ஞாயிறு, 4 நவம்பர், 2012

போதிய நிதியில்லாமல் தேங்கும் சிந்துவெளி ஆய்வுகள்


(தினமலரில் வெளியான நாள்: 04-06-2012)

 சென்னையில் இயங்கி வரும், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் சிந்துவெளி குறித்த ஆய்வுகள், போதிய நிதியுதவி இல்லாமல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில், 1994ல் துவக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில், சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், 2007ல் துவக்கப்பட்டது.

கடந்தாண்டு வரை, இந்நிறுவனத்தின் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரைத் தொடர்ந்து, தற்போது பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., மதிப்புறு ஆலோசகராக உள்ளார்.

சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், தற்போது முழுநேர ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் மற்றும் ரோஜா முத்தையா நூலக இயக்குனர் ஜி.சுந்தர் ஆகியோர், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.கணினிமயமாக்கம் ஆய்வுநிலை குறித்து சுந்தர் கூறியதாவது:

உலகில் இதுவரை அதிகளவில் சர்ச்சைக்குள்ளானது, சிந்துவெளி ஆய்வு தான். 1977 வரை கிடைத்த சிந்துவெளி முத்திரைகளைத் தொகுத்து, அவற்றில் உள்ள குறியீடுகளை அடையாளம் கண்டறிந்து, குறியீட்டுச் சொல்லடைவு ஒன்றை, 1977ல் ஐராவதம் மகாதேவன் வெளியிட்டார்.

அதையடுத்து 2010ல், தமிழறிஞர் அஸ்கோ பர்போலா, 1977க்கு பின் கிடைத்த முத்திரைகளைத் தொகுத்து, அவற்றின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு தொகுப்பை மட்டும் வெளியிட்டார்.

அதில் முற்றிலும் புதிய குறியீடுகள் உள்ளன. இதுதவிர பிற ஆய்வாளர்களிடமும், அருங்காட்சியகங்களிலும், பல்வேறு குறியீடுகளைக் கொண்ட முத்திரைகள் உள்ளன. இவற்றை எல்லாம் தொகுத்து, புதிய குறியீட்டுச் சொல்லடைவு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த சொல்லடைவை கணினி மயமாக்கவும் திட்டம் உள்ளது. தேவைப்படுவோர் யாராயினும், ரோஜா முத்தையா நூலகத்திற்கு உரிய சந்தா தொகையைச் செலுத்தி, பயன்படுத்தும் வகையில் திட்டம் அமையும்.

தேவை 4 கோடி ரூபாய்

சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்ட உடன், ஆய்வுப் பணிகளுக்காக செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனம், 10 லட்ச ரூபாய் வீதம் இரு ஆண்டுகளுக்கு அளித்தது. அந்தப் பணத்தில், 4 கருத்தரங்குகள், இரு கண்காட்சிகள், ஆய்வு சொற்பொழிவுகள் என முடிந்தவரை செய்தோம்.

இதையடுத்து, அந்நிறுவனம் மூலம் நிதியுதவி பெறுவதில் சிக்கல் உண்டானது.
மொத்தம் இந்த ஆய்வுக்கு, நான்கரை ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதற்கு தற்போதைய நிலையில், 4 கோடி ரூபாய் வேண்டும். தற்போது, ஆர்வத்தினால் அந்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

சிந்துவெளி குறித்து தமிழில்...

நமது ஆவணங்களைப் பாதுகாக்க, முன்பு வெளிநாட்டு நிறுவனங்கள் நிதியுதவி அளித்தன. அந்த உதவியும் இப்போது குறைந்து விட்டது. இன்னும் எத்தனை காலம் தான், வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்கும்
அவலம் தொடரும் எனத் தெரியவில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

கடந்த 1920க்குப் பின், சிந்துவெளி ஆய்வு குறித்து தமிழில் விரிவான ஆய்வுகள் வெளிவரவில்லை. அதனால், இந்த ஆய்வில் இதுவரை என்ன நடந்திருக்கிறது, எப்படி அணுகுவது என்பது குறித்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நூல் ஒன்றை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்.

சிந்துவெளியில் கிடைத்த குறியீடுகள் அங்கு திராவிடப் பண்பாடு நிலவியது என்பதைக் காட்டுவதாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சுந்தர் தெரிவித்தார்.

தமிழகத்தில் அகழாய்வு நடக்குமா?
சிந்துவெளி குறித்த முழுநேர ஆய்வாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:

மொகஞ்சதாரோ பகுதியில், தற்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு ஏற்கனவே அகழாய்வு நடத்தப்பட்ட இடங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹரப்பா மட்டுமின்றி இன்னும், 2,000 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான், சிந்துவெளி பற்றிய முழுமையான சித்திரம் கிடைக்கும்.

தமிழகத்திலேயே, கோவை மாவட்டம் சூலூர், செங்கல்பட்டு சாணூர், மயிலாடுதுறை அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் ஆகிய மூன்று இடங்களில் தான், சிந்துவெளிக் காலத்தோடு ஒப்பிடக் கூடிய பொருட்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இன்னும் பல இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

முன்வருமா தொல்லியல் துறை?

ஆதிச்சநல்லூரில் நடந்த அகழாய்வு பற்றி, 100 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த தகவல்கள் தவிர, இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் இந்தியத் தொல்லியல் துறையால் (ஏ.எஸ்.ஐ.,) வெளியிடப்படவில்லை. அவையும் வெளியிடப்பட்டு, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினால் தான், நமது வரலாற்றை நாம் முறையாக அறிய முடியும்.

இதற்கு, மத்திய, மாநில அரசுகள் மனது வைக்க வேண்டும். சிந்துவெளி ஆய்வுக்குத் தனியார் நிறுவனங்கள் உதவும் பட்சத்தில், ஆராய்ச்சியை மேலும் பல தளங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என நம்புகிறோம். அது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இவ்வாறு சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 கருத்து:

Translate