ஞாயிறு, 1 ஜூலை, 2012

மலைக்க வைக்கும் மயிலை அதிகார நந்தி

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், ஒரு ஊரில் ஒரு கோவில் இருந்தால், அதன் அன்றாட மற்றும் ஆண்டுதோறும் நடக்கும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகளில் அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் வகையிலான மரபை ஏற்படுத்தியுள்ளனர். 



பேரரசர்கள் இருந்த காலத்தில், கோவில்களின் பெரும் செலவுகளை அவர்களே ஏற்றுக் கொண்டனர். அதற்கு அடுத்த காலங்களில் சிற்றரசர்கள், ஜமீன்தார்கள், நிலச்சுவான்தார்கள் மற்றும் செல்வந்தர்கள் கோவில்களின் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டனர்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. தனிநபர்களாகவும், குடும்பங்களாகவும் கோவில் நிர்வாகத்தில் பங்களிப்பைச் செலுத்தத் துவங்கினர்.

கடந்த 200 ஆண்டுகளில், இதுபோன்ற நடவடிக்கைகளை வரலாற்றில் தெளிவாகக் காண முடியும். மயிலாப்பூரிலும் தனிநபர்கள், குடும்பங்கள் கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்வுகளில் பங்கு கொண்டதை தெரிந்து கொள்ள முடிகிறது.

அதற்கு ஆதாரமாகக் காட்சியளிக்கிறது அதிகார நந்தி வாகனம். இது, கடந்த 1917ம் ஆண்டுக்கு முன், மர வாகனமாகவே இருந்தது.   



மயிலை கோவில் அருகில் உள்ள பொன்னம்பல வாத்தியார் தெருவில் அப்போது குடியிருந்த வீரசைவ மரபைச் சேர்ந்தவரும், தண்டரை வைத்தியர் குடும்ப உறுப்பினருமான த.செ.குமாரசுவாமி பக்தர் என்பவர், இந்த மர வாகனத்திற்கு வெள்ளிக் கவசம் போர்த்தும் பணியை நிறைவேற்றினார்.

தண்டரை வைத்தியக் குடும்பம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேருக்கு மேற்கில், 7 கி.மீ., தொலைவில் வந்தவாசி சாலையில் அமைந்துள்ளது தண்டரை கிராமம். 400 ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவின் ஒரு பகுதியில், பல்வேறு கெடுபிடி காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தமிழகத்திற்கு இடம் பெயர்ந்தன.

அவ்வாறு, ஆந்திராவின் ஸ்ரீசைலத்தில் இருந்து தமிழகத்தின் தண்டரைக்கு இடம் பெயர்ந்தனர், குமாரசுவாமி பக்தரின் முன்னோர். இவர்கள் 84 வாத ரோகங்கள் மற்றும் தோல்நோய்க்கு சித்த மருத்துவத்தோடு தொடர்புடைய எண்ணெய் மருத்துவ முறையை மேற்கொண்டு வந்தனர். அதனால் இவர்களின் குடும்பத்திற்கு தண்டரை வைத்தியக் குடும்பம் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது.

காலப் போக்கில், இதில் ஒரு குடும்பம் சென்னைக்கு இடம் பெயர்ந்தது. அதில் வைத்தியத்தோடு, இசையிலும் வல்லவராகத் திகழ்ந்தவர் தான் குமாரசுவாமி பக்தர்.

48 ஆயிரம் பாய் செலவில்...

வைத்தியத் தொழிலில் வந்த வருமானத்தில் நான்கில் ஒரு பங்கை ஒதுக்கி சேமித்து, 1917ல், 48 ஆயிரம் பாய் செலவில் அதிகார நந்திக்கு வெள்ளிக் கவசம் செய்வித்தார் குமாரசுவாமி பக்தர்.

இவரது வாரிசுகள் இன்றும் சென்னையில் உள்ளனர். ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழாவிற்கு மயிலைக்கு வந்து, அதிகார நந்தி வாகனத்தை சுத்தம் செய்து, அதற்குரிய வழிபாடுகளையும் செய்கின்றனர்.

பங்குனிப் பெருவிழாவில் மூன்றாவது நாள் அதிகாலையில் 6 மணிக்கு அதிகார நந்தியில் கபாலீசுவரர் எழுந்தருளும்போது, முதல் மரியாதை குமாரசுவாமி பக்தரின் குடும்பத்தினருக்கே அளிக்கப்படுகிறது.



மயிலை தெப்பக் குளத்தில் படிக்கட்டுத் திருப்பணியிலும் குமாரசுவாமி பக்தர் ஈடுபட்டுள்ளதற்கான சான்று அங்கு கல்வெட்டாக உள்ளது. புதுச்சேரி கந்தசுவாமி கோவில் மூலவருக்கு வெள்ளிக் கவசம், காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவில் ஏலவார் குழலி அம்மைக்கு வைரத் தோடு ஆகியவற்றையும் இவர் செய்து கொடுத்துள்ளார்.

கண் கவரும் அதிகார நந்தி

சென்னையில் பிற சிவாலயங்களில் உள்ள அதிகார நந்தி வாகனங்களை விட, மயிலையில் உள்ளது கண்ணைக் கவரும் வகையில் கலை நயம் மிக்கதாக விளங்குகிறது. அதன் ஒவ்வொரு பகுதியும், நுண்ணிய வேலைப்பாட்டுடன் மிளிர்கிறது.

இந்த வேலைப்பாடுகளை குமாரசுவாமி பக்தர் தானே வரைந்து, ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தானே சுட்டிக்காட்டி செய்யச் சொன்னதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.



மயிலையில் பிரபலமாக விளங்கிய மார்கழி மாத பஜனையைத் துவக்கி வைத்தவர் குமாரசுவாமி பக்தர் தான். அதில் கலந்து கொண்டு அதற்கு மேலும் பெருமை சேர்த்தவர் பாபநாசம் சிவன்.

1 கருத்து:

Translate