திங்கள், 22 ஜூன், 2009

அப்பர் சுவாமிகள் தேவாரத்தில் வேதங்கள் - 7

வேதம் நிலையானதா?
னி, வைதிக சமயத்தாரில் ஒருசாரார் கூறுகிறபடி, வேதமானது `சுயம்பு' - தானே தோன்றியது என்னும் கருத்தையும், `அபௌருஷேயம்' - ஒருவராலும் செய்யப்படாதது என்னும் கருத்தையும், வேதம் நித்தத் தன்மையுடையது என்னும் கருத்தையும் சித்தாந்த சைவம் மறுக்கிறது.



வேதம் `சுயம்பு' என்று அழைக்கப்படுவதன் காரணம், `சுயம்பு' எனும் பெயருடைய இறைவனால் அருளிச் செய்யப்பட்டதனால், இறைவன் பெயர் அதற்கு வந்தது என்றும், (வள்ளுவரால் செய்யப்பட்டமையின் குறள் வள்ளுவர் எனப்படுவது போல), இறைவன் வேதத்தில் தன்னைத் தானே வழிபடுவது போலக் கூறியுள்ளமை, பக்குவ ஆன்மாக்களாயுள்ளவர்கள் தம்மை வழிபாடு செய்து உய்ந்து போவதற்கு என்றும், வேதம் ஆன்மாக்களுக்காகவே இறைவனால் அருளிச் செய்யப்பட்டது என்றும் சங்கற்ப நிராகரணத்தில் உமாபதி சிவாசாரியர் மாயாவாதி நிராகரணத்தில் அருளியுள்ளார்.


மேலும், புருஷர்களாகிய ஜீவாத்மாக்களால் செய்யப்பட்டதன்று என்பதைக் கூறவே `அபௌருஷேயம்' என வேதம் கூறப்பட்டது.


வேதம் `ஆப்தவாக்கியம்' எனப்படுகிறதே எனின், இறைவனுக்கு `பரமாப்தன்' என்று பெயராதலின், அவனால் அருளிச் செய்யப்பட்டமையின் அவ்விதம் அழைக்கப்படுகிறது.


தொல்காப்பியம் ஆப்தனுக்கு இலக்கணம் கூறுகையில், "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன்" என்றார். அத்தகைய முனைவனாற் செய்யப்பட்டமையின் வேதம் `முதனூல்' எனப்பட்டது.


இதனை, "ஆப்த வாக்கியமானது சித்தாந்தமேயாகும். சிவனொருவனே ஆப்தனாயிருக்கின்ற காரணத்தால், அவன் வாக்குச் சித்தாந்தம் எனப்படும். அந்தச் சித்தாந்தம், ஆப்தனாகிய பரமசிவன் என்னும் இருபொருள்களோடு சமானமான வேறொரு பொருள் இல்லை" என்று இரத்தினத்திரயம் கூறும்.32
இதனையே ஸ்ரீமத் அகோர சிவாசாரியர் செய்த விருத்தியுரை மேல்வருமாறு விளக்குகின்றது. அஃதாவது:


"ஆகமமானது ஆப்தவாக்கியம்; அந்த ஆகமமும் பிரத்தியக்ஷத்தினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாமல் இருக்கிற பதார்த்தத்தை அறிவதற்குச் சாதனம் என்று சொல்லப்படும். பிரத்தியக்ஷத்தாலும் அனுமானத்தாலும் நிச்சயமாயிருக்கிற அர்த்தத்தை யாவனொருவன் சொல்லுகிறானோ, அவன் ஆப்தன் ஆவான். அந்தக் காரணத்தால் அந்தப் பரமசிவம் பரமாப்தர் என்று சொல்லப்படுவர். மிகத் தெளிந்த புலன்தொகுதியை உடையவரும், சர்வக்ஞரும், எல்லாத் தொழிலும் உடையவரும், பக்ஷ பாதமில்லாதவரும், உள்ளபடி கிரகிக்கிறவரும், நாசமில்லாதவரும், பெத்தான்மாக்களுடைய பந்தத்தைக் கெடுக்கிறவருமாகிய சிவபெருமான் பரமாப்தர் என்று சொல்லப்படுவர்."33


எனவேதான் அப்பரடிகளும் "ஓதினார் வேதம் வாயால்" என்று இறைவன் வேதத்தை அருளிச் செய்தான் எனப் பாடினர்.


இனி, "முற்கூறிய 36 தத்துவங்களுள் நாதம் முதல் தத்துவம். இது `பிரணவம்' என்றும் `ஓம்' என்றும் கூறப்படும். அது பின்னர் விந்து தத்துவமாய் விரிந்து பரவும்... பரமசிவத்தின் அருளொளியானது சுத்தமாயையென்னும் குடிலையில் வந்து பொருந்தியவுடன் தோன்றிய தொனியே நாதமாகும். இந்த நாதமே வைதிக சைவத்துட் கூறப்பட்ட தத்துவங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையானது. இதுவே சர்வாத்மாக்களுக்கும் அறிவை எழுப்புவித்து ஞானமாய் விளங்குவது.


இந்நாதமே சப்தமயப் பிரபஞ்சம் (சொல் உலகம்), அர்த்தப் பிரபஞ்சம் (பொருள் உலகம்) ஆகிய இருகூற்றுப் பிரபஞ்சங்களுக்கும் காரணமாக விளங்குவது.
இவற்றுள் சப்தபிரபஞ்சமே வேதமாயும், பல சாகைகளாயும், காண்டங்களாயும், அத்தியாயங்களாயும், மந்திரங்களாயும், பதங்களாயும் அட்சரங்களாயும் விரிந்து அவற்றின் கோவைப் பாட்டோடு கூடிய தொகுதியாக விளங்குகிறது. எனவே அது காரியம் என்பது தெளிவாகிறது."
34



சைவ சித்தாந்தப்படி 36 தத்துவங்களும் மாயையின் காரியமாதலின் அவை நித்தியமென்று சொலப்படா. காரியமான அவை காரணமாகிய மாயையிலிருந்து தோன்றி ஒடுங்கும்.


இவ்விலக்கணம் வேத ஆகமங்களுக்கும் பொருந்தும். எனவே வேதம் நித்தம் என்னும் ஒருசாராரின் கொள்கை அடிபட்டுப் போகிறது.


இதனை,


"வேதம் நித்தம் என்பதற்குப் பிரமாணம் இன்மையானும், தோற்றக்கேடுகள் காணப்படுதலின் அநித்தம் என்பதே துணியப்படுதலானும், `அந்தக் ககரமே இது' என்னும் மறித்துணர்வு `அந்தச் சுடரே இது' என்பது போலச் சாதியொருமை பற்றி நிகழ்வதேயாம் ஆகலானும், அவ்வாறன்றி எழுத்துக்கள் நித்தமெனக் கொள்ளினும் அவை ஒன்றோடொன்று தொடர்ப்பாடுற்று வரும் சொற்கள் அநித்தமே ஆகலானும், உலகத்திற்குத் தோற்ற ஒடுக்கங்கள் உண்மையிற் பிரவாக நித்தம் என்பதும் பொருந்தாமையானும், எல்லாவுயிர்கள் மாட்டும் பேரருளுடைய பரமசிவனாற் செய்யப்பட்டமை பற்றியே வேதங்கட்குப் பிரமாணமுண்மை கொள்ளப்படும். அம்முறையானே சிவாகமங்களும் பிரமாணமாதல் துணியப்படும். அது வேதம் முதல் உலகாயதநூல் இறுதியாகிய எல்லாநெறியும் பரமசிவனாற் செய்யப்பட்டமையிற் பிரமாணமாமெனச் சூதசசங்கிதையிற் கூறியவாற்றானும் அறிக"35


என, சிவஞானபோத பாஷ்யத்தில் ஸ்ரீசிவஞானசுவாமிகள் தெளிவுபடுத்தியுள்ளார்.


குறிப்புகள்:


32. வேதாகம நிரூபணம் - பக்.35.
33. மேலது - பக். 36.
34. ப்ரணவ வித்யா பரிமளம் - பக்.6,9.
35. சிவஞான பாடியம் - பக். 18,19.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate