திங்கள், 5 நவம்பர், 2012

'எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும்'


நமது அலுவலகத்தில் மின் அஞ்சலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, அதனுடன் இருந்த இணைப்பை கிளிக் செய்தோம்.

அப்போது “நமச்சிவாய வாழ்க” எனும் சிவபுராணப் பாடல் நமது காதுகளில் தேனாய் ஒலித்தது. பாடியவர் யார் என விசாரித்தோம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஓதுவார் பணிபுரியும் சற்குருநாத ஓதுவாரின் கம்பீரக் குரல் அது என அறிந்தோம்.

 தீபாவளி மலருக்காக அவரது அனுபவங்களைக் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டது வாசகர்களுக்காக....

உங்கள் பிறப்பு, நீங்கள் வளர்ந்த சூழல், இந்த துறைக்கு நீங்கள் வந்த விதம் பற்றி முதலில்  கூறுங்களேன்?

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, கருக்காடிபட்டி கிராமத்தில் தேசிகர் குடும்பத்தில் பாலசுப்பிரமணிய தேசிகர், வாலாம்பாள் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்தேன்.

சிறுவயதிலேயே இசையில் நாட்டம் உண்டு. என்னுடைய பெரிய தந்தையார் சோமசுந்தர தேசிகர் திருச்சி வானொலி நிலையத்தில் தேவாரம் கற்றுக் கொடுத்தார். அதைக் கேட்டு நானும் படிக்க விரும்பினேன்.

அப்பா பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். நான் நன்றாகப் படித்து நல்ல உத்தியோகத்துக்குச் செல்ல வேண்டும் என அவர் விரும்பினார்.

இசையில் நாட்டம் இருந்ததால் படிப்பில் நாட்டம் இல்லை. அதனால் குடும்பத்தில் வேண்டாவெறுப்பாகத் தான் என்னை ஓதுவார் படிப்பிற்கு அனுப்பினர்.

1986ல் சிதம்பரம் நகரில்  அண்ணாமலைச் செட்டியாரின்  வி.எஸ்.டிரஸ்ட் தேவார பாடசாலையில் ஐந்தாண்டுகள் படித்து வெளியில் வந்தேன். என்னுடன் 7 பேர் படித்தனர். உறைவிடம், உணவு, மருத்துவம் எல்லாம் இலவசம். ஆசிரியராக பெரிய தந்தையார் திருவாவடுதுறை சோமசுந்தர தேசிகர் தான் இருந்தார்.

தற்போது திருத்தணி சுவாமிநாதன் ஆசிரியராக உள்ளார். இன்று மூன்று
அல்லது நான்கு பேர் படிக்கின்றனர்.

எம்.ஏ.சிதம்பரம், (ஏ.சி.முத்தையாவின் தந்தை) தனது நிறுவனம் ஒன்றில் உள்ள பிள்ளையார் கோயிலில் தேவாரம் பாடும் பணியை கொடுத்தார். அதற்காக பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்களைத் தேர்வு செய்தார். அவர்களில் நானும் ஒருவன். 750 ரூபாய் சம்பளம்.

அப்போது திருவொற்றியூரில் தங்கி தமிழ்நாடு பெட்ரோல் ப்ராடக்ட்ஸ் (டி.பி.எல்.,) நிறுவனத்துக்குச் சென்று வந்தேன்.

காலையில் போய்விட்டு வந்த உடன், மீதி நாள் சும்மாதான் இருப்பேன். டாக்டர். பி.அச்சுதராமன் என்பவரிடம் நண்பர் மூலமாக கர்நாடக இசை கற்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் சுருதி என்றால் என்ன என்றே தெரிந்தது. நான் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்குக் காரணம் கர்நாடக இசைப் பயிற்சிதான்.

ஐந்தாண்டுகள் அவரிடம் படித்தேன். 1998ல் கபாலீசுவரர் கோயிலில் ஓதுவார் பணியில் சேர்ந்தேன். அதே ஆண்டில்தான் திருமணம் ஆனது.

இந்தப் பணி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா?  இந்தப் பணியில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

ஆரம்பத்தில் இதில் நான் மகிழ்ச்சியுடன் இல்லைதான். அதற்குப் பல காரணங்கள் உண்டு.

நான் காண்போர் எல்லாம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவர். ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்தது. நான் ஒரு ஓதுவார் என  சொல்லவே வெட்கப்பட்டேன்.

இரண்டாவது, என்னைப் பற்றிக் கவலைப்பட்டு ஊக்குவிக்கும் நபர்கள் ஆரம்ப காலத்தில் இல்லை.

ஆனால், திருவொற்றியூரில் எனக்கு நல்ல நண்பர்கள் கிடைத்தனர். திருவொற்றியூர் ஆர்.எஸ்.எஸ்.  ஷாகாவைச் சேர்ந்த கேசவன்ஜி என்பவர், நான் ஒவ்வொரு சன்னிதியிலும் பாடும் போது பின்னால் நின்று கேட்பார்.

ஒருநாள் என்னிடம் பேச்சுக் கொடுத்து, நான் யார் என்ன என்பது பற்றியெல்லாம் கேட்டார். அவர் தான் என்னை இன்னொரு நண்பரிடம் சேர்த்தார். அவர் மூலம் கந்தசாமி கோயிலில் வெள்ளிக்கிழமைதோறும் நான் பாடுவேன்.

அதைப் பார்த்து சில சைவ அமைப்புகள் என்னை தங்கள் இடங்களுக்கு அழைத்துச் சென்று பாட வைத்தனர்.  அதில் சென்னை சிவனடியார் கூட்டம் எனக்கு நல்ல வாய்ப்புகளைத் தந்தது. அவர்கள் தான் எனக்கு சென்னையைச் சுற்றிக் காட்டியவர்கள்.

சென்னை தமிழிசைச் சங்கத்தில் வாய்ப்பு வந்தது. அது குறிப்பிடத் தகுந்தது. இருந்தாலும், அக்காலகட்டத்தில்தான் நான் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டேன்.

அந்த நாட்களில் தான் தவறான பாதையை மேற்கொண்டு விட்டோமோ என்று வருந்தியிருக்கிறேன்.

சென்னையில் கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் தேவாரத்துக்கு வரவேற்பு கிடைத்தது. அவற்றின் மூலம்தான் எனக்கு ஓரளவு பொருளாதார நிவர்த்தி கிடைத்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை ஓதுவார்களின் நிலைமை எப்படி இருக்கிறது?

ஓதுவார்களின் நிலைமை சொல்லும்படியாக இல்லை. அரசின் கவனம் எங்கள்மீது இன்னும் கொஞ்சம் தேவை. ஒரு திருக்கோயிலில் ஒரு ஓதுவார் தேவை என்றால் தகுதி உள்ளவரை உடனடியாகப் பணியில் நியமிக்க வேண்டும்.

ஆனால் நடைமுறையில் வேறுமாதிரியாக இருக்கிறது. சேர்க்கிறேன் என்று சொல்லி விடுவார்கள். பின் சில ஆண்டுகள் காக்க வைத்து பணியில் நியமிப்பார்கள்.

இன்றைய விலைவாசியைப் பார்க்கும்போது சம்பளமும் குறைவு. நான் பணியில் சேர்ந்த போது, 1,500 ரூபாய் சம்பளம் தான்.

உறவினர்கள் என்னைப் பார்த்து,‘1,500 ரூபாய் சம்பளத்திற்கா வேலை பார்க்கிறாய்’ எனக் கேட்கும் போது கொஞ்சம் சங்கடமாகத் தான் இருக்கும்.
எனினும் இறைவன் பணி என்பதால் தான் ஓதுவார்கள் இதைத் தொடர்கின்றனர்.

அறநிலையத் துறை அதிகாரிகள், ஓதுவார்களை கலைஞராக மதிக்காமல், ஒரு பணியாளாகப் பார்க்கின்றனர்.

இத்துறையில் வேலைநிறுத்தம் செய்யக் கூடிய வகையில் ஆட்கள் எண்ணிக்கையும் கிடையாது. அப்படி செய்யவும் முடியாது.

சராசரி மக்களுக்கு ஒரு ஓதுவாராக நீங்கள் என்ன சேவை செய்து வருகிறீர்கள்?

சமீபத்தில் திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதிக்குச் சென்றபோது, பக்திப் பாடல்கள் சி.டி.க்களை போட்டுக் கொண்டிருந்தார் அர்ச்சகர். நான் அவரிடம், ‘இது மகான் உறையும் இடம். இதுபோன்ற பாடல்களைப் போடாதீர்கள்’ எனக் கூறி எனது சி.டி.க்களை இலவசமாகக் கொடுத்து, ‘இதைப் போடுங்கள், யாரும் தேவாரம் படிக்க ஆசைப்பட்டால் என்னிடம் அனுப்புங்கள். இலவசமாகவே கற்றுத் தருகிறேன்’ எனக் கூறி வந்தேன்.

பெயின்டிங், கட்டுமானத் தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு நான் இலவசமாகக் கற்பித் திருக்கிறேன்.

மயிலை கற்பகாம்பாள் நகர், கோகலே ஹாலில் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் சனிக்கிழமை தோறும்  3 மணியில் இருந்து 4 மணிவரை இலவசமாக கற்பிக்கிறேன்.

தி.நகர் தருமையாதீன பிரச்சார நிலையத்தில் சனிக்கிழமைகளில்  காலை 8 மணி முதல் 9 மணி வரை தேவாரம் கற்பிக்கிறேன்.  20 பேர் வருகின்றனர். பாடத் திட்டம் என எதுவும் வகுத்துக் கொள்வதில்லை. முக்கிய பாடல்கள், எளிமையான பாடல்களைக் கற்பிக்கிறேன். விளக்கங்களும் சொல்லி வருகிறேன்.

கர்நாடக இசை படிப்பதற்கு மக்களிடம் உள்ள ஆர்வம் தேவாரம் படிப்பதில் இருக்கிறதா? உங்கள் அனுபவம் என்ன? 

இருக்கிறது. எனினும் அது இலைமறையாக தான் இருக்கிறது.கர்நாடக இசைக்கு  கவர்ச்சி தான் காரணம்.

ஊடகங்கள் கர்நாடக இசைக்கு ஆதரவு தருகின்றன. மக்களும் கர்நாடக இசை, நாட்டியம், போன்றவற்றை ஒரு சமூக அங்கீகாரத்துக்காக, கவுரவத்துக்காக  படிக்கின்றனர். என் மகளுக்கு பரதநாட்டியம் தெரியும், என் மகனுக்கு சில கீர்த்தனைகள் தெரியும் என சொல்லிக் கொள்வதற்காக படிக்கின்றனர்.

தியாகையர் கீர்த்தனைகளில் ஒன்றான பைரவி ராகத்தில் அமைந்த ‘உபசாரமு’ கீர்த்தனம், திருஞான சம்பந்தரின் ‘காதலாகி’  பாடலின் மெட்டின் அடிப்படையில் உருவானதுதான். இது எத்தனை பேருக்கு தெரியும்?

உ.வே.சா. தனது என் சரித்திரத்தில், கீழ்வேளூர் சொக்கலிங்க தேசிகர்தான் தேவாரப் பாடல்களுக்கு மெட்டமைத்தார் என்று கூறியுள்ளார். அது சரிதானா? தேசிகருக்கு முன்னால் என்ன மெட்டில் தேவாரம் பாடப்பட்டது? 

என் தேவார ஆசிரியர் இக்கருத்தை ஒத்துக் கொள்ளவில்லை. இக்கருத்து சரி என்றால், தருமபுர ஆதீனத்தில், எத்தனையோ நூற்றாண்டுகளாக  பாடி வரும்  ஓதுவார்கள், யாழ்ப்பாணம் உள்ளிட்ட  வெளிநாடுகளில் தேசிகர் காலத்திற்கு முன்பு இருந்த ஓதுவார்கள், இன்றைய பாடாந்தரம் என்னவோ அப்படித் தான் பாடினார்கள்.

தேவாரத்தை சுரப்படுத்தக் கூடாதா? முடியாதா? கர்நாடக இசையை நான்கு பேர் ஒன்றுசேர்ந்து பாடினால், கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் தேவாரத்தை நான்கு பேர் பாடினால், சற்று முன்பின்னாகத் தான் இருக்கிறது. என்ன காரணம்?

நான்கு பேர் ஒன்றுசேர்ந்து பாடுவதற்கு சுரஸ்தானம் அவசியமில்லை. அதற்கு இசையை ஒருங்கிணைப்பவர் (கண்டக்டர்) போதும். தேவாரம் முதலில் முழுக்க முழுக்க இசை ஆதிக்கத்தில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவாரத்தை சுரப்படுத்தினால் சில விபரீதங்கள் விளையும். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன்.

நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே,
ஆளாய அன்பு செய்வோம் மடநெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்  கேடுபடாத் திறமருளி
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.

இது ஞானசம்பந்தர் பாடல்.

இந்தப் பாடலை கர்நாடக இசை மரபுப் படி சுரப்படுத்தினால், ‘பாமகரிசரி ரிரி ரிமபா’  என வரும். அதை சொற்களில் பொருத்தினால் ‘ நாளாயபோ காமே’ என வரும். ‘காமே’ தனியாக நிற்கும்.

இப்படி சுரங்களுக்கு ஏற்ப சொற்களைப் பிரித்தால் பொருள் செறிவு சிதையும்.
கீர்த்தனைகளில் புகழ்பெற்ற ‘எந்தரோ மகானுபாவுலு’ பாடும் போது கேட்டால் நான் சொன்னது புரியும். ‘எந்தரோம கானுபாவுலு’ என பிரியும். அதேபோல், ‘நின்னுநேர நம்பிநா னுரா’  எனப் பிரியும்.

பண்டுரீதிகோலு எனப் பாடுவர். கீர்த்தனையில் கொலு என்று தான் இருக்கும். ஆனால் ‘கோலு’ என்று பாடுவர். அவ்வாறு பாடுவதற்கு‘ பபமரீரீசரீச’ என்ற சுரஸ்தானங்கள் தான் காரணம். அதில் ‘கோ’ என்ற இடத்தில் சதுஸ்ர ரிஷபம் பிடிக்க வேண்டும். சதுஸ்ர ரிஷபத்திற்காக ‘கொலு’ கோலுவாக மாறுகிறது.
தியாகையர் முதலில் சுரம் போட்டா பாடினார்? பின்னால் தான் சுரம் போட்டனர்.

சுரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போர், தியாகையர் சன்னிதியில் ஏன் சுரம் போட்டு பாடுவதில்லை? அதற்கு ஏன் அனுமதிப்பதில்லை?

கர்நாடக சங்கீத வித்வான்களில் சிலர் சங்கீத ஆராய்ச்சியாளர்களாகவும் விளங்குகின்றனர். அதுபோல் ஓதுவார்கள் தங்கள் துறையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனரா?

ஆண்டுதோறும் சென்னைத் தமிழிசைச் சங்கத்தில் நடக்கும் பண்ணாராய்ச்சி நிகழ்ச்சியில் ஓதுவார்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.

அவ்வகையில் பிரபல ஓதுவார் திருச்சி முத்துக் கந்த தேசிகர் நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். இந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் புத்தகமாக வெளிவராதது ஒரு பெரிய குறைதான்.

நானும் இத்துறையில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளேன். பாம்பன் சுவாமிகளின் பல பாடல்களுக்கு புதிதாக மெட்டமைத்துத் தந்துள்ளேன்.

ஓதுவார்களுக்கான கூட்டமைப்பு இருக்கிறதா? தமிழகத்தில் எத்தனை ஓதுவார்கள் இருப்பார்கள்?

பழனியில் ஓதுவார்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது.  ஆண்டுதோறும் வைகாசி மாதம், திருஞான சம்பந்தரின் குருபூசையன்று நாடெங்கிலும் உள்ள ஓதுவார்கள் கூடி திருமுறைகளைப் பண்ணோடு பாடி, தமிழிசையை வளர்க்கின்றனர்.

தற்சமயம், தமிழகம் முழுவதும் ஓய்வு பெற்றவர்கள், படித்தவர்கள், பணியில் இருப்பவர்கள் என 200 பேர் உள்ளனர்.

தேவார இசை கற்பிப்பதில் ஆதீனங்கள் ஆற்றிய பணிகள் மகத்தானவை. இன்றைய நிலையில் ஆதீனங்கள் இவ்விஷயத்தில் செய்ய வேண்டிய பணிகள் என்ன?

ஓதுவா மூர்த்திகளுக்கு ஆதீனங்கள் இன்னும் முக்கியத்துவம் தர வேண்டும்.
ஆதீனங்கள் ஓதுவார்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுத்து அவர்களுக்கு சலுகைகள் வாங்கித் தர வேண்டும். சைவத்தின் முதுகெலும்பு ஓதுவார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டும்.

ஒரு ஓதுவாராக உங்கள் ஆசை, கனவு என்ன?

எல்லாரிடமும் திருமுறை பரவ வேண்டும். அதை ஓரளவு நான் செய்து வருகிறேன். பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வியாழக்கிழமை தோறும் நான் பாடம் எடுத்தேன்.

அந்த மாணவர்கள் இன்று எங்காவது என்னைப் பார்த்தால் ‘நம்  தேவார ஆசிரியர் வருகிறார்’ என்று வணக்கம் செலுத்துகின்றனர். இப்படி சமூகத்தில் திருமுறைகள் பரவ வேண்டும் என்பது எனது கனவு.

இன்னும் நிறைய ஒலிப் பேழைகள் வெளியிட வேண்டும். 12 திருமுறையும் முழுமையாக ஒலிப் பேழைகளில் வெளிவரவேண்டும்.

ஓதுவார் என்ற கலைஞர்  மலர்வதற்கு இந்த சமூகத்தில் என்ன தூண்டுதல் தேவை எனக் கருதுகிறீர்கள்?

முதல் தூண்டுதல், முக்கிய காரணம், திருவருள்தான். ஒருவர் தேவாரம் பாடித் தான் வாழ வேண்டும் என திருவருள் நினைத்தால் தான் அது சாத்தியம் ஆகும். எட்டாம் வகுப்பு படிக்கும் வரை நான் ஓதுவாராகப் போவேன் என்று நினைத்தது கிடையாது. ஆனால் என் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஓதுவார் ஆனேன்.

பட்டதாரியாக, நான் வேலை பார்த்தால், இன்று 150 நாடுகள் தட்டித் திறக்கும் மின்னம்பலத்தில் நான் ஒரு கதாநாயகனாக மின்னியிருக்க முடியாது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கை தர வேண்டும். நல்ல ஆசிரியர் வேண்டும். இவற்றால் தான் ஒரு சிறந்த ஓதுவார் இந்த சமூகத்திற்குக் கிடைப்பார்.

சந்திப்பு : விகிர்தன்,
வீர உமாசங்கர்

(விஜயபாரதம், தீபாவளி மலர் 2011)

1 கருத்து:

Translate