வியாழன், 18 ஏப்ரல், 2013

கயிலாய வாகனத்தில் மருந்தீசர்

திருவான்மியூர் மருந்தீசர் கோயிலில், ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி  பெருவிழாவில், கொடியிறக்கத்திற்கு மறுநாள், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர், பவானி வீதியுலா கோலாகலமாக நடக்கும்.

இந்தாண்டும் அதேபோல் நடந்தது.  திருவான்மியூர் கயிலாய வாகனம் வித்தியாசமானது. பொதுவாக சிவாலயங்களில், ராவணன் வீணை வாசிப்பது போலவும், அவனது பின்னணியில் கயிலாயம் இருப்பது போலவும் வாகனம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.


அதன் மீது உள்ள பீடத்தில் உற்சவர் எழுந்தருள்வார். பெரும்பாலும் சோமாஸ்கந்தரோ, உமாசகிதரோ தான் உற்சவ மூர்த்தியாக வருவார்.

திருவான்மியூரில், கயிலாய மலை மட்டும்  தான் வாகனம். ராவணன் கிடையாது. மலையின் ஒவ்வொரு பகுதியிலும், கந்தர்வர்கள், ரிஷிகள், தேவர்கள் என அனைவரும் இருப்பர்.

வணங்குவது, தவத்தில் இருப்பது போன்ற வடிவங்களில் ரிஷிகள் இருப்பர். நான்கு முனைகளிலும், கந்தர்விகள், கைகளில் மலர்மாலைகளை  ஏந்தியபடி இருப்பர்.

மலை முழுவதும் கண்ணாடி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்த விளக்குகள், பொம்மைகள் போன்றவற்றை தனியாக கழற்றி விடலாம்.

மலைக்கு மேலே, சந்திரசேகரர், பவானி நின்ற கோலத்தில் காட்சி  தருகின்றனர்.

திருநெல்வேலியை ஒப்பிடும் போது இங்கு  மலர் அலங்காரம் கண்ணுக்கு நிறைவாகவே உள்ளது.

என்றாலும் போலி நகைகளை இறைவனுக்கு அணிவிக்கும் போக்கு இங்கு  மட்டுக்கு மீறி காணப்படுகிறது.

மயிலாப்பூர் மற்றும் திருவான்மியூர் கோயில்களின் பங்குனி பெருவிழாவில் நடக்கும் சில வழக்கமான நடைமுறைகளை நான் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.

திருநெல்வேலியில், எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், சப்பரத்தில் இருக்கும் அர்ச்சகர்தான் பக்தர்கள் கொண்டு வரும் தேங்காயை உடைத்து, மாலையை எடுத்து சுவாமிக்கு அணிவித்து, தீபாராதனை காண்பித்து  திருநீறும் கொடுப்பார்.

இங்கு நேர் எதிர். பக்தர்கள் தாங்களாகவே, தேங்காயை சப்பரம் முன்பாக உடைத்து, அர்ச்சகர் கையில் கொடுத்து  விடுகின்றனர். அதன் பின் தீபாராதனை காட்டப்பட்டு திருநீறு அளிக்கப்படுகிறது. இதுவே திருநெல்வேலியில் நடந்தால், பக்தர்கள் முணு முணுக்க ஆரம்பித்துவிடுவர்.

இரண்டாவது சுவாமி எந்த நேரத்தில்  வந்தாலும், பக்தர்கள் அவரை தரிசிக்க தயாராகி விடுகின்றனர். சுவாமி வீதியில் வரும் போது தான், அவரவர் தங்கள் வீட்டு வாசலை, அது நள்ளிரவாக இருந்தாலும், பெருக்கி சுத்தப்படுத்தி, நீர் தெளித்து, கோலம் போட்டு வரவேற்கின்றனர்.

திருநெல்வேலியில், இது போன்று நான் கண்டதில்லை. ஆனால், முக்கிய திருவிழாக்களில், அதிகாலையில் வழக்கம் போல் கோலம் போடுவது மட்டும் தான் நடந்ததுண்டு.

திருவான்மியூரில், வீதியுலா நடக்கும் நான்கு வீதிகளிலும், ஒவ்வொரு 30 அடிக்கும் ஒரு பந்தல் போடப்படுகிறது. அது வீதிக்கு மேலும் அழகூட்டுகிறது.

இந்த பந்தல்களில் தான் சுவாமி நிற்பார். எல்லோரும் வந்து திருக்கண் சார்த்திக் கொள்ள வேண்டியது. அதிகமாக, திருக்கண் இருந்தால், பந்தல்களுக்கு இடையிலும் சுவாமி நிற்பார்.

மிக முக்கியமான விஷயம், திருவான்மியூரில்,  சுவாமி சப்பரமும், மயிலாப்பூரில் பஞ்சமூர்த்திகளும், தோள் சுமையில் தான் வருகின்றனர்.

அதிலும் குறிப்பிடத் தக்கது, சீர்பாதம் அனைவரும் இளைஞர்கள் என்பது.
மிகப் பெரிய வாகனங்களுக்கு நடுத்தண்டும் போட்டுக் கொள்கின்றனர்.

அனைவரும், "ஸ்ரீபாதம்' என்ற பெயர் பொறித்த டிஷர்ட்டுகளை அணிந்து பணிக்கு வருகின்றனர்.

திருவான்மியூர், சென்னையின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தாலும், திருவிழாவை பொருத்தமட்டில், சற்று வித்தியாசப்பட்டு தான் காட்சியளிக்கிறது. மயிலாப்பூரில் இருந்தும் வித்தியாசப்படுகிறது.

மருந்தீசர் கோயிலில் உள்ள 100, 120 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளில்,  திருவான்மியூர் கிராமம் என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்குனி பெருவிழாவில், இதை நாம் நேரிடையாக காண  முடிகிறது. ஏழாம் திருநாளில், தேரோட்டம் நடக்கிறது. அதன் பின் ஒரு நாள் விட்டு  தான் திருவிழாவே  முழுவீச்சில் துவங்குகிறது.

குளக்கரைகளில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும்  வியாபாரிகள் கடை விரிக்கின்றனர். தேரோட்டத்திற்கு அடுத்த நான்கு நாட்கள் தான் திருவிழாவாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக, கொடியிறக்கத்திற்கு மறுநாள் கயிலாய வாகன வீதியுலா நடக்கும் அன்று, சுற்று வட்டார கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் குவிந்து விடுகின்றனர்.

கோயிலின் முன் பகுதியில் உள்ள மைதானத்தில் தங்கி கொள்கின்றனர். அன்று   இரவு சுவாமி புறப்பாட்டிற்கு 12 மணி ஆகிவிடும். அது இறங்க, அதிகாலை 4 மணி ஆகும். அதை தொடர்ந்து, தியாகராஜா வீதியுலாவும், பவனி மேடையில் நடனமும் நடக்கும்.

இதையெல்லாம் பார்த்து விட்டு அதிகாலை 6 மணிக்கு தான் கூட்டம் கலையும்.

மேலும், கிராம திருவிழாக்களை போலவே, இங்கு ராட்டினம், கைரேகை பார்த்தல், எலி, கிளி சோசியம் பார்த்தல், வட்டெறிந்து பரிசு பொருட்களை வெல்லுதல் போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

அடுத்தாண்டு இதை இன்னும் தீர விசாரித்து விட்டு எழுதலாம் என, நினைத்திருக்கிறேன்.

 மருந்தீசர் கோயில் பங்குனி பெருவிழாவில், அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கின்றனர் என்பதற்கு, இந்த சம்பவங்களே சாட்சிகளாக விளங்குகின்றன.

கடந்த மார்ச் 29ம் தேதி நடந்த கயிலாய வாகன வீதியுலா காட்சிகள்  சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஒதுவா மூர்த்திகளின்  தேவார விண்ணப்பம் 

கயிலாய வாகன பின்பக்க காட்சி 

கயிலாயத்தில் ரிஷிகளும், தேவர்களும் 

மற்றொரு பக்க காட்சி 

மற்றொரு பக்க காட்சி 

கயிலாய வாகனத்தில் சந்திரசேகரர் 

சர்வாலங்கார பூஷிதராக சந்திரசேகரரும் பவானியும் 

மக்கள் வெள்ளத்தில் சந்திரசேகரர் 



பவனி மேடை அருகில் 

நாதஸ்வர இன்னிசை 

வாசல் தெளித்து கோலமிட்டு 

வீதியில் பந்தல்கள் 


ராட்டினம் 

வட்டெறிந்து பரிசு வெல்லும் போட்டி 

எலி சோசியம் 

சோசியம் சொல்லும் எலி 



1 கருத்து:

Translate