திங்கள், 30 மார்ச், 2009

திருவார் பெருந்துறை

முன்னொரு காலத்தில் ஐம்புலன்களையும் வென்ற முனிவர்கள் ஆயிரம் பேர் உத்தரகோசமங்கை எனும் தலத்தில் சிவபிரானை நோக்கி தவம் இருந்தனர்.

இறைவன் அவர்களிடத்து ஆகம நூல்களை அளித்து , அங்குள்ள தீர்த்தத்தில் ஒருநாள் பெரிய தீப்பிழம்பு தோன்றும் எனவும் , யாவரும் அதில் கலந்து தம்மை அடைக எனவும் ஆணையிட்டான்.


அவ்வாறே தீப்பிழம்பு தோன்ற, முனிவர் யாவரும் அதில் கலந்து இறைவனை அடைந்தனர். அச்சமயம் ஒரு முனிவர் மட்டும் தீயில் விழாது ஈசன் கொடுத்த ஆகமங்களைப் பாதுகாத்தபடி இருந்தார்.

சிவபிரான் அவர் முன் தோன்றி 'குழந்தாய்! ஆகமங்களைக் காப்பதற்காக உயிர் தரித்த நீ, அடுத்த பிறவியில் மாணிக்கவாசகன் எனும் பெயருடன் எம்மீது தேனினும் இனிய தமிழில் பாடுவாயாக! பெருந்துறையில் உன்னை ஆட்கொண்டு தில்லையில் எம்மோடு சேர்த்துக் கொள்வோம்' என்று அருள் செய்தார்.


திருவாதவூரரும் குரு நாதரும்மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் வாழ்ந்து வந்த சம்புபாதாசிரியர்-சிவஞானவதி தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது.

பெற்றோர் குழந்தைக்கு திருவாதவூரர் என்று பெயரிட்டனர். 16 வயதிற்குள் கலைகள் அனைத்தையும் பயின்ற திருவாதவூரரின் பெருமையைக் கேள்விப்பட்ட அரிமர்த்தன பாண்டியன் அவரை அழைத்து தனது முதலமைச்சராக்கி , `தென்னவன் பிரமராயன்' என்று பட்டமும் கொடுத்தான்.

வாதவூரர் உலக இன்பங்களில் நாட்டம் கொள்ளாது உண்மையான ஞானமளிக்கும் குருவை மனதால் தேடிக் கொண்டிருந்தார்.

பின்பு ஒரு சமயம் பாண்டியன் , குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகளை வாங்கிவரும்படி இவரிடம் ஏராளமான பொன்னும் பொருளும் அளித்து ,கிழக்குக் கடற்கரைத் துறைமுகத்துக்குச் செல்லும்படிக் கேட்டுக் கொண்டான்.

 வாதவூரரும், கிழக்கு கடற்கரையில் இருந்த துறைமுகம் நோக்கிப் புறப்பட்டார்.

`பெருந்துறையில் ஆட்கொள்வோம்' என்றருளிய ஈசன் , வாதவூரர் வரும் வழியில் குருந்தமரங்கள் அடர்ந்திருந்த வனத்தில், முன்பு தீயில் விழுந்த 999 முனிவர்களோடும் எழுந்தருளியிருந்தார்.குருந்த வனத்தை நெருங்கும்போது வேத சிவாகமங்கள் ஓதப்படும் ஒலியைக் கேட்டார் வாதவூரர்.

ஞானகுருவுக்காக ஏங்கியிருந்த அவர் மனம் , அவரை அந்த வனத்திற்குள் இழுத்துச் சென்றது.குருந்த வனத்திற்குள் சென்றவர், ஆங்கே அற்புதமானதொரு திருக்காட்சியை கண்டார்.

ஒரு குருந்த மரத்தடியின் மேடை மீதில் , மேனி முழுவதும் வெண்ணீறு பூசி மார்பிலும் தோளிலும் உருத்திராக்கம் பூண்டு `அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி' எழுந்தருளியிருந்தான். அவன் திருவடியில் 999முனிவர்களும் அமர்ந்திருந்தனர்.

முன்னைத் தவத்தால் , வாதவூரர் இக்காட்சியைக் கண்டவுடன் ஊனும் உள்ளமும் ஒருங்கே உருக குரு நாதரின் திருவடி பணிந்தார்.குருநாதரும் இவர் பக்குவ நிலையை அறிந்து நயன தீகை்ஷ , ஸ்பரிச தீகை்ஷ, மந்திர தீகை்ஷ, திருவடி தீகை்ஷ முதலியன செய்து ஆட்கொண்டார்.

குருந்தொளிர் குருநாதர் தம்மை ஆட்கொண்டதை நினைந்து நினைந்து உருகிய வாதவூரர், கண்ணீர் பெருக்கி கைம்மலர் உச்சி மேல் குவித்து தேனினும் இனிய திருவாசகப் பாடல்களைப் பாடலானார்.

அப்பாடல்களைச் செவிமடுத்த குருபரர்`மாணிக்கம் போன்று ஒளி வீசுவதாகிய பாடல்களைப் பாடினமையால் `மாணிக்கவாசகன்' என்று உலகம் உன்னைப் போற்றட்டும்' என்றருளிச் செய்து பொன்னையும் பொருளையும் திருக்கோயில் திருப்பணிக்காகவும்,அடியார்களுக்காகவும் செலவிடப் பணித்தார்.

குதிரை வாங்க வைத்திருந்த பொன் பொருள் எல்லாம் கோயில் பணிக்காக செலவாயிற்று.குருந்த வனத்திலே அழகியதோர் கோயில் எழுந்தது.
பிறவிக் கடலிலே விழுந்து துன்புறுகின்ற உயிர்கள் அஞ்செழுத்தாகிய தெப்பத்தை பிடித்துக் கரை ஏறுகின்ற இடமாக குருந்த வனம் திகழ்வதால் `பெருந்துறை'என ஞானிகளால் போற்றப்படுகின்றது.


இனி....

திருப்பெருந்துறையாகிய ஆவுடையார் கோயிலுக்குச் செல்வோம்.பொதுவாக சிவாலயங்கள் தெற்கு நோக்கி அமைவதே இல்லை.ஆயினும் ஆவுடையார் கோயிலும், குளித்தலை கடம்பவன நாதர் கோயிலும் இவ்வகையில் விலக்கு.
எழு நிலைக்கோபுரத்தோடு தென்திசை நோக்கி விளங்கும் ஆலயத்திற்குள் நுழைகிறோம்.முதலில் நம்மை வரவேற்பது சிற்பங்கள் நிறைந்திருக்கும் ஆயிரங்கால் மண்டபம்.

மண்டபத்தின் முன்பகுதியில் இரணியனின் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொள்ளும் உக்கிர நரசிம்மர், பத்திரகாளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், ரிஷபாந்தகர், சங்கரநாராயணர்,வில்லேந்திய வேலவர்,குழலூதும் கண்ணன் ஆகியோர் தத்ரூப சிற்பங்களாய் நிற்கின்றனர்.

சில படிகள் இறங்கிச் சென்றால் நம் இருபுறமும் 12 அடி உயரமுள்ள ரணவீரபத்திரர், அகோர வீரபத்திரர் இருவரும் பல கைகளோடு வடக்கு நோக்கி கோபாவேசத்தோடு நிற்கின்றனர்.இவர்களைக் கடந்து முன்னோக்கிச் சென்றோமானால் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட ஏழுநிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் .

பொதுவாக ஒரு சிவாலயத்தில் ராஜகோபுரத்தைக் கடந்ததும் பலிபீடம்,கொடிமரம்,நந்திதேவர் ஆகியன இருக்கும்.ஆனால் ஆவுடையார் கோயிலில் இந்த மூன்றும் கிடையாது.ராஜகோபுர வாசலிலிருந்தே ஆத்மநாதர் சந்நிதி தெரிகிறது.ராஜகோபுரத்தைக் கடந்தோமானால் நம் முன் வருவது பஞ்சாட்சர மண்டபம். ஆவுடையார் கோயிலின் பெரும்புகழுக்கு உரித்தான இம்மண்டபத்தைப் பற்றி பிறகு பார்ப்போம்.

பஞ்சாட்சர மண்டபத்தைக் கடந்தால் வருவது உள் பிராகாரம்.இதையும் கடந்து சென்று ஆத்மநாதர் சந்நிதியின் மகாமண்டபத்தை அடைகின்றோம்.
திருக்கோயிலின் முக்கியப் பகுதி , இப்பொழுது நாம் நிற்கின்றோமே, இந்த மகாமண்டபம், அர்த்த மண்டபம் (அ) இடை நாழி, கருவறை என மூன்று பிரிவாக உள்ளது.

மகாமண்டபம்-சத்;இடை நாழி-சித்; கருவறை-ஆனந்தம் ,ஆக சச்சிதானந்த வடிவமாகவே இக்கோயில் விளங்குவதாக ஸ்தல புராணம் கூறுகின்றது.மொத்தக்கோயிலின் மிகப்பழமையான பகுதி கருவறையும் இடை நாழியும் மட்டுமே.பிற கட்டுமானங்கள் எல்லாமே பிற்காலத்தவை.கருவறையை மாணிக்கவாசக சுவாமிகள் கட்டியதாகக் கூறுகின்றனர்.

இறைவனை வணங்குவோம். கருவறையில், விளக்குகளின் ஒளியில் நம் மன இருளை நீக்கும் `ஒளி வளர் விளக்காய்' எழுந்தருளியிருக்கின்றார்,


ஆத்மநாதர்.

அர்ச்சகர் காட்டும் தீப ஒளியில் இறைவனை வணங்குகின்றோம் .பாண்டியனின் முதலமைச்சரான வாதவூரருக்கு உபதேசம் செய்து மாணிக்கவாசகராக்கியவர் இந்த ஆத்மநாத சுவாமிதான்.

இவருக்கு சிவபுரேசர், குருந்தவனேசர், பவித்திர மாணிக்கபுரவாசர், யோகபீடபுரவாசர், முந்நூற்றொருவர்,பரமசுவாமி, ஜகத்குரு, விப்ரநாதர், சப்த நாத உபாத்தியாயர் என ப் பல்வேறு திருநாமங்களை ஸ்தல புராணம் கூறுகிறது.


திருப்பெருந்துறை, பவித்திர மாணிக்க புரம், சிவபுரம், குருந்தவனம், யோகபீடபுரம் எனப் பல பெயர்கள் ஆவுடையார் கோயிலுக்கும் உண்டு.

ஆத்மநாதசுவாமி மற்ற ஸ்தலத்து சிவலிங்க மூர்த்திகளைப் போல் இல்லை. இங்கே கருவறையில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்க பாணம் கிடையாது. எனவே லிங்க வடிவில் பொற்கவசம் ஒன்றைச் சார்த்தியிருக்கின்றனர்.

இறைவனுக்கு உருவம் கிடையாது என்பது நம் வேதக் கொள்கைஆவுடையார் கோயிலில் ஆத்ம நாதர் அருவமாகவே வழிபடப்படுகிறார். இதனை க் கோயில் திருப்பதிகத்தில் மாணிக்கவாசகர்,`சோதியாய்த் தோன்றும் உருவமே, அருவாம் ஒருவனே'என்றருளுகின்றார்.

இத்தலத்தில் ஆத்மநாத சுவாமி பற்பல அற்புதங்களை நடத்தியிருக்கின்றார். சுகுண பாண்டியன் என்ற மன்னன் இவருக்கு சிவாகம முறைப்படி நித்திய பூசை செய்வதற்காக காசியிலிருந்து முந்நூறு பிராமணர்களை வரவழைத்து ஒவ்வொருவருக்கும் தங்கத் தட்டில் பீதாம்பரம் வைத்து மரியாதை செய்யும்போது ஒரு தட்டு மிஞ்சியது.

அப்பொழுது ஆத்மநாதர் , வயதான பிராமணராகத் தோன்றி மன்னன் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.அதனால் இவருக்கு `முந்நூற்றொருவர்' என்ற திருநாமம் ஏற்பட்டது.

கிழப் பிராமணராகத் தோன்றிய இறைவன், மற்ற பிராமணர்களின் குழந்தைகளுக்கு வேதம் கற்ப்பித்து வந்தார். இதனால் `சப்த நாத உபாத்தியாயர்' எனப்பட்டார்.

ஒருசமயம், லுண்டாக்கன் என்பவன் முந்நூறு பிராமணர்களின் நிலங்களை அவற்றிற்குரிய பத்திரங்களோடும் பறித்துக் கொண்டான்.

மன்னனிடம் பிராமணர்கள் முறையிட , அவன் `உங்கள் நிலம் என்பதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டான். அவர்கள் விழித்தனர்.

அச்சமயம் சப்த நாதர் `எங்கள் நிலத்தில் ஒரு முறை வெட்டினாலேயே நீர் பொங்கி வரும்' என்றார்.மன்னன் லுண்டாக்கனிடமும் அவ்வாறே கேட்க அவன்,`அந்த நிலம் வறண்ட பூமி' என்றான்.

நேரே சிவபுரத்திற்கு வந்தான் . சப்த நாதர் ஓரிடத்தைக் காட்ட அங்கே வெட்டினர். வெட்டிய உடனே நீர் வெள்ளமென ஊற்றெடுத்தது.இப்படி அங்கங்கே வெட்டி அதனால் ஏற்பட்ட வெள்ளம் தேங்கி நின்றதால் சிவபுரம் எனும் தலம் `பெருந்துறை' என அழைக்கப்படலாயிற்று.`திரு' என்னும் அடைமொழி சேர்ந்து `திருப்பெருந்துறை' ஆயிற்று.

பிராமணர்களுக்கு `விப்ரர்' எனும் பெயர் உண்டு.விப்ரர்களுக்குத் தலைமை தாங்கி வழக்கு நடத்தியதால் ஆத்மநாதருக்கு`விப்ர நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.

இங்ஙனம் பற்பல திருவிளையாடல்கள் மூலம் அடியார்களுக்கு அருள் செய்துள்ளார் ஆத்மநாதர்.

ஆத்மநாதர் வீற்றிருக்கும் கருவறைக்கு முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் பெரிய படைப்புக்கல் ஒன்று குறுக்குவாட்டில் உள்ளது.தினமும் நடக்கும் ஆறுகால பூசையின் போது புழுங்கல் அரிசிச் சோறு படைப்புக் கல்லில் படைக்கப்படும்.கூடவே பாகற்காயும் கீரையும் இருக்கும்.

பூசையின் போது அர்த்த மண்டப வாசற்கதவை மூடி விடுவர். உள்ளே புழுங்கல் அமுதின் ஆவி மட்டுமே இறைவனுக்கு நிவேதிக்கப்படும். பின்பு கதவு திறக்கப்பட்டு பூசை நடக்கும்.

திரேதாயுகத்தில் , ரூட்சாயணர் எனும் முனிவர் புழுங்கல் அரிசிச் சோறு நிவேதனம் செய்து இறைவனை வழிபட்டதால் அன்று முதல் இவ்வாறு நடந்து வருவதாக தல புராணம் கூறுகிறது.

சிவபிரான் நிலம், நீர், தீ, காற்று,ஆகாயம்,சூரியன்,சந்திரன், ஆன்மா எனும் எட்டு வடிவாக உள்ளார் என சைவ சித்தாந்தம் கூறும். மணிவாசகரும்`நிலம்நீர் நெருப்பு உயிர் நீள்விசும்பு நிலாப் பகலோன் புலனாய  மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் ' என்கிறார்.

அத்தகைய சிவபிரானின் அஷ்டமூர்த்த சிற்பம் மகாமண்டபத்தின் மேல் விதானத்தில் உள்ளது. இது எந்த சிவாலயத்திலும் இல்லாத தனிச்சிறப்பான சிற்பமாகும்.

ஆத்ம நாதரை உள்ளங்குளிர வணங்கி வழிபட்டு, மகாமண்டபத்தின் மேற்கு வாசல் வழியாக பிராகாரத்தில் நுழைகிறோம். நம் இடப்பக்கம் மாணிக்கவாசக சுவாமிகள் வடக்கு நோக்கியும், வலப்பக்கம் சிவ யோகாம்பிகை தெற்கு நோக்கியும் (இருவரும் எதிரெதிர் சந்நிதி) எழுந்தருளியுள்ளனர்.

மாணிக்கவாசக சுவாமிகளைத் தரிசிக்கிறோம்.பேரழகு வாய்ந்த மூர்த்தி இவர். வலக்கரத்தில் சின்முத்திரையும், இடக்கரத்தில் சுவடியும் கொண்டு வலப்புறம் சற்றே சாய்ந்த வண்ணம் கருணை பொங்கும் திருமுகத்துடன் விளங்குகின்றார். இக்கோயிலில் இவரே சகலமும்.


நந்திதேவரின் அவதாரமாக இவர் கருதப்படுவதால் இக்கோயிலில் நந்திதேவர் இல்லை.

இறைவனை அடைய சித்தாந்தம் தாச மார்க்கம்,சத் புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன் மார்க்கம் எனும் நால்வகை நெறிகளைக் கூறும். இவற்றை தமிழில் அடிமை நெறி, மகன்மை நெறி, தோழமை நெறி, அன்பு நெறி என்பர். முறையே அப்பரடிகள், ஞான சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் நால்வரும் இந்நெறிகளை கடைபிடித்தனர்.

மணிவாசகர் அன்புநெறியாகிய சன்மார்க்கத்தை கடைப்பிடித்து இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய `சாயுஜ்ய'முக்தியை அடைந்தார்.மணிவாசக மூர்த்தி `சித்தத்தால் சிவமே ஆகியவர்'(திருக்கோவையார் -பேராசிரியர் உரை) ஆதலினால் ஆத்ம நாதர் வேறு மணிவாசகர் வேறு என்பதில்லை.அதனால் இக்கோயிலில் சிவபிரானுக்குரிய உற்சவ மூர்த்திகள் அமையாமல் மாணிக்கவாசக சுவாமிகள் மட்டுமே உள்ளார்.

சிவபிரானுக்குரிய உற்சவ மூர்த்திகள் இருந்தால் பலிபீடம் , கொடிமரம் ,பரிவார மூர்த்திகள், திருவிழாக்கள் முதலியன ஆகமப் பிராகாரம் அமைய வேண்டியது மிக முக்கியம்.

ஆனால் இக்கோயிலில் அடியாராகிய(பக்தர்) மாணிக்கவாசக சுவாமிகள் மட்டுமே உற்சவ மூர்த்தியாக இருப்பதால் பலிபீடம், கொடிமரம், பரிவார மூர்த்திகள் (சண்டேசர் உள்பட) ஆகியோர் இங்கு அமைக்கப்படவில்லை.

கொடிமரம் இல்லாமலேயே அடியாருக்குத் திருவிழா (பக்த உற்சவம்) நடத்தலாம் என ஆகம விதிகள் இருப்பதால் மார்கழி மாதம் திருவாதிரைத்திருநாள் 10 நாள் திருவிழாவாக இக்கோயிலில் நடத்தப்படுகிறது.

அச்சமயம் சிவபிரானுக்குரிய வாகனங்களில் மாணிக்கவாசக சுவாமிகளே எழுந்தருளுகின்றார். இவ்விதம் அடியாருக்கே எல்லாவிதச் சிறப்புக்களையும் அளிக்கும் கோயில் தமிழ்நாட்டில் வேறு இல்லை எனலாம்.

மணிவாசக சுவாமிகள் அருகே கிழக்கு நோக்கி சொக்கவிநாயகர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி விட்டு பிராகாரம் சென்றால் நம் இருபக்க தூண் களிலும் புரூரவா மன்னன், பரம ஸ்வாமி நம்பியார், பத்ரகாளி, வீரபத்திரர் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன.

பிராகாரத்தின் கடைக்கோடிக்கு சற்று முன்னதாக சிவ யோகாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. இச்சந்நிதி கருவறை, அர்த்தமண்டபம் இவற்றை மட்டும் கொண்டுள்ளது.

கருவறைக்கு எதிரே நாம் நின்று வழிபடும் இடத்தில் வாசலுக்குப் பதிலாக கல்லினால் ஆன பலகணி (ஜன்னல்)இருக்கின்றது. சற்று உயரமாக உள்ள இப்பலகணி வழியாகத்தான் நாம் அம்பிகையை தரிசனம் செய்ய முடியும்.

அர்த்த மண்டபத்தின் மேற்குப் பகுதியில் அர்ச்சகர் சென்று வர வாசல் உள்ளது.கருவறையில் அம்பிகையின் விக்ரகம் கிடையாது.இருபாதங்கள் மட்டும் இருக்கின்றன.இறைவன் எவ்வடிவில் இருக்கின்றானோ அவ்வடிவில் இறைவியும் இருப்பாள் என சித்தாந்தம் கூறும். ஆத்மநாதர் அருவமாயிருப்பதால் அம்பிகையும் அருவமாயிருக்கின்றாள்.

வேறு எக்கோயில்களிலும் அம்பிகை, திருவடி வடிவத்தில் வழிபடப்படுவதாகத் தெரியவில்லை.இறைவனது அருளே இறைவி (அருளது சத்தியாகும் அரன் தனக்கு) என்பதால் அருளாகிய அம்பிகை சந்நிதிக்கு நேராக `நின் திருவருளால் என் பிறவியை வேர் அறுப்பவனே'என்றருளிய மணிவாசக சுவாமிகள் கோயில் கொண்டிருப்பது பொருத்தமே.

இமைய மலை அரசனுக்கு மகளாக வளர்ந்த அம்பிகை, குருந்தவனம் வந்து இறைவன் தன்னை மணம் புரியும் பொருட்டு தவம் இருந்தாள். ஆத்ம நாதர் தோன்றி அவளுக்கு `சிவயோகநாயகி'எனப் பெயரிட்டு ,இமையத்திற்கு அழைத்துச்சென்று மணம் புரிந்து கொண்டார்.

உலகம் யாவும் அம்பிகையின் அருளால் தோன்றி நின்று மறைவதால் அவள் அருள் வேண்டி பிரமன், இத்தலத்தில் பத்ம ராக ரத்தினத்தால் அம்பிகையின் திருவடியை நிறுவி வழிபட்டான்.அத்திருவடியை அபிஷேகம் செய்த புனித நீரைப் பருகுபவர் வறுமை நீங்கி செல்வம் பெறுவர்;இருவினை நீங்கி முக்தி அடைவர் என ஸ்தலபுராணம் கூறுகிறது.

அம்பிகையை வழிபட்டு திரும்பினால் (ஆத்மநாதர் கருவறைக்கு நேர் பின்னால் ) குருந்த மர மேடையைக் காண் கின்றோம். இறைவன் குருந்த மரத்தடியில் அமர்ந்து மாணிக்கவாசகருக்கு உபதேசம் செய்யும் விக்கிரகம் இம்மேடையின் நடுவில் உள்ளது.

குருந்தொளிர் நாதரை வழிபட்டு பிராகாரத்தில் வலம் வருகிறோம்.திருக்கோயிலின் அக்னிமூலையில் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இவரையும் வழிபட்டு மீளவும் ஆத்மநாத சுவாமியை வழிபட்டு பஞ்சாட்சர மண்டபத்திற்கு வருகிறோம்.

கலைநயங்கள் குவிந்து கிடக்கும் அற்புதக் கலைக் களஞ்சியம் இந்த பஞ்சாட்சர மண்டபம். ஆவுடையார் கோயிலின் அரும் புகழுக்கு ஆதாரமாக இருப்பது இந்த மண்டபம்.

அரிமர்த்தன பாண்டியன் ,அமைச்சர் கோலத்தில் வாதவூரர், அடியார் கோலத்தில் மாணிக்கவாசகர், வேடன் -வேடுவச்சி, குறவன்-குறத்தி,நடனமாடும் பெண், குதிரைச்சாமி, லுண்டாக்கன், பகழ் பெற்ற கொடுங்கை ஆகியவை இம்மண்டபத்தில்தான் உள்ளன.

அமைச்சர் வாதவூரருக்கும் அடியார் மாணிக்கவாசகருக்கும் உருவத்தில் ஒற்றுமை காட்டி, உடையில் வேற்றுமை காட்டியிருக்கும் சிற்பியின் கைத்திறமையை என்னென்று புகழ்வது?.

குருந்த வனத்தில் மணிவாசகர் கோயில் கட்டியதை அவருடன் வந்தவர்கள் மதுரைக்குச் சென்று பாண்டியனிடம் தெரிவித்தனர். கோபமுற்ற பாண்டியன் `குதிரை எப்பொழுது வரும்?' என்று கேட்டு ஓலை விடுத்தான்.

ஓலையுடன் குருநாதரைச் சரணடைந்தார் மணிவாசகர். அவர் கையில் ஒரு மாணிக்க மணியைக் கொடுத்து `ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று சொல்லி வா' என்று அனுப்பி வைத்தார் குருநாதர்.மணிவாசகரும் அவ்விதமே செய்தார். மன்னன் மகிழ்ந்தான்.

எனினும் ஆவணி மூலத்திற்கு இன்னும் இரண்டு நாள் இருக்கும் போது, குதிரைகள் வரும் அடையாளம் எதுவும் தெரியாததால் சந்தேகமுற்ற மன்னன் , மணிவாசரை சிறையில் அடைத்தான்.

அடியார் துன்பம் பொறுக்காத இறைவன்,நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி,வேதமாகிய குதிரையில் தாம் அமர்ந்து ஆவணி மூலத்தன்று குதிரைப்படையோடும் மதுரைக்கு வந்தார்.

இங்ஙனம் குதிரை வீரராக வந்த இறைவனை ,ஒரு சிற்பி தன் அகக் கண்ணிலே கண்டு கல்லிலே வடித்திருக்கின்றான்.அச்சிற்பத்தை `குதிரைச் சாமி' என்கிறார்கள்.

இம்மண்டபத்தின் மேல் மூன்று பகுதிகளிலும் மழை நீர் வடிய இறக்கி விடப்பட்டது போல வளைவாகத் தாழ்வாரம் போல் இருப்பதுதான் கொடுங்கை என்பது.


முற்காலத்தில் சிற்பிகள் கோயில் கட்டுவதற்காக எழுதிக் கொடுக்கும் ஒப்பந்தத்தில் `தாரமங்கலம் தூண்கள், திருவலஞ்சுழிப் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாகச் செய்து செய்து கொடுப்போம் ' என்று எழுதிக் கொடுப்பார்களாம். அவ்வளவு கலைநுணுக்கம் உடையன இக்கொடுங்கைகள்.


கற்கள் இணைக்கப்பட்டிருப்பது அவ்வளவு எளிதில் தெரியாது.ஒவ்வொரு கல்லும் 13 1/2 அடி நீளமும் , 5 அதி அகலமும் கொண்டது. முறுக்குக் கம்பி, பட்டைக் கம்பி, திரணைக் கம்பி, உருண்டைக் கம்பி என 6 வகையான கம்பிகளைக் கல்லில் செதுக்கியிருக்கின்றனர். கொடுங்கையின் மேல்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள பலதிறப்பட்ட பூங்கொடிகள் நம் கண்களுக்கு விருந்தாகின்றன.

பஞ்சாட்சர மண்டபத்திலிருந்து வலமாக வந்தால் நம் கண்களில் தென்படுவது பெரிய குளம்.`அக்னி தீர்த்தம்' எனப் புராணமும் , `திருத்தமாம் பொய்கை' என மணிவாசகரும் குறிப்பிடுவது இதைத்தான்.

பிராகாரத்தின் வடமேற்கு மூலைக்குச் சற்று முன்னதாக `தியாகராஜ மண்டபம்' உள்ளது. மண்டபம் முழுவதும் குதிரை வீரர்கள் சிற்பம் தான். இங்குள்ள கொடுங்கையில்தான் , ஒரு ஆங்கிலேயர் நம் சிற்பத் திறமையை சோதிப்பதற்காகத் துப்பாக்கியால் சுட்ட துளைகள் உள்ளன

.ரதி மன்மத சிற்பங்களும் குறுநில மன்னர்களின் சிற்பங்களும் உள்ளன. மண்டபத்தின் மேல்விதானத்தில் கல் சங்கிலிகள் தொங்குகின்றன.

பிராகாரத்தின் வட மேற்கு மூலையில் தல விருட்சமான `குருந்த மரம்' உள்ளது.

வலம் வந்து மீளவும் பஞ்சாட்சர மண்டபத்திற்கு வருகிறோம். மண்டபத்திற்கு அருகில் உள்ள `சிவானந்த மாணிக்கவாசகர்' கோயிலில் மாணிக்கவாசக சுவாமிகளின் வரலாறு அற்புத ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
சிவபுராணக் காட்சிகளும் உள்ளன.

அந்தோ! இவ்வற்புத ஓவியங்கள் இன்று சுரண்டப்பட்டு சிதிலமடைந்து கொண்டிருக்கின்றன.இவற்றின் மீது அறிவீனர்கள் சிலர் கரித் துண்டுகளால் கிறுக்கியிருக்கின்றனர்.`குரங்கு கைப்பட்ட பூமாலையென ' இவை அழிந்து கொண்டிருக்கின்றன. பாரம்பரியம் மிக்க திருவாவடுதுறை ஆதீன நிர்வாகத்தில் இக்கோயில் இருந்தும் இந்நிலைமையா? என விசனப்பட வேண்டியுள்ளது.


சிவானந்த மாணிக்கவாசகர் கோயிலின் வாசலிலுள்ள மேல் கல்லில் 27 நட்சத்திரங்களும் குறியீடுகளாக காட்டப்பட்டுள்ளன.கோயில் முன்னுள்ள தூண்களில் நவகிரகங்கள் உள்ளன.

ஆவுடையார் கோயிலுக்கு சுந்தரலிங்க முனிவர் இயற்றிய `திருப்பெருந்துறைப் புராணம்';மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய `திருப்பெருந்துறைப் புராணம்' ;வடமொழியில் `ஆதி கைலாச மகாத்மியம்' என மூன்று தல புராணங்கள் உள்ளன.

இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் பழமையானது சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தைச் சேர்ந்ததாகும்.

இங்கு தற்போது `நம்பியார்' எனும் பிராமணர்கள் அர்ச்சகர்களாக உள்ளனர். தலபுராணம் `முந்நூறு பேர்' எனக் குறிப்பிடுவது இவர்களைத்தான் என்பர்.

கோயிலில் சிற்ப வடிவில் உள்ள `பரம ஸ்வாமி நம்பியார்' , `சிவ ஸ்வாமி நம்பியார்' இருவரும் இவர்களின் மூதாதையர்களாகக் கருதப்படுகின்றனர்.

`திருவாசகத்திற்கு உருகார் இங்கு ஒரு வாசகத்திற்கும் உருகார்'என்றபடி கருங்கல் மனமும் கரைந்துருகும் வண்ணம் திருவாசகம் பாடிய மாணிக்கவாசக சுவாமிகள் அருள் பெற்ற திருப்பெருந்துறையை நாமும் தரிசித்து வழிபட்டு பெருந்துறை நாயகன் பேரருள் பெற்று உய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate