சனி, 9 மே, 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 6

வேதமும் சிவாகமமும்

"ல்லா மனிதர்களும் எந்த உண்மையான கல்வியைக் கற்றால் அறிஞர்களாகவும், சுகமுள்ளவர்களாகவும், உண்மை-பொய் ஆகியவற்றை முடிவு செய்யும் திறமையுள்ளவர்களாகவும் இருப்பார்களோ அதுவே வேதம்."27


"அதுபோலவே சிருஷ்டியின் துவக்கம் முதல் இன்றுவரை பிரம்மா ரிஷி முதல் நாம் வரை எதனால் உண்மையான கல்வியைக் கேட்டு, கற்று வந்தோமோ, அதுவே `ஸ்ருதி' என்னும் பெயருடையதாயிற்று."

"வேதங்களை இயற்றியவரை இதுகாறும் எவரும் நேரில் கண்டதில்லை. அதனால் உருவமற்றவராகிய இறைவனே வேதங்களை இயற்றினார் என்பது தெளிவு"
28

பாரதத்தில் தோன்றிய மதங்களுள் பௌத்தம், சமணம், ஆசீவகம், சார்வாகம் தவிர பிறவனைத்தும் மேற்சொல்லியபடி இறைவனால் அருளப்பட்ட வேதங்களைத் தமது பிரமாண நூல்களாக ஏற்றுக் கொண்டன. சைவமும் அவற்றுளொன்று.

"சைவம் சிவனுடன் சம்பந்தமாவது" என்றபடி சிவபிரானையே முழுமுதற் கடவுளாகக் கொண்டமை, அவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தன்மை முதலிய கொள்கைகளை உடையதே சைவசமயம்.

பாரதத்தில் மொத்தம் 5 வகையான சைவ சம்பிரதாயங்கள் நிலவுகின்றன.
1. லகுலீச பாசுபதம்; 2. காஷ்மீர (த்ரிக) சைவம்; 3. (தமிழக) சித்தாந்த சைவம்;
4. ஸ்ரீகண்டரின் சிவாத்வைதம்; 5. சக்திவிசிஷ்டாத்வைதமான வீரசைவம் என்பன அவை.

இவை ஐந்துமே வேதங்களைத் தமது பிரமாண நூல்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் லகுலீச பாசுபதம் வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. மற்றவை ஆகமங்களையும் அடிப்படை நூல்களாகக் கொண்டவை.

பதி பசுபாசம் எனும் முப்பொருள் உண்மை, இறைவன் நிமித்த காரணன், சிவசக்தி அபேதம், ஸ்ருஷ்டி முதலான பஞ்சகிருத்தியங்களுக்கு ஈசனே கர்த்தா, வேத உபநிஷதங்களில் கூறும் பிரம்மம் பிரகாச - விமரிச மயனான ஈசனே எனும் துணிபு, ஷட் தரிசனங்களைப் போலல்லாமல் 24 தத்துவங்களுடன் மேலும் 12 சுத்த தத்துவங்களைக் கூட்டி 36 தத்துவங்களாகக் கொள்ளல் முதலியன இவ்ஐவகை சைவ சம்பிரதாயங்களுக்கும் பொதுவானவை.29

நால்வர் ஆசாரியரால் பரப்பப்பட்டு மெய்கண்ட சிவத்தினால் நிலைநிறுத்தப்பட்ட சித்தாந்த சைவம் வேதங்களையும் ஆகமங்களையும் பிரமாண நூல்களாகக் கொண்டது. ஆயினும் வேதத்தைப் பொதுநூல் என்றும், ஆகமங்களைச் சிறப்பு நூல் என்றும் வகைப்படுத்திக் கொண்டது.




இதனை,

"வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஓதும் சிறப்பும் பொதுவும் என்று உன்னுக"
என்று திருமூல நாயனாரும்,


"வேதநூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்
வேறுரைக்கும் நூலிவற்றின் விரிந்த நூல்கள்
ஆதிநூல் அநாதி அமலன் தரு நூல் இரண்டும்
ஆரணநூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம்
நீதியினால் உலகர்க்கும் சத்திநி பாதர்க்கும்
நிகழ்த்தியது நீள்மறையின் ஒழிபொருள் வேதாந்தத்
தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல்சைவம் பிறநூல்
திகழ்பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்"


என்று சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாசாரியரும் அருளிச் செய்தனர்.

வேதங்கள் மூவர்ணத்தாருக்கே உரியது, உலகருக்குரிய அறங்களைக் கூறுதல், அதில் சிவபிரானோடு பிற தேவதைகளும் பேசப்பட்டிருத்தல் முதலிய காரணங்களினால் அது பொதுநூல் எனப்படுகிறது.

சிவாகமங்களோ எனின் நால்வர்ணத்தாருக்கும் உரியவை, சத்திநிபாதர்க்குரிய அறங்களைப் பேசுகின்றமை, சிவபிரான் ஒருவனுக்கே பரத்துவம் கூறுகின்றமை முதலிய காரணங்களால் அவை சிறப்பு நூல் எனப்படுகின்றன.


"...மற்றவை ஆகமங்களைச் சார்ந்தவை. `ஆகமங்களைச் சார்ந்தவை' என்றால், அவை வேதங்களைப் பிரமாணமாக ஒப்புக் கொள்ளவில்லை என்பதில்லை. அதற்கு மாறாக, `ஆகமமும் வேதமும் சிவன் இயற்றியவையாகையால், இரண்டின் தத்துவ ஞானமும் ஒன்றே' என்று அவை உறுதியுடன் கூறுகின்றன. ஆனால் வேதம் என்பது மூவர்ணத்தார் வரையிலேயே அளவுபட்டு நிற்பதனால், எல்லா வர்ணத்தாருக்குமுரிய ஆகமங்களைச் சைவசமயம் ஏற்றுக் கொண்டு, எல்லா இனத்து ஆண் பெண்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. `எல்லா வர்ணத்தாருக்கும் நாம கீர்த்தனத்தில் உரிமை' (அதாவது முக்தியுரிமை) என்ற பக்தி மார்க்கத்திய கோஷத்துக்கு, இது முன் உருவமாகும்.
30

"...இந்தத் தத்துவ ஞானம் சிறப்பாக ஆகமங்களைச் சார்ந்தது; அதாவது, இது மூவர்ணத்தாரின் அளவில் கட்டுப்பட்டிராமல் பொது மக்களான எல்லா ஆண் பெண்களுக்கும் அறிவு பெறவும், சாதனைகள் பயிலவும் உரிமை தருகிறது. இந்தத் தத்துவஞானம் த்வைதம், அத்வைதம் முதலிய எந்தச் சம்பிரதாயத்தைச் சார்ந்ததாயினும், அதன் நோக்கம் சிவத்தன்மை பெறும் முக்தியை அடைவதாகும்."31


குறிப்புகள்


27. வேதச் சுற்றுலா (ஸ்ரீ தயானந்த சரஸ்வதி,ஆர்ய சமாஜம் ) - பக். 34.
28. மேலது - பக். 34.
29. சைவத் தத்துவம் (டாக்டர். தகாரே )-பக். 373,374.
30. மேலது -பக். 372.
31. மேலது -பக். 379.


1 கருத்து:

  1. அருமையான பதிவுகள். சிவஸ்ரீ. நெல்லை சொக்கருக்குப்பாராட்டுக்கள் பலப்பல. "இவற்றுள் லகுலீச பாசுபதம் வேதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது". இந்த கருத்து சரியானதா என்று சரிபார்க்க வேண்டுகின்றேன். ஸ்ரீ லகுல பாசுபதம் வாம தாந்த்ரீகம் ஆகும். அதுவைதீகமல்லவே? ஆனாலும் அது காளாமுகம் ஆன காலத்தில் வேதத்தையும் ஏற்பதாகவே தெரிகின்றது.

    பதிலளிநீக்கு

Translate