சனி, 20 ஏப்ரல், 2013

சிற்றிலக்கியங்களில் சிவஞான முனிவர் அமைக்கும் தத்துவக் கொள்கை - ச.ரத்நவேலன் (பகுதி - 2)


தத்துவம்  சொற்பொருள் விளக்கம்

தத்துவம் என்பது வடசொல். அச்சொல்லுக்கு உண்மை என்பது பொருளாம்.1. தத்துவம் என்பதற்கு மெய்யுணர்வு என்று மொழிபெயர்த்து இப்பல்கலைக்கழகத்தார் அமைத்துக் கொண்டதும் காண்க. மெய் உண்மை. மெய்யுணர்தல் என்ற திருக்குறள் அதிகாரத் தலைப்புக்குப் பரிமேலழகர் "அஃதாவது பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களா னன்றி உண்மையான் உணர்தல்; இதனை  வடநூலார் "தத்துவ ஞானம்' என்ப' என்றுரைத்தார்.2. அதனால் மெய்யுணர்தல் என்பது உண்மையான் உணர்தல் என்றாயிற்று. ஆண்டுத்  தத்துவம்  என்பதற்கு உண்மை என்ற பொருள் வந்தமை  தெரிகிறது. தத்துவ ஞானமுடையோன் தத்துவ ஞானி. தத்துவஞானியாவான் இவன் என்பதை,"தனுகரண புவன போகந் தற்பரம் பந்தம் வீடென்
றணுவினோ டெல்லா மாகி யடைந்திடுந் தத்து வங்க
ளினிதிறிந் திவைநி விர்த்தி முதல்கலை யிடத்தே  நீக்கி
நனிபர முணர்ந்தோ னந்தத் தத்துவ ஞானி யாவன்'

எனச் சிவஞான சித்தியார் (சூ. 278) கூறுகிறது.

இச்செய்யுட்கண் வரும் தத்துவஞானி என்ற தொடர்க்கு ஆசிரியர் சிவஞானயோகிகள், "உண்மையறிவுடையவன்' என உரை செய்தார்கள். உண்மையறிவுடையவன் மேற்செய்யுளிற் கூறியவாறும் உணர்தல் வேண்டும். அஃது எவ்வாறு?

1. தனு, கரணம், புவனம், போகம் என்னும் நான்கும் அவை மூலமாயுள்ள பிறப்பு வீடுகளும் அப்பிறப்பு வீடுகளில்படும் பேதங்களும் தத்துவங்களால் ஆயின.

2. அத்தத்துவங்கள் உயிர்களோடு இயைவன; முதல்வனோடு இயைவன அல்ல.

3. இவற்றை நூல்களானும் பொருந்துமாற்றானும் அறிந்து அத்தத்துவங்களை நிவிர்த்திகலை முதலாகக் கழியுமுறையின் வைத்துக் கழித்து அவற்றிற்கு மேலாய் நிற்பது ஒன்றினை ஐயம் திரிவு இல்லாமல் உணரப் பெற்றவன் உண்மையறிவுடையவன் ஆவன்.

 -இவ்வாறு மேற்கூறிப்போந்த செய்யுள் உரைக்கின்றது.

தனு முதலியன தத்துவங்கள்; அத்தத்துவங்களோடு பொருந்தியது உயிர்; அத்தத்துவங்களுக்கு மேலாய் நிற்பது பரம். இம்மூன்றனையும் உணர்ந்தவன் தத்துவஞானி என்பது இதனால் பெறப்பட்டது.
கந்தபுராணத்தும்,

சான்றவ ராய்ந்திடத் தக்க வாம்பொருள்
மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன
ஆன்றதோர் தொல்பதி ஆரு யிர்த்தொகை
வான்திகழ் தளையென வகுப்பர் அன்னவே (கந்த. 243)

எனத் தத்துவ ஞானியர் ஆய்வுக்குரியன பதி, உயிர், தளை என இம்மூன்றும் கூறப்பட்டன.

ஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் சமயத்தால் சித்தாந்த சைவர். ஆயினும், இந்தியத் தத்துவஞான நூல்கள் எனப்படும் பிறசமய நூல்கள் அனைத்தையும் துறைபோகக் கற்றுத் தெளிந்தவர்கள். சிவஞானபோதம் அவையடக்கச் செய்யுட்குப் பேருரை வகுக்குங்கால் பிற சமயக் கொள்கைகளைக் கூறுமிடத்து அவ்வச் சமய நூல் வழி நின்று எடுத்துரைப்பதால் அவ்வுண்மையை உணரலாம். சித்தாந்த சைவம், பொருள்கள் மூன்று எனக் கொண்டு அவ்வுண்மையை நிர்ணயம் செய்து பின் அதனிலக்கணம் பேசும்.
சித்தாந்த சைவன் சரியை,  கிரியை யோக பாதங்களினின்று முற்றிப் பின் ஞான உபதேசம் பெறுவான். ஞான உபதேசம் செய்யும் ஆசாரியன் அழிவில்லாத அநாதிப் பொருள்கள் இத்தனை என்றும் அவற்றின் சம்பந்தத்தை உணரும் முறை இது எனவும் உணர்த்துவான். எக்காலத்தும் உள்ளன மூன்று. ஆயினும் அவற்றை விரித்த வழி,

"ஏகன் அநேகன் இருள் கருமம் மாயையிரண் (டு)
ஆகவிவை ஆறு ஆதியில்' 3

என்று ஆறாக எண்ணப்படும். ஒருவனாகிய பதி, பலவாகிய உயிர்கள், ஆணவ மலமாகிய இருள், கன்மமலம், சுத்தமாயை, அசுத்தமாயை ஆகிய ஆறும் எக்காலத்தும் அழியாத உள்பொருளாம். இவற்றின் ஒன்றிற்கோ, அன்றி இரண்டற்கோ அல்லது அனைத்திற்குமோ விளக்கந்தான் உலகக் கலைநூல்கள் யாவும். இவ்வுண்மையை,

"பலகலையா கமவேதம் யாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல்' 4

எனச்  சிவப்பிரகாசம்  கூறுவதனாலும் தெரியலாம். இனி இவ்வாறு பொருள்கள் பற்றியும் மாதவச் சிவஞான சுவாமிகள் தாமருளிய சிற்றிலக்கியங்களில் கூறுவன யாவை? அவை அவர் அமைக்கும் தத்துவக் கொள்கைகளாகும்; ஏனெனில் அவர் சித்தாந்த சைவராதலால். இனி அவற்றை அடைவே காண்போம்.
குறிப்புகள்

1. சிவஞான சித்தியார், திருவிளங்கம் பிள்ளை உரை, ப. 276
2. திருக்குறள், அதி, 36, நாவலர் பதிப்பு, ப. 101
3. திருவருட்பயன், 6,2
4. சிவப்பிரகாசம், 13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate