வெள்ளி, 29 மார்ச், 2013

சூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா


(கபாலீஸ்வரர் கோவிலின் இந்தாண்டு பங்குனி பெருவிழாவையொட்டி நான் எழுதி வெளியான செய்தி)

(மார்ச் 20, 2013)

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக நேற்று காலையில் சூரிய வட்ட வாகன வீதி உலாவும், இரவில் சந்திர வட்ட வாகன வீதியுலாவும் நடந்தன.

சாம்பவி தீட்சை

சைவ ஆகமங்களில், 10 நாள் திருவிழா, "சாம்பவி தீட்சை' என, வழங்கப்படுகிறது.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களின் பிடியில் சிக்கி தவிக்கும் ஆன்மாக்களை, பல்வேறு பிறவிகள் எடுக்க வைத்து, மும்மலங்களின் பிடியில் இருந்து இறைவன் விடுவிப்பதே "சாம்பவி தீட்சை'.

மேலும், சைவ ஆகமங்களில் இறைவன், எட்டு வடிவங்களாக இருக்கிறான் எனவும், இறைவனின் அந்த நிலை அஷ்ட மூர்த்தம் எனவும் போற்றப்படுகிறது.

திருநாவுக்கரசர் தமது நின்ற திருத்தாண்டகத்தில், "ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி' என்று குறிப்பிடுகிறார்.

தேவாரத்திலும் திருவாசகத்திலும் அஷ்ட மூர்த்தம் பல படியாக போற்றப்படுகிறது.

சீத்தலை சாத்தனார் எழுதிய மணிமேகலையில், "சமயக்கணக்கர் திறம்கேட்ட காதை'யில், இந்த அஷ்ட மூர்த்தம் பற்றிய குறிப்பு வருகிறது.

சூரியன், சந்திரன், மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆன்மா ஆகிய எட்டு வடிவங்களாக இறைவன் இருக்கிறான் என்பதே அஷ்ட மூர்த்தி தத்துவம்.

இந்த தத்துவத்தின் அடிப்படையில், நேற்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி பெருவிழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சியாக, காலையில் சூரிய வட்டத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா நடந்தது.

இரவில், சந்திர வட்டத்தில் கபாலீஸ்வரரும், கிளி வாகனத்தில் கற்பகாம்பாளும், அன்ன வாகனத்தில் சிங்காரவேலரும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.

"காயத்ரி'யின் அர்த்தம்

"ஓம் பூர் புவ' என, துவங்கும் காயத்ரி மந்திரத்தில், "பர்க' என்ற சொல்லுக்கு சூரியனுக்குள் இருப்பவன் என்று, அர்த்தம்.

போஜராஜன் எழுதிய அமர கோசம் நூலில் "பர்க' என்ற சொல்லுக்கு ருத்ரன் என பொருள் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சூரியனுக்குள்ளும், சந்திரனுக்குள்ளும் இருந்து அவற்றை இயக்கி உலகை இயக்குவிப்பவன் இறைவன் என்பதுதான் இந்த சூரிய, சந்திர வட்ட வாகன வீதியுலாவின் பொருள் என, சைவ அறிஞர்கள் கூறுகின்றனர்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate