வியாழன், 26 மார்ச், 2009

குருவின் திருவடி

திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருப்பெண்ணாகடம் எனும் ஊரில் அச்சுத களப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தமக்கு, நீண்ட நாள் குழந்தைப் பேறு இல்லாமையால் மிகவும் மனம் வருந்தியவராய், தமது குல குருவாகிய அருணந்தி சிவாசாரியாரிடம் சென்று தமது மனக்குறையைக் கூறினார்.
அருணந்தி சிவாசாரியார் ஆதிசைவர். திருத்துறையூரில் வாழ்ந்து வந்தவர். வேத ஆகமங்களை நன்குக் கற்றவர். அதனால் அவருக்கு பண்டி`சகல ஆகம பண்டிதர்' என்ற பட்டப்பெயரும் உண்டு.

அக்காலத்து வழக்கப்படி, தாம் நினைத்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளுக்கிடையே, கயிற்றினை விடுவர். அக்கயிறு எந்த ஓலையின் மீது நின்றதோ, அந்த ஓலையில் எழுதப்பட்ட பாடலை ஒரு குறிப்பிட்ட காலம் பாராயணம் செய்து தமது எண்ணம் ஈடேறப் பெறுவர். இதற்குக் கயிறு சார்த்துதல் என்று பெயர்.

அவ்வாறே அருணந்தியார், அச்சுதருடைய மனக்குறை தீரும் விதமாக, திருமுறையிலே கயிறு சார்த்திப் பார்த்தார்.அப்போது, திருஞானசம்பந்தர் அருளிச் செய்த திருவெண்காட்டுப் பதிகத்தில்,

"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குள நீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே."

எனும் பாடல் வந்தது.

அச்சுதரைத் திருவெண்காட்டிற்குச் சென்று சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் நீராடி, இறைவனை வழிபட்டு வரும்படி கூறினார் அருணந்தியார்.

அவ்விதமே, அச்சுதரும் திருவெண்காட்டிற்குச் சென்று இறைவனை வழிபட்ட பிறகு, அச்சுதரின் மனைவியார் கருவுற்றார். பின்பு ஒரு நல்ல நாள், நல்ல வேளையிலே ஓர் ஆண்குழந்தையை ஈன்றெடுத்தார்.

பெற்றோர் அக்குழந்தைக்கு `சுவேதவனப் பெருமாள்' எனத் திருவெண்காட்டு ஈசனின் பெயரை சூட்டினார்.

அக்குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது, குழந்தையின் தாய்மாமன் தமது ஊராகிய திருவெண்ணெய்நல்லூருக்கு எடுத்துச் சென்று வளர்த்து வந்தார்.
நந்திதேவர், சனத்குமாரர், சத்யஞான தரிசினி, பரஞ்சோதி முனிவர் ஆகிய நால்வர் அகச் சந்தானக் குரவர் எனப்படுவர். ஏனெனில் இவர்கள் கைலாயத்திலேயே வசிப்பவர்கள்.

ஒருநாள் பரஞ்சோதி முனிவர், பொதிகை மலையில் வாழும் அகத்திய முனிவரைத் தரிசிப்பதற்காக கைலாயத்திலிருந்து வான்வழியாக வந்து கொண்டிருந்தார். திருவெண்ணெய்நல்லூர் வந்தவுடன் அவரால் மேலே செல்ல இயலவில்ைல. முனிவர் கீழே பார்த்தார்.

சுவேதவனப் பெருமாள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். குழந்தையின் பக்குவ நிலையை உணர்ந்த முனிவர் கீழிறங்கி, குழந்தையை ஆசீர்வதித்து `சிவஞான போதம்' எனும் ஞான நூலினை உபதேசம் செய்தார். `மெய்கண்டார்' எனத் தமது குருவின் பெயரை அக்குழந்தைக்குச் சூட்டினார். பின்பு பொதிகை மலைக்குச் சென்றார்.

முனிவரிடம் சிவ ஞானம் பெற்ற மெய்கண்ட தேவ நாயனார், திருவெண்ணெய் நல்லூர்க் கோயிலுக்குள், `பொல்லாப் பிள்ளையார்' சன்னிதியில் தியானத்தில் அமர்ந்தார்.

 தாம் உணர்ந்து தெளிந்த ஞானத்தினை `சிவஞான போதம்' எனும் ஞானநூல் மூலமாக மாணவர்கள் பலருக்கு உபதேசம் செய்தார்.

இதனைக் கேள்விப்பட்ட அருணந்தி சிவாசாரியார் மெய்கண்டாரைக் காண்பதற்குத் திருத்துறையூரிலிருந்து திருவெண்ணெய் நல்லூருக்கு வந்தார்.அடியார்கள் பலரும் அவரை எதிர்கொண்டு வரவேற்றனர். ஆனால் மெய்கண்டார் மட்டும் அருணந்தியாரை வரவேற்காமல் அமர்ந்திருந்தார். அச்சமயம் மெய்கண்டார் மாணவர்களுக்கு `ஆணவ'த்தைப் பற்றி உபதேசித்துக் கொண்டிருந்தார்.

இதுகண்ட அருணந்தியாருக்குக் கோபமும் வெட்கமும் ஒருசேரப் பொங்கின. மிகுந்த சீற்றத்துடனும் செருக்குடனும் அவர் மெய்கண்டாரை நோக்கி, "ஆணவத்தின் வடிவம் எது?" என்று கேட்டார்.

மெய்கண்டார் புன்னகை புரிந்தவாறே, அருணந்தியாரை நோக்கித் தமது விரலால் சுட்டிக்காட்டினார். `அருணந்தியாரே ஆணவ வடிவமாக இருக்கின்றார்' என்பதைச் சொல்லாமல் சொல்லியருளினார் மெய்கண்டார்.

அருணந்தியார் அந்தச் சிவஞானக் கதிரவனது அருள்ஒளி நோக்கால் மல இருள் அகலப் பெற்றவராய், உண்மை உணர்ந்து மெய்கண்ட தேவநாயனாரின் திருவடியில் தாழ்ந்து வணங்கித் `தமக்கு ஞானம் அளிக்க வேண்டும்' என்று வேண்டினார்.

மெய்கண்ட தேவ நாயனார் அருணந்தி சிவாசாரியாருக்குத் திருநீறு அளித்து மெய்யுணர்வு அருளி, `சிவஞான போதம்' எனும் ஞான நூலை உபதேசித்தார்.
இவ்விதம் எல்லோருக்கும் குருவாகிய, தமக்கே குருவாகி உயர்ந்து விளங்கிய மெய்கண்ட தேவ நாயனாரை,

"பண்டைமறை வண்டரற்றப் பசுந்தேன் ஞானம்
பரிந்தொழுகச் சிவகந்தம் பரந்து நாறக்
கண்ட இருதய கமல முகைகள் எல்லாம்
கண்திறப்பக் காசினிமேல் வந்த அருள் கதிரோன்
விண்டமலர்ப்பொழில்புடைசூழ் வெண்ணெய்
மேவும்மெய்கண்ட தேவன் மிகு சைவ நாதன்
புண்டரிக மலர்தாழச் சிரத்தே வாழும்
பொற்பாதம் எப்போதும் போற்றல் செய்வாம்."

என்று துதித்து உய்ந்தார் அருணந்தி சிவாசாரியார்.

நாமும் குருவுக்கு குருவான மெய்கண்ட தேவ நாயனாரைத் துதித்து ஞானம் பெறுவோம்.

(03.08.2007, விஜயபாரதம் இதழில் வெளிவந்தது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate