ஞாயிறு, 20 மார்ச், 2011

சங்கராசாரியர் சரித்திர ஆராய்ச்சி - 2

இவ்விதக் கலப்புகள் வேறு சில நூல்களிலுமுள்ளன. இதனை, வான்மீகி (2400) என்று கூறிய ராமாயணம் இப்போது அவ்வெண்ணைக் கடந்து வழங்குதலுஞ் சான்றாகும்.



சிவன் (நமது பேரால் ஒருவன் வந்து) என்றது கொண்டு, அவ்வொருவனென்ற சொல்லுக்கு நீலகண்ட சிவாசாரியரென்று ஏன் பொருள்கொள்ளப்படாது?. நீலகண்டநாமஞ் சிவநாமமன்றோ? அவர் செய்தது அத்துவித பாஷியமன்றோ? இதனைச் சங்கரரென்றே கோடலெங்ஙனமியையும்?.

ஆசைவயத்தாராய்க் கொண்டாலும், எத்தனையோ விஸ்தார அத்தியாய வகைகளாகக்கூறி இவையெல்லாம் கந்தபுராணாதிகளிலுள்ளனவென்றதெப்படி நிலைபெறும்? இதுபோலும் பூர்வாபர விரோதங்கள் போருந்தாமைகளனேக முள்ளன. அவற்றை விரிப்பிற் பெருகும். சிற்சில பின்வருவன காண்க.

முதலாவது அத்தியாயத்தில், உலகத்திலே சன்மார்க்கங் குறுகுதல்கண்டு தேவரனைரும் திருக்கயிலைசென்று விண்ணப்பிக்கச், சிவபிரான், விநாயக சுப்பிரமணிய வீரபத்திர நந்தியாதியரையும், பிரம விஷ்ணுவாதி சகல தேவரையும், இச்சங்கரருக்குத் தொண்டு செய்யவே மனிதர்களாகப் பிறக்கும்படி ஆஞ்ஞாபித்தாரென்றும் மூன்றாவது அத்தியாயத்தில் அவர்கள் அப்படியே பிறந்து அவருக்குத் தொண்டு செயது வந்தார்களென்றும் உள்ளம் நடுங்காதுரைத்துப், பின் ஒவ்வொரு சமயங்களிற் சங்கரர் தமக்கு வந்த ஆபத்துக்கள் நீங்கும் பொருட்டு அத்தேவர்களிற் பலரை வணங்கி வரம்பெற்றாரென்றும் பற்பல இடங்களிற் கூறுகின்றார்.

இரண்டாவது அத்தியாயத்திற் சிவகலையே கருவுற்றுக் கிடந்து சங்கரராய்ப் பிறந்த்தாகக் கூறி, அதன் மேற் பரமேசுரன், சர்வசுதந்திரனாய்ச் சச்சிதானந்த சொரூபனாய் எங்கு நிறைந்தவனாய் முக்காலத்தும் ஒரே தன்மையுடையவனாதலால், அவனுக்குப் பிறவிக்கருமமேது? கருவிற் கிடத்தலேது? பிற்ப்பேது? பரமேசுரன் பிறந்ததேயில்லை. தன்னிச்சை விளையாட்டால் மாயையே சங்கரராய்ப் பிறந்ததன்றி வேறில்லை யென்றுங் கூறுகின்றனர். பின் அதையு மடியோடு மறந்து சரித்திர முடிவுவரை வருமிடந்தோறும் சிவனே சங்கரராய்ப் பிறந்ததாகவும் விளக்குகிறார். இஃதென்ன மயக்கமோ?

இனிச் சங்கரர், பாலியத்திலே ஆசிரியரைத் தேடிச்சென்று வணங்கி அஞ்சலித் தெதிர் நின்றபோது, ஆசிரியர் நீயாரென்று கேட்கச், சச்சிதானந்த வடிவாகிய நான் சிவோகம் என்று கூறினதாக ஐந்தாவது அத்தியாயத்திற் கூறுகிறார். சிவோகமென்பதே சிவம் நான் என்று ஒரு சொக மிகைபடக் கூறினர். வழவாகிய நான் என்னும் பொருடருவதறியாது, நான் என்றது வழுவென்பதும் நோக்கிலர். சங்கரரிப்படி வழுவுறக் கூறாரென்பது புத்திமான்களறிவார்கள். ஆகவே சங்கரர், தமது வழக்கப்படி அகம் பிரமமென்று கூறினதாகக் கோடலே யுண்மையாகும். சங்கரர் தமது குறைகூறி உபதேசம் பெற விரும்பி வணங்கிநின்ற சமயத்தும் அகம் பிரமமென்னு மெழுச்சியே முன்னிற்குமேல் மற்றிடங்களிற் கூறுவானேன்?

சங்கரர் அகம்பிரமமென்று கூறியதைச், சரிதர் சிவோகமென்று மாற்றியது, அவ்விரு வாக்கியங்களுக்கும் பொருளொன்றெனவே கொண்டு, சிவோகமென்றால் சைவர்களாகிய நமக்குவப்பாகுமென்று கருதியேபோலும். அவ்விரு வாக்கியங்களுந் தம்முள் மலையிலக்கான வேற்றுமையுடையன வென்பதவரறிந்திலர்.

அகம் பிரமம் என்பதில் (அகம்) நான் என்னும் ஆன்மா, ஆணவமுனைப் பால் முற்பட்டு நிற்பப், பிரமம் பிற்பட்டு நிற்றலால், இது பெத்ததிசையை விளக்கிப் பசுஞானிகள் கூற்றேயாய் நிலைபெறும். சிவோகம் என்பதில் சிவம் முன்னிற்ப (அகம்) நான் என்னும் ஆன்மா ஆணவமுனைப்பு முற்றுங் கைவிட்டு அச்சிவத்துள் வியாப்பியமாயடங்கிப் பின்னிற்றலால், இது பசுத்துவ நீக்கத்துச் சிவத்துவப் பேறுற்ற முக்தி திசையை விளக்கிச் சீவமுத்த சிவவாக்கியமேயாய் நிலைபெறும். இவ்விளக்கத்தால் அகம் பிரமம் பெத்தநிலையும் சிவோகம் முத்திநிலையும் விளக்குமென்னு முண்மையை ஒருபாற் கோடாத உத்தம புத்திமான்களுணர்வார்கள்.

இச்சங்கரர், அகம்பிரமம் என்னும் எழுச்சியும் அதற்கே சாதகமாகவாய்ந்த வித்துவத்திறமையு முடையராதலால், எவரையும் வென்று மேம்படக் கருதுமாசையால், அங்கங்குள்ள அரசர்களை வசப்படுத்தி அவர்களுடன் எங்குஞ்சென்று துணைவலியுங்காட்டி வெல்லுதலும், மிஞ்சியவிடத்து நரசிங்கத்தை ஏவிக் கொல்லுதலும், செய்துவந்ததையே திக்கு விஜயப்பெருமையாகக் கூறுகின்ற சரிதர், பின் பதினாறாவது அத்தியாயத்தில் சங்கரர், சபையிலுள்ள புலவர்களைத் தோல்வியுறச்செய்து அவமானப் படுத்திவருந்தும் படி தமது வித்தைச் செருக்கினைக் காட்டுவது அதிபாதகமென்று கூறுகின்ற நூன்முறைபற்றி, அபிநவகுத்தரேவலால் வந்த ரத்தமூல நோயுற்று வருந்தி, வேறெவ்விதத்தாலுந் தீராமல் எப்போழுதும் அபானத்தா லிரத்தமொழுகுதலின் வஸ்திராதி துர்நாற்றமுஞ் சகியாமல் (நானே பிரமமெனக்கொண்ட எழுச்சிமுழுதுங் கைவிட்டு நாமெல்லாம் மும்மலப் பசுக்களே, பசுபதி சிவனொருவனே; இந்தச் சமயம் அவன் அருளினாலன்றி வேறுகதியில்லை யென்னு முண்மையைத் துன்பமேலிட்ட வழியாலுணர்ந்து, சர்வரோக நிவாரணபதியாகிய வயித்தியநாதரைத்துதித்து ரோகநீங்கப்பெற்றனர். அதன் பின்னும் அந்நோயை ஏவிய அபிநவகுத்த ரிடைக் கொண்ட விரோதமே லீட்டினால், அச்சங்கரர் சீடராகிய பத்மபாதரால் அபிநவகுத்தர் கொல்லப்பட்டாரென்றுங் கூறுகின்றார்.

இனிச்சங்கரர், மண்டனபண்டிதரை வாதித்து வென்றமை கூறினர். வாதந்தொடங்கு முன்னிகழ்ந்த அனாவசிய வார்த்தைகள் பல; அவற்றை விரிப்பதாபாசம். அமைக. பின்பு மண்டனர் பத்தினி சரஸ்வதி யென்று தெரிந்து சத்தியலோகஞ் செல்கின்ற அவளை மந்திர செப தியானத்தால் அழைத்தாரென்றும், அவள் வந்துனக்கு யாது வேண்டுமென்று வினாவச், சங்கரர் அத்து வித முடிவை நிலைநிறுத்தவேண்டுமென்று வாகீஸ்வரிஸ்தவமென்றொருநூல் செய்து துதித்து, என்னம்மே பரதெய்வமாகிய தாயே நீ இங்கிருந்தருளி அடியேங்கள் வேண்டுந்தோறுங் காட்சி தந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்க, அப்படியே வரங்கொடுத்தாளென்றுங் கூறியசரிதர், பின்பு அவளையும் வாதித்து வென்றாரென்று கூறுகின்றார். அந்த வைபவத்தைப் பின்வருவனவற்றாற்காண்க.

எல்லாவித்தைகளுக்கு மூலமான பரமேசுரனாகிய சங்கரருக்கும், அவித்தையே வடிவாகிய சரஸ்வதிக்கும் பதினேழுநாள் வாத நடந்ததென்றும், வேதாகமபுராணேதிகாசாதி எல்லா நூல்களிலும் சங்கரர் அளவற்ற அறிவுடையவராயிருந்தாரென்றும், சரஸ்வதிக்குள்ள சந்தேகங்களெல்லாம் நீங்கினவென்றும், கூறினார். வணங்கித்துதித்து வரம்பெற்ற சங்கரர் பரமேசுரனாம்; வரங்கொடுத்த சரஸ்வதி அவித்தையாம். இவளுக்கு அவராற் சந்தேகங்கள் நீங்கினவாம். இந்த உழறுபடையை விரிப்பானேன். அமைக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate