திங்கள், 17 டிசம்பர், 2012

பசி தீர்த்து பகுத்தறிவு ஊட்டும் வித்தியாசமான சத்திரம்


மயிலாப்பூரின் மறக்க முடியாத அடையாளங்களில் ஒன்று, குளக்கரையின் தெற்கு வீதியில் அமைந்துள்ள வியாசர்பாடி விநாயக முதலியார் சித்திரச் சத்திரம். 150 ஆண்டுகளுக்கு மேலாக இச்சத்திரம் இன்றும், அனைவரையும் சுண்டி இழுக்கும் கண்கவர் அலங்காரம் மற்றும் ஓவியங்களுடன் திகழ்கிறது.

தமிழகத்தின் பல இடங்களில் அன்ன சத்திரங்கள் இருந்தன. அவற்றில் சில மட்டுமே இன்றும் தங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இயங்குகின்றன. அவற்றில் ஒன்று இந்த சித்திரச் சத்திரம்.

கடந்த 19ம் நுõற்றாண்டில் வியாசர்பாடியில் வசித்த விநாயக முதலியார், ஆங்கிலேயேரான கான்ஸ் துரை என்பவரிடமும், ஆற்காடு நவாபிடமும் கட்டடக் கலை வல்லுனராக (சிவில் இன்ஜினியர்) பணியாற்றி வந்தார்.

 வியாசர்பாடி விநாயக முதலியார்

இவர் தன் வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி தெற்குக் குளக்கரையில் 1852ல் இந்த சித்திரச் சத்திரத்தைக் கட்டினார். சத்திரத்தின் நோக்கம் வழக்கமாக அன்னதானம் தான். ஆனால் பசி தீர்த்த பின் அறிவு பசியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் விநாயக முதலியாருக்கு இருந்தது.

அதற்காக அன்னச் சத்திரச் சுவரிலேயே சித்திரங்கள் வரைந்து வைக்கும் திட்டத்தையும் செயல்படுத்தினார்.

அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதத்தில் அறுபத்து  மூவரும்  எழுந்தருளும் காட்சி 

அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதம் 
 கண்ணனின் பால பருவ லீலை

உமையம்மை மயில் வடிவில் கபாலீஸ்வரரை பூசித்தது, ஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையாக்கிய அற்புதம், கண்ணனின் பால பருவ லீலையான வெண்ணெய் திருடியது, ஆழ்வார்கள், அரிச்சந்திரன் வரலாறு, நரகத்தில் கிடைக்கும் விதவிதமான தண்டனைகள், புண்ணியம் செய்தவர்கள் கயிலாசம், வைகுந்தம் செல்லுதல் ஆகியவற்றை விளக்கும் காட்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.


நரகத்தில் எமன் விசாரணையும் தண்டனை விதங்களும் 

நேர்மையாகவும், பிறருக்கு தீங்கு செய்யாமலும் வாழ வேண்டும் என்பதை இவை வலியுறுத்துகின்றன. விநாயக முதலியார், பங்குனி பெருவிழா 10 நாட்களிலும் சத்திரத்தை முழுமையாகத் தயார் செய்து, குழந்தைகள், பெரியவர்கள் அனைவரையும் அனுமதித்து சுற்றிப் பார்க்கவும் ஏற்பாடு செய்தார்.

இந்தச் சத்திரத்தின் செலவுகளுக்காக தன் சொத்துக்கள் சிலவற்றையும் எழுதி வைத்துள்ளார். இந்தச் சத்திரம் பற்றி, முதலியாரின் வேண்டுகோளின் படி, காஞ்சிபுரம் சபாபதி முதலியார் "தர்ம சத்திர மாலை' என்றொரு நுõல் எழுதியுள்ளார்.

மயிலாப்பூரின் பிற்கால வரலாற்றை தெளிவாக உணர்த்தும் நுõல்களில் இதுவும் குறிப்பிடத் தக்கது. அந்த புத்தகத்தில் விநாயக முதலியாரை குறிப்பிடும் போது, "அன்னிய சொத்தில் அணுவளவும் இச்சியாத் தன்மன்' என, சபாபதி முதலியார் புகழ்ந்து எழுதியுள்ளார்.

விநாயக முதலியாரின் வேண்டுகோளின்படி, மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, வியாசைக் கோவை என்ற தலைப்பில் நுõல் எழுதத் துவங்கி, அதில் 100 செய்யுள்கள் வரை பாடினார்.

தொடர்ந்து அவரது மாணாக்கர் தியாகராச செட்டியார், மீதி பாடல்களை பாடி, மொத்தம் 449 செய்யுட்களுடன் அக்கோவை நுõலை முடித்துள்ளார்.

காலனை காலால் உதைத்த காட்சி 


கீதை உபதேசம் 

சத்திரத்தின் வாசலில், வீரர்கள், வேலையாட்கள், அடியார்களின் கட் அவுட்களும், உள்பக்கத்தில் மார்க்கண்டேயருக்காக சிவன் எமதருமனை உதைத்தது மற்றும் சரஸ்வதி கட் அவுட்களும் உள்ளன.
அடியார்கள் புடை சூழ இறைவன்
பழனி மலை மீது முருகன்
அர்ஜுனனுக்கு கண்ணன் கீதை உபதேசம் செய்தது, வைகுந்தத்தில் பெருமாள், தன் நாச்சியார்களுடன் அமர்ந்திருப்பது, பழனி மலை மீது முருகன் நிற்பது, மயிலைத் தெப்பக்குளம் ஆகிய பொம்மைகளும் உள்ளன. இந்த பொம்மைகளாலும் கட் அவுட்களாலும் தான் இந்த சத்திரம் பொம்மை சத்திரம் என பெயர் பெற்றுள்ளது.

இவை அனைத்தும் விநாயக முதலியார் காலத்தவை என கூறும் அவரது பரம்பரையினர், அவற்றை சேதம் அடையாமல், ஆண்டுதோறும் புதுப்பிப்பது மட்டும் தங்கள் வேலை எனவும் தெரிவித்தனர்.

இன்றும் இச்சத்திரத்தில் மாதம் இருமுறை துவாதசி தினத்தன்று 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சத்திர நிர்வாகத்தை முதலியாரின் குடும்பத்தினர் அடங்கிய அறக்கட்டளை ஒன்று நிர்வகித்து வருகிறது.

(தினமலர் நாளிதழில் வெளியான நாள்: 2412)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate