செவ்வாய், 30 ஜூன், 2009

அஞ்சு தேரோடும் அழகான நெல்லை


தேர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 3 ஊர்கள்தான். இந்த 3 ஊர்த் தேர்கள்தான் தமிழகத்திலேயே ஏன் இந்தியாவிலேயே அதிக உயரமும் அகலமும் எடையும் கொண்டவை.



‘திருவாரூர் தேரழகு’, ‘ஊர் கூடித் தேரிழுத்தல், ,தேரை இழுத்துத் தெருவில் விட்டால் போலே’ ஆகிய பழமொழிகள் தேரோடு தொடர்புடையவை. இதிலிருந்தே தமிழக மக்கள் வாழ்வில் தேர் எவ்வளவு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

தேர் பற்றிய செய்திகள்:

தேர் பற்றிய செய்திகள் தொல்காப்பிய காலத்திலிருந்தே கிடைக்கின்றன.

‘தேரும் யானையும் குதிரையும் பிறவும்
ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்பர்’
(தொல்.பொருள்.மெய்ப். 17)

எனத் தொல்காப்பியம் பண்டைய தமிழர் தேர் முதலியவற்றை போக்குவரத்திற்குப் பயன்படுத்தியதாகக் குறிக்கிறது.

வெற்றி பெற்ற மன்னனை வாழ்த்தி தேரின் முன்னும் பின்னும் ஆடுவதாகிய முன்தேர்க் குரவை, பின்தேர்க் குரவை எனும் ஆடல்கள் நிகழ்ந்ததாக

”தேரோர் வென்றகோமான் முன்தேர்க் குரவையும்”,
” ஒன்றிய மரபில் பின்தேர்க் குரவையும்”

எனத் தொல்காப்பியப் பொருளதிகாரம் புறத்திணை இயலிலும்,

“முன்தேர்க் குரவை முதல்வனை வாழ்த்திப்
பின்தேர்க் குரவை பேயாடு பறந்தலை”
(வஞ்சிக்காண்டம்.கால்கோட்காதை.240,241)

என சிலப்பதிகாரம் கால்கோட் காதையில் சேரன் செங்குட்டுவனின் படைகள் பொருது வென்ற போர்க்களத்தை வர்ணனை செய்யும் இடத்திலும்,

புறப்பொருள் வெண்பா மாலையில் தும்பை வாகை ஆகிய இரண்டு படலங்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

இளஞ்சேட்சென்னி என்ற சோழ அரசனுக்கு ‘உருவப் பல் தேர்’ என்ற அடைமொழி கொடுக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அவனிடம் பல்வேறு உருவங்களில் அமைந்த பல தேர்கள் இருந்தமையால் அவன் அவ்வாறு சிறப்பிக்கப் பட்டான். அவன் தேரில் வரும்போது பொலிவோடும் வலிவோடும் காட்சி தருவான் என்று பரணர் புகழ்கின்றார்.

கடையெழு வள்ளல்களில் ஒருவனான பாரி முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்த செய்தியை நாம் அறிவோம்.

மனுநீதிச் சோழன் பசுவின் கன்றைக் கொன்ற பாவத்திற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதியை நிலைநாட்டினான் என சிலம்பும் பெரியபுராணமும் கூறுகின்றன.

ராமனின் தந்தை 10 திசைகளிலும் தேரினைச் செலுத்தும் திறம் பெற்றிருந்ததால் ‘தசரதன்’ என்று அழைக்கப்பட்டான்.

இறைவன் தேவர்கள் அமைத்துக் கொடுத்த தேர் ஏறி திரிபுரங்களைத் தீயெரித்து அருளினார் என 2 இதிகாசங்களும், சங்க இலக்கியங்களும் பன்னிரு திருமுறைகளும் பலபடியாகப் போற்றுகின்றன.

96 வகை சிற்றிலக்கியங்களுள் பிள்ளைத் தமிழும் ஒன்று. அதில் ஆண்பாற் பிள்ளைத் தமிழில் சிறுதேர்ப் பருவம் இடம்பெறுகிறது.

அப்பரடிகள் குறிக்கும் கோயில் வகைகளுள் ‘கரக் கோயில்’ என்பதுமொன்று. இக்கோயில்கள் தேர் வடிவில் அமைந்திருக்கும். அப்பரடிகள் காலத்தில் கடம்பூர்த் திருக்கோயில் இவ்வகையைச் சேர்ந்ததாக இருந்ததை அவர் தேவாரத்தால் நாம் அறிகிறோம்.

கி.பி.12 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தேர் வடிவில் கோயில்கள் அமைப்பது பெருகியது. தாராசுரம் கோயிலை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

நால் வகைக் கவிகளுள் ஒன்றான சித்திர கவியில் தேர் போல செய்யுள்களை வடிவமைப்பது ‘ரத பந்தம்’ எனப்படும்.

இவற்றிலிருந்து கால்ந்தோறும் தேர் பெற்றிருந்த முக்கியத்துவத்தை நாம் அறிய முடிகிறது.

கோயில்களும் தேரும்:

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களின் வீழ்ச்சிக்குப் பின் தமிழகத்தில் சமண பௌத்த மதங்கள் ஆட்டம் காணத் துவங்கின. அப்பரடிகள், ஆளுடைய பிள்ளையார் ஆகிய அருளாளர்கள் தோன்றி பாரத, தமிழகப் பண்பாட்டிற்கு முரண்பாடான கருத்துக்களைக் கொண்ட அந்த மதங்களை வென்று சனாதன தர்மமாகிய சைவ நெறியை எழுச்சியுறச் செய்தனர்.

இதனால் நாடெங்கும் ஏற்கெனவே இருந்த கோயில்களோடு மேலும் பல கோயில்கள் தோன்றின. எல்லாக் கோயில்களிலும் சீரும் சிறப்புமாக திருவிழாக்கள் கொண்டாடப் பட்டன. இத்திருவிழாக்கள் மூலம் மக்களிடையே உற்சாகமும் இறையுணர்வும் பெருகின.

இதற்காகவே அப்பரடிகளும் ஆளுடைய பிள்ளையாரும் கோயில் கோயிலாகச் சென்று பாடி மக்களை பக்தி நெறியில் ஈடுபடுத்தினர்.

கோயில்கள் தோறும் விழாக்கள் கோலாகலாமாகக் கொண்டாடப் பட்டதனை தேவாரப் பாடல்கள் குறிக்கின்றன. அட்டமி விழா, திருவாதிரை விழா, மாசி மக விழா, தைப்பூச விழா, பங்குனி உத்திர விழா, திருக்கார்த்திகை விழா ஆகியன நடைபெற்றன.

இவற்றோடு ஆரூர், தில்லை முதலிய கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றதை,

‘ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே’
என அப்பரடிகளும்,

‘தேரினார் மறுகில் திருவாரணி தில்லை’,
‘தேரோடும் அரங்கேறிச் சேயிழையார் நடம் பயிலும் திருவையாறே’
என திருஞான சம்பந்தரும் அருளிச் செய்கின்றனர்.

கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணி பாஹியான், பௌத்தக் கோயில்களில் நடைபெற்ற தேரோட்ட விழா பற்றித் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்கள் குறித்தும் தேர்த் திருவிழா குறித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர், திருவரங்கம், மதுரை ஆகிய கோயில்களில் உள்ள பிற்காலத்துக் கல்வெட்டுகள் அரிய பல செய்திகளைத் தருகின்றன.

முதல் குலோத்துங்கன்( கி.பி.1070 - 1120) குதிரையில் முன்னே செல்ல சேரமான் பெருமாள், வரகுண பாண்டியன் ஆகியோரின் விக்ரகங்கள் செல்ல அவர்களுக்குப் பின்னே நால்வர் பெருமக்கள் திருவுருவங்கள் தேர்களில் எழுந்தருளி வர தில்லைக் கூத்தபிரான் திருவீதியுலாச் சென்றதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

ஆக, இற்றைக்கு சற்றேறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களில் தேரோட்டம் நடைபெற்றது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

தேர் வகைகள்:

நாள்தோறும் போக்குவரவிற்குப் பயன்படும் தேர், போருக்குப் பயன்படும் தேர், கடவுளர் வீதியுலா வரும் தேர், அமைப்பின் அடிப்படையில் நாகரம்(சதுரம்), திராவிடம்(எண்பட்டை), வேசரம்(வட்டம்), சட்டத்தேர் (மாடுகளால் இழுக்கப்படுவது. சோழ நாட்டில் காணலாம்), செய்யப்படும் பொருட்கள் அடிப்படையில் கல்தேர்,மரத்தேர், தங்கத்தேர், சட்டத்தேர் (உறுதியான 4 சக்கரங்களுடன் கூடிய அடிப்பாகம், மேல்பகுதி முழுதும் சட்டங்களால் கட்டப்படுவது. கருவேலங்குளம்,அத்தாளநல்லூர் கோயில்களில் காணலாம்) எனப் பல வகைகள் உண்டு.

தமிழகத் தேர்கள்:

நம் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழைமையான கோயில்கள் இருப்பது போலவே தேர்களும் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாம் இன்று காணும் தேர்களில் பெரும்பாலானவை விஜயநகர , நாயக்கர் அரசாட்சி காலங்களில் செய்யப்பட்டவையாகும்.

அப்பரடிகள் குறித்த ஆழித்தேர் இன்று இல்லை. இன்று நாம் காணும் திருவாரூர் தேர் 19 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் 150 வருடங்களுக்கு முன் உருவானது.

மக்களின் கவனக் குறைவாலும், பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாமையாலும், தஞ்சை, மதுரை, நெல்லை மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்து நகரங்களுக்குச் சென்றமையாலும், இதன் காரணமாக பல கோயில்கள் வழிபாடின்றி அழிந்து வருவதனாலும் கடந்த 50 வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான தேர்கள் அழிந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்போது சுமார் 1000 தேர்கள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

மரச் சிற்ப வேலைப்பாடுகளை நாம் முழுமையாகக் காண வேண்டுமானால் தேர்கள் தான் நமக்கு உதவுகின்றன. மிகச் சிறிய இடத்தில் கூட கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர், நம் பெருமை மிகுந்த பெயர் தெரியவராத ஸ்தபதிகள். உலர்ந்து போன மரங்கள் கூட நம் உள்ளத்தை உருக்கும் வண்ணம் ஈடிணையில்லாத சிற்பங்களை அவர்கள உருவாக்கித் தந்துள்ளனர்.

தேர் அமைப்பு:


தேரினை “நகரும் கோயில்”, “கோயிலின் மறுவடிவம்” என நாம் கூறலாம். ஏனெனில் கோயிலின் கருவறை அமைப்பைப் போலவே தேருக்கும் உபபீடம், அதிஷ்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகள் உண்டு.

தேரானது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.

தேர் எவ்வாறு வடிவமைக்கப் பட வேண்டும் என மானசாரம், விஷ்ணு தத்வ சம்ஹிதா, பரம சம்ஹிதா, அனிருத்த சம்ஹிதா ஆகிய நூல்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன. இவற்றுள் மானசாரம் தவிர்ந்த பிற, வைணவ ஆகமப் பகுதிகளாகும்.

கருவறை, விமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தேரின் உயரம், அகலம், அமைப்பு ஆகியன முடிவு செய்யப்படுகின்றன. கருவறை நிலைக் கால் அளவு கூட இதில் பயன்படும் என்கிறார் மயிலாடியைச் சேர்ந்த ஸ்தபதி நாகமுத்து. இவற்றோடு வீதிகளின் அளவு ஆகியவற்றை வைத்துக் கொண்டு சூத்திரங்கள் கணிக்கப்படும். அவை ராஜ, பால, குமார, விருத்த, மரண சூத்திரங்கள் என ஐவகைப்படும் என்கிறார் அவர்.

பூதப்பார், விக்ரகப் பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என 6 அடுக்குகளாக தேர் அமையும்.

பூதப்பார், அதிஷ்டானம், சித்துருப்பார், யாளிப்பார், விஸ்தார தானம், நாடகம், தேவாசனம், சிம்மாசனம் என தேர் அமைப்பு அமையும் என்கிறார் நாகமுத்து. தேரின் மேல்பகுதியில் கால், கொடுங்கை, சாலை, வர்க்கம், கண்டம், விமானம், கலசம் ஆகியன அமையும்.

தேரின் உயரம் 15 விதமான ஆயம், விரயம், யோகினி நட்சத்திரம் எனும் முறைகளின் படி உருவாக்கப்படும்.

பொதுவாக 20 முதல் 25 அடி வரை உள்ள ஒரு தேரை உருவாக்க சுமார் 3 முதல் 3 ½ வருடங்கள் தேவைப்படும்.

சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிருகோணம், வட்டம், நீள்வட்டம், நீள்சதுரம், எண்கோணம், முட்டைவடிவம் என 9 வடிவங்களில் தேர் உருவாக்கப்படுகிறது.

வட்டமான தேர்கள் சோழ மற்றும் கொங்கு மண்டலங்களில் உள்ளன. பாண்டிய நாட்டில் பெரும்பாலும் சதுர வடிவ தேர்களே உள்ளன.

சிம்மம், யானை, முதலை, பூதகணம், யட்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகர், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதைகள், சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னரர், நாகர், கருடன் ஆகியவை தேரில் அமைய வேண்டும் என மானசாரம் எனும் நூல் கூறுகிறது.

பொதுவாகத் தேர் செய்வதற்கு தேக்கு, மருது, கோங்கு, வேங்கை ஆகிய மரங்கள் பயன்படுகின்றன.

தேருக்கு 4 சக்கரங்கள் இருக்கும். இவை இலுப்பை மரத்தால் செய்யப்படும். அளவில் பெரிய தேர்களில் உள்புறம் தாங்குவதற்காக 4 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரோட்டம்:

தேர் ஓடும் வீதிகள் அகலமாகவும் நீளமாகவும் அமைக்கப்பட்டிருக்கும். ஊரில் இவையே முக்கியமான வீதிகளாகத் திகழும். தேர் நிற்கும் இடத்திற்கு ‘நிலை’ அல்லது ‘தேர்முட்டி’ எனப் பெயர். தேர் நிற்கும் இடத்திற்கு அருகில் தேர் காவல் தெய்வமாக ‘தேரடிக் கருப்பன்/ மாடன்’ எனும் தெய்வத்திற்குக் கோயில் இருக்கும். தேர் புறப்படுவதற்கு முன் இவருக்கு வழிபாடு நடக்கும்.

ரத வீதிகள் சந்திக்கும் 4 மூலைகளிலும் தொடர்ச்சியாக சிறு வீதிகள் இருக்கும். இவற்றுக்கு வடம் போக்கித் தெரு எனப் பெயர். தேர் முக்கு திரும்பும் போது 4 வடங்களில் இரண்டு வடம்போக்கித் தெருவுக்குள் சென்று விடும். இது தேர் சீக்கிரம் முக்கு திரும்புவதற்கு உதவும். தேர் புறப்பட்ட இடத்திற்கே வந்து சேர்வதை ‘நிலை சேர்தல்’ என்பர்.

பக்தர்கள் வடம் பிடித்து இழுப்பதன் மூலமும் தேருக்குப் பின்னால் தடி போடுவதன் மூலமும் தேர் நகரும். தேரின் வேகத்தைக் கட்டுப்படுத்த சக்கை எனப்படும் மரக் கட்டைகளைத் தேர் ஓடும் போது சக்கரத்தின் அடியில் வைப்பார்கள். இந்தச் சக்கைகளே தேர் திரும்புவதற்கும் உதவுகின்றன. இந்தச் சக்கைகள் தேரின் சக்கரத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும், தேர் முக்குகளில் திரும்புவதற்காகவும் சக்கைகளில் இலுப்பை எண்ணெய் விடுவர்.

சக்கைகளை வைப்பவர்களுக்குத் தேரோட்டி எனப் பெயர். இவர்களுக்குத் தான் தேர் ஓடுவதில் முக்கியப் பொறுப்பு உண்டு. இவர்கள் வைக்கும் சக்கையில் தான் தேர் சரியான நேரத்தில் இடத்தில் முக்கு திரும்ப வேண்டும்.

தேர் மண்ணில் பதிந்து விடாமல் இருப்பதற்காக கனமான இரும்பு பிளேட்டுகள் தேர் திரும்பும் சந்திகளில் போடப்படும்.

தேரின் பின்பக்கம் முதல் தட்டில் அமர்ந்து ஒருவர் ஒலிபெருக்கி மூலம் தடி போடும் நிலையை அனுசரித்து முன்பக்கம் உள்ள பக்தர்கள் எப்போது வடம் பிடிக்க வேண்டும் என்று கூறுவார். தேர் நகரும் போது பக்தர்களை ஊக்கப்படுத்துவதற்காக இன்னொருவர் முரசு கொட்டுவார்.

ஒரு 10/20 வருடங்களுக்கு முன்பு வரையிலும் அளவில் பெரிய தேர்கள் நிலைக்கு வந்து சேர 3 லிருந்து 5, 10 நாட்கள் ஆகிவிடும். இப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் மூலம் இழுவைத் திறன் அதிகரித்து விட்டதாலும், சக்கரங்கள் மரத்திற்குப் பதிலாக இரும்பில் செய்யப்படுவதாலும், தடிகளுக்குப் பதிலாக யானை, புல்டோசர் பயன்படுத்தப்படுவதாலும் தேர்கள் ஒரே நாளில் நிலைக்கு வந்து விடுகின்றன. புல்டோசரைப் பயன்படுத்துவதன் மூலம் தேரின் கட்டமைப்பு உருக்குலைந்து விடுகிறது என்றொரு குற்றச்சாட்டும் உண்டு.

தேர் ஒரே நாளில் நிலைக்கு வராவிட்டால் இரண்டாம் நாளில் இழுத்து நிலைக்கு மிக அருகில் ஓரடி முன்னால் தேரை நிறுத்தி விட்டு, 3 ஆம் நாள் தடி மற்றும் குறைவான கூட்டம் மூலம் நிலையில் நிறுத்துவர்.

தேர் நிலையில் சேராமல் வீதியில் நிற்கும் போது தேரில் எழுந்தருளியிருக்கும் இறைவனுக்கு கோயிலில் நடப்பது போலவே கால பூஜைகள் முறையாக நடக்கும். பெண்களும் பக்தர்களும் தேரோடிய வீதியில் விழுந்து வணங்குவர்.

தேரோட்டத்தன்று அதிகாலையிலேயே இறைவன் தேருக்கு எழுந்தருளுவார். சிவாலயங்களில் தேரோட்டத்தன்று இறைவன் முன்பு திருப்பல்லாண்டு பாடுவர். அதன் பிறகே தேரோட்டம் தொடங்கும். தில்லையில் சேந்தனார் திருப்பல்லாண்டு பாடி தேரை ஓட வைத்த வரலாற்றின் அடிப்படையில் திருப்பல்லாண்டு பாடப்படுகிறது.

சிவாலயங்களில் விநாயகர், இறைவன், அம்மை, முருகன், சண்டேசர் ஆகிய மூர்த்திகள் பஞ்ச மூர்த்திகள் எனப்படுவர். விழாக்களில் இவர்களே எழுந்தருளுவர். எனவே பொதுவாக சிவாலயங்களில் 5 தேர்கள் இருக்கும்.

தேரோட்டத்தன்று முதலில் விநாயகர் தேர் குழந்தைகளால் இழுக்கப்படும். பின்பு முருகப் பெருமானின் தேர் நகர்த்தப்படும். அதன் பின்புதான் இறைவனின் பெரிய தேர் புறப்படும். பெரிய தேர் நண்பகலில் நிறுத்தப்பட்டு அம்மை தேர் இழுக்கப்படும். பெரிய தேர் நிலைக்கு வருவதற்கு வசதியாக சண்டேசர் தேர் குழந்தைகளால் இழுக்கப்பட்டு பெரிய தேர் நிற்கும் நிலைக்கு அப்பால் நிறுத்தப்படும். பின்பு பெரிய தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு வரும். படிப்படியாக பிற தேர்கள் எல்லாம் நிலைக்கு வந்து சேரும்.

தேர் தத்துவம்:

பொதுவாக மக்கள் மத்தியில் நல்ல மழை பெய்ய வேண்டும் என்பதற்காகவும் விளைச்சல் பெருக வேண்டும் என்பதற்காகவும் தேரோட்டம் நடைபெறுகின்றது என்னும் கருத்துக் காணப்படுகின்றது.

ஆயினும் அதன் உண்மையான உட்பொருள் வேறு. சைவ சித்தாந்த அடிப்படையில்தான் சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது விழாக்கள் ஆன்மாக்களின் நன்மை கருதி நடத்தப்படுகின்றன. கொடியேறி 10 நாட்கள் நடக்கும் பெருந்திருவிழா ‘சாம்பவி தீட்சை’ என ஆகமங்கள் கூறுகின்றன.

இறைவன் திரிபுரத்து அசுரர்களை தேவர்கள் அமைத்துக் கொடுத்த தேரில் ஏறிச் சென்று தீயிட்டு அழித்தார் எனவும் அதனை நினைவு கூர்வதற்காகத்தான் தேரோட்டம் நடக்கிறது எனவும் சைவ சாத்திர நூல்கள் கூறுகின்றன.

திரிபுரம் எரித்த வரலாறு:

தாரகாட்சன், வித்யுன்மாலி, கமலாட்சன் என்ற அசுரர்கள் மூவரும் பிரம்மாவை நோக்கித் தவமிருந்து தங்கம், வெள்ளி, இரும்பு எனும் 3 பறக்கும் கோட்டைகள் பெற்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் இழைத்து வந்தனர்.

தேவர்கள் சிவபிரானிடம் தங்கள் துயரத்தைக் கூறி முறையிட்டனர். மனம் இரங்கிய முக்கண்ணர் அவர்களோடு தாம் போர் புரிவதற்காக தேர் ஒன்றைத் தயார் செய்யும்படி கட்டளையிட்டார்.

தேவர்களும் அவரது ஆணைக்கிணங்க பூமியைத் தட்டாகவும், வானத்தை விதானமாகவும், சூரிய சந்திரர்களை சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், நான்கு திசைகளைத் தூண்களாகவும் கொண்டு ஒரு மாபெரும் தேரை உருவாக்கினர். பிரம்மா சாரதி; மேருமலை வில்; வாசுகி பாம்பு நாண்; விஷ்ணு அம்பு; அம்பின் நுனி அக்னி; அம்பின் வால் வாயு; இப்படியாகத் தயார் செய்து இறைவனிடம் விண்ணப்பித்தனர்.

இறைவனும் தேரில் எழுந்தருளினான். முப்புரத்து அசுரர்கள் பிரம்மாவிடம் பெற்ற வரத்தின் படி 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வரும் நேரம் அப்போது. அந்த நேரத்தில் தேவர்களுக்கு மனத்துக்குள் ஒரு சிந்தனை. எல்லோருக்கும் ‘நாம் இல்லாவிட்டால் சிவபிரான் அசுரர்களோடு எப்படி போர் செய்ய முடியும்? நாம் தான் அசுரர்களின் அழிவிற்குக் காரணமாக இருக்கப் போகிறோம்’ என்று அகந்தை கொண்டனர்.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு இவர்கள் நினைப்பு தெரியாதா? நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது என்ற கதையாக தேவர்களின் அகந்தையை நீக்கிட இறைவன் திருவுள்ளம் கொண்டார்.

உடனே தேரை விட்டுக் கீழிறங்கினார். அச்சமயம் 3 கோட்டைகளும் ஒரே நேர்கோட்டில் வந்தன. அவற்றைப் பார்த்து இறைவன் புன்னகைத்தார். அவ்வளவுதான்... அவர் புன்னகையிலிருந்து புறப்பட்ட நெருப்பு மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்தது. தங்கள் உதவியில்லாமலே இறைவன் அசுரர்களை அழித்ததைக் கண்ட தேவர்கள் அகந்தை நீங்கி அடி தொழுது உய்ந்தனர்.

இந்த வரலாறே சிவாலயங்களில் தேரோட்டத்திற்கு அடிப்படை.

இதன் உண்மைப் பொருளை திருமூலர் தாமியற்றிய திருமந்திரத்தில்,

”அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் எரித்தனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் என்பது மும்மல காரியம
அப்புரம் எய்தமை யார் அறிவாரே”
என்று அருளிச் செய்கின்றார்.

சைவ சித்தாந்த தத்துவப்படி உயிர்கள் ஆணவம், கர்மம், மாயை எனும் மூன்று மலங்களிடம் சிக்கியுள்ளன. இவற்றிடமிருந்து உயிர்களை மீட்டு அழியாத முக்தி இன்பத்தை இறைவன் தருகிறார்.

எனவே உயிர்களை மும்மலங்களிடமிருந்து இறைவன் காத்தருளுவதுதான் முப்புரம் எரித்ததன் உட்பொருளாகும் என்கிறார் திருமூலர்.

ஆகவே தேரோட்டம் என்பது இறைவன் உயிர்களுக்கு அருள் செய்யும் திறம் என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது. இதனோடு திருவிழாவில் இறைவன் பிற வாகனங்களில் வருவதையும் அத்திருநாட்களுக்குரிய ஆகம ரீதியிலான விளக்கங்களையும் நோக்குவார்க்கு இது உள்ளங்கை நெல்லிக் கனியென விளங்கும்.

தேரோட்டமும் சமுதாயமும்:

பொதுவாக தமிழர்தம் வாழ்க்கைக் கோயிலை மையமாகக் கொண்டது. பட்டினப்பாலையில் கரிகாற்சோழன் ‘கோயிலொடு குடிகளை நிறுவினான்’ எனப் புகழப்படுகிறான்.

’திருக்கோயில் இல்லாத திரு இல் ஊர்’ என அப்பரடிகள் கோயில் இல்லாத ஊர் லட்சுமிதேவி இல்லாத ஊர் என்கிறார். ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்பது ஔவையாரின் அமுதமொழி.

எனவே தமிழர்தம் வாழ்வில் கோயில்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

இத்திருக்கோயில்கள் தான் பக்தி இயக்க காலகட்டத்தில் மக்களை ஒன்றுபடுத்தும் கருவிகளாக விளங்கின.

அதற்குப் பின் வந்த கால கட்டங்களில், திருக்கோயில்கள்

இறைவனைத் தொழுமிடமாகவும்
வேதங்களைக் கற்பிக்கும் பாடசாலையாகவும்,
கலைகளைக் கற்பிக்கும் கலைக்கூடமாகவும்,
செல்வம் செழிக்கும் பண்டாரமாகவும்,
நியாயம் வழங்கும் தீர்ப்புக் கூடமாகவும்,
பூந்தோட்டங்கள் கொண்ட பொதுவிடமாகவும்,
பாதுகாப்புக்கான ஒரு கோட்டையாகவும்,
நோயுற்றோர் பிணி தீர்க்கும் வைத்தியச் சாலையாகவும்,
பஞ்ச காலங்களில் நாட்டின் களஞ்சியமாகவும்
ஆவணங்களைப் பாதுகாக்கும் ஆவணக் காப்பகமாகவும்,
இலக்கியங்கள் காக்கப்படும் நூலகமாகவும்

திகழ்ந்தன.

இவ்வாறெல்லாம் நம் சமுதாயம் திருக்கோயில்களை மையமாகக் கொண்டு ஒற்றுமையாகச் செயல்படுவதைக் கண்டு பிரமித்துப் போனான் வாணிகம் செய்ய வந்த வெள்ளைக்காரன். நம் ஒற்றுமையைக் குலைத்தால் தான் தான் ஆள முடியும் என்பதால் கோயில்களில் செயல்பட்டு வந்த சபைகளைக் கலைத்தான். பாதுகாப்பு, வங்கி முறை, மருத்துவச் சாலை, ஆவணக் காப்பகம், நூலகம், நீதிமன்றம் என தனித்தனியாக கோயிலிலிருந்து பிரித்து அமைத்தான்.

இதன் மூலம் கோயில்களின் முக்கியத்துவத்தைக் குறைக்க முற்பட்டான். மக்கள் கோயில்களில் ஒன்று கூடுவதை நிறுத்த முயற்சித்தான். அவன் முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றான்.

இதன் மூலம் நாம் நம் பாரம்பரிய கலைகளை இழந்தோம். மருத்துவம், கல்வி, கலை, பொருளாதாரம், கிராம நிர்வாகம், சமுதாய மேம்பாடு, நீதி இவற்றில் எல்லாம் நாம் நம் முன்னோர்கள் பெற்றிருந்த திறமையையும் பெருமையையும் மறந்தோம். மொத்தத்தில் சுயத்தை இழந்தோம்.

இந்தச் சமயத்தில்தான் திருக்கோயில் திருவிழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுகளாக பங்காற்றத் தொடங்கின. திருவிழாக்களில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் விடுதலை உண்ர்வு தூண்டப்பட்டது. அதே சமயம் திருவிழாக்கள் தங்கள் ஆன்மிக முக்கியத்துவத்தை இழந்துவிடவும் இல்லை.

உதாரணமாக ஆவணி சதுர்த்தி அன்று திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தியினை மக்களை ஒன்றிணைத்துப் போராடச் செய்யும் விழாவாக மாற்றிக் காட்டினார் பாலகங்காதர திலகர்.

திருவிழா என்றாலே பானை செய்பவர் முதல் பண்ணையார் வரை அனைவருக்கும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பது. திருவிழா துக்கத்துக்கும் சோகத்துக்கும் சோர்வுக்கும் எதிரானது.

மனிதன் அன்றாடக் கவலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்கவும் அதன் மூலம் வாழ்வில் போராடுவதற்குப் புத்துணர்வு பெறவும் விழாக்களை ஏற்படுத்திக் கொண்டான் என்பார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால் நம் சாஸ்திரங்கள் வெறும் மகிழ்ச்சிக்காக மட்டுமின்றி இந்த வாழ்வின் பயன் என்ன என்பதையும் புற வாழ்க்கை தவிர அக வாழ்க்கை என்ற ஒன்றிருக்கிறது என்பதையும் நினைவூட்டுவதற்காக திருவிழாக்கள் நடத்த வேண்டும் எனக் கூறுகின்றன.

உதாரணமாக வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவது என்றிருக்கும் வாழ்க்கை வாழ்க்கையல்ல. முயன்றால் மார்க்கண்டேயன் போல் மரணத்தையும் வெல்லலாம் என்பதை நினைவூட்ட திருக்கடையூர் அபிராமி கோயிலில் திருவிழா நடக்கிறது.

எப்பேர்ப்பட்ட பாவம் செய்தவரையும் இறைவன் கைவிட மாட்டான் என்பதை கஜேந்திர மோட்சத் திருவிழா உணர்த்துகிறது.

இறைவன் அன்பு உடையவர்க்கு எளியவன் என்பதை மதுரையில் நடக்கும் பிட்டுக்கு மண்சுமந்த திருவிழா காட்டுகிறது.

இறைவன் அடியார்களிடம் சாதி வேறுபாடு இல்லை என்பதை சிதம்பரத்தில் நடக்கும் தேரோட்டம் உணர்த்துகிறது.

இத்திருவிழாக்கள் அறிவார்ந்த சிந்தனைகளை மக்களின் உள்ளத்தில் எழுப்பி வாழ்க்கையின் சிக்கல்களுக்கு விடை தேட வைக்கின்றன.

அவ்வகையில் தேரோட்டம் என்பது தனிமனித முயற்சியில் நடப்பதல்ல. ஒரு ஊரே திரண்டு வர வேண்டும். ஒற்றுமையின் மகிமையை உணர்த்துவதுதான் தேரோட்டம்.

இதில் சாதி மத வேறுபாடின்றி ஒருவரோடு ஒருவர் அருகில் நின்று தேரில் எழுந்தருளியுள்ள இறைவனை வேண்டியபடியே தேரினை இழுப்பார்கள். இது இறைவன் முன் அனைவரும் ஒன்றுதான் என்பதையும் அவனுக்கு வேண்டியவர் வேண்டாதவர் என்று யாரும் இல்லை என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.

மேலும் திருவிழாவில் பக்தர்களோடு சாதி பேதமின்றி கலந்து பழக வேண்டும் என்பதைப் பெரிய புராணத்துள் வரும் நமிநந்தி அடிகள் புராணம் நமக்கு நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறுகின்றது.

காவிரிக் கரையில் ஏமப்பேரூர் எனும் ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் நமிநந்தியடிகள். இவர் சிவபிரானிடத்து மிக்க அன்பு கொண்டவர். இவர் ஒருசமயம் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான் எழுந்தருளும் பங்குனி உத்திரத் திருவிழாவுக்குச் சென்றிருந்தார். அந்தத் திருவிழாவில் பக்தர்கள் எல்லோரும் சாதி பேதம் பாராது இறைவனை தரிசிக்க வந்திருந்தனர். அடிகளும் அவர்களுடன் சேர்ந்து இறைவனை தரிசித்து இரவில் வீடு சேர்ந்தார்.

இரவு வெகு நேரமாகி விட்ட படியால் வீட்டின் புறக்கடையில் படுத்து தூங்கிவிட்டார். மறுநாள் அவர் மனைவியார் அவரை எழுப்பி பூஜைக்கு நேரமாகி விட்டதனால் சீக்கிரம் வரும்படி கூப்பிட்டார். அதற்கு அடிகள் “திருவிழாவிலே எல்லோருடனும் இருந்ததனால் தீட்டாகி விட்டது. எனவே குளித்து வந்த பிறகு பூஜை செய்கிறேன்” என்று கூறினார்.

அவர் மனைவியாரும் அதற்கு ஏற்பாடு செய்ய வீட்டிற்குள்ளே போனார். அச்சமயம் அடிகள் சிறிது நேரம் கண்ணயர்ந்தார். அப்போது அவர் கனவிலே ஈசன் தோன்றி “ அன்பனே! திருவிழாவிலே கலந்து கொண்ட எல்லோரும் நம் கணங்களே. இதோ காண்பாயாக!” என்று கூறி திருவிழாக் கூட்டத்தை சிவ கணங்களாக காட்டி அருளினார்.

அடிகள் பதறி எழுந்து இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு திருக்கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

எனவே தேரோட்டத் திருவிழாவில் கலந்து கொள்வோர் எவ்வித பேதமும் பார்க்கத் தேவையில்லை என்பதை இந்த புராணம் நமக்கு உணர்த்துகிறது.

நடைமுறையில் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள், ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி எனச் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் இடையிலான எல்லாவித பேதத்தையும் நீக்கி அனைவரும் இறைவன் முன்பு ஒன்றுதான் என்று நிரூபிக்கும் இந்தத் தேர்விழாவை நமக்குத் தந்துவிட்டுச் சென்ற நம் முன்னோர்களுக்கு நாம் எவ்வளவு நன்றி செலுத்தினாலும் தகும்.

மேலும் குழந்தைகளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருவதும் திருவிழாக்கள்தான். யானை, சப்பரங்கள், மக்கள் கூட்டம், மேள வாத்தியங்கள், கடைகள், கலைநிகழ்ச்சிகள், இறைவனுக்கு நடக்கும் வழிபாடுகள் இவையெல்லாம் குழந்தைகளுக்குப் பேரதிசயமாக இருக்கும். அவர்கள் தினமும் திருவிழாவைக் காண வேண்டும் என ஆசைப்படுவர்.

தேரோட்டத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமும், விண்ணளவு உயர்ந்து நிற்கும் தேரும், அதன் வண்ண வண்ண மாலைகளும், தேரின் மூலைகளில் நிற்கும் யாளிச் சிலைகளும், பிரமிக்கச் செய்யும் வடங்களும், ஆளுயரச் சக்கரங்களும், மிகப் பெரிய வீதியில் மலை போல வரும் தேரின் மொத்த உருவமும் குழந்தைகளை மட்டுமல்ல பொக்கை வாய்க் கிழவர்களைக் கூட வாய் பிளக்கச் செய்து விடும்.

திருநெல்வேலித் திருத்தேர்:

திருநெல்வேலியின் நடுநாயகமாக அமைந்திருப்பது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. திருஞான சம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றது.

இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்களாகும்.

இதில் ஆனிப் பெருந்திருவிழா 45 நாட்கள் நடக்கும் மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா பிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் தொடங்குகிறது. மூத்த பிள்ளையார் திருவிழா, நால்வர் திருவிழா இவை முடிந்தவுடன் நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.

இத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.

4 ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதி உலா வருவர்.

8 ஆம் திருநாளில் இத்தலத்துக்குரிய மூர்த்தியான கங்காள நாதர் எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் பிட்சாடனர் என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

9 ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித் தேரோட்டம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.

இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

திருவாரூர் தேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் சென்ற நூற்றாண்டில்தான் செய்யப்பட்டன.

நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.

முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்.

சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.

திருநெல்வேலித் தலபுராணத்தில் ஆனித் தேரோட்டத்தில் அன்னதானம் செய்வதால் கிடைக்கும் புண்ணியம் பற்றி ஒரு கதை இருக்கின்றது.

சததிருதி என்ற சிவயோகி வட தேசத்திலிருந்து தமிழகம் வந்து தலங்கள் பலவற்றைத் தரிசித்து நெல்லையை அடைந்தான். அச்சமயம் இங்கே ஆனித் தேரோட்டம் நடந்து கொண்டிருந்தது. அவன் தேரில் எழுந்தருளியிருந்த நெல்லையப்பரையும் காந்திமதியையும் தரிசித்தான்.

பின்பு பசியால் மிக வருந்தி தேரோடும் வீதியுள் சென்றான். அங்கே சிவவேடம் புனைந்து இறைவன் புகழ்பாடி ஆடுவோர் பாடுவோரைக் கண்டான். அடியார்கள் பலர் அன்னம், பால், கனி வகைகள், தேன், அதிரசம், அமுது, பட்சணம் முதலியவற்றை அன்போடும் தேரோட்டத்திற்கு வந்திருந்த அடியார்களுக்கு அளித்ததைக் கண்டான்.

அவனுக்கும் அவர்கள் அன்னம் முதலியன தந்து அவன் பசியாற்றினார்கள்.

அவ்வாறு அன்னதானம் செய்தோர், தண்ணீர்ப் பந்தல் வைத்தோர், பானகம் கொடுத்தோர், தேரிழுக்கும் பக்தர்கள் வெயிலில் வாடுகிறார்களே என்று விசிறி கொண்டு வீசி களைப்பாற்றினோர், பக்தர்களுக்கு விசிறி தந்தோர் இவர்கள் எல்லோரும் சிவகணங்களோடு பொன்விமானத்தில் திருக்கயிலாயம் செல்வதையும் அவன் தன் ஞானக் கண்ணால் கண்டான். உள்ளம் உருகி நெல்லையப்பரைப் போற்றினான்.

இவ்வாறு ஆனித் தேரோட்டத்தில் புண்ணியம் செய்த அனைவரும் கயிலாயம் போய்விடவே எமலோகத்திற்கு ஒருவரும் போகாமல் எமபுரம் வெறுமையானது. எமனுக்கும் வேலையில்லை. எனவே அவன் மனம் நொந்து தன் சூலம், பாசம், கதை இவற்றை நெல்லையப்பர் திருவடியில் வைத்து வணங்கி அருகிலிருந்த விஷ்ணுவிடம் தன் மனக் குறையைத் தெரிவித்தான்.

விஷ்ணு அவனிடம்,” எமனே! முன்பு நானும் பிரமனும் அடிமுடி தேடிய காலத்தில் எடுத்த உருவத்தை இங்கு வேணுவனத்தில் வந்து தவம் செய்து நெல்லையப்பரைத் தரிசித்த பின்பே நீங்கப் பெற்றோம். முன்பு இறைவன் இங்கு செங்கோல் செலுத்தி ஆண்ட போது எல்லா உயிர்களும் கயிலாயம் சேர்ந்த கதையை மறந்து விட்டாயா? சிவபிரான் மார்க்கண்டருக்காக உன்னைப் போல முன்காலத்தில் இருந்த ஒரு எமனை உதைத்துக் கொன்றார். பின்னும் இத்தலத்தில் பிங்கலர், சுவேதகேது இவர்களுக்காக மற்றொரு எமனை உதைத்துக் கொன்றார்.

“ இந்தத் தலவிசேடத்தாலும் ஈசன் அம்மையோடு இங்கு இருப்பதாலும் ஆனித்தேரோட்டத்தைத் தரிசிப்பதனாலும் திருவிழாவில் நீர்மோர் அன்னம் முதலியன தானம் செய்வதாலும் அடியார்கள் தம் பாவம் நீங்கி திருக்கயிலாயம் அடைந்து இன்புற்று இருப்பர்.

“இதை யாராலும் மாற்ற இயலாது. சிவனடியார்களை நாங்களே வணங்க வேண்டும் என்றால் நீ வணங்கினால் தான் உயர்வை அடைய முடியும் என்பதும் உனக்குச் சொல்லித் தெரிய வேண்டுமா? ஆகையால் நெல்லையப்பரை வழிபட்டு சிவனடியார்களையும் வழிபட்டு எமபுரம் செல்வாயாக!”
என்று அறிவுரை கூறினார்.

எமனும் அவ்வாறே செய்து தன் ஊர் போய்ச் சேர்ந்தான் என்கிறது தலபுராணம்.

அதனாலேயே இன்றும் ஆனித்தேரோட்டத்தில் பக்தர்கள் தனியாகவும் குழுக்களாகவும் அன்னதானம், நீர்மோர் வழங்கல், விசிறி வழங்கல், பானகம் கொடுத்தல் முதலிய சிவபுண்ணியச் செயல்களை ஆற்றி வருகின்றனர்.

இதிலும் குறிப்பாக தேர் வடம் பிடித்து இழுக்கும் அன்பர்களுக்குக் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வடத்திற்குள்ளேயே வந்து தண்ணீர் வழங்கும் நெல்லையப்பர் திருக்கோயில் பக்தர்கள் பேரவையின் பணி நாம் போற்றி வணங்கத் தக்கது.

இதேபோல பல சங்கங்கள், குழுக்கள், மன்றங்கள், பேரவைகள், மகமைகள், தனியார் நிறுவனங்கள் முதலியன தேரோட்டத்தின் போது செய்து வரும் புண்ணியச் செயல்கள் அளப்பரியன.

நம் வாழ்வில் ஒருமுறையேனும் காண வேண்டிய திருவிழா ஆனித் தேரோட்டம்.

பரபரப்பான நகர வாழ்வில் சிக்கித் திசை காணாது செல்லும் கப்பல் போல நம் வாழ்க்கை இன்று நகர்கிறது. இந்தச் சூழலில் நாம் கொஞ்சமாவது மனிதப் பண்புடனும் நேயத்துடனும் வாழ்வதற்கு வழிகாட்டுபவைதான் திருவிழாக்கள்.

நாம் இத்திருவிழாக்களை காண முடியாவிட்டாலும் நம் குழந்தைகளையாவது காணும்படி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பரியத்தின் பெருமையும் அருமையும் அவர்களுக்குப் புரியும். அவர்களும் மனிதர்களாய் வாழ்வார்கள்.

அப்போதுதான் அவர்களும் தங்கள் குழந்தைகளை

“அஞ்சு தேரோடும் அழகான நெல்லையிலே
பார்த்து மகிழ்ந்தாளாம் பத்தினியாள் காந்திமதி
கண்டு மகிழ்ந்தாளாம் கற்பரசி காந்திமதி
மஞ்சள் அரைத்து முங்கிக் குளிச்சாளாம் பொற்றாமரை கலங்க
கண்ணே உறங்கு தாலேலோ”

என்று மண்வாசனையோடு சீராட்டித் தாலாட்டுவார்கள். மண்ணின் மைந்தர்களாய் இருப்பார்கள்.


( இந்தக் கட்டுரை எழுத உதவிய ஆறாம் திணை இணைய பக்கத்திற்கும், தகவல்கள் தந்துதவிய மயிலாடி ஸ்தபதி நாகமுத்து அவர்களுக்கும், பல்வேறு வேலைகளுக்கு இடையிலும் நெல்லையப்பர் தேரினை நேரில் பார்த்து விவரங்கள் சொன்ன என் கெழுதகை நண்பர் ரத்தினத்திற்கும் என் அன்பு நன்றிகள் உரியன. )



1 கருத்து:

  1. hurrah! though on nellai cheemai's prime festival of therottam this is an exhaustive research piece on the Tamil ther utsav. lucidly penned. marvelous depiction of a heritage festival of south Tamil country. hats off to this pandit author.

    பதிலளிநீக்கு

Translate