வியாழன், 4 ஜூன், 2009

மகிழ்மாறன் சடகோபன்

வரும் பொருநைத் துறையாடப் பெறுவேனாகில்
வடமூலைக் கருடனடி பணிவேனாகில்
அரும்புமணிக் கோபுரத்துட் புகுவேனாகில்
ஆதிநாதன் சரணம் தொழுவேனாகில்
விரும்பு திருப்புளிநீழல் வலமாய் வந்துன்
மெய்ஞ்ஞான முத்திரைக்கை காண்பேனாகில்
தரும்புவியில் இப்பிறப்பே வேண்டுகின்றேன்
சடகோப யதிராசன் தம்பிரானே.

விசிஷ்டாத்வைதம் என இன்று வழங்கப்படும் வைணவம் ராமாநுஜரால் கட்டமைக்கப்பட்டதால் ‘எம்பெருமானார் தரிசனம்’ எனவும் ’ராமாநுஜ சித்தாந்தம்’ எனவும் போற்றப்படுகிறது.



ராமாநுஜர் உருவாக்கிய வைணவ பக்தி மற்றும் தத்துவ இயக்கம் வடநாடு சென்று மாபெரும் பக்தி இயக்கமாக உருவெடுத்தது. நாமதேவர், சைதன்யர் என்று மகான்கள் பலர் தோன்றி அவ்வியக்கத்தை வளர்த்தெடுத்தனர்.

இம்மாபெரும் எழுச்சிக்கு வித்திட்ட ராமாநுஜர் விசிஷ்டாத்வைதத்திற்கான தத்துவக் கூறுகளை, ஆழ்வார்களில் தலையாயவரான நம்மாழ்வாரிடமிருந்தே பெற்றிருந்தார். வைணவ சமயத்தின் மூலமே நம்மாழ்வார் தான். எனவேதான் வைணவத்தில் அவருக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது. வைணவத்தில் கோயில் என்றாலே ஸ்ரீ ரங்கம் தான். ஆழ்வார் என்றாலே நம்மாழ்வார் தான். அவர் பெயரால் தான் திருக்குருகூருக்கு ‘ஆழ்வார்திருநகரி’ என்ற பெயர் வழங்கி வருகிறது. இந்தப் பெருமை நம்மாழ்வாருக்கு மட்டுமே உண்டு.

பொதுவாகப் பெருமாள் கோயில்களில் உள்ள திருவடிக்கு சடாரி எனப் பெயர். இது சடகோபன் என்ற நம்மாழ்வாரைக் குறிக்கும். ஆனால் நம்மாழ்வார் சந்நிதியில் உள்ள சடாரிக்கு ‘ராமாநுஜன்’ என்பது பெயர். இதை ராமாநுஜரே ஏற்படுத்தினார் என்பது வரலாறு. இதிலிருந்து நம்மாழ்வார் மீதான ராமாநுஜரின் அளப்பரிய பக்தி நமக்குப் புலப்படுகிறது.

நம்மாழ்வார் வரலாறு:

இன்றைய நெல்லை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருக்குருகூர் என்று வழங்கப்பட்டு வந்தது. அவ்வூரில் வேளாளர் குலத்தைச் சேர்ந்த மாறன்காரி-உடையநங்கை தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். உடைய நங்கையின் ஊர் திருவண்பரிசாரம்.(இன்றைய திருப்பதிசாரம்). திருமணமான புதிதில் சில நாட்கள் நங்கை தன் சொந்த ஊரில் இருந்து வந்தார். மாறன்காரி அவரை அழைத்துக் கொண்டு குருகூருக்குத் திரும்பும் வழியில் திருக்குறுங்குடி தலத்தில் பெருமானைச் சேவித்து புத்திரப் பேறு அருளும்படி பிரார்த்தித்தனர்.

அன்றிரவு தம்பதியினர் கனவில் குறுங்குடி நம்பி தோன்றி தாமே அவர்களுக்கு மகனாகப் பிறக்கப் போவதாக அருளினார். விடிந்ததும் தம்பதியினர் தாம் கண்ட கனவை கூறி மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு ஊருக்குத் திரும்பினர்.

சிறிது காலத்தில் உடைய நங்கை கருவுற்றார். ஆன்மாக்களின் உள்ளத்து இருள் நீக்கும் ஞான சூரியன் என நம்மாழ்வார் அவதரித்து அருளினார்.

இந்நிகழ்வை ஆறாயிரப் படி குருபரம்பரைப் பிரபாவம் “எம்பெருமான் இவரிடத்திலே பாரெல்லாம் உய்யும்படி, சேனைமுதலியாரை நம்மாழ்வாராக........ நீங்காத உள்ளிருள் நீங்கிச் சோஷியாத பிறவிக்கடல் சோஷித்து விகசியாத போதிற் கமல மலரும்படி வகுளபூஷண பாஸ்கரோதயம் உண்டாய்த்து” என்று கூறும்.

பிறந்த நாள் முதல் சாதாரண மானிடக் குழந்தைகள் போல் ’முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலை உண்ணாதே’ இருந்தது இந்தக் குழந்தை. விசித்திரமான இந்நிலையைக் கண்டு மனங்கலங்கிய பெற்றோர் குருகூரில் எழுந்தருளியிருக்கின்ற ஆதிப்பிரான் சந்நிதி முன்பு குழந்தையை இட்டு வேண்டி நின்றனர். உலக இயல்புக்கு மாறாக இருத்தலால் குழந்தைக்கு ‘மாறன்’ என்று பெயரிட்டு பின்பு அக்கோயிலில் இருக்கும் திருப்புளிய மரத்தடியிலே பொன்னால் செய்த தொட்டிலில் கிடத்தி “எங்கள் குடிக்கரசே” என்று விசேஷ பிரதிபக்தி பண்ணிச் சேவித்துக் கொண்டு நின்றார்கள்.

ஆழ்வார் புளியமரத்தடியில் 16 ஆண்டுகள் வரையிலும் கண் திறக்காமல் எதுவும் பேசாமல் பெருமானைச் சிந்தித்தபடி இருந்தார்.

இது இப்படி இருக்க, ஆழ்வாருக்கு பல வருடங்கள் முன்பே பிறந்து தல யாத்திரையாக வடநாடு சென்றிருந்த மதுரகவி என்பவர், அயோத்தியில் இருந்த போது தெற்கே ஒரு பெருந்தெய்வப் பேரொளியைக் கண்டார். அதைப் பின்பற்றி வந்த அவர் இறுதியில் குருகூரில் திருப்புளியடியில் வீற்றிருந்த ஆழ்வார் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்.

கண்கள் மூடி மௌனத்தில் இருந்த ஆழ்வாரைக் கண்டு வியந்து, ஆழ்வார் முன் ஒரு கல்லைத் தூக்கிப் போட்டார். ஆழ்வார் கண்மலர்ந்து பார்த்தார். மதுரகவி அவரை நோக்கி “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார். ஆழ்வாரும் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று அருளினார். மதுரகவி ‘இவரே நம்மை ஆளவந்த குருநாதர்’ என்று கருதி ’தேவு மற்றறியேன்’ என்று ஆழ்வார் திருவடியைச் சேவித்து நின்றார்.

(மதுரகவிகள்-ஆழ்வார் உரையாடலின் பொருள் இது: அணு உருவாகிய ஆத்மா அறிவற்ற உடலில் கிடந்தால் எதை அனுபவித்து எங்கே கிடக்கும்?அந்த உடலிலேயே இருந்து இன்ப துன்பங்களை அனுபவித்து அங்கேயே கிடக்கும்.)

அச்சமயம் நாராயணன் பிராட்டி உடன் பெரிய திருவடியாகிய கருடாழ்வார் மீது தோன்றி “தன்னுடைய ஸ்வரூப ரூபகுண விபூதி சேஷ்டிதங்களை எல்லாம் உகபதேசவ சாட்சாத்கரித்து அனுபவிக்கலாம்படி ஆழ்வார்க்கு மயர்வற மதிநலம் அருளினான்”.

ஆழ்வாரும் பொன்னிலாமேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியாகிய பெருமானுடைய சகல கல்யாண குணங்களை அனுபவித்துமுடியாமல் அவன் அருளை அழகிய தமிழில் பாடி அருளினார்.

திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி இவற்றை ருக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நால்வேதங்களின் சாரமாக அருளிச் செய்தார்.

மதுரகவிகளும் ஆழ்வார் திருவாக்குகளை கற்று ஊரும் நாடும் உலகும் அறிய வெளிப்படுத்தினார்.

நம்மாழ்வார் மறைந்த பிறகு அவரது பூத உடலை திருப்புளியின் அடியில் பள்ளிப்படுத்தி (சமாதி செய்து) அவருக்கு விக்கிரகம் செய்து சந்நிதி உண்டாக்கி விழாக்கள் எடுத்து சிறப்பித்தார் மதுரகவிகள். நம்மாழ்வார் மொத்தம் 35 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பர்.

இவ்வரலாறு ஆழ்வார் காலத்திற்குப் பிறகு 300 ஆண்டுகள் கழித்து எழுதப்பட்டது. பொதுவாக வைணவ குருபரம்பரை நூல்கள் கற்பனையான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பன என்பதை வரலாறு அறிந்தவர்கள் அறிவர்.

“இனி அவரியற்றிய திருவாய்மொழி முதலியவற்றில் அவர் பிறந்தபொழுதே பாலுண்ணாது தவத்திலிருந்து எல்லாம் ஓதாது உணர்ந்தமைக்குக் குறிப்பு ஏதேனும் உளதோ எனின் அதனையும் காண்கிலேம்” என்பார் மறைமலையடிகள்.( மாணிக்கவாசகர் காலம் – பக்.455,56).

“நம்மாழ்வார் தம்முடைய பெருநூலில் எங்கும் தம்மைப் பற்றியோ உடன் காலத்து நிகழ்ச்சிகள் பற்றியோ எந்தக் குறிப்பும் தரவில்லை” என்பார் பேரறிஞர் மு.அருணாசலம்.( தமிழ் இலக்கிய வரலாறு, 9 ஆம் நூற்றாண்டு)

நம்மாழ்வார் 36 திவ்ய தேசங்களைப் பாடியுள்ளார். அவர் இருந்த திருப்புளியடியில் அம்மரத்தைச் சுற்றியுள்ள சுவரில் 36 திவ்ய தேச பெருமான்களின் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

எல்லாத் திருக்கோயில்களிலும் வணங்கிய கைகளோடு இருக்கும் நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரியில் சின்முத்திரையோடு ஞான உபதேசம் பண்ணும் திருக்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

திருப்புளி காய்த்தாலும் பழுக்காமல் பிஞ்சிலேயே உதிர்ந்து விடுகிறது. இதன் இலைகள் இரவில் குவிவதில்லை. எனவே இது உறங்காப் புளி எனப்படுகிறது. இது பல கிளைகள் விட்டு பரவி நிற்பதனால் ‘பொந்தாயிரம் புளியாயிரம்’ எனும் பழமொழி எழுந்தது.

நவதிருப்பதிகளிலும் நம்மாழ்வாருக்கு தனிச் சந்நிதி கிடையாது.

நம்மாழ்வாரின் பெருமை:

சைவத்தில் நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தது போல வைணவத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் நாதமுனிகள்.

1. காட்டு மன்னார் கோயில் எனும் தலத்தில் நாதமுனிகள் இருந்த போது மேல்நாட்டிலிருந்து வைணவ அடியார்கள் சிலர் மன்னனாரைச் சேவிக்க வந்தனர். அப்போது அவர்கள் நம்மாழ்வாரின் “ஆராஅமுதே அடியேன் உடலம்” எனும் திருக்குடந்தை பாசுரத்தைப் பாடி சேவித்தனர். அதன் இறுதியில் “குருகூர்ச் சடகோபன், குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்” என்ற அடிகளைக் கேட்ட நாதமுனிகள் அடியார்களிடம் ஆழ்வாரின் ஆயிரம் பாடல்கள் பற்றியும் கேட்டார்.

அவர்கள் அந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தமக்குத் தெரியும் என்றும் ஆயிரம் பாசுரங்களும் குருகூரில் மதுரகவிகள் வழி வந்த பராங்குச தாசரிடம் மற்ற விவரங்கள் தெரிய வரலாம் என்றும் கூறினர்.

நாதமுனிகளும் குருகூருக்குச் சென்று பராங்குச தாசரிடம் விசாரித்தார். அவர் ”தற்சமயம் மதுரகவிகள் அருளிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பத்துப் பாசுரங்கள் மட்டுமே உள்ளன, மற்றைய ஆழ்வார் பாசுரங்கள் அழிந்து போயின” என்று கூறினார். மேலும் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு” பத்துப் பாசுரங்களை 12,000 முறை ஓதினால் நம்மாழ்வார் தோன்றி அருள்வார் என்றும் வழி கூறினார்.

நாதமுனிகள் திருப்புளியடியில் ஆழ்வார் சந்நிதியில் அமர்ந்து 12,000 முறை ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பாசுரங்களை ஓதினார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் பாடிய பாடல்களையும் ஆழ்வார் பிறர் பாடிய பாடல்களையும் அவருக்கு அருளினார். நாலாயிரமும் நம்மாழ்வார் தந்ததுதான். எனவே தான் ஆழ்வாரின் தனியனில் “நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே” என்று கூறியுள்ளனர்.

2. பன்னிரு ஆழ்வார்களுள் இவர் ஒருவரே ஆழ்வார் என்ற பெருமையையும், ஆசாரியர் என்ற பெருமையையும் உடையவர். வைணவ குருபரம்பரை திருமகள் கேள்வனாகிய திருமாலிடம் தொடங்குகிறது. திருமால், திருமகள், சேனைமுதலியார் ஆகிய மூவரும் பரமபதத்தில் இருப்பவர்கள். பூவுலகில் இப்பரம்பரை நம்மாழ்வாரிடம் இருந்தே தொடங்குகிறது. நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பி, ஆளவந்தார், பெரியநம்பி, ராமாநுஜர் என்பது வைணவ குருபரம்பரை. ஸ்ரீவைணவத்தில் நம்மாழ்வாரே முதலும் முடிவுமாக இருக்கின்றார். இவர் ஆழ்வார்களுள் கடைசியும் ஆசாரியர்களுள் முதல்வரும் ஆவர்.

3. ஆழ்வார்கள் பிறரைப் போன்று தலயாத்திரை செய்யாமல் நம்மாழ்வார் தாமிருந்த திருப்புளியடியில் இருந்த படியே எல்லாத் திருப்பதி எம்பெருமான்களையும் பாடினார் என்பது வரலாறு. இவரது திருவாய்மொழி தனக்கு கிடைக்காதா என்று எல்லா தலத்து பெருமான்களும் ஏங்கினார்களாம். இதனை நம்மாழ்வார் தாலாட்டு எனும் நூல் “சிலைக்கோல நெற்றித் திருமாது கேள்வர், இலைக்கொருவராக என்னைப்பாடு என்னைப்பாடு என்ன” என்று சிறப்பித்துக் கூறுகிறது.

4. வைணவம் அர்த்த பஞ்சகம் என்று 5 பொருளைக் கூறும். அவை: இறைநிலை, உயிர்நிலை, உபாயநிலை, விரோதிநிலை, புருடார்த்த நிலை என ஐந்து. இந்த ஐந்தையும் நம்மாழ்வாரின் திருவாய்மொழி கூறுகின்றது என்பது வைணவ மரபு. 1,12,18,40 ஆகிய திருவாய்மொழிகள் இறைநிலையையும், 27, 38, 78,79 ஆகியவை உயிர்நிலையையும், 2,2,331,81 ஆகியன விரோதி சொரூபத்தையும், 47,48,49,40 ஆகியன உபாய சொரூபத்தையும், 19,23,80,93 என்னும் திருவாய்மொழிகள் புருடார்த்த நிலையையும் தெரிவிக்கின்றன.

வைணவத்தின் தத்துவக் கருத்துக்கள் ஆழ்வார்கள் பிறர் பாசுரங்களை விட நம்மாழ்வார் பாசுரங்களில் தான் அதிகம் காணப்படுகின்றன. இதிலிருந்துதான் ராமாநுஜர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை உருவாக்கினார். எனவேதான் ஆளவந்தார் நம்மாழ்வாரை “குலபதி” என்று போற்றுகிறார். இதனையே பராசர பட்டர் ,

மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்
தக்க நெறியும் தடையாகித் – தொக்கியலும்
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்
யாழினிசை வேதத்து இயல்.

என்று ஏத்தினார்.

5. திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகியன நம்மாழ்வார் அருளிச் செய்தவை. இவற்றுள் திருவாய்மொழி சாமவேத சாரமாகக் கருதப் படுவது. இதுவே ஆழ்வார் அருளியவற்றில் வைணவர்களால் உச்சிமேல் வைத்துக் கொண்டாடப்படுவது.

இத்திருவாய்மொழிக்கு மட்டும் கி.பி.12 ஆம் நூற்றாண்டு தொடங்கி 7 விதமான வியாக்கியானங்கள் (விரிவுரைகள்)தோன்றியுள்ளன. இவற்றுக்கு ‘ஸ்ரீ பகவத் விஷயம்’ என்று பெயர்.திருவாய்மொழியின் நுட்பங்களையெல்லாம் அனுபவிப்பதற்கு இவ்வுரைகளே பெருந்துணை செய்கின்றன. திருவாய்மொழி ‘திராவிட வேத உபநிஷத்’ என்றே போற்றப்படுகிறது. இதன் சிறப்பை ‘திராவிட வேதோபநிஷத் சங்கதி’, ‘திராவிட வேதோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி’ என்ற வடமொழி நூல்கள் எடுத்துரைக்கின்றன.


இத்திருவாய்மொழி வடமொழி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களும் திருமாலின் ஆயிரம் திருப்பெயரையும் பத்துப் பத்துக்களும் அவனுடைய பத்து அவதாரங்களையும் நினைவூட்டுவன என்பர் பெரியோர்.

6. ஆழ்வார்களை எல்லாம் நம்மாழ்வாருக்கு அவயவங்களாக (உறுப்புகளாக) அமைத்து ஆழ்வாரை அவயவியாகச் சொல்வது வைணவ மரபு. அதன்படி,

நம்பெருமாள் – (நம்மாழ்வரின்) திருமுடி
பூதத்தாழ்வார் – சிரசு
பொய்கை,பேயாழ்வார்கள் – கண்கள்
பெரியாழ்வார் – முகம்
திருமழிசையாழ்வார் – கழுத்து
குலசேகரர், திருப்பாணாழ்வார் – கைகள்
தொண்டரடிப்பொடியாழ்வார் – மார்பு
திருமங்கைமன்னன் – நாபிக்கமலம்
திருவடிகள் – மதுரகவி, நாதமுனிகள்

என்பதாக அமைவர்.

7. நம்மாழ்வார் அருளியவை நால்வேதம் எனவும் திருமங்கையாழ்வார் அருளியவை அதற்கான ஆறங்கம் எனவும் மணவாள மாமுனிகள் போற்றுகிறார்.

8. நம்மாழ்வார் பாசுரங்களில் கூறப்பட்டுள்ள திருமாலின் பெயர்களே அந்தந்த திருப்பதி பெருமான்களுக்கு இன்றளவும் வழங்கப்படுகின்றன. ‘ஒன்றும் தேவும்’ என்னும் குருகூர் பாசுரத்தில் ‘ஆதிப்பிரான் , பொலிந்து நின்ற பிரான்’ என்ற ஆழ்வாரின் வாக்குகளே ஆழ்வார் திருநகரியில் உள்ள பெருமானுக்குப் பெயராயிற்று. இவ்வாறே பிற திவ்ய தேசங்களிலும் கண்டு கொள்ளலாம்.

9. ”வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைக்கின்ற நம்மாழ்வார் பாடல்கள் 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் , தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய நாடு முழுமையிலுமே முன்னென்றும் கண்டிராத ஒரு புதிய பக்தி வெள்ளமும் சமய தத்துவப் பிரவாகமும் தோன்றி வளர்வதற்கு மூலமாயிருந்தன. இது தமிழருடைய ஒரு பெரும் சாதனை.” என்பார் பேரறிஞர் மு.அருணாசலம்.

10. நம்மாழ்வார் பிறந்து வளர்ந்ததனாலேயே திருக்குருகூர் ‘ஆழ்வார்திருநகரி’ எனப் புகழ் பெறுவதாயிற்று.

11. ஆழ்வார் மாறன், காரிமாறன், சடகோபன், பராங்குசன், மகிழ்மாறன், வகுளாபரணன், திருக்குருகூர் நம்பி, குருகைப் பிரான், வேதம் தமிழ் செய்த மாறன், திருவாய்மொழிப் பெருமாள், திருவழுதி வளநாடன், நாவீறுடையான் எனப் பல பெயர்களால் போற்றப்படுகிறார்.

12. இவர் உலகனைத்துக்கும் ஞான உபதேசம் செய்கின்ற ஆழ்வார் என்பதனால் ‘நம்மாழ்வார்’ எனப் படுகின்றார். நம்பெருமாள் என்ற திருமாலின் அருமைத் திருநாமத்தைப் போல நம்மாழ்வார் என்ற பெயரும் அமைந்துள்ள சிறப்பை மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தின மாலையில்(50)

"நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பது அவரவர்தம் ஏற்றத்தால்"

என்று போற்றுகின்றார்.

உலக நடைக்கு மாறாக இருந்ததனால் ‘மாறன்’ எனவும், மாறன் காரியார் புதல்வர் ஆதலின் ‘காரிமாறன்’ எனவும்,கர்ப்பத்திலிருக்கும்போது குழந்தைகளை அஞ்ஞானத்திற்கு ஆட்படுத்தும் சடம் எனும் வாயுவை கோபித்து ஓட்டியதால் ‘சடகோபன்’ எனவும், குருகூர் பொலிந்து நின்ற பிரான் தந்தருளிய மகிழமலர் மாலையைத் தரித்ததனால் ’மகிழ்மாறன்’,’வகுளாபரணன்’ எனவும், பிற மதங்களாகிய யானைகளைத் தமது பிரபந்தங்களில் கூறிய தத்துவக் கருத்துக்கள் எனும் அங்குசத்தால் அடக்கியமையால் ‘பராங்குசர்’ எனவும், பிரபக்தி மார்க்கத்தைப் பின்பற்றும் வைணவர் அனைவருக்கும் இவர் தலைவர் என்பதால் ‘பிரபன்ன ஜன கூடஸ்தர்’ எனவும் போற்றப் பெறுகின்றார்.

13. மதுரகவிகள், திருவரங்கத்து அமுதனார், மணவாள மாமுனிகள், ஈசுவர முனிகள், சொட்டை நம்பி, அனந்தாழ்வான், பட்டர்,அப்புள்ளார், வேதாந்த தேசிகர் முதலிய ஸ்ரீ வைணவப் பெரியோர்கள் நம்மாழ்வாரைப் பலபடியாகப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

14. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சடகோபர் அந்தாதி, நம்மாழ்வாரின் பெருமைகளை 100 பாடல்களில் எடுத்துரைக்கின்றது.

15. கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயர் ஆழ்வார் பெயரால் மாறன் அலங்காரம், மாறன் அகப் பொருள், மாறன் பாப்பா இனம் என அணி, பொருள், யாப்பு இலக்கண நூல்களைச் செய்துள்ளார்.

16. வைணவராகிய பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இறைமாட்சி எனும் அதிகாரத்தின் அவதாரிகையில் ‘திருவுடை மன்னரைக் காணில்’ என்றும், பற்றற்ற கண்ணே எனும் குறளுரையில் ’அற்றது பற்றெனில்’ என்றும், ஆரா இயற்கை எனும் குறளுரையில் ’களிப்பும் கவர்வு மற்றும்’ என்ற பாசுரக் கருத்தை ‘களிப்புக் கவற்சிகளும் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களும் முதலாயின இன்றி ‘ என்றும், ‘நன்றாய் ஞானம் கடந்து போய்’ என்றும் திருவாய்மொழிப் பாசுரங்களை எடுத்துக் காட்டுகிறார்.

17. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் தமது மோகவதைப் பரணி, அஞ்ஞவதைப் பரணி, சிலேடையுலா ஆகியவற்றில் நம்மாழ்வாரைப் போற்றுகின்றார்.

அரையர் சேவையும் திருவாய்மொழியும்

ஆழ்வார்களின் பாசுரங்களை இசையுடன் பாடி அபிநயித்து அவற்றின் வியாக்கியானங்களை அழகுறப் பேசி நடிக்கும் கலைதான் அரையர் சேவை.

திருவரங்கத்தில் நம்பெருமாள் முன்பு ஒரு திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது திருமங்கையாழ்வார் தம்முடைய திருநெடுந்தாண்டகப் பாசுரங்களைப் பண்ணுடன் பாடி அபிநயித்தார். பின் பெருமாளிடம் அவர், “ மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியன்று அத்யயன உற்சவம் நிகழும்போது நம்மாழ்வாரின் திருவாய்மொழியை வேதங்களுடன் கேட்டருளி வேத சாம்யமாக ஏற்றம் அருள வேண்டும்” என்று கேட்டார். பெருமாளும் சம்மதம் தந்தார்.

அன்று முதல் ஆழ்வார்திருநகரியிலிருந்து நம்மாழ்வார் விக்கிரகத்தை மார்கழி மாத சுக்ல தசமியன்று திருவரங்கம் கோயிலுக்கு எழுந்தருள்வித்தனர். நம்மாழ்வாரின் பிரதிநிதியாக மதுரகவியாழ்வார் இருந்து திருவாய்மொழியைப் பண்ணுடன் இசைத்து அபிநயித்தார். இதற்காக அவருக்கு “திருவாய்மொழி விண்ணப்பம் செய்வார்” என்ற விருதினை நம்பெருமாள் வழங்கினார். இவ்விருதுப் பெயர் நம்மாழ்வார் திருவிருத்தத்தில் வரும் ‘அடியேன் செய்யும் விண்ணப்பமே’ என்ற வாக்கிலிருந்து வந்திருக்கலாம்.

நாலாயிரத்தையும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற நாதமுனிகள் அதை இயலும் இசையுமாக வகுத்து தன் மருமக்கள் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் இருவருக்கும் கற்பித்தார். அவர்களைக் கொண்டே திருவரங்கத்தில் மீண்டும் அரையர் சேவை நடைபெறச் செய்தார்.

மார்கழி அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் பகலில் நடப்பது பகல்பத்து. இதில் பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, பெருமாள் திருமொழி, திருமாலை, கண்ணிநுண் சிறுத்தாம்பு, பெரிய திருமொழி, திருநெடுந்தாண்டகம் அடங்கிய முதலாயிரம் பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும்.

திருமங்கையாழ்வாரால் முன்னமே ஏற்படுத்தப்பட்டு நின்று போயிருந்த திருவாய்மொழித் திருநாளை மீண்டும் நடத்தினார் நாதமுனிகள். இது மார்கழி சுக்லபட்ச ஏகாதசி முதல் 10 நடைபெறும். இந்நாட்களில் நம்மாழ்வாரின் திருவாய்மொழி பண்ணுடன் பாடப்பட்டு அபிநயிக்கப்பட்டு உரை சேவிக்கப்படும். இது 10 நாட்கள் இரவில் நடைபெறும். எனவே ’இராப்பத்து’ எனப்படுகிறது.

இதுவே ’அத்யயனத் திருவிழா’ எனப்படும். நம்பிள்ளை ஈட்டுரையில் ‘திருவத்யயனம்’ என இவ்விழாவைக் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்திருநகரி, திருவரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 திருப்பதிகளில் மட்டுமே அரையர் சேவை இப்போது நடைபெறுகிறது.

ராமாநுஜரின் நம்மாழ்வார் பக்தி:

ராமாநுஜர் குருகூருக்கு அருகில் உள்ள திருப்புளிங்குடியில் பெருமானைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணிடம் “இன்னும் குருகூர் எவ்வளவு தூரம்?” என்று கேட்டார். அவள், “ ‘கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் வண்ணன் மேவி நன்கமர்ந்த வியன் புனல் வழுதி நாடன் சடகோபன்’ என ஆழ்வார் இவ்வூர்ப் பெருமானைப் பாடும் பொழுது சொல்லிய வண்ணம் கூப்பிடு தூரம்தான்” என்று சொன்னாள். இதைக் கேட்ட ராமாநுஜர் அவளை ஆழ்வாராகவே எண்ணி தரையில் வீழ்ந்து வணங்கினார்.

பின்பு குருகூரை நெருங்கிய போது ராமாநுஜர் தம்முடைய ஈடுபாட்டின் மிகுதியால் அதைப் பரமபதமாகவே கண்டு

இதுவோ திருநகரி ஈதோ பொருநல்
இதுவோ பரமபதத்தெல்லை – இதுவோதான்
வேதம் தமிழ்செய்து மெய்ப்பொருட்கும் உட்பொருளாய்
ஓதும் சடகோபன் ஊர்?

என்று போற்றி மகிழ்ந்தனர்.

ஆழ்வார் திருநகரி:

பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திருப்பதிகளில் ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருப்பதி இது இன்றுதான். இதிலிருந்தே இதன் ஏற்றம் நமக்குப் புரியும்.

இதன் பழைய பெயர் திருக்குருகூர். குருகு என்றால் பறவை, சங்கு எனப் பல பொருள் உண்டு. இங்கு சங்கன் எனும் சங்குகளின் தலைவன் இத்தலத்துப் பெருமானை வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது.

ஒருநாள் பிரமன் வைகுந்தம் சென்று திருமாலை வணங்க அவர் “உன்னைப் படைப்பதற்கு முன்னமேயே நாம் தண்பொருநை நதிக்கரையில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே எழுந்தருளியிருக்கின்றோம். அங்கே எம்மை வழிபடு” என்றார்.


‘பிரமனே! இங்கே எம்மை வழிபடுவாயாக’ எனும் பொருள்பட குரு+க+அத்ர+மதர்ச்சனம் என்றதனால் இத்தலம் குருகூர் என்றாயிற்று என தலபுராணம் கூறுகிறது.

பிரளயகாலம் முடிந்த பின் முதலில் தோன்றியதால் இது “ஆதி க்ஷேத்ரம்” எனப்படுகிறது.

சாளக்கிராமத்தில் மந்தன் என்ற அந்தணன் வேதம் பயிலாமல் வேதத்தை இழித்துரைத்து பழித்தான். அவன் இழிபிறப்பை அடையட்டும் என அவன் ஆசிரியர் அவனைச் சபித்தார். அவனும் மறுபிறவியில் தாந்தன் என்ற இழிபிறப்பினனாய் பிறந்தான். ஆயினும் பூர்வ புண்ணியத்தால் குருகூரில் ஆதிநாதர் கோயிலில் புல் செதுக்கி பணி புரிந்தான். அங்குள்ள அந்தணர்கள் அவனை வெறுத்து விரட்டினர். அவன் தாமிரபரணியின் வடகரையில் இருந்து ஆதிநாதரை வழிபட்டு வந்தான். இங்கே அவனை விரட்டியதால் அந்தணர்கள் பார்வை இழந்து குருடாயினர். ஆதிநாதர் அவனுக்கு காட்சியளித்து வீடுபேறு அருளினார். அவன் வழிபட்டதால் இத்தலம் ‘தாந்த க்ஷேத்ரம்’ எனப்படுகிறது. கோயிலின் அர்த்தமண்டபத்தில் முதற்படிக்கட்டில் தாந்தன் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவன் பொருநை வடகரையில் ஆதிநாதரை வழிபட்ட இடம் ‘அப்பன் கோயில்’ ஆகும். இது ‘செம்பொன் மாடத் திருக்குருகூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

வராகப் பிரான் இத்தலத்தில் முனிவர்களுக்குக் காட்சியளித்து ‘ஞானப்பிரான்’ என்னும் திருப்பெயரோடு இருப்பதால் இது ‘வராகக்ஷேத்ரம்’ எனப்படும்.

ராமனின் இறுதிக்காலத்தில் எமன் அவனைச் சந்திக்க வந்தான். ராமன், யாரையும் உள்ளே விட வேண்டாம் என லட்சுமணனிடம் கூறிவிட்டான் அச்சமயம் துர்வாசர் வரவே அவரை உள்ளே போக்கவிட்டான் லட்சுமணன். இதையறிந்த ராமன் அவனை புளியமரமாகப் போகும்படி சபித்தான். லட்சுமணன் வேண்டவே தானே நம்மாழ்வாராக அவதரித்து புளியமரத்தடியில் இருப்பதாக வாக்களித்தான் ராமன். ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன் திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் “சேஷ க்ஷேத்ரம்” எனப்படுகிறது.

சங்கன் வழிபட்ட சங்கணித்துறையை உடையதால் இது “ தீர்த்த க்ஷேத்ரம்” என வழங்கப்படுகிறது.

இப்படி 5 விதங்களாய் போற்றப் பெறுவதால் இத்தலம் “பஞ்ச க்ஷேத்ரம்” எனப் புகழப் பெறுகின்றது.

இத்திருப்பதியின் மூலவர் ஆதிநாதர். உற்சவர் பொலிந்து நின்ற பிரான். தாயார் ஆதிநாதவல்லி. கோவிந்த விமானம். பிரம்ம தீர்த்தம். ஆதிப்பிரான் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இவற்றை ‘நவதிருப்பதி’ என்பர். இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவகிரகங்களுக்குரிய தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் புதனுக்குரிய தலமாகும்.

நவதிருப்பதிகளிலும் உள்ள மூர்த்திகளுக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் வரும் பெயர்களே வழங்கப்படுகின்றன.

நவதிருப்பதிகள் ஒவ்வொன்றிலும் எம்பெருமானுடைய குணம் சிறப்பாக விளங்குவதாக ஆசார்ய ஹ்ருதயம் கூறுகின்றது. அவ்வகையில் ஆழ்வார் திருநகரியில் பெருமானுடைய பரத்வம் விளங்குகிறது. இந்த நவதிருப்பதிகளிலும் உள்ள எம்பெருமான்களை ஆழ்வார் அனுபவித்த விதத்தை விளக்கிக் காட்டுவதே ‘பண்டை நாளெலாம்’ எனும் பதிகமாகும்.

தினந்தோறும் ஆழ்வார் திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும் சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக் காப்பு விநியோகிக்கப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷங்களாகும்.

மார்கழித் திருவத்யயன மகோற்சவத்தில் பத்தாம் நாளிரவு நம்மாழ்வாருக்கு சயனத் திருக்கோலமும் மாறனடி பணிந்து உய்ந்தவரான ராமாநுஜருக்கு நாயகி திருக்கோலமும் சார்த்தி, ராமாநுஜர் ஆழ்வாரது திருவடிகளைப் பிடித்துக் கொண்டிருப்பதான காட்சியை இங்கு மட்டுமே காண முடியும்.

தொடர்ந்து இராப்பத்தில் மார்கழித் திருவாதிரையன்று ஆழ்வாருக்கும் ராமாநுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும் ,வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

கருட சேவை

நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார். ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறுகின்றது. நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஆன்மீகப் பெரும் திருவிழாக்களில் ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத் தகுந்தது.

வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து ஆழ்வார் கோயிலில் கொடியேற்றப் படும் இத்திருவிழாவில் 5 ஆம் நாள் உற்சவமே இங்கு குறிப்பிடத் தகுந்தது.

அன்றைய விழாவில் ஆழ்வார்திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளிலிருந்தும் எம்பெருமான்கள் பல்லக்கில் ஆழ்வார் திருநகரிக்கு வந்துவிடுகிறார்கள். ஆதிநாதர் கோயில் முற்றத்தில் நவதிருப்பதி எம்பெருமான்களும் திருமஞ்சனம் திருவாராதனம் கண்டருளி அன்று இரவு 11 மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர்.

யாருடைய பாலேய் தமிழிசை கேட்பதற்காக நவதிருப்பதி எம்பெருமான்களும் வந்திருக்கின்றனரோ அந்த மயர்வற மதிநலம் அருளப்பெற்ற நம்மாழ்வார் அன்னவாகனத்தில் முன்னால் எழுந்தருள்கின்றார்.

வேதத்தின்முன் செல்க மெய்யுணர்ந்தோர் விரிஞ்சன்முதலோர்
கோதற்ற ஞானக்கொழுந்தின் முன் செல்க குணம் கடந்த
போதக்கடல் எம் குருகூர்ப் புனிதன் கவியின்முன் ஒரு
பாதத்தின் முன்செல்லுமோ தொல்லைமூலப் பரஞ்சுடரே

என சடகோபர் அந்தாதி கூறிய படி ஆழ்வாரின் அமுதத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டு இன்புறுவதற்காக பச்சைப் பசுங்கொண்டலாகிய நவதிருப்பதி எம்பெருமான்களும் ஆழ்வாரின் மங்களாசாசனத்தை செவிமாந்தியபடியே கருட வாகனத்தில் எழுந்தருள்கின்றனர். இந்த அழகிய காட்சியை நாம் காணும் போது ‘நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே’ என்று தான் ஏங்கத் தோன்றும்.

பின்னால் மதுரகவியாழ்வார் பரங்கி நாற்காலியில் எழுந்தருள்வார். பெருமான்களுக்கு முன்னே தமிழ் வேத பாராயண கோஷ்டியும், பின்னே ஆரிய வேத பாராயண கோஷ்டியும் வரும். ஆழ்வார் திருநகரி முழுவதும் அன்றைக்கு உற்சாகம் கரைபுரண்டோடும். பாகவதர்களும் அடியார்களும் ஆசாரியர்களுமாய் எங்கும் திருவீதி நிறைந்து காணப்படும். ராமாநுஜர் வியந்தபடி “இதுவோ பரமபதத்து எல்லை” எனவே வியக்கத் தோன்றும். திருநகரியில் உள்ள அனைத்து மாளிகைகளிலும் திருமடங்களிலும் அனைவருக்கும் ததியாராதனம் எனும் அன்னதானம் கோலாகலமாக நடைபெறும்.

விசாகத் திருவிழாவில் 8 ஆம் திருநாள் அன்று நம்மாழ்வார் தாமிரபரணி வடகரையில் உள்ள, தான் பிறந்த அப்பன்கோயிலுக்குச் செல்கிறார். அப்போது அவர் தவழும் கிருஷ்ணன் கோலத்தில் காட்சியளிப்பார். மறுநாள் திருத் தேர் கண்டருளுகின்றார்.

மே 28 ஆம் தேதி கொடியேற்றம் கண்டருளிய நம்மாழ்வார்,ஜூன் 1 ஆம் தேதி நவதிருப்பதி எம்பெருமான்களையும் மங்களாசாசனம் செய்கிறார். அன்றுதான் 5 ஆம் திருநாள். 7ஆம் திருநாளன்று (3-6-09) ராமாநுஜர் சந்நிதிக்கு ஆழ்வார் எழுந்தருளி சேர்த்தித் திருமஞ்சனம் கண்டருளுகின்றார். 8ஆம் திருநாளன்று (4-6-09) அப்பன்கோயிலுக்கு எழுந்தருள்கின்றார். 9 ஆம்திருநாளன்று (5-6-09) திருத்தேர் கண்டருளுகின்றார். 10 ஆம் திருநாளான விசாகத்தன்று (6-6-09) தீர்த்தவாரி கண்டருளுகின்றார்.

அகோபில மடமும் ஆதிநாதரும்

அகோபில மடத்தை நிறுவியவரான ஸ்ரீ ஆதிவண் சடகோப யதீந்திர மகாதேசிகர் ஆழ்வாரை வழிபடுவதற்காக ஆழ்வார்திருநகரி வந்தார். அச்சமயம் ஆழ்வார் விக்ரகம் சிலரால் மலையில் உள்ள சுனையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. ஆழ்வாரைக் காணாத தேசிகர் மனம் வாடி ‘கண்ணிநுண் சிறுத்தாம்பி’னை 1000 முறை ஓதி, குலசேகர பாண்டியனின் உதவியோடு ஆழ்வாரை மீட்டு கோயிலில் நிலைநிறுத்தினார்.பொலிந்து நின்ற பிரான் மகிழ்ந்து தேசிகருக்கு ‘வண்சடகோப’ எனும் பெயரை ‘ஆதிநாதர்’ பெயரில் உள்ள ‘ஆதி’ என்பதையும் இணைத்து ‘ஸ்ரீமத் ஆதிவண் சடகோப’ என்னும் பட்டத்தை வழங்கி அருளினார். அதற்கான சில மரியாதைகளும் உற்சவ சமயத்தில் அகோபில மடத்து ஜீயர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஆழ்வார் தாம் அணிந்திருந்த ஹம்ஸ முத்திரையை ஜீயருக்கே வழங்கினார். இன்றளவும் அகோபில மடத்தின் முத்திரையாக ஹம்ஸ முத்திரை இடம் பெற்றுள்ளது. ஸ்ரீமத் ஆதிவண் சடகோபரின் வாழித் திருநாமத்தில் “ஆழ்வார்தம் க்ருபையான அம்ச முத்திரை வாழியே” என்று குறிப்பிடப்படுகிறது.


4 கருத்துகள்:

  1. so heart touching and athma thirupthi-giving hisitory notonly for all srivaishnavites but to everyathma.

    பதிலளிநீக்கு
  2. A marvel of brevity and comprehensiveness. It is highly readable;it carries us along. Thanks for the valuable knowledge about Vaishnavism; most Saivites are ignorant of these facts and history.

    பதிலளிநீக்கு
  3. நன்றி, மிகவும் நன்றாக உள்ளது. பற்பல தகவல்கள் அழகாக கோர்த்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு முறையீடு. ஒரு இடத்தில பெரிய திருமொழி முதல் ஆயிரத்தில் உள்ளது போன்று வருகின்றனது. அதை மாற்றி அமைக்க முடியுமா என்று பார்க்கவும்.

    பதிலளிநீக்கு

Translate