புதன், 31 அக்டோபர், 2012

புத்தம் புதிய புத்தகமே 1

(தினமலரில் வெளியான நாள்: 23-04-2010)

புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்ள புத்தகங்களை வாங்குவதில் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர் இளைஞர்கள்.புத்தகம் படிப்பதற்காக, ஷாப்பிங், சினிமா, விளையாட்டு என, அனைத்தையும் கூட தியாகம் செய்து விடுகின்றனர்.ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான்! ஆனால், இது இங்கல்ல... அமெரிக்காவில்! சமீபத்திய ஆய்வில் தான் இவ்விஷயம் தெரிய வந்துள்ளது.

இந்தியா நிலை என்ன? 

நம் இளைஞர்களும் சளைத்தவர்கள் அல்ல; படிக்கின்றனர். இணையம், இபுக், இரீடர் என்று நவீன தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில், இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகளிடம், புத்தகத்தின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது என்பது, சிலரின் கருத்தாக, ஆதங்கமாக, வேதனையாகக் கூட இருக்கிறது. உண்மை அதுதானா என்பது தீர ஆராயப்பட வேண்டியதுதான்.

இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைய சமுதாயத்தினர் தான். இவர்களில் 20 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில், 33 சதவீதம் பேர் பட்டப்படிப்பு மற்றும் பிற படிப்புகள் படித்தவர்கள்; 59 சதவீத இளைஞர்கள், பணிபுரிபவர்கள்.

சமீபத்தில், டில்லியில் புத்தகச் சந்தை நடந்தது. உலக அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சந்தை இது. இந்திய மற்றும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் 1,200 பேர், இதில் கலந்து கொண்டனர். மொத்தம் 2,400 கடைகள்; இவற்றில் 35 கடைகள், வெளிநாடுகளைச் சேர்ந்தவை.

இப்புத்தகச் சந்தையைத் துவக்கி வைத்த மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறுகையில்,'நவீன தொழில் நுட்பம், குழந்தைகளின் புத்தக வாசிப்பைக் குறைத்து விட்டது என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என, கூறினார்.

டில்லி புத்தகச் சந்தைக்கு, இரண்டு லட்சத்துக்கும் மேலான புத்தகப் பிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் இளைஞர்கள் தன்னம் பிக்கை ஊட்டும் புத்தகங்கள், வெற்றி பெற வழிகாட்டும் நூல்கள், யோகா புத்தகங்கள், தேர்வை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்களை விரும்பி வாங்கியதாக, நாளிதழ் செய்திகள் கூறுகின்றன.

அண்மையில் நேஷனல் புக் டிரஸ்ட், புத்தகம் படிக்கும் பழக்கம் பற்றி, இந்திய இளைஞர்களிடையே ஓர் ஆய்வு நடத்தியது. அதில், செய்திகள் மற்றும் தகவல்கள் அறிவதற்காக, 63 சதவீத இளைஞர்கள், நாளிதழ்களையும், 17 சதவீதம் பேர், வார, மாத பத்திரிகைகளையும் நாடுகின்றனர் என்றும், செய்திகளுக்காக இணையத்தை நாடுவோர், வெறும் 7 சதவீதம் தான் என்பதும், தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு, இந்திய இளைஞர்களிடையே, படிக்கும் பழக்கம் இன்னும் குறைந்து விடவில்லை என்பதை காட்டுகிறது.

1 கருத்து:

Translate