புதன், 24 ஜூன், 2009

திருவாசகம் - சில சிந்தனைகள்

ந்த ஜூன் மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையிலிருந்து 21 ஆம் தேதி ஞாயிறு வரை வித்வான் பாலறாவாயன் அவர்கள் திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் ’திருவாசகம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இவர் தருமையாதீன மகாவித்வான் அருணைவடிவேலு முதலியார் அவர்களின் மகன். மகனறிவு தந்தையறிவு.


அவரது சொற்பொழிவுக்கு என்னால் தொடர்ந்து செல்ல முடியவில்லை. ஒருநாள் விட்டு ஒருநாள் தான் சென்றேன். அவரது உரையாற்றும் முறை, தேவாசிரியன் மண்டபம், நிகழ்ச்சி முடிந்தவுடன் நடக்கும் அர்த்தசாம வழிபாடு, அவ்வழிபாட்டில் இளைஞர்கள் முதியவர்கள் அனைவரும் சிவவாக்கியர் பாடல்களை ஓதியது இவை என்னை 2001 ஆம் ஆண்டிற்கே அழைத்துச் சென்றுவிட்டன.

அப்பொழுது என்னாசிரியர் ரத்னவேலனையா ஊஞ்சல் மண்டபத்தில் வகுப்பு எடுத்ததும், வகுப்பு முடிந்தவுடன் காந்திமதி அம்மன் அர்த்தசாம வழிபாட்டை மண்டபத்திலிருந்தே அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டு ஐயாவுடன் சென்றதும் இன்றும் நினைவில் இருக்கின்றன. பாலறாவாயனின் சொற்பொழிவுக்கு நான் தொடர்ந்து சென்றதற்கு இந்நினைவுகளும் ஒரு காரணம்.

வாராது வந்த மாமணி போல் எனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பாக ரத்னவேலனையாவின் வகுப்புகளும் அவருடனான உரையாடல்களும் கிட்டின. வறியவன் செல்வம் பெற்று இழந்தது போல ஐயாவின் மறைவு என்னை உலுக்கியது. ஆயினும் காலம் ஓர் மாமருந்து.

பாடம் கேட்டு பல வருடங்கள் ஆனதால் அதற்காகவும் திருவான்மியூர் சென்றேன்.

நிற்க.

இனி.... வித்வான் பாலறாவாயனின் திருவாசகம் சொற்பொழிவிலிருந்து நான் குறித்த சில பகுதிகள்.....

16-06-09

மாணிக்கவாசகரின் காலம் குறித்துப் பல்வேறு கருத்துகள் உள்ளன. இருப்பினும் அவர் தேவார ஆசிரியர் மூவருக்கும் முற்பட்டவர் என்பதற்கு சில உறுதியான காரணங்கள் இருக்கின்றன.

1. திருவாசகத்தில் சமண மதம், விநாயகர் , பல்லவப் பேரரசர்கள் இவர்களைப் பற்றிய குறிப்புகள் எங்கும் கிடையாது. ஆனால் தேவாரத்தில் இம்மூன்றைப் பற்றியும் செய்திகள் தேவையான அளவிற்குக் கிடைக்கின்றன.


2. தக்கன் வேள்வி, அதில் அவன் தலையறுப்புண்டது பற்றி மணிவாசகர் நிறையப் பாடுகிறார். வேதத்தில் உருத்திரனைப் பற்றி உயர்ந்த கருத்துகள் இல்லை எனபதையும் தமிழர்கள் சிவனையே தம் கடவுளாக வழிபட்டு வந்தனர் என்பதையும் நோக்கும் போது ஆரியர்கள் தமிழச் சிவனை அறியாத காலத்தில் மணிவாசகர் இருந்திருக்க வேண்டும்.

3. தேவார மூவரும் ஐந்தெழுத்துத் திருப்பதிகங்கள் பாடியுள்ளனர். இதற்கு மூலமாக திருவாசகத்தில் ஸ்தூல சூக்ஷ்ம பஞ்சாக்ஷரங்கள் காணப்படுவது கருத்தில் கொள்ளத் தக்கது.

4. ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்னும் பஞ்சமலங்கள் பற்றி மணிவாசகர் பேசுகிறார்.

5. இறைவனை மும்மூர்த்திகளுக்கும் மேலானவன் என்கிறார். ‘மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி’ என்பார் திருச்சதகத்தில் (30).

6. தேவார மூவர்கள் க்ஷேத்ரக் கோவையும் ஊர்த்தொகையும் பாடியதற்கு திருவாசகத்திலுள்ள கீர்த்தித் திருவகவல் முன்னோடியாக அமைந்துள்ளது. அவ்வகவல் முழுதும் இறைவன் பல தலங்களிலும் நிகழ்த்திய திருவிளையாடல்கள் குறிக்கப்படுகின்றன.

7. தேவார மூவர் போல அஞ்செழுத்துப் பதிகம் எனத் தனியாகப் பாடவில்லை.

8. திருவண்டப்பகுதியில் ‘இன்னுழை கதிரின் துன் அணுப் புரைய’ என அணுவைப் பற்றிக் கூறுகிறார்.

9. வேதத்தில் (உபநிஷத்தில்) ஆகாயத்திலிருந்து வாயுவும் வாயுவிலிருந்து தீயும் தீயிலிருந்து நீரும் நீரிலிருந்து மண்ணும் தோன்றியதாக தோற்ற முறைமைக் கூறப்படுகிறது. ஆனால் திருவண்டப்பகுதியில் ‘பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி, தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி, வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி, வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி’ என இறைவனே பஞ்ச பூதங்களையும் படைத்து அவற்றின் உள்நின்று இயக்குவோனாய் சுட்டப்படுகிறான்.

18-06-09

பதேசம் நிகழும் இடத்து மூன்று செயல்கள் நடக்கின்றன. குருவுக்குக் கருணையும், சீடனுக்குப் பணிவும், பின் இறைவன் அருள் எனும் மூன்றும் ஒன்று சேர்ந்தால்தான் உபதேசம் நிகழ்கிறது. சீடனுடைய பணிவை ‘பிற்றை நிலை முனியாது கற்றல்’ எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. இங்கு பிற்றை நிலை என்பது குருவுக்குப் பின் பணிவுடன் நிற்பது.

இதனை சிவஞான போதம் 8 ஆம் சூத்திரம் கூறுகிறது.

”ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன் கழல் செலுமே”
என்பது சூத்திரம்.

மிருகங்களை மறைந்திருந்து கொல்வது வேடரின் இயல்பு. வாலிவதைப் படலத்தில் ’வெவ்விய புளிஞன் போல்..’ எனக் கம்பன் சுட்டுகிறான். புளிஞன் – வேடன். “மறைந்திருந்து கொல்லும் வேடன் போல என்னை மறைந்து நின்று கொன்று விட்டாயே” என வாலி கூறுகிறான்.

அதுபோல ஐம்புலன்களும் மறைந்திருந்து நம்மைத் தாக்குகின்றன. இதிலிருந்து தப்பித்து இறைவன் அருளுக்கு இலக்காக வேண்டும்.

மணிவாசகர் ஐம்புலன்களைப் பற்றியும் அவற்றின் தன்மைகள் பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இறைவன் தன்னை விட்டுப் போனதற்குக் காரணம் தான் அப்புலன்களின் மயக்கத்தில் ஆழ்ந்ததே எனவும் கூறுகிறார்.

அவர் கூற்றிலிருந்தே அவர் இல்லறம் ஏற்றிருந்தார் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

‘செப்பிய நாலெட்டில் அருள் வாதவூரருக்குத் தெய்வீகம்’ எனும் தனிப்பாடல் குறிப்பின் படி மணிவாசகர் 32 ஆவது வயதில் முத்தியடைந்தார் என நாம் கருதுகிறோம்.

திருப்பெருந்துறையில் மணிவாசகர் குருவைச் சந்திக்கிறார். தன் வசம் இழக்கிறார். மனம் உருகுகிறார். இவரின் பக்குவ நிலையறிந்து குரு உபதேசம் செய்து ஆட்கொள்கிறார்.

குரு மானிடராயிருந்தாலும் அவரை சிவமாகவே காண்பது சைவ மரபு. ஆனால் மணிவாசகருக்கு அருள் செய்தவர் குரு வடிவில் வந்த சிவபிரானே என்பது தெளிவு. இதனை திருவாசக அடிகள் அகச் சான்றாக நின்று தெளிவிக்கின்றன.

”அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரனாகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே”
எனப் போற்றித் திருவகவலிலும்

“கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள் நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க”

என திருவண்டப் பகுதியிலும் தனக்கு அருளியது குரு வடிவில் வந்த சிவபரம்பொருளே எனத் தெளிவாக அருளியுள்ளார் மணிவாசகர்.

’கண்ணால் யானும் கண்டேன் காண்க’ எனுமிடத்தில் கண் என்பதை உரையாசிரியர்கள் ஞானக்கண் எனக் கொண்டாலும் இங்கு மணிவாசகர் தம் கண்ணார சிவபிரானையே கண்டார் எனக் கொள்வது பொருத்தமாக இருக்கும். கண் என்பது அருட்கண் எனவும் அருளாளர்களுக்கு இறைவன் காட்சியளிப்பது சாதாரணர்களுக்குத் தெரியாது எனவும் வைணவ ஆசிரியர் புருடோத்தம நாயுடு வைணவ மரபு பற்றி எழுதியுள்ளார். அது ஈண்டு பொருந்தாது.

ஏனெனில் மணிவாசகர் பலவிடங்களில் உலக மக்கள் காண இறைவன் தம்மை ஆண்டது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

இங்ஙனம் மணிவாசகர் திருப்பெருந்துறையில் குருவிடம் உபதேசம் வாங்கிய போது திருமணமாகி சில காலமே கழிந்திருக்கக் கூடும்.

குரு மீண்டும் திருக்கயிலைக்கு எழுந்தருள்கின்றார். உடன் அடியவர்கள் செல்கிறார்கள்.

இறைவன் அடியவர்களோடும் திருக்கயிலைக்கு எழுந்தருளினான் என்பதையும் , தம்மை அவனுடன் அழைத்துச் செல்லாமல் தில்லைக்கு வரும்படி அழைத்ததையும் திருவண்டப் பகுதியின் இறுதியில்,

”நாயினேனை நலமலி தில்லையுள்
கோலம் ஆர்தரு பொதுவினில் வருக என
ஏல என்னை ஈங்கு ஒழித்தருளி
அன்றுஉடன் சென்ற அருள் பெறும் அடியவர்
ஒன்ற ஒன்ற உடன் கலந்து அருளியும்
மால் அதுவாகி மயக்கம் எய்தியும்
பூதலம் அதனில் புரண்டு வீழ்ந்து அலறியும்
கால்விசைத்து ஓடிக் கடல்புக மண்டி
நாத நாத என்று அழுது அரற்றிப்
பாதம் எய்தினர் பாதம் எய்தவும்
பதஞ்சலிக்கு அருளிய பரம நாடக என்று
இதம் சலிப்பு எய்த நின்று ஏங்கினர் ஏங்கவும்
எழில்பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்
கனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு
அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை
இறைவன் ஈண்டிய அடியவரோடும்
பொலிதரு புலியூர்ப் புக்கு இனிது அருளினன்
ஒலிதரு கயிலை உயர் கிழவோனே”

என மிக விரிவாக கூறுகின்றார்.

மணிவாசகரும் செல்ல நினைக்கிறார். அப்போது அவருக்குத் தம் மனைவி ஞாபகம் வந்து விடுகிறது. நாம் இல்லாமல் அந்தப் பெண் எப்படி காலம் கழிப்பாள் என்று கணப்பொழுது சிந்திக்கிறார். கணப்பொழுதுதான்.... இதைக் காரணமாக வைத்து இறைவன் தம் அடியவர்களோடு மறைந்து விடுகிறான்…. இவரால் இன்னும் சில பணிகள் நடக்க வேண்டியிருப்பதற்காக.

’மறக்குமாறிலாத என்னை மையல் செய்து இம்மண்ணின் மேல் பிறக்குமாறு காட்டினாய்’ என்பார் ஞான சம்பந்தர்.

இராவணனுக்கு உதவி செய்ததால் அப்பர் பிறக்க நேர்ந்தது என்பர் பெரியோர்.

‘தீதிலாத் திருத்தொண்டத் தொகை’ தருவதற்காக சுந்தரரை மாதர்மேல் மனம் போக்குவித்தான் இறைவன்.

தம் மனைவியை நினைத்ததால் தான் மணிவாசகரை இறைவன் விட்டுச் சென்றான் என எப்படிச் சொல்ல முடியும்?

‘இறைவன் என்னை சிவநகர் செல்வதற்குக் கூப்பிடும்போது நான் மன்மதன் கணைகளுக்கு இரையாகி பெண் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டேன்’ எனப் பொருள் படும்படியாக,

வேனில்வேள் கணை கிழித்திட மதிசுடும் அதுதனை நினையாதே
மான்நிலாவிய நோக்கியர் படிறு இடை மத்திடு தயிராகி
தேன்நிலாவிய திருவருள் புரிந்த என்சிவன் நகர் புகப்போகேன்
ஊனில் ஆவியை ஓம்புதல் பொருட்டு இ(ன்)னும் உண்டு உடுத்து இருந்தேனே
(40)

என திருச்சதகத்தில் புலம்புகிறார்.

மேலும், இன்னும் தெளிவாக, “நீ என்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டும் என முடிவு எடுத்தது சரிதான். நீ கூப்பிடும்போது ஒருத்தியின் இதழ் துடித்ததையும் துகில் விலகியதையும் முகத்தில் குறுவேர்வை உண்டானதையும் நான் நினைத்து எனக்கு நானே கேடு செய்து கொண்டேன்” எனும் பொருள்பட திருச்சதகத்தில்,

முடித்த ஆறும் என் தனக்கே தக்கதே, முன் அடியாரைப்
பிடித்த ஆறும் சோராமல் சோரனேன், இங்கு ஒருத்தி வாய்
துடித்த ஆறும் துகில் இறையே சோர்ந்த ஆறும் முகம் குறுவேர்
பொடித்த ஆறும் இவை உணர்ந்து கேடு என் தனக்கே சூழ்ந்தேனே
(57)

எனப் பாடுகிறார்.

இங்கு ஒருத்தி, இவை உணர்ந்து எனும் பதங்கள் மணிவாசகர் மனையறத்தில் இருந்தார் என்பதையும் இறைவன் அழைக்கும் போது மனைவியை நினைந்தார் என்பதையும் காட்டுகின்றன.

இவர் இவ்வாறு நினைந்திருக்காவிடில் இறைவன் இவரை விட்டுப் பிரிந்திருக்க மாட்டான் என்று,

வினை என்போல் உடையார் பிறர்யார்? உடையான் அடிநாயேனைத்
தினையின் பாகமும் பிரிவது திருக்குறிப்பன்று
(37)

என்று கூறுகிறார்.

20-06-09

“கோலாலமாகிக் குரைகடல்வாய் அன்று எழுந்த
ஆலாலம் உண்டான் அவன் சதுர்தான் என்னேடி?”

திருச்சாழலில் வரும் இப்பகுதி இறைவன் நஞ்சுண்ட வரலாற்றைக் குறிக்கிறது.

”பாற்கடலில் அன்று மிகுந்த ஆரவாரத்தோடு எழுந்த நஞ்சை உண்டதில் உங்கள் இறைவனுக்கு சொல்லிக் கொள்ளும்படியான திறமை என்ன இருக்கிறது? ” என்று கேட்கிறாள் தோழி.

இறைவனை ‘கறைக்கண்டன்’ எனக் கூறலாமா? அப்படிச் சொன்னால் அது அவனுக்கு இழுக்கு என்றுதான் படுகிறது. ஏன்? அது அழுக்கு அல்ல;கறை அல்ல;

பாற்கடல் கடைந்தபோது எழுந்த நஞ்சை சுந்தரரால் உளுந்தளவு திரட்ட முடிந்த இறைவனுக்கு அது எப்படி கறையாக இருக்க முடியும்? இப்படி பார்க்கலாம்,

இறைவன் பவளம் போல் சிவந்த மேனியன். விஷமோ ஆகக் கருப்பு. வாங்கிய விஷத்தை வாயில் போட்டான். நம்மால் ஒரு பொருளை வாயிலிட்டு விழுங்க முடியும் அல்லது துப்ப முடியும். தொண்டைக் குழியில் வைத்திருக்க முடியுமோ? யாராலும் செய்ய இயலாத காரியத்தை இறைவன் செய்தான். சிவந்த மேனியின் கழுத்தில் நின்ற கருப்பு நமக்குத் தெரிகிறது.

இறைவன் நஞ்சுண்டு தேவர்களைக் காத்த வரலாறு நம் புலவர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார்கள்.

நற்றிணையில் “முந்தை இருந்து நட்டோர் கொடுப்பினும் நஞ்சுமுண்பர் நனிநாகரிகர்” (355) என வருகிறது.

இங்கே நட்டோர் தேவர்கள். தம் தெய்வத்தையே அல்லவா நஞ்சுண்ணச் சொல்கிறார்கள்.....!

இதையே வள்ளுவரும் ,

பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்
(580)

எனக் குறிப்பிடுகிறார்.

வள்ளுவரின் சமயத்தைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் இருப்பது போலவே அவர் துறவியா இல்லறத்தாரா எனவும் ஆராய்ச்சிகள் செய்துள்ளனர்.

அவர் இல்லறத்தார் என்பதற்கு அவரது வாக்குகளே இரண்டு இடங்களில் நமக்குத் துணை செய்கின்றன.

பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற
(61)

எனவும்,

குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
(66)

எனவும் வரும் இரு குறள்களில் ‘யாம்’, ’தம்’ எனத் தம்மையும் உடன்பட்டுக் கூறிக் கொண்டார்.

இதுபோல அவர் சைவர் என்பதற்கும் இரு குறள்களைச் சொல்லலாம். ஒன்று மேலே சொன்ன பெயக்கண்டும்’ குறள். மற்றொன்று,

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப் பட்டவர்க்கு
(269)

எனும் குறள். இதில் மார்க்கண்டர் வரலாற்றை எடுத்துக் காண்பிக்கிறார்.

“ஆலாலம் உண்டிலனேல் அன்று அயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவர் எல்லாம் வீடுவர் காண் சாழலோ”

”அப்படி அவன் ஆரவாரத்தோடு எழுந்த நஞ்சை உண்டிருக்கா விட்டால் பிரமன், விஷ்ணு உள்ளிட்ட எல்லா தேவர்களும் இறந்து போயிருப்பார்கள்” என்று பதில் சொல்கிறாள் பெண்.

36 தத்துவங்களுள் வித்யா தத்துவத்தில் தான் காலம் வருகிறது. அதற்கு மேற்பட்ட புவனங்களில் இருப்பவர்களுக்குக் கால தத்துவம் கிடையாது என்பதை நாம் அறிந்திருப்போம்.

இறைவனுக்கு ‘காலகாலன்’ என ஒரு திருநாமம் உண்டு. அதற்குக் காலனை வென்றவன் எனவும் கால தத்துவத்தைக் கடந்தவன் எனவும் பொருள் கொள்ளலாம்.

சிவபிரானுடைய வடிவங்களுள் ‘கங்காள மூர்த்தி’ என ஒரு வடிவம் உண்டு. இறைவன் தம் தோள் மேலே அயன் மால் ஆகியோரின் எலும்புக் கூடுகளைப் போட்டிருப்பார். மும்மூர்த்திகளுக்கும் மேலானவன் என்பதை உணர்த்துகிறது அத்திருக்கோலம்.

ஒருமுறை சரஸ்வதி வீணை வாசிக்க உமையம்மை அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாளாம். அந்நேரம் இறைவன் உள்ளே வந்தாராம். அவரைக் கண்டதும் சரஸ்வதி வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு ‘ஓ’வென்று அழ ஆரம்பித்தாளாம்.

உமையம்மை திடுக்கிட்டு “ஏன் அழுகிறாய்?” என்று கேட்க, சரஸ்வதி இறைவன் தோள்மேல் இருந்த எலும்புக் கூடுகளைக் காண்பித்து ”என் கணவரும் இப்படித்தான் ஒருநாள் எலும்புக் கூடாகப் போகிறாரே என்ற துக்கத்தில் தான் அழுதேன்” என்றாளாம்.

ஆக, இறைவன் காலம் கடந்தவன், காலத்தையே இயக்குபவன் என நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நஞ்சுண்டும் இறைவன் சாகவில்லை. காலத்தைக் கடந்தவன் தான் என்பதை நிரூபித்து விடுகிறான்.

வைணவ மரபில் பல்லாண்டு பாடுவார்கள். அதில்,

‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்’
என விஷ்ணுவுக்குக் கால வரையறை சுட்டிக் காட்டுகிறார்கள்.

எனவே பிரமன் விஷ்ணு முதலியோர் காலத்துக்கு உட்பட்டவர்கள் என்றாகிறது.

ஆனால் நம் பல்லாண்டு,

“பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே”

என்கிறது.

பிற குறிப்புகள்:


1.திருவம்மானையில் ’சேர்ந்தறியாக் கையன்’ என வருகிறது.

கை என்பது பொதுவாக உறுப்பைக் குறித்தாலும் இங்கு ஒழுக்கத்தைக் குறிப்பதாக நாம் கொள்ளலாம்.

இறைவன் யாரிடமும் சென்று ஒழுக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதவனாய் தானே ஒழுக்கநெறிக்கு வித்தாய் அமைந்திருப்பதை அத்தொடர் குறிப்பதாகக் கருதலாம்.

திருச்சதகத்தில் முதல் பாட்டான ‘மெய்தான் அரும்பி’ என்பதில் ‘கைதான் தலை வைத்து’ எனவும், ‘கைதான் நெகிழ விடேன்’ எனவும் இருஇடங்களில் கை வருகிறது. முதல் கை உறுப்பைக் குறிக்கும். இரண்டாவது கை கொள்கையைக் குறிக்கும்.

2. திருச்சதகம் 49 ஆவது பாடலில் ‘பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை, எட்டினோடு இரண்டும் அறியேனையே’ என வருகிறது.

இதில் எட்டும் இரண்டும் பல பொருள் தருவன.

1. எட்டும் இரண்டும் பத்து எனச் சொல்லத் தெரியாத உலகியல் தெரியாத அறியாமை உடையவன் என்பது ஒரு பொருள்.

2. எட்டு எனும் எண் தமிழில் ‘அ’ எனவும், இரண்டு எனும் எண் ‘உ’ எனவும் குறிக்கப்படும். ‘அ’ வும் ‘உ’ வும் ஆகிய எழுத்து அறியாத- கலை என்பதை அறியாதவன் என்பது ஒரு பொருள்.

3. யோக நெறியில் ’அ’ , ‘உ’ என்பவை ஓங்காரத்தில் உள்ள அகார உகாரம் எனக் கொண்டு அகார உகார மகார வடிவான ஓங்காரத்தையும் அதன் பொருளையும் அறியாதவன் என்பது இன்னொரு பொருள்.

4. பத்து என்பது தமிழில் ‘ய’ எனக் குறிக்கப்படும். ’ய’ என்பது ஐந்தெழுத்தில் ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மாவிற்காகச் செய்யப்படும் உபதேச நெறியினை அறியாதவன், ஆன்ம லாபப் பேறு என்பதை அறியாதவன் என்பது மற்றொரு பொருள்.


(ஜூன் 27 மணிவாசகர் குருபூஜை)


9 கருத்துகள்:

 1. அன்பரே,
  நாயினேனை நலமலி.. இவ்வரிகள் கீர்த்தித் திருவகவல்லில் அல்லவா வருகிறது. திருவண்டப்ப்குதி என் குறிப்பிட்டீறிக்கிறீர்களே?

  பதிலளிநீக்கு
 2. மன்னிக்கவும் ராஜன் அவர்களே, நான் தான் தவறாகக் குறிப்பிட்டுவிட்டேன். தாங்கள் யார் எனத் தெரியவில்லையே?

  பதிலளிநீக்கு
 3. புது வாசகர். தங்கள் எழுதும் முறை பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. Very good article. Kindly post more article on similar way. I like very much. Good work.

  Namashivaya
  Somasundaram
  Finland
  somsprema@yahoo.com

  பதிலளிநீக்கு
 5. Your article is very good.
  But, this words "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி, நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி" in PootriThiruagaval not in Thiruvadappaguthi
  Of course the content and message are important (this is not a major mistake).

  Namashivaya.

  Somasundaram
  Finland
  somsprema@yahoo.com

  பதிலளிநீக்கு
 6. திருவாசகத்தில் மாயை பற்றிய கருத்துக்கள் தருக

  பதிலளிநீக்கு
 7. திருவாசகத்தில் மாயை பற்றிய கருத்துக்கள் தருக

  பதிலளிநீக்கு
 8. திருவாசகத்தில் மாயை பற்றிய கருத்துக்கள் தருக

  பதிலளிநீக்கு

Translate