செவ்வாய், 26 மார்ச், 2013

கும்பமேளா பற்றிய எனது செய்திகள் - 4

நாடு முழுதும் 7 லட்சம் நாகா சாதுக்கள்:
 ஸ்ரீதிகம்பர் சிவராஜ் கிரி சாது தகவல்

(பிப்ரவரி 26, 2013)

கும்பமேளா என்ற உடனே, நாகா சாதுக்கள் என்ற அகோரிகள் தான் நினைவுக்கு வருகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு விதங்களில் இவர்களை பற்றிய செய்திகள், சமுதாயத்தின் அடிமட்டம் வரை சென்றிருக்கின்றன. இவர்கள் மொத்தம், 7 லட்சம் பேர் உள்ளனர்.

வட மாநிலங்களில் இயங்கும் அகாடா என்ற துறவிகள் அமைப்பின் நிர்வாகத்தில், ராணுவம் போன்ற கட்டமைப்பில் செயல்படுபவர்கள் நாகா சாதுக்கள்.

சனாதன தர்மத்தை காப்பதற்காக ஆதிசங்கரரால், கிரி, புரி, சரஸ்வதி, ஆரண்ய, தீர்த்த, பாரதி, ஆஸ்ரம, பர்வத, சாகர, வன என்ற பட்டப் பெயர்களை கொண்ட, "தசநாமி' என்ற, 10 விதமான துறவிகள் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை இன்றும் உள்ளன.

இந்த சம்பிரதாயத்தில், ஆவாகன் அகாடா என்ற துறவி அமைப்பில், கிரி வகுப்பை சேர்ந்த நாகா சாது தான், ஸ்ரீதிகம்பர் சிவராஜ் கிரி.
அலகாபாத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் பங்கேற்பதற்காக வந்த அவரிடம் உரையாடியதில் இருந்து...

ஏக பாத ஆசனத்தில் சிவராஜ் கிரி பாபா 

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்...?

(நாகா துறவு மரபு படி, துறவுக்கு முன்பு தன்னை பற்றிய சுய விவரங்களுக்கு சாதுக்கள் நேரடியாக பதில் சொல்ல மாட்டார்கள்)

நான் பல பிறவிகளாக துறவியாக இருந்து வருகிறேன். இந்த பிறவியில், என் அம்மா வழி தாத்தா தான் என் யோக குரு. அவர் தான் எனக்கு மந்திரம், ஹடயோகம் எல்லாம் கற்றுக் கொடுத்தார்.

இந்த பிறவியில் தற்போதைய எனது வயது, 50க்கு மேலிருக்கலாம். கங்கோத்ரி, கோமுக், வாரணாசி ஆகிய இடங்களில் தங்குவேன்.

மொத்தம் எத்தனை நாகா சாதுக்கள் உள்ளனர்?

ஏழு லட்சம் பேர் நாகா சாதுக்கள். கும்பமேளா போன்ற நேரங்களில் நாங்கள் ஒன்று கூடுவோம்.

தை அமாவாசை உள்ளிட்ட புண்ணிய தினங்களில், தியானம் செய்து, கங்கை தூய்மையாக வேண்டும் என, பிரார்த்தனை செய்து விட்டு தான் குளிப்போம்.

கங்கை அன்னை புனிதமாக இது தொடரும் நடவடிக்கை. ஆனால், இன்று மாசாகி இருப்பது வருத்தமாக இருக்கிறது.

கும்பமேளா போன்ற நிகழ்ச்சிகளை தவிர, மக்கள் புழங்கும் இடங்களில், ஆடை அணிந்து கொள்வோம்.

ஒருவர் நாகா சாது ஆவதற்கு சடங்குகள் எதுவும் இருக்கிறதா?

ஆம். நான்கு வயது முதல், சன்னியாசத்திற்கு உரியவனாக ஒருவன் ஆகிறான்.

சன்னியாசத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவன், 48 நாட்கள், உணவு, உடை, தூக்கம் இன்றி தியானம் செய்ய வேண்டும்.

இதையடுத்து கங்கையில் நீராடி, ஏழு பிண்ட தானம் அளிக்க வேண்டும். அவற்றில் ஒன்று தனக்கு, ஒன்று தகப்பனுக்கு, ஒன்று தாத்தாவுக்கு, மற்றவை முன்னோர்களுக்கு என்ற ரீதியில் அமையும்.

மனிதர்களுக்கே உரிய, காமம் உள்ளிட்ட குணங்களை ஆகுதி செய்து, இறைவனை வழிபடும் தனி நடைமுறைகள் உள்ளன.

தியானத்தில் சிவராஜ் கிரி பாபா 

உங்கள் உணவு முறையில் எதுவும் கட்டுப்பாடு உண்டா?

என்னைப் பொருத்தவரை, 40 மணி நேரம் கூட சாப்பிடாமலேயே இருப்பேன். பெரும்பான்மையான நேரம், வெறும் டீ, மற்றும் நீர் தான் ஆகாரம்.

சாதாரண மனித உணர்வுகளை கட்டுப்படுத்தி தியானம் செய்வதற்காக, "பாஸ்' என்ற மரத்தின் இலையில் தயாரிக்கப்படும், "சரஸ்' என்ற போதை மருந்தை, பெரும்பான்மையான நாகா சாதுக்கள் பயன்படுத்துவர்.

அவற்றை, பயன்படுத்தாமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.

இந்த துறவு வாழ்வில் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுமா?

நிச்சயமாக. இமய மலையில் இருக்கும் போது கடும் பனி ஆளையே கொன்று விடும். அங்கு நாட்கணக்கில் பட்டினியாக கிடந்து திரிவேன்.

வெறும் வயிறோடு இருந்தால் தான், மைல் கணக்கில் மலையில் நடக்க முடியும்.

யானை, புலி உள்ளிட்ட வன விலங்குகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். மிருகங்கள் என்னை ஒன்றும் செய்யாது. சொல்ல போனால், உதவிகள் செய்யும். சமுதாயத்தில் மக்களால் எங்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது.

தென் மாநிலங்களுக்கு வந்திருக்கிறீர்களா?

இதுவரை வரவில்லை. ஆனால், தென் மாநிலங்களில் தான், பக்தி வாழ்கிறது. அங்கு தான் பூஜைகள் விரிவான அளவில் நடக்கின்றன.

அங்கு தான் சம்ஸ்கிருத மந்திரங்களை தெளிவாக உச்சரிக்கின்றனர்.

துறவியாகி விட்டதால் என்ன கிடைத்தது உங்களுக்கு?

யாரென்றே தெரியாத, மக்கள் பலர் எங்கள் மீது அன்பு செலுத்துகின்றனர். அது, எங்களை மகிழ்விக்கிறது. நான் நிர்மலமானவன்.

 நான் எல்லாவற்றையும் துறந்தவன். அதனாலேயே எல்லாவற்றையும் அடைந்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது.

2 கருத்துகள்:

  1. /// அதனாலேயே எல்லாவற்றையும் அடைந்து விட்டேன் என்ற திருப்தி இருக்கிறது. ///

    சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...

    ஆனால் பலரும் இதை சொல்லாமாலே, மற்றவர்களுக்கு பல வகையில் சேவை செய்து கொண்டு (துறவிகள் அல்ல) வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்...

    நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

Translate