வியாழன், 19 மார்ச், 2009

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் நன் நோக்கம்

”நான் ஜய வருஷம் (1834) முதலாகப் பீற்றர் பார்சிவல் துரையுடைய இங்கிலிஷ் வித்தியாசாலையிலே இங்கிலிஷ் கற்றேன். பிலவ வருஷம் (1841)பார்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதனாயினேன். பிதிரார்ச்சிதம் நான் பெறவில்லை.
என்னுடைய தமையன்மார்கள் நால்வரும் இயன்றமட்டும் பொருளும் உத்தியோகமும் உடையவர்களாயிருப்பவும்,அவர்கள் பொருளுதவியையும் நான் பெறவில்லை.இங்ஙனமாகவும் , மேற்கூறப்பட்ட விருத்தியை நான் கீலக வருஷம் புரட்டாதி மாசம் (1848) பரித்தியாகஞ் செய்தேன்.

“பார்சிவல் துரை ,” நான் தங்களுக்கு உயர்வாகிய வேதனம் தருவேன்; தாங்கள் என்னை விடலாகாது” என்று பலதரம் வற்புறுத்திச் சொல்லிய வழியும் , நான் அவ்விருத்தியில் விருப்பம் வைக்கவில்லை.

நான் இங்கிலிஷிலே அற்ப விற்பத்தியாயினும் பெற்றிருந்தும் ,என்னோடு இங்கிலிஷ் கற்றவர்களுள்ளும் எனக்குப் பின் இங்கிலிஷ் கற்றவர்களுள்ளும் அனேகர் தங்கள் தங்கள் சத்திக்கேற்ற உத்தியோகம் பெற்று வாழ்ந்திருக்கக் கண்டும் , நானும் என் சத்திக்கேற்ற உத்தியோகத்தின் பொருட்டு முயற்சி செய்யின் அது தப்பாது சித்திக்கும் என்றறிந்தும் , அஃது இல்லாமையால் விளையும் அவமதிப்பைப் பார்த்தும், உத்தியோகத்தை விரும்பவில்லை.
“கன்னியை நாயகனிடத்து ஒரு துட்டாயினும் வாங்காது வீடு விளை நிலம் தோட்டம் ஆபரணம் முதலியவற்றோடு விவாகஞ்செய்து கொடுக்கும் வழக்கமேயுடையது என் சென்ம தேசமாகவும் , நான் இல் வாழ்க்கையிலே புகவில்லை.


இவைகளெல்லாவற்றிற்குங் காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்.

”இப்பேராசையினால் இருபது வருஷ காலம் நான் செய்த முயற்சிகள் பல; அவைகளுள்ளே சித்தி பெற்றவை மிகச்சில. சைவ சமயிகள் யாவரும் சைவ சமயத்திலே சிரத்தை உடையவர்களாகித் தங்கள் தங்களால் இயன்ற உதவி செய்தார்களாயின், நான் எடுத்த முயற்சிகளெல்லாம் இதற்கு முன்னரே நிறைவேறிவிடும்; நிறைவேறின் ,என்னைப் போலவே பிறரும் அங்கங்கே நன்முயற்சிகளைச் செய்வார்கள்;செய்யிற் கல்வியும்,சமயமும் தழைத்தோங்கும்.

”இதனை நான் என் சிறு வயசு முதலாகச் சிந்தித்துச் சிந்தித்து ,” சைவ சமயத்தை வளர்த்தற்கு வேண்டும் முயற்சிகளைச் செய்வாரில்லையே! இதற்கு யாது செய்யலாம்? சைவ சமய விருத்தியின்கண்ணதாகிய பேராசையை அதனை முடித்தற்குச் சிறிதும் சத்தியில்லாத எனக்குத் தந்தருளிய சிவபெருமான் சத்தியுடைய மற்றையோர்களுக்குக் கொடுத்தருளினாரில்லையே!” என்று இரவும் பகலும் பெருங்கவலை கொண்டு பெருமூச்செறிதலிலும் பலருக்குப் பிதற்றுதலினுமே பெரும்பான்மையும் என் காலத்தைப் போக்குவேனாயினேன்.

”நான் எனக்கு ஒழிவுள்ள காலத்தைக் கைம்மாறு வேண்டாது உலகத்தாருக்குப் ப்யன்படக் கழித்தல் வேண்டும் என்று நினைந்து ,விசுவாவசு வருஷம் தை மாசம் (1846) முதலாகச் சில பிள்ளைகளுக்கு இராத்திரியிலும் காலையிலும் தமிழ்க்கல்வி கற்பித்துக் கொண்டு வந்தேன்”

“ நான் உங்களிடத்துக் கைம்மாறு பெறுதலைச் சிறிதும் எண்ணாது முப்பத்திரண்டு வருஷ காலம் உங்களுக்குச் சைவசமயத்துண்மைகளைப் போதித்து வந்தேன். எனக்குப் பின் சைவ சமயங் குன்றிப்போமென்று பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்.

“ ஆதலால் நான் உயிரோடிருக்கும்போதே உங்களுக்காக ஒரு சைவ சமயப் பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள். இன்னும் என்னைப் போலப் படித்தவர்களும் சன்மார்க்கர்களுமாய் அனேகர் வருவார்கள்.ஆனால் உங்களுடைய வைவுகளைக் கேட்டுக் கேட்டுக் கைம்மாறு கருதாது சமயத்தைப் போதிக்க என்னைப் போல ஒருவரும் வரார்.”



நாவலரின் நன் நோக்கத்தை நிறைவேற்றுவோம், திருவருளால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate