வெள்ளி, 12 ஜூன், 2009

வாழும் கலையும் சைவ சித்தாந்தமும்

உறவியும் இன்புறுசீரும் ஓங்குதல் வீடெளிதாகித்
துறவியுங் கூட்டமும் காட்டித் துன்பமும் இன்பமும் தோற்றி
மறவியென் சிந்தனை மாற்றி வாழவல்லார்தமக் கென்றும்
பிறவி அறுக்கும் பிரானார் பெரும்புலியூர்பிரியாரே.


பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று வாழ்ந்து பார்ப்பது என்பது ஒருகலைதான். நம்மில் பெரும்பாலோர் தம் வாழ்க்கையை ஏனோதானோவென்றுதானே கழித்துக் கொண்டிருக்கிறோம்? வாழ்க்கையை முழுதாக வாழவேண்டும். முழுதாக வாழ்வது என்பது என்ன? வாழ்வின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு வாழ்தல் முழுமையாக வாழ்தல் எனக் கொள்ளலாம். இதனை நமக்குத் தெளிவாக உணர்த்துவதுதான் சைவசித்தாந்தம்.



பெரும்பாலானோர் தம் வாழ்க்கையை விதிவசத்தால் நடத்திக் கொண்டிருக்கின்றனரேயன்றி மதிவசத்தில் நடத்துவதில்லை.

இவ்வுலக வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களையும் நம் முன்வைத்து இவ்வாழ்க்கையின் போக்கினை விவரித்து நோக்கத்தைத் தெளிவுபடுத்தி இவ்வண்ணம் இப்படி இந்நெறியினில் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துவது சைவசித்தாந்தம்.

சைவசித்தாந்தம் இவ்வுலகை இவ்வுலக இன்பங்களை வெறுக்கச் சொல்லவில்லை. மாறாக இவ்வுலகை இறைவன் அருளாக எண்ணி பற்றற்ற மனத்துடன் அனுபவிக்கச் சொல்கிறது.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருவவதாரம் செய்த காலத்தில் தமிழகத்தில் சமண சமயம் கோலேச்சிக் கொண்டிருந்தது.

இல்லறவாழ்க்கை, இசை, இன்பங்கள், இவ்வுலக வாழ்க்கை யாவுமே வீண் என்பதும் இவை முக்தியின்பத்துக்குத் தடை என்பதும் அச்சமயத்தின் கொள்கை எனவே சமணர்கள் துறவுநெறியினைத் தூக்கிப்பிடித்தனர்.

உடலைவருத்தி இன்பங்களைத் துறந்து வாழும் துறவே மேலான வாழ்வென்று வலியுறுத்தினார்கள். இதற்காக இளமைநிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமையை மையமாக வைத்தே தமது சமயத்தைப் பரப்பினர், செல்வாக்கும் பெற்றனர்.

மங்கையோடிருந்தே யோகு செய்வானாகிய சிவபிரானை வணங்கும் சைவசமயமோ இதற்கு நேர் எதிரான - சரியாகச் சொன்னால் - நம் செந்தமிழ்த் திருநாட்டின் பண்பாட்டிற்கே உரித்தான கொள்கைகளை மக்கள் முன் வைத்தது.

இல்லறமே மனிதருக்கு இயல்பான வழி, இசையால் இறைவனையும் அடையலாம், உடலைவருத்தும் துறவு எல்லோராலும் கடைபிடிக்க இயலாது, முயல்பவர்கள் முயலலாம், நிலையாமையை உணர வேண்டும், அதேநேரம் இவ்வுலக இன்பங்கள் யாவும் சிவனருளே என்பதையும் உணர வேண்டும் எனும் இன்னோரன்ன மாற்றுக் கொள்கைகளை சைவசமாயாசாரியர்கள் நாடு முழுதும் பரப்பினர்.

இதனை ஞானசம்பந்தர் தமது திருவாரூர்த் திருப்பதிகத்தில் “இப்பிறவி கேடுதரும் எனக்கருதி துறவு வாழ்வு மேற்கொண்டவர்க்கன்றி துன்பம் நீங்காது எனக் கவலை கொள்ள வேண்டாம் நெஞ்சே! திருவாரூரில் உறையும் சிவபிரானது நெறியினை நீ சார்ந்திருக்கின்றாய், எனவே மயங்கி அச்சப்பட வேண்டியதில்லை” எனவும், 



திருவலஞ்சுழித் திருப்பதிகத்தில் “ஞானமும் வீடுபேறும் வேண்டுபவர்கள் விரதங்களால் தம்மை வருத்தவேண்டுவதில்லை, ஞானசம்பந்தனின் செந்தமிழ்ப் பாடல்களைப் பாடுவாரது திருவடியில் வணங்குதலே போதும்” எனவும் அருளிச்செய்துள்ளார்.

எனவே சைவசித்தாந்தம் பிறமதங்கள் போல இவ்வுலகம் பொய், இவ்வாழ்வு பொய் என்றெல்லாம் கூறுவதில்லை. இவ்வுலகம் மெய், நீங்கள் மெய், நீங்கள் அனுபவிக்கும் இன்பதுன்பங்கள் மெய் என்றே கூறுகிறது. ஏன் நீங்கள் இன்பதுன்பங்களை அனுபவிக்கிறீர்கள் என்று சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறது.
எல்லா உயிர்களையும் சிவபிரானின் வடிவமாகவே பார்க்கச் சொல்கிறது.

சைவத்தில் சிவபிரானை ‘அஷ்டமூர்த்தி’ எனப் போற்றும் மரபு உண்டு. பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஐந்தும் சூரியன் சந்திரன் எனச் சுடர்கள் இரண்டும் ஆன்மா ஒன்றும் ஆக இவை எட்டும் சிவபிரானுடைய வடிவங்களாகும். இவற்றை ‘அஷ்டமூர்த்தம்’ என்பர்.

சைவசித்தாந்தப்படி ஆன்மாக்கள் எண்ணில்லாதன. இவ்வளவுதான் என்று கணக்கிட்டுச் சொல்லமுடியாது. ஆன்மாக்களைப் பற்றிக் கூறவரும் போது சிவப்பிரகாசம் எனும் சாத்திரநூல், “எண்ணில்லாதனவாய், என்றும் உள்ளனவாய், ஆணவமாகிய இருளில் அழுந்தி, இருவினைகளுக்கு ஈடாக, தனுகரண புவனபோகங்களை இறைவன் அருளால் பெற்றுப் பல பிறவிகள் எடுத்து பக்குவம் வந்தபோது இறைவன் திருவடி அடைவன” என்று கூறுகிறது.

ஆக இந்த 8 பொருள்களுள் இந்தப் பிரபஞ்சமே அடக்கம் என்றாகிறது. சைவம் என்ற சொல்லுக்கு ‘சைவம் சிவனுடன் சம்பந்தம் ஆகுதல்’ என்பார் திருமூலர். எல்லாவுயிர்களும் சிவசம்பந்தம் உடையன எனத் தெளிந்து சிவபிரானையே தனது இறைவனாகக் கருதி எவன் வழிபடுகிறானோ அவன் சைவன். எனவே அஷ்டமூர்த்தம் எனும் கொள்கையின்படி சிவபிரான் இல்லாத இடமே இல்லை. எனவே யாரும் யாருக்கும் தீமை செய்யலாகாது. எல்லாஉயிர்களும் இறைவனின் வடிவம் அல்லவா?

எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்ந்து அந்த உயிர்களுக்குச் சேவை செய்வதுதான் இறைவனுக்கு சேவை செய்வதாகும். இதனை திருமூலர் ‘இறைவனுக்கு ஒன்று செய்தால் அது அடியவர்க்கு செய்ததாக ஆகாது, ஆனால் அடியவர்களுக்கு ஒன்று செய்தால் அது இறைவனுக்கு செய்ததாகும்’ என ‘படமாடக் கோயில்’ எனும் பாடலில் அருளிச்செய்கின்றார்.

உயிர்கள் ஆணவமாகிய இருளில் அழுந்திக் கிடப்பதைக் கண்ணுறும் இறைவன் இரக்கம்கொண்டு இவ்வுயிர்கள் மீளவும் தன்னையடைந்து பேராஇன்பப் பெருநிலைஅடைய வேண்டும் என ஆராத கருணையினால், இவ்வுயிர்களுக்கு உடல், கருவிகள், இன்பதுன்பங்கள், உலகங்கள் இவற்றைப் படைத்துக் கொடுக்கின்றான். இந்நான்கினையும் தனுகரணபுவன போகங்கள் என சைவசித்தாந்த சாத்திர நூல்கள் கூறுகின்றன.

எனவே ஆதிசங்கரர் போன்றோர் கூறியதுபோல இவ்வுலகம் பொய்யல்ல உண்மையே என்பதுதான் சைவசமயத்தின் கொள்கை. ஏனெனில் உயிர்கள் முன்னேறி தன்னை அடைய வேண்டும் என்பதற்காக இறைவனே கொடுத்த ஏணிப்படி போன்றதுதான் இவ்வுலகம். எனவே இதில் நாம் அனுபவிக்கும் அத்தனையும் உண்மை. இதில் நாம் எல்லாம் வெறும் பொய், கனவு என்றுகூறி துறவியாகிவிடமுடியாது.

இந்த வாழ்க்கை நமக்காக நாம் வாழ்வதற்காக இறைவனால் கொடுக்கப்பட்டது என்ற உண்மையைப் புரிந்துகொண்டால் இவ்வாழ்க்கை நமக்கு நல்லதோர் பயனைத் தரும். எனவே இறைவனால் நமக்களிக்கப்பட்ட பெற்றோர், மனைவி, மக்கள், உடன்பிறந்தோர், சுற்றத்தார், நண்பர்கள் என இவரனைவருமே நம்மால் நேசிக்கப்படத்தக்கவரே. இவர்களிடத்து நாம் இறைவனைக் கண்டோமானால் இவ்வாழ்க்கையே பயனுடையதாய் மாறிவிடும். ஏனெனில் எல்லா உயிர்களும் இறைவனின் வடிவம் என்று சித்தாந்தம் கூறுகின்றதல்லவா?

மாறாக மனைவி மக்கள் சுற்றம் இவர்கள்மீது அளவில்லாதபாசம் கொண்டு அவர்களுக்காக ஏங்கித்திரியும் நம்மவர்களைக் கண்டுதான் அப்பரடிகள் இரங்கி,


“மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்
வினையுளே விழுந்தழுந்தி வேதனைக் கிடமாகாதே
கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணைத்தானை
நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினிரே”


என்றரருளிச்செய்தார்.

எல்லா உயிர்களுள்ளும் இறைவன் இருக்கின்றான் என்பதை ஞானியர் மட்டுமே உணரமுடியுமன்றோ? நம்மைப் போன்றவர்கள் எவ்விதம் உணர்வது?
இதற்கு நான்கு நல்ல வழிகளைத் தருகிறது சைவசித்தாந்தம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவே அவை. இந்த நான்கு நெறிகளுக்கும் நமது வாழ்வுக்கும் உள்ள தொடர்பினை நாம் இப்போது காணலாம்.

சரியை என்பதற்கு ‘இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலுக்கு அதிகாலையே சென்று அலகிட்டு, மெழுகிட்டு, பூக்கள் கொய்து மலர்மாலை தொடுத்து இறைவனுக்கு சார்த்துவித்து, திருவிளக்கு இட்டு, நந்தவைனம் செய்து, அடியார்களைக் கண்டால் பணிந்து வணங்கி அடியேன் யாது செய்ய வேண்டும் எனக்கேட்டு அவர்பணி இயற்றி தொண்டுசெய்வது சரியை எனும் தாசமார்க்கமாகும்’ என சிவஞான சித்தியார் கூறும்.

பொதுவாக நாம் கவனித்துப் பார்த்தோமானால் அடிக்கடி ’நான்’ ’எனது’ என்ற இரண்டுவித அகங்காரங்கள் அதாவது தன்முனைப்பு நம்மிடையே எழுவதுண்டு. இவை இல்லையெனில் இயக்கம் இல்லைதான். ஆனால் இவையே நம் இயக்கமாகிவிடில் நமக்கு விடுதலை இல்லையாகிவிடும். எனவே இந்த நான் எனது எனும் தன்முனைப்புகளை நீக்கவேண்டும். வள்ளுவரும் ‘யான் எனது எனும் செருக்கறுப்பான் வானோர்க்குயர்ந்த உலகம்புகும்’ என்று கூறியிருக்கிறாரல்லவா?

இந்த நான் எனது என்னும் தன் முனைப்பு சற்று அடங்கிநிற்க உதவுவதுதான் சரியை. அடிமைத் திறம் என்பார்கள். தலைவனிடத்து ஓர் அடிமை எங்ஙனம் பணிசெய்வானோ அவ்வாறே இறைவன் திருக்கோயிலில் நாம் அடிமையாய் நின்று சரியைத் தொண்டில் ஈடுபட வேண்டும்.

பொதுவாக நாம் செல்வாக்கு, பணபலம், அதிகாரம் உள்ளவர்களிடத்து பணிந்துவிடுவோம். ஆனால் இவை எதுவுமே இல்லாது இறைவன் அருளையே பேணும் அடியார்கள் - உருத்திராக்கம், திருநீறு அணிந்த அடியார்களிடம் பணிந்துவணங்கி அவர்களுக்கான பணிகளைச் செய்யும் போது நான் எனும் தன்முனைப்பு சற்றே அடங்க வழிபிறக்கிறதல்லவா?

இங்ஙனம் அடியார்களுக்குப் பணிசெய்தலினால் நான் எனது எனும் இருவகைப் பற்றுக்களும் அற்றுப் போய்விடும் என்பதற்கு திருநீலகண்ட நாயனார், இளையான்குடி மாற நாயனார், அமர்நீதி நாயனார், சிறுத்தொண்ட நாயனார் போன்ற நாயன்மார்களின் அருள் வாழ்க்கையினை கொண்டு நாம் அறியலாம்.சரியைத் தொண்டில் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒருசேர வேலை உண்டு. இதனை நமக்கு நடத்திக் காட்டியவர்தான் அப்பரடிகள்.

அடுத்து கிரியை. “புதுமலர்கள், தீபம், தூபம், அமுது இவை கொண்டு பஞ்சசுத்தி செய்து, சுத்தபக்தியினால் இறைவனை வழிபட்டு, அக்னி காரியம் செய்தல்” என்பது சிவஞானசித்தியார்சூத்திரம்.

அதாவது இதுவரையில் திருக்கோயிலில் வழிபட்ட இறைவனை இனி அவரவர் வீட்டினுள்ளே ஓரிடத்தில் ஒரு லிங்கத்தில் வைத்து பூசிக்க வேண்டும். இங்கே உடலுக்கான வேலை குறைவு, உள்ளத்திற்கான வேலை அதிகம். இக்கிரியையானது கர்மயோகம் செய்வதற்கு உதவுவதாம்.

அதாவது அன்றாடம் நம் வாழ்வில் நாம் பலகாரியங்களில் ஈடுபடுகிறோம். அவற்றைப் பற்றோடு எதிர்பார்ப்போடுதான் செய்கிறோம். எனவே எதிர்பார்ப்பு நிறைவேறுவதும், நிறைவேறாததும் நடப்பது இயல்பு. அதனால் நாம் உற்சாகமோ சோர்வோ அடைகிறோம். இதிலிருந்து மீண்டு எப்பொழுதும் எல்லாக் காரியங்களையும் உற்சாகமாக செய்வதற்கு அக்காரியங்களின் மீதான பற்றினை நீக்கிக்கொள்ள வேண்டும். அது பயிற்சியினால் மட்டுமே கிட்டும்.

பணிவடைந்த மனமானது இறைவனது கருணையை நினைத்து அவனை வழிபடுகிறது. அவ்விதமே இவ்வுலகக் காரியங்களையும் அவனருள் என்றே கருதி கர்மயோகத்தில் ஈடுபடுகிறது. இதுவே கிரியையாகும். இதில் இறைவனது அருவுருவத்தை அகம்புறம் இரண்டிலும் வழிபடல் வேண்டும்.

யோகம் என்பதற்கு ஒன்றுபடுதல் என்பது பொருளாம். பொதுவாக யோகம், இயமம் நியமம், ஆசனம், பிராணாயாமம், தாரணை, பிரத்யாகரம், தியானம், சமாதி எனும் எட்டு அங்கங்களை உடையது. இன்று எல்லோரும், கூறிவரும் மக்கள் சேவை குறித்து அன்றே சைவசித்தாந்தம் பேசிவிட்டது. தனிமனிதர்கள் சேர்ந்ததுதானே சமுதாயம்! 


தனிமனிதன் ஒழுக்கவானாயிருந்தால் சமுதாயமும் கட்டுக்கோப்பாயிருக்கும். தனிமனிதன் பிறர்க்கு உதவினானானால் சமுதாயமும் அவ்விதமே இயங்கும். இதனைக் கருத்தில் கொண்டு யோகத்தின் அட்டாங்கங்களில் முதலிரண்டு அங்கங்களான இயமம் நியமம் ஆகியன வகுக்கப்பட்டுள்ளன.

கொல்லாமை, பொய்கூறாமை, களவில்லாமை, அடக்கம்உடைமை, நடுநிலைமை, எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொள்ளுதல், பகுத்துண்ணல், கள்ளும் காமமும் தவிர்த்தல், பகலில் உறங்காமை, கருணையுடன் இருத்தல் இவையெல்லாம் இயமமாகும்.

தவம், ஜபம், சந்தோஷம், இறைச்சிந்தனை, தானம், சிவவிரதம், சித்தாந்தக் கேள்வி, சிவபூசை இவை நியமமாகும்.

இவற்றுள் இயமமாவது சமுதாயத்தோடு ஒத்து இயங்கும்போது ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியவை.

இவை இரண்டுமே உளவியல் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதை நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். பின்பு பிற அங்கங்களைக் கடைபிடித்து சுழுமுனையின் ஆறு ஆதாரங்களிலும் இறைவனை தியானிக்க வேண்டும். இதில் இறைவனது அருவத் திருமேனியை நம் உள்ளத்தில் தியானிக்க வேண்டும் என சாத்திர நூல்கள் கூறுகின்றன.

இதனை அப்பரடிகள் ‘பொறிப்புலன்களைப் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்தி நினைந்தவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன்’ எனவும் ‘பொய்யனைத்தையும் விட்டவர் புந்தியுள், மெய்யனைச்சுடர்வெண் மழுவேந்திய கையனைக் கச்சியேகம்பம் மேவிய ஐயனைத் தொழுவார்க்கில்லை யல்லலே’ எனவும் அருளிச் செய்துள்ளனர்.

சரியை கிரியை யோகம் எனும் வழியில் நம் வாழ்வினைச் செலுத்தும் போது இறைவனருளால் நமக்கு ஓர் அறிவுகிட்டுகிறது. இவ்வுலகில் எது நமக்குப் பகை? எது நமக்குஉறவு? எனும் தெளிவு ஏற்படுகிறது. உயிர்களாகிய நமது சிற்றறிவும் சிறுதொழிலும் நமக்குப் புலப்பட ஆரம்பிக்கின்றது.

இங்ஙனம் பகையாவது பாசமென உணர்ந்து அதினின்றும் நீங்கி உறவாகிய இறைவனிடம் தன்னைச் சேர்த்துக்கொள்ள முயலும் அறிவு உயிர்களுக்கு உண்டாகின்றது. இதனை ஞானம் என்பர். இதனை உண்மையறிவு எனலாம்.

‘இந்த உலகம் வேறு நாம் வேறு; ஆயினும் இவ்வுண்மையை உணராமல் இவ்வுலகின் வசப்பட்டு மயங்கிக் கிடக்கின்றேன்; இது எனது உண்மையான நிலை இல்லை. நான் இறைவனைச் சார்ந்து நிற்பதற்குரியவன்; அவன் அறிவிக்க நான் அறிகின்றேன்; அவனே என் வாழ்முதல்; துன்பத்தை விளைவிக்கும் இவ்வுலகச் சார்பினின்றும் விடுபட்டுப் பேரின்பப் பொருளாகிய அவனைத் தலைப்பட்டு என்றும் முக்தியாகிய இன்பத்தில் இருத்தலே எனது இயற்கைநிலை’ என்று உணர்ந்து தெளிதலே ஞானமாகும்.

இந்த ஞானம் கைவரப்பெற்றோர்க்கு பேராஇன்பப் பெருவாழ்வாகிய முக்தி கிட்டும். பிறவாநிலை கிடைக்கும் என சாத்திரங்கள் கூறுகின்றன. இந்தத் தெளிவினைத்தான் அப்பரடிகள் ‘சிந்தையும் தெளிவுமாகி தெளிவினுள் சிவமுமாகி வந்தநற்பயனுமாகி வாணுதல் பாகமாகி... அந்தமோடளவிலாத அடிகள் ஆப்பாடியாரே’ எனவும் ‘சிந்தையுட் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே’ எனவும் அருளிச் செய்தனர்.

இந்நான்கு நெறிகளையும் நன்கு கடைபிடித்தால் அவர்க்கு இறைவன் அருள்செய்வான் என திருக்களிற்றுப்படியார் எனும் சாத்திர நூல்,

நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்
நல்லசிவ ஞானத்தால் நானழிய - வல்லதனால்
ஆரேனும் அன்பு செயின் அங்கே தலைப்படும்காண்
ஆரேனும் காணா அரன்.


எனக் கூறுகிறது.


எனவே துன்பமற்ற நிலையான இறைவன் திருவடியை அடைதலே வாழ்வின் குறிக்கோள் என்பதையும், அக்குறிக்கோளை நோக்கி வாழ்வைச் செலுத்துதலே வாழ்வை முழுமையாக வாழ்வதற்கு வழிவகுக்கும் என்பதையும், அங்ஙனம் செலுத்துவதற்கு சைவச்செந்நெறி சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு வழிகளைத் தந்துள்ளது என்பதையும், இவ்வுலக மதங்கள் கூறும் அடிப்படை அறங்கள் யாவும் இதனுள் அடக்கம் என்பதையும் இந்நாற்பாத நெறியே நாம் செல்ல வேண்டிய நெறி என்பதையும் நாம் உணர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate