புதன், 17 அக்டோபர், 2012

பிரம்மோற்சவத்திற்காக காத்திருக்கும் திரிசூல நாதர்


சென்னை வட்டாரத்தில் உள்ள மிகத் தொன்மையான கோயில்களில், திரிசூலத்தில் உள்ள, திரிசூல நாதர் கோயிலும் ஒன்று.

ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இக்கோவிலில் அத்தொன்மையைக் காட்டும் வகையில், இன்று இருப்பது மூலவர் கருவறை மட்டுமே. பிராகாரம், அம்பிகை சன்னிதி போன்றவை பிற்காலத்தியவை என தெரிகிறது.


ஒரு சில விழாக்களே...

மூலவர் கருவறை சுவர் மாடங்களில் நாக யக்ஞோபவீத கணபதி, வீராசன தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் உள்ளன.

இவற்றில் தட்சிணாமூர்த்தி தவிர, பிற  தெய்வங்கள் மிகப் பழமையானவை. கி.பி.,12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளைச் சேர்ந்த இக்கோயில் கல்வெட்டுகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் உள்ளன.

ரிஷபாந்திகர் (நந்தியணுக்கர்)

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து, 64 திருவுருவங்கள் தோன்றியதாக ஆகமங்கள் கூறுகின்றன.

அவற்றில் ஒன்று தான், ரிஷபாந்திக மூர்த்தி. காளையின் மீது ஒய்யாரமாக சாய்ந்திருக்கும் சிவபெருமானைத் தான் ஆகமங்கள் ரிஷபாந்திகர் என்கின்றன.

இப்படி ஒரு அற்புதமான ரிஷபாந்திக சிற்பம், திரிசூல நாதர் கருவறை வெளிப்புறச் சுவரில் உள்ளது. மிக உல்லாசமாக அவர் காளை மீது சாயந்திருக்க அருகில் உமையம்மை நிற்கிறார். இந்த சிற்பம், சோழர் காலத்தில் மிக அதிகளவில் கோயில்களில் செதுக்கப்பட்டன.

திரிசூல நாதர் கோயிலில் உள்ள இச்சிற்பத்தின் மொத்த உயரமே பத்தில் இருந்து பதினைந்து செ.மீ. தான் இருக்கும்.

இந்த சிறிய இடத்திலும் கூட சிற்பி தன் கைத் திறனை காட்டியிருப்பதை கண்டு நாம் வியக்காமல் இருக்க முடியாது.

தற்போது பக்தர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வரும் இக்கோயிலில், திருக்கார்த்திகை, திருவாதிரை, பங்குனி உத்திரத் திருக்கல்யாணம் போன்ற ஒரு  சில விழாக்களே நடந்து வருகின்றன.

எதிர்பார்ப்பு

ஒரு  கோயிலுக்கு மிகச் சிறப்பானது பிரம்மோற்சவம் எனப்படும் ஆண்டுதோறும் நடக்கும் பெருவிழா தான்.

இக்கோயிலில் பெருவிழா நடந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் விழாவுக்கான வாகனங்களும் பராமரிப்பின்றி முற்றிலும் சிதைந்துவிட்டன.
திருவிழாக்கள், சமூக பொருளாதார ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

 இந்து சமய அறநிலையத் துறையும் பக்தர்களும் இணைந்து இக்கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது.

திரிசூல நாதரும், திரிபுர சுந்தரியும் அந்த நல்ல நாளுக்காக காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate