ஞாயிறு, 20 மார்ச், 2011

சங்கராசாரியர் சரித்திரவாராய்ச்சி - 1


(இஃது தேவிகோட்டை ஸ்ரீ வன்தொண்டர் அவர்கள் மாணாக்கருள் ஒருவராகிய , காரைக்குடி ஸ்ரீ மான் ராம. சொ.சொக்கலிங்கச் செட்டியாரவர்களால் இயற்றப்பெற்று, தேவிகோட்டை ஸ்ரீ மான் மெ. அரு. நா. ராமநாதச் செட்டியாரவர்களால் அச்சிடப்பட்ட சோமசுந்தரமாலை வேதவனேசஸ்தவம் என்னும் நூல்களின் முகவுரை.)
சோமசுந்தர மாலை என்னும் இந்நூல், "முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி' என்னும் தெய்வச் சுருதியைச் சிரமேற் கொண்டு


பொன்னெடு மேருவெள்ளிப் பொருப்பு மந்தரம் கேதாரம்
வன்னெடும் புரிசை சூழ்ந்த வாரண வாசியாதிப்
பன்னரும் தலங்கள் தம்மில் பராபர இலிங்கம் தோன்று
முன்னர் இக்கடம்பின் மாடே முளைத்ததுஇச் சைவலிங்கம்


என்று பரஞ்சோதி முனிவரால் விளக்கப் பெற்றபடி, திருக்கயிலாசாதி எத்தலங்களுக்கும் முந்தினதாய், அத்தலங்கள் போல் விராட்புருடன் உடைய அவயவங்கள் உள்ளே அடங்காமல் அதீதமாகிச் சர்வலோகப் பிரசித்த சிவராஜ தானியாய் விளங்குகின்ற துவாதசாந்த ஸ்தலமாகிய மதுராபுரியிலே, அனவரத சாந்நித்தியராய் சதுஸ்ஸஷ்டி லீலா அனுக்கிரகராய் (64 திருவிளையாடல்கள்) வீற்றிருந்து அருளுகின்ற ஸ்ரீசோமசுந்தரப் பெருமான் திருவடி சமர்ப்பண ஸ்துதி ரூபமாக ஒவ்வொரு செய்யுளிலும் ஆதிசங்கராசாரியரால் செய்யப் பெற்ற சிவானந்த லகரி நூறு சுலோகங்களின் வாக்கிய அர்த்த தாற்பரியங்களை வரிசையாக அமைத்து அச்சங்கரர் சரித்திரங்களையும் சுருக்கிக் காட்டி செய்யப் பெற்றது.


சங்கரர் சரிதம் சொன்னோர், அவரிடத்து வைத்த அன்பு மேலீட்டினால் அவர்க்கு மகிமை கூறும் ஆசை வயத்தராகிய சீடர்கள் பலர். 


இவர்கள் கூறும் சங்கர சரித்திரமும் தம்முள் ஒத்தன ஆகாமல் பல பேதங்களாய் இருக்கின்றன. இதனால் இச்சரித்திரர்கள் முதல் நூல் ஒன்று இருந்து அதை நோக்கிக் கூறினார் அல்லர். 


சங்கரருக்கு மகிமை கூறும் ஆசை வயத்தராய் நிற்றலால் பூர்வ அபர விரோதாதிகள் நோக்காமல் மனம் போன போக்கில் எல்லாம் எழுதி வைத்தார் என்பது இனிது விளங்கும். இது நிற்க. 


சங்கரர் ஊழ்வலியினால் பாலிய காலத்திலேயே கல்வியில் சிறந்தவராய் ஏகான்ம வாத கோள் மேற்கொண்டு, அதற்கு இணங்கவே அனேக நூல்களும் செய்து பற்பல இடங்களுக்கும் சென்று வாதாடி அக்கேவல அத்துவிதமே விளக்கி வந்தார்.


ஆயினும், பின்பு ஸ்ரீநீலகண்ட சிவாசாரியரை அடுத்து, எம்மதங்களையும் தன் கீழ்ச் சோபானமாகக் கொண்டு அதீதமாய் வேதாந்த சாரமாய் விளங்குவது சுத்தாத்துவித சித்தாந்த சைவமே என்னும் உண்மை உணர்ந்து சிவதீட்சாதி பெற்றுச் சிவாகம விதிப்படி சந்திரமௌளீச பூசனை இடையறாது செய்து வந்த சைவர் ஆதலால்,  நம்மவர்களாகிய சைவர்களால் நமது சைவப் பெரியோர்களில் ஒருவராக மேற்கொள்ளப் பெற்றவர் என்பதே எமது கருத்து. 


சங்கரர் பின் நின்ற சைவ நிலையும், அநுட்டானமும் நோக்குவார்க்கு, அவர் முன்கொண்ட நிலையை அறவே விட்டு ஒழிந்தார் என்பது இனிது விளங்கும். மேலும் அவர் பின் செய்த நூல்களாலும் துணியப் பெறும். 


அவர் முன் வேறு நூல் வழிகளில் சென்று காலம் வீணே கழிந்தனவே என்று வருந்திய குறிப்பைச் சிவானந்த லகரி (7) வது சுலோகம் முதலியவற்றானும், 


சிவதீட்சையை விரும்பிக் கேட்டுக் கொண்டதை (29) வது சுலோகத்தாலும், 


சிவாகம விதிப்படியே பூசித்தார் என்பதைச் சிவ புஜங்கத்தில் (2, 3) ஆவது சுலோகங்களாலும், 


இன்னும், அவர் முன் பயின்ற கேவல அத்துவிதிகளை முழுவதும் ஒழித்துச் சைவத் தலைவர்களாகிய உண்மை நாயன்மார்களையே துதித்ததையும், 


முன்பு நானே பிரமம் எனக் கொண்டு கூறிய வாதனை முழுதும் நீங்கி, நான் சமல பசுவாகிய அடிமை என்றும், பரமசிவன் ஒருவனே விமல பதியாகிய ஆண்டான் என்றும், அப்பதி வழிபாடே முத்தி சாதனம் என்றும் உள்ளபடி துணிந்து வழிபடுதலையும், அந்நூல்களில் பற்பல சுலோகங்களிலும் விளங்கக் காணலாம். 


இனிச் சங்கர சரிதர்கள், அவன் பின்னின்ற சைவ நெறிச் செயல்கள் சிறிதும் காட்டாமலும், முன் கொண்ட நெறிச் செயலும் பூர்வ அபர விரோதமாகவும் பொருந்தாதன ஆகவும் கூறினார்.


ஆதலால், அச்சரித்திரங்களில் சிலவற்றை எடுத்துக் காட்டி உண்மை விளக்குதற்கு எழுந்த பக்க வசனங்கள் நோக்கி நமக்குச் சங்கரரிடத்துப் பிரியமின்று எனக் கொள்ளார், உண்மை கடைப்பிடிக்கும் உத்தமர் என்க. 


உண்மை நோக்காது விரோத புத்தியே மேற்கொண்டு உணர்வார்க்கு மேலும் சமாதானம் சொல்லப் புகுவது அனாவசியம் என்க. சொல்லினும் பயனின்று என்க. 


இச்சங்கர சரிதம் பலவற்றுள்ளே, சங்கர விஜய விலாசம், சங்கர விஜய காவியம் முதலியவற்றில் உள்ள கதைகளைத் தழுவிச் சுருக்கமாகப் பெங்களூர்ச் சுப்பிரமணிய சாஸ்திரிகள் உதவி கொண்டு, தொழுவூர் உபயகலாநிதி வேலாயுத முதலியாரால் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது என்று முகவுரை எழுதப்பட்டிருக்கிற சரித்திரத்திலே, இச்சங்கர சரிதம், கந்தபுராணம் சிவரகசிய கண்டம், சிவபுராணாதிகளில், வியாசர் முதலியோரால் கூறப்பட்டது என்பது ஆரம்பம். 


நன்று நன்று; "கண்டனம் இன்று யாம் கலியின் வண்ணமே'. இச்சங்கரே, அவ்வியாசர் அனுக்கிரகம் பெற விரும்பி அவரைத் தேடிக் காணாமல் வருந்தினதாகவும் கூறுகின்றார்.


வியாசரைத் தேடிக் காணப் பெறாது வருந்தின சங்கரருக்கா அவ்வியாசரே கந்தபுராணாதிகளிலே சரித்திரம் கூறினார்? 


இது பொருத்தம் ஆகாதே என்பதை முற்றிலும் மறந்து ஆசை வசப்பட்டுக் கூறிய சரிதர் கூற்றில் உண்மை உணர்வார் உத்தம விவேகிகள் என்க. 


பரம இதிகாசமாகிய சிவரகசியம் என்பதை மறந்து கந்தபுராணம், சிவரகசிய கண்டம் என்று கூறினது எனில், அச்சிவரகசியத்தில் பரமசிவன் உமாதேவியார்க்கு இனிமேல் கலியில் நமது பேரால் ஒருவன் வந்து  துவிதத்தை அத்துவிதமாக நிறுத்துவான் என்பன ஆதி சில வாக்கியங்களில் அன்றி வேறு இல்லை என்றும், அதுவும் இச் சங்கரரைக் கூறியது அன்று என்றும் முன்னமே சித்தாந்த ரத்நாகர நூலாசிரியர் கூறியுள்ளார். சில புராதன சிவரகசியப் பிரதிகளில் இவ்வசனமும் இல்லை. இதன் உண்மை உற்று நோக்குங்கால் அக்கொள்கையாரே அவ்வசனங்களைப் பின்பு சேர்த்து வைத்ததாக ஊகித்தற்கு இடனாகின்றது. 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate