சனி, 13 அக்டோபர், 2012

அசைந்தாடி வரும் அழகிய தேர்கள்

இந்த மண்ணுக்கே உரிய தொன்மையான தொழில்நுட்பக் கொடைகளில் ஒன்று, தேர். மிக அதிக எடை கொண்ட அடிப்பாகம், அதன் மேல் ஐந்தடுக்கு அலங்காரத் தட்டுகள், யாளி, சிம்மம், துவாரபாலகர், குதிரைகள் போன்ற பொம்மைகள், இத்தனையையும் சுமக்கும் நான்கு சக்கரங்கள் என, ஒரு நகரும் உலகத்தையே கண் முன் நிறுத்தும், நுட்பமான வடிவமைப்பு.

தமிழகக் கோவில்களில் பெரியவை, நடுத்தரமானவை, சிறியவை என, தேர்களை வகைப்படுத்தலாம். சமீப காலமாக சிறிய வகைத் தேர்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன.


கோவில் தொடர்பான அசம்பாவிதங்கள் பக்தர்கள் மனதில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துபவை.

மற்ற விபத்துகளுக்கும், இதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை, காளஹஸ்தி கோபுரம் இடிந்த போது எழுந்த, மக்களின் உணர்ச்சிகள் வெளிப்படுத்தின.

தமிழக பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றான தேர் உருவாக்குவதில், ஐந்தாவது தலைமுறையாக இயங்கிக் கொண்டிருப்பவர் கஜேந்திரன் ஸ்தபதி. இந்து சமய அறநிலையத் துறையின் அங்கீகாரம் பெற்றவர். 20க்கும் மேற்பட்ட கோவில்களில், தேர் வடிவமைத்து உருவாக்கியுள்ளார்.

தேர், அதன் தத்துவம், தேர் பற்றிய முன்னோர் பார்வை, தற்காலத்திய கருத்துக்கள், வடிவமைப்பில் ஏற்படும் சிக்கல்கள், தேரை ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என, பல விஷயங்கள் குறித்து அவர் அளித்த பேட்டி இது:

தேர் வடிவமைக்கப்படுவது எப்படி?

தேர் என்பது நகரும் கோவில். மனித உடலின் வடிவமைப்பில் கோவில் அமைந்துள்ளதைப் போலவே, தேரும் வடிவமைக்கப்படும்.

மனித உடல் மத்தியில் உள்ள நாபியைப் போல, தேரின் மத்தியில் உற்சவ மூர்த்தி எழுந்தருளும் பீடம் நாபியாக அமையும்.

தேரின் மொத்த எடையில், 75 சதவீதம் கீழ்ப் பகுதியிலும், 25 சதவீதம் மேல் பகுதியிலும் இருக்கும்படி வடிவமைக்கப்படும்.

தேர்கள் அரை நிலை, முழுநிலை என, இருவகைப்படும். 50 அடி உயரம் வரை அரை நிலை. 100 அடி உயரத் தேர் முழுநிலையைச் சேர்ந்தவை.

முழுநிலைத் தேர்களில் அலங்காரத் தட்டுகள் 9 இருக்கும்.பொதுவாக, தேரின் மேல் பகுதியில் 5 அலங்காரத் தட்டுகள், ஆறாவதாக கர்ண கூடம், ஏழாவதாக கலசம், எட்டாவதாக குடை இருக்கும்படி தேர்கள் உருவாக்கப்படுகின்றன.

இன்றைய நிலையில், 45 அடி உயரம் கொண்ட தேர், ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படுகிறது.இரும்பு சக்கரம் பொருத்துவது சரிதானா?

தேர் என்பது அசைந்து வரக் கூடியது. அவ்வாறு வரும் போது, அதன் கீழ்ப் பகுதியை விட, மேல் பகுதியான அலங்காரத் தட்டில் அசைவு அதிகமாக இருக்கும்.

ஏனெனில் மேல் பகுதி, கீழ்ப் பகுதியை விட எடை குறைவாக இருக்கும்.கீழ்ப் பகுதி எடை அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தேரின் அசைவு கட்டுப்பாட்டில் இருக்கும்.முற்காலத்தில், தேர்களுக்கு மரச் சக்கரங்கள் தான் இருந்தன. தற்காலத்தில் இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. அதேநேரம், தார்ச் சாலைகளில் தேர்கள் ஓடுகின்றன.

தாருக்கும், மரச் சக்கரத்திற்கும் இடையில் இருக்கும் பிடிமானத்தை விட, தாருக்கும், இரும்புச் சக்கரத்திற்கும் இடையிலான பிடிமானம் குறைவாகத் தான் இருக்கும். அதனால் தேர் சற்றே குதிக்கும். வேகம் அதிகப்படும்.

பாதுகாக்கும் அம்சங்கள் 

 மையக் கட்டை எனப்படும் அச்சு சட்டத்தில் இருந்து, மைய பீடத்திற்கு பல இரும்பு கம்பிகள் செல்லும். இந்தக் கம்பிகள் சற்று தளர்வாகவே மையக் கட்டையில் பிணைக்கப்பட்டிருக்கும். இதனால், தேரின் அடிப்பகுதி கலகலத்துப் போகாது.

அதுபோல அலங்காரத் தட்டுப் பந்தலில், ஒவ்வொரு தூணும், தட்டும் இரும்புக் கயிறால் கட்டப்பட்டிருக்கும். இந்த இணைப்பு கர்ண கூடம் வரை இருக்கும். இதனால், தட்டுப் பந்தல் அதிக வேகத்தில் முன்னும், பின்னும் அசைவது தடுக்கப்படும்.
  
இந்த இரும்புக் கயிற்றை தேவைப்படும் போது இறுக்கவும், தளர்த்தவும், திருகாணி (அட்ஜஸ்ட் ஸ்க்ரூ) பொருத்தப்பட்டிருக்கும்.

கவனிக்க வேண்டியவை

தேரின் உயரத்திற்கு ஏற்றாற் போலத் தான், சக்கரத்தின் அடியில் வைக்கப்படும் கை அல்லது சறுக்குக் கட்டையின் உயரம் இருக்க வேண்டும்.
  • முன்பு தேர் ஓட்டுபவர்கள் மட்டுமே தேர் அருகில் நிற்பர். தற்போது அதிகளவிலான கூட்டம் தேருக்கு அருகில் நிற்கிறது. இது ஆபத்தானது.
  • தேரின் மையப் பகுதியை அச்சோடு இணைக்கும் இரும்பு கம்பிகள் தற்காலத்தில் கழட்டி விடப்படுகின்றன. பழைய தேர்களில் உட்பகுதியிலும் சக்கரங்கள் இருக்கும். இவை தேர் எந்த நிலையிலும் சரியாமல் பாதுகாக்கும். புதிய தேர்களில் அவை பொருத்தப்படுவதில்லை. இவை மிகவும் அபாயகரமானவை.
  • பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட தேர்களின் அச்சுக்கள், துண்டு துண்டாக தயாரித்து இணைக்கப்பட்டிருக்கும். அத்தகைய அச்சுக்கள் ஆபத்தானவை. அதனால், அத்தகைய தேர்கள் மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டும்.
  • தற்காலத்தில் தேருக்கு தடி, கட்டை போடுபவர்களில் சிலர் மது அருந்தி விட்டு வருகின்றனர். தேர் மீதான பக்தி, பயம் போன்றவை அவர்களிடம் இருப்பதில்லை. இது வருந்தத்தக்கது.
  • தேர்களை காலையில் ஓட்டுவதுதான் சாலச் சிறந்தது. காலை துவங்கி மாலை வரை இழுக்கலாம். சில மணி நேரங்களிலேயே நிலைக்குச் சேர்க்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
  • தேர் என்பது, அமைதியாக அசைந்து அசைந்து செல்ல வேண்டிய வாகனம். வேகமாக செல்வதற்கு ஏற்ற வகையிலும், உருவத்திலும் அது வடிவமைக்கப்படவில்லை என்பதை உறுதியாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate