வியாழன், 26 மார்ச், 2009

திருமுறைகள்

ஒரு மொழியில் காலந்தோறும் தோன்றி, காலத்தையும் கடந்து நிற்கின்ற இலக்கியங்களே, அம்மொழியின் ஏற்றம், எளிமை, போக்கு, வரலாறு முதலிய அனைத்தையும் எடுத்துரைப்பனவாக விளங்குகின்றன. இலக்கியங்களை `காலக் கண்ணாடி' என்றே அறிஞர்கள் போற்றுகின்றனர்.



பக்தி இலக்கியங்கள்

உலகத்தில் இன்றும் இருக்கின்ற சில பழைமையான மொழிகளில் ஒன்றான நமதருமைத் தமிழ் மொழியிலும் காலத்தை வென்று நிற்கின்ற இலக்கியங்கள் பல உள்ளன.

இவற்றுள், புலன் கடந்து நிற்கின்ற பரம்பொருளைத் தம் உணர்வில் உணர்ந்து சான்றோர் உருகிப் பாடிய பக்திப் பனுவல்களே மிக அதிகமாய் உள்ளன. அதனாலேயே கூட நம் செந்தமிழ் மொழி மேற்கத்திய நாட்டாரால் `பக்தி மொழி' என்றே வழங்கப்படுகின்றது.

`தமிழ் இலக்கிய வரலாறு` எழுதிய பேரறிஞர் மு.வ., "இப்பக்தி இலக்கியங்களை நீக்கித் தமிழ் மொழி வரலாறு காண்டல் என்பது தமிழுக்கு வரலாறே இல்லை என்பதாய் முடியும்"  என்றெழுதினார்.

இந்த பக்தி இலக்கியங்கள் கி.பி.3 ஆம் நூற்றாண்டில் காரைக்கால் அம்மையார் காலத்தில் வளர்ந்து, கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் காலத்தில் செல்வாக்குடன் திகழ்ந்து இருபதாம் நூற்றாண்டில் ரமண மகரிஷி காலம் வரையிலும் வந்திருக்கின்றன. வந்து கொண்டிருக்கின்றன.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வட இந்தியாவில் ஏற்பட்ட `பக்தி இயக்க எழுச்சி'க்கு ஆதாரமாய் அமைந்தவை நம் தமிழ்நாட்டு பக்திப் பனுவல்களே.
இவை சைவம், வைணவம் எனும் இருபெரும் பிரிவுடன் திகழ்ந்து நமது மொழிக்கு வளமையையும், பாரத கலாச்சாரத்திற்குப் பாதுகாப்பையும் அளித்துள்ளன. அளித்து வருகின்றன.

இவற்றுள் நாம் தமிழக அரசியல், சமூக வரலாற்றில் முக்கியமான காலகட்டத்தில் தோன்றி நமது பண்பாட்டையும் சமூகத்தையும் நிலைநிறுத்திய திருமுறைகள் பற்றிக் காண்போம்.

திருமுறைகள் தோன்றிய காலகட்டம்

தமிழகத்தின் முதன்மையான சமயமாகிய சைவ சமயத்தின் தமிழ் வேதங்களாகப் போற்றப் பெறுபவை திருமுறைகள். பாரத தேசம் எங்கணும் திகழ்ந்திருந்த வைதிக நெறியைப் புறந்தள்ளி துறவுக்கு மட்டுமே முக்கியம் கொடுத்து வளர்ந்து வந்த சமண, பௌத்த சமயங்கள் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குப் படையெடுத்தன.

சநாதன தர்மத்தின் அடிப்படையான ரிக் முதலான வேதங்களை ஏற்றுக் கொள்ளாததால், `அவைதிக மதங்கள்' `பாஷண்ட மதங்கள்' எனப்பட்ட சமண, பௌத்தம் தென்னாட்டில் தமது கொள்கையைப் பரப்பியதோடு நின்றுவிடாமல் ஆட்சிக் கட்டிலையும் பிடித்துக் கொண்டன.

நாட்டில் சமண மதம் அரசு மதமாக நிலவிவந்தது. (தமிழகத்தில் பௌத்தத்தைவிட சமணமே செல்வாக்குப் பெற்றிருந்தது). தமிழரின் வாழ்வுக்குப் புறம்பான கடுந்துறவு, உடலை ஒறுத்தல், இசையை வெறுத்தல், நாத்திகவாதம் முதலியன நாடெங்கும் பரவின.

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தொண்டை நாட்டையும், சோழ நாட்டையும் ஆட்சி செய்த மகேந்திரவர்ம பல்லவன், பாண்டிய நாட்டை ஆட்சிபுரிந்த `கூன் பாண்டியன்' என்றழைக்கப்பட்ட மாறவர்மன் அரிகேசரி இருவரும் சமண சமயம் சார்ந்து அதன் கொள்கைகளை வளர்த்தனர்.

ஆசாரியர்களின் புனித யாத்திரை

இக்காலகட்டத்தில் தோன்றிய திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவரும், இந்த அவல நிலையைப் போக்கி வைதிக சைவத்தை நிலைநாட்டுவதற்காகத் தமிழகமெங்கும் சூறாவளியென சுற்றுப்பயணம் செய்தனர்.

எந்தத் தமிழிசையை சமணர் வெறுத்தனரோ, அதே தமிழிசையைக் கொண்டே சிவபிரான் புகழ்பரப்பினர். `குடும்பம் வேண்டாம், துறவே மேன்மை` என்று புலம்பிய சமண, பௌத்தப் பிரச்சாரத்துக்கு எதிராக, இறைவனே பெரிய குடும்பத்துடன் தான் இருக்கின்றான் எனப் பிரச்சாரம் செய்தனர். ஆசாரியர்கள் வாழ்வில் இறைவனும் பற்பல அற்புதங்களைச் செய்தான்.

உடலை வாட்டுதலே முக்திக்கு வழி என்பதற்கு மாறாக, இயல்பான இல்லற வாழ்க்கையில் இருந்து கொண்டே இசைமூலம் இறைவனை அடையலாம் என்று கூறினர் ஆசாரியர்கள். மன்னர்களும் சமணத்திலிருந்து விடுபட்டு சைவராக மாறினர்.

கி.பி. 4,5,6 ஆம் நூற்றாண்டுகளில் தலைதூக்கி நின்ற சமணம், 7 ஆம் நூற்றாண்டளவில் காணாமல் போயிற்று. போருக்குப் பின்பான ஆக்கபூர்வ வேலையாக, சுந்தரமூர்த்தி சுவாமிகள் தோன்றி தமது ஏழிசைப் பனுவலால் சைவத்தை மீட்டெடுத்தார்.

அதன் பின்பும் எஞ்சிக் கிடந்த பௌத்தத்தை மாணிக்கவாசக சுவாமிகள் விரட்டியடித்தார். அதன்பிறகே தமிழகம் சமய அமைதிப் பூங்காவாக மாறியது. கலைகள் பெருகின. கோயில்கள் விரிவடைந்தன. தமிழிசை தலங்கள் தோறும் ஒலிக்கத் தொடங்கியது. சாத்திரங்கள் தோன்றின. தத்துவத் துறையில் உலகமே வியக்கும் சைவ சித்தாந்தத் தத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டது.


திருமுறைகள் 

இக்கால கட்டத்தில் தோன்றிய பிற ஆசாரியர்கள் சைவத்தின் மேன்மையையும் எளிமையையும் திருவருள் நிகழ்வுகளையும் பக்திப் பனுவல்களாகப் பாடி வரலாற்றில் பதிந்து வைத்தனர். இங்ஙனம் காரைக்காலம்மையார் காலம் தொட்டு, 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் காலம் வரையிலும் தோன்றிய பக்திப் பனுவல்களே இசை இலக்கியங்களே திருமுறைகள் எனப்படுகின்றன.

திரு - திருவருள்; முறை - நூல்; திருவருளால் பாடப்பெற்ற நூல்கள் என்பது ஒரு பொருள்.

திரு மரியாதைச் சொல்; முறை நூல்; திருவருள் பெற்ற ஆசாரியர்களால் பாடப்பெற்றமையின் `திருமுறை' என்பது இன்னொரு பொருள்.

திருமுறைகளின் தொகுப்பும் பகுப்பும்

அவைதிக நெறிகளான சமண, பௌத்தத்திற்கு எதிராகப் போர்க்கோலங் கொண்ட ஆளுடைய பிள்ளையாராகிய திருஞானசம்பந்த மூர்த்திகள் பாடிய திருப்பாடல்களை 1,2,3 திருமுறைகளாக வகுத்துள்ளனர்.

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடிய திருப்பாடல்களை 4,5,6 திருமுறைகளாக ஆக்கியுள்ளனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியவற்றை 7 ம் திருமுறையாகவும், மாணிக்கவாசக சுவாமிகள் பாடியதை 8 ஆம் திருமுறையாகவும் வைத்துள்ளனர்.

திருமாளிகைத் தேவர் முதலிய 9 ஆசாரியர்கள் பாடியவை 9 ஆம் திருமுறையாகவும், திருமூல நாயனார் பாடிய `திருமந்திரம்' 10 ஆம் திருமுறையாகவும் உள்ளன. சிவபெருமான் முதல் ஆசாரியர் பன்னிருவர் பாடியவை 11 ஆம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் வரலாற்றைக் கூறும், சேக்கிழார் சுவாமிகள் எழுதிய `பெரிய புராணம்' 12 ஆம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.



கி.பி. 8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த நம்பியாண்டார் நம்பி என்ற மகான், அப்போது சோழ நாட்டை ஆண்டுவந்த முதல் ஆதித்த சோழன் என்பவன் உதவியோடு முதல் எட்டுத் திருமுறைகளை சிதம்பரம் திருக்கோயிலில் கிடைத்த ஏடுகள் மூலம் தொகுத்து வைத்தார்.

அவருக்குப் பின் வந்த சான்றோர்கள் 11 ஆம் திருமுறை வரை மேலும் சேர்த்து வகுத்து வைத்தனர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டையாண்ட குலோத்துங்க சோழன் (II) காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் இயற்றிய `திருத்தொண்டர் புராணம்' எனும் `பெரிய புராணம்' சோழமன்னனாலும் ஆசாரியர்களாலும் 12 ஆம் திருமுறையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

நம்பியாண்டார் நம்பிகள் காலத்திற்கு முன்பே முதல் ஏழு திருமுறைகள் தொகுக்கப்பட்டிருந்தன. நம்பிகளும் அவ்விதமே செய்தார்.


அவர் காலத்திற்கு முன்பு வரை முதல் ஏழு திருமுறைகள் மட்டுமே `திருமுறை' என்று அழைக்கப்பட்டன. அவருக்குப் பின்புதான் ஏனைய நூல்களுக்கும் `திருமுறை' என வழங்கலாயிற்று. இவ்வரலாறெல்லாம் உமாபதி சிவாசாரியார் பாடிய `திருமுறை கண்ட புராணம்' எனும் நூலில் உள்ளது.

தேவாரம் என்றால் என்ன?

முதல் ஏழு திருமுறைகளுள்ளும் திருஞானசம்பந்தர் பாடியவை `திருக்கடைக் காப்பு' எனவும், அப்பர் பாடியன `தேவாரம்' எனவும், சுந்தரர் பாடியன `திருப்பாட்டு' எனவும் வழங்கப்பட்டன.

அப்பரடிகள் பாடலைக் குறிக்கும் `தேவாரம்' என்ற சொல், பிற்காலத்தில் மூவர் பாடல்களுக்கும் சேர்த்துக் குறிக்கப்படுவதாயிற்று.


கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டைப் புலவர்கள்தாம் மூவர் பாடல்களையும் `தேவாரம்' என்று குறிப்பிட்டனர்.

 பின்பு வந்த சைவ எல்லப்ப நாவலர் தாம் பாடிய திருவருணைக் கலம்பகத்தில் `வாய்மை வைத்த சீர் திருத்தேவாரமும் திருவாசகமும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தே- தெய்வம்; வாரம் - இசை (அ) பாடல்; தெய்வத்தின்மீது பாடப்பட்ட பாடல் - தேவாரம் என்பது பொருள்.

பண் அமைப்பு

சம்பந்தர், அப்பர், சுந்தரர், காரைக்கால் அம்மையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆசிரியர்கள் என இவர்கள் பயன்படுத்திய பண்களில் 23 பண்கள் நமக்குக் கிடைத்துள்ளன.

வேறெங்கும் காணப்படாத `சாளரபாணி' என்னும் ஒரு பண் ஒன்பதாம் திருமுறையில் உள்ளது. `செவ்வழி'ப் பண்ணை ஞானசம்பந்தரும், `செந்துருத்தி'ப் பண்ணை சுந்தரரும் மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.

மற்றப் பெரும்பான்மை பண்களை ஞானசம்பந்தரே அதிகம் பயன்படுத்தியுள்ளார்.

கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, `சங்கீத ரத்னாகரம்' எனும் புகழ்பெற்ற நூலை இயற்றியவரான சார்ங்கதேவர் தேவாரப் பண்கள் சிலவற்றைத் தமது நூலில் `தேவார வர்த்திநீ' என்ற அடைமொழியோடு குறிப்பிட்டுள்ளார்.

திருமுறைகளை ஓதுவோம்

பின்வந்த சான்றோர்கள் பலரும் திருமுறைகளைத் தமது உயிரினும் மேலாய்ப் போற்றியுள்ளனர். `புமியதனில் ப்ரபுவான புகலியில் வித்தகர் போல, அமிர்தகவித் தொடை பாட' என்றார் அருணகிரிநாதர்.

`மொழிக்கு மொழி தித்திக்கும் மூவர் தமிழ்' என்றார் தாயுமானவர்.

திருமுறைகள் திருவருளால் பாடப்பட்டன; பழந்தமிழ் இசையோடு கூடியன. நம் உள்ளத்தை உருக்குவன; கண்ணீரைப் பெருக்குவன; ஞானத்தை அளிப்பன; தமிழின் மேன்மை இன்றளவும் உலகம் அறியச் செய்வன; நம் பிறவியை வேரறுக்க வல்லன.

கல்மனத்தையும் கரைக்கும் வல்லமை உடைய திருமுறைகளைப் பண்ணோடு பயின்று ஓதி நம் பழவினையை வெல்வோம். பரமசிவனார் திருவடி பெறுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate