புனித நீராடுவதில் மகிழும் தமிழர்கள்

(பிப்ரவரி 27, 2013)

உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில், தமிழகத்தில் இருந்து மட்டும், 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அலகாபாத்தின் மோரி பகுதியில் உள்ள சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்களிலும், தமிழர்கள் பெருமளவில் தங்குகின்றனர்.
இவை தவிர, அகாடா மற்றும் துறவிகள் மூலம், கும்பமேளா நடக்கும், கும்ப நகரில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களிலும், கணிசமான தமிழர்கள் தங்கியுள்ளனர்.

பழனியில் இருந்து கும்பமேளாவில் பங்கேற்க வந்த தமிழர்கள்


தமிழகம் தவிர, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்தும், நூற்றுக்கணக்கான தமிழர்கள், கும்பமேளாவில் புனித நீராட வருகின்றனர்.

"தினமலர்' நாளிதழில் வெளியான கும்பமேளா வரைபடம், பெரும் உதவியாக இருந்தது என, பலரும் கருத்து தெரிவித்தனர்.

அவர்களில் சிலர் தெரிவித்த கருத்துகள் :

பிச்சுமணி, ஐ.டி., ஊழியர்: கங்கையில் நீராடினால், நம் பாவம் போகும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் இங்கு வந்தேன். கும்பமேளா ஏற்பாடுகள், மிக சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. எவ்வித சிரமமும் தோன்றவில்லை.

புஷ்பலதா, ஊட்டி: என் கணவரின் உடல் நலம் தேற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அலகாபாத் வந்தேன். நான் தேடி வந்த நிம்மதி, குறைந்த வருவாய் கொண்ட எங்களது எதிர்பார்ப்பு நிறைவேறியது. கங்கையில் நீராடிய போது மெய்சிலிர்த்து கண்ணீர் விட்டேன். என் பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சம்பத், ஊட்டி: இவ்வளவு கூட்டத்தில் குளிக்க முடியுமா என்று பயந்தேன். ஆனால், எதிர்பார்த்ததை விட மிக நிம்மதியாக நீராடினேன். நாகா சாதுக்களை தேடி, அவர்களிடம் ஆசி பெற்றதில் மன நிம்மதியை அடைந்தேன். நாகா சாதுக்களை கண்டு அச்சம் தேவையில்லை என்று அறிந்தேன். "கங்கை' என்பது இந்த நாட்டின் ஆதாரம் என்பதை இப்பயணத்தில் அறிந்தேன்.

சுபஸ்ரீ, சிங்கப்பூர்: கும்பமேளாவில் பங்கேற்ற கல்பவாசிகளின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக, வியப்பாக இருந்தது. அவர்கள் ஒரு மாதம் கங்கை கரையில், கூடாரமிட்டு தங்கி, தாங்களே சமைத்து, அதிகாலை, 4:00 மணி முதல் ஒரு நாளில் மூன்று முறை கங்கையில் நீராடி, தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர். கல்பவாசிகள் என்பவர்கள் 60 வயதைக் கடந்த தம்பதிகள், தங்கள் வாழ்வில் பற்றற்று இருப்பதை முடிவு செய்ய இப்பயணம் மேற்கொள்கின்றனர்.

வயிரவன், சிங்கப்பூர்: இங்கு வந்து மூன்று நாட்கள் தங்கினேன். தினமும் இரண்டு முறை கங்கையில் நீராடினேன். கங்கை அசுத்தமானதாக தெரியவில்லை. நம்மூரில் இப்படி நதியை போற்றும் மனப்பான்மை வருமா என்ற சந்தேகம் தொடர்கிறது.

ஸ்ரீதர் குணசீலன், திருச்சி: இவ்வளவு கூட்டம் இருந்த போதும், கங்கைக் கரையில், நம் பொருட்களை வைத்து விட்டு நிம்மதியாக நீராட முடிகிறது.

எவ்வளவு செலவாகும்?

* தமிழகத்தில் இருந்து ரயிலில், 2 அடுக்கு, "ஏசி' அல்லது, 3 அடுக்கு, "ஏசி' பெட்டியில் முன்பதிவு செய்து அலகாபாத் செல்வதற்கு ஒரு நபருக்கு, 2,000 ரூபாய் முதல், 2,400 ரூபாய் வரை செலவாகும். போக வர, மொத்தம், 5,000 ரூபாய் செலவாகும்.

* அங்கு தங்குமிடம், உணவு, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என, கூடுதலாக, 5,000 ரூபாய் ஆகும்.

* திட்டமிட்டு செலவை சுருக்கி கொண்டால், மொத்தத்தில் ஒருவர், 7,000 ரூபாயில் அலகாபாத் கும்பமேளாவிற்கு சென்று வந்து விடலாம்.

* அலகாபாத்தில், மோரி பகுதியில், சிவமடம், நாட்டுக்கோட்டை செட்டியார் சத்திரம் ஆகிய இரு இடங்கள், தமிழர்கள் தங்குவதற்கு வசதியாக உள்ளன. நம்மூர் சாப்பாடும் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate