வியாழன், 1 நவம்பர், 2012

புத்தம் புதிய புத்தகமே 2


தமிழகத்தில்?

 மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஸ்டாலின்ராஜாங்கம் கூறியதாவது:

புத்தகம் படிப்பது, குறைந்து கொண்டே வருகிறது. புத்தகப் படிப்பு குறைவதற்கு, ஊடகங்கள் தான் காரணம். ஊடகங்கள், செய்திகளை மட்டுமே தருவன; நாம் விரும்புவதைத் தருவது புத்தகம். செய்திகளைத் திணிப்பது, ஊடகம். இதனால், ஊடகத் தகவல்களை, நாம் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிர்ப்பந்தம் இருக்கிறது.


 புத்தக விற்பனை அதிகரித்துள் ளது உண்மை தான். ஆனால், இன்றைய இளைஞர்களின் கல்வியறிவுப் பெருக்கத்தோடும், மக்கள் தொகையோடும் ஒப்பிடும் போது, இது ஒன்றுமே இல்லை. இன்று எந்த அரசியல் அமைப்புக்கும், புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு இல்லை.

 எனது வகுப்பில் பாடம் எடுக்கும்போது, உணர்ச்சிபூர்வமான எந்த விஷயத்தைச் சொன்னாலும், மாணவர்களிடம் எவ்வித சலனமும் ஏற்படுவதில்லை. கிராமப்புற மாணவர்களிடம் கொஞ்சம் உணர்ச்சி இருக்கிறது.

இவ்வாறு, பேராசிரியர் ராஜாங்கம் கூறினார்.

நூலகத் துறையின் முன்னாள் இயக்குனர் தில்லைநாயகம் ஓர் இணையதளப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

 வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரம், மாயையே. வாசிப்புத் திறன் கூடியிருந்தால், இந்த நாடு மேன்மையான சமூக மாற்றத்தைச் சந்தித்திருக்கும். கல்லூரி, பள்ளிகளில் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் வாசிப்பு, தொழில்முறை வாசிப்பாக (புரொபஷனல் ரீடிங்) மட்டுமே இருக்கிறது.

மன அழுத்த நோய் அதிகரிப்பதற்குக் காரணம், புத்தக வாசிப்புப் பழக்கம் இல்லாததுதான். முன்பு பள்ளிகளில் நூலகத்துக்கு என்று ஒரு வகுப்பு இருந்தது. இப்போது அது இல்லை.

இவ்வாறு தில்லைநாயகம் கூறியிருக்கிறார்.

இதற்கு நேர்மாறாக, புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்பது, நெல்லை மனோன்மணியம் பல்கலை தமிழியல்துறைத் தலைவர் பேராசிரியர் அ.ராமசாமியின் கருத்து.

 'கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ் பதிப்பகங்களின் எண்ணிக்கையும், புத்தக விற்பனையும் அதிகரித்துள்ளது. இளைஞர்களில் குறிப்பாக ஐ.டி., துறையில் இருப்பவர்கள், புத்தகம் மற்றும் இணையதளத்தில் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்' என்பது, அவர் வாதம்.

காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர் கண்ணனும், இதே கருத்தை முன்வைக்கிறார். அவர் கூறியதாவது:

புத்தகம், இபுக், இரீடர் என்ற பாகுபாடு அவசியமற்றது. மாற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கணிசமான அளவில் இளைஞர்கள் வந்திருந்தனர்.

ஆங்கில புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது என்றாலும், தமிழ்வழிக் கல்வி தடுமாறும் இக்காலத்தில், எப்படி இவ்வளவு இளைஞர்கள் தமிழ் புத்தகங்களை நாடி வருகின்றனர் என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

ஆனால், தமிழில் வாசிப்பு குறைவதற்கு, தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவமின்மை, ஆங்கிலத்தில் உள்ளது போல், குழந்தை இலக்கியம், தரமான பதிப்பு, பரந்து விரிந்த சந்தை, உடனடி வெளியீடு ஆகியவை தமிழ் பதிப்புலகில் இல்லாதது என, பல காரணங்களைச் சொல்லலாம்.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்ப் பதிப்புலகில் ஏற்பட்ட மாற்றம் தான், வாசிப்புப் பழக்கம் குறையவில்லை என்று காட்டுகிறது. ஆனால் நம் மக்கள் தொகைக்கு முன், இதெல்லாம் சாதாரணம் தான்.

இவ்வாறு கண்ணன் கூறுகிறார்.

கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி கூறியதாவது:

இளைஞர்கள், கதைகளை விட, பிறதுறைப் புத்தகங்களை அதிகம் நாடுகின்றனர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புத்தக வெளியீடு அதிகமாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பை விட இப்போது, இரண்டு, மூன்று மடங்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன.

ஆங்கில மோகத்தைக் கண்டு, நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆங்கில மோகம் என்பதும், ஆங்கிலத்தில் புலமை என்பதும் வேறு,வேறு. இன்று தினப்பத்திரிகைகள் அதிகம் விற்பனையாகின்றன. புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. தமிழிலும் படிக்கின்றனர்; ஆங்கிலத்திலும் படிக்கின்றனர். இணையம் மூலமாக அதிக நேரம் படிக்க இயலாது.

இவ்வாறு பத்ரி சேஷாத்ரி கூறினார்.


எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சென்னை புத்தகக் கண்காட்சி குறித்து, இணையதளத்தில் கூறியுள்ளதாவது:

இன்றைய இளைய தலைமுறையினர் மென்பொருள், ஊடகம், வங்கி, கல்லூரி, பன்னாட்டு நிறுவனங்கள் என்று பணிபுரிந்தபடியே, கூர்ந்து தமிழ் இலக்கியப் போக்குகளை கவனிக்கின்றனர். படிக்கின்றனர்.

இன்னொரு சந்தோஷம்... இத்தனைத் தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகும் மக்கள் புத்தகங்களின் மீது காட்டும் அக்கறையும், அதை வாங்குவதற்காக அலைமோதுவதைக் காண்பதும் வியப்பாக இருக்கிறது.

இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்தியாவில் முதன்முதலாக, பொதுநூலகச் சட்டம் போடப்பட்டது தமிழகத்தில்தான். தமிழகத்தில் 4,600 உயர்நிலைப் பள்ளிகளில் 85 சதவீதப் பள்ளிகளிலும், 5,100 மேல்நிலைப் பள்ளிகளில் 98 சதவீதப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளதாக, 2002ல் எடுக்கப் பட்ட கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. மொத்தமுள்ள 48,062 அரசு ஆரம்பப் பள்ளி நூலகங்களில், இரண்டு கோடி புத்தகங்கள் உள்ளன.

தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே புத்தக வாசிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், சில திட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. கோவில்களில் நூலகங்கள் படிப்படியாகத் துவக்கப் பட்டு வருகின்றன.

பள்ளிகளில் சில புத்தகங்களை ஒன்றாகக் கட்டி, வகுப்புகளில் தொங்கவிடும், 'புத்தகப் பூங்கொத்து' திட்டம் தொடங்கப்பட்டது. இந்தப் புத்தகங்களை அந்தந்த வகுப்பு மாணவர்கள் படித்த பின், இவை அடுத்த வகுப்புக்கு மாற்றப்படும்.

கடந்த 2009, செப்டம்பர் 17ல் சென்னை தேவநேயப் பாவாணர் நூலகத்தில் நடந்த விழாவில் பேசிய, பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, 'தமிழக மாணவர்களிடையே படிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், வாரம் ஒருமுறை மாணவர்கள், நூலகங்களுக்கு அழைத்துச் செல் லப்படுவர்' என்று அறிவித்தார்.

இதற்காக, 'நமது உலகம் நூலகம்' என்ற திட்டம் உருவாக்கப் பட்டது. 2009 அக்டோபர் 16ம் தேதி முதல் 2010 அக்டோபர் 15ம் தேதி வரை, 'நூலக எழுச்சி' ஆண்டாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மறந்துவிடவில்லை, ஒட்டுமொத்தமாக நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமையாகி விடவில்லை என்பதையே இவர்களின் கருத்துக்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.


1 கருத்து:

Translate