செவ்வாய், 3 ஜூலை, 2012

மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேரில் இதயம் கவரும் சிற்பங்கள்


 கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவில் தேரோட்டம் இன்று (03-04-2012) நடக்கிறது. மயிலைத் தேர் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

தமிழகத்தில் செழித்து வளர்ந்த கற்சிற்பக் கலை, உலோக விக்கிரக வார்ப்பு போலவே தேர் உருவாக்கலும் ஒரு தனிக் கலையாகவே வளர்ந்தது.

  அதிகளவு எடை கொண்ட வாகனமான தேர், இரு அச்சுகளை மையமாகக் கொண்ட நான்கு சக்கரங்களில் ஊர்ந்து வருவதற்கான தொழில்நுட்பம், சிற்பிகள் குடும்பங்களில் பாரம்பரியமாக பயிற்றுவிக்கப்பட்டன.இன்றைய நிலையில் மரத்தில் சிற்ப வேலைப்பாடுகளை காண வேண்டுமானால், தேர்கள் தான் உதவுகின்றன. மிகச்சிறிய இடத்தில் கூட கண்ணையும், கருத்தையும் கவரும் வகையில், சிற்பங்களை உருவாக்கியுள்ளனர், பெயர் தெரிய வராத சிற்பிகள்.

உலர்ந்து போன மரங்கள் கூட நம் உள்ளத்தை உருக்கும் வண்ணம், ஈடு இணையில்லாத சிற்பச் செல்வங்களை அவர்கள் அளித்துச் சென்றுள்ளனர்.

கோவிலும் தேரும் ஒன்று

 தேர்களை, "நகரும் கோவில்' என்று சொல்லலாம். ஏனெனில், கோவிலின் அமைப்பைப் போலவே தேருக்கும், உபபீடம், அதிஷ்டானம், பாதம், விமானம் போன்ற உறுப்புகள் உண்டு.

 தேர் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என மானசாரம் என்ற நூலும், வைணவ ஆகமத்தின் பகுதிகளான விஷ்ணு தத்வ சம்ஹிதா, பரம சம்ஹிதா, அனிருத்த சம்ஹிதா ஆகியவையும் விரிவாக எடுத்துரைக்கின்றன.

 கோவிலின் கருவறை, விமானம் இவற் றின் அளவு, வடிவத்திற்கேற்பவே தேரும் உருவாக்கப்படுகிறது. சதுரம், அறுகோணம், எண்கோணம், பதின் கோணம், பன்னிரு கோணம், வட்டம், நீள்வட்டம், நீள்சதுரம், முட்டை வடிவம் என, ஒன்பது வடிவங்களில் தேர் உருவாக்கப்படுகிறது.

 தேக்கு, கோங்கு, மருது, வேங்கை ஆகிய மரங்கள் தேர் செய்வதற்குப் பயன்படுகின்றன.

தேர் தத்துவம்

வானத்தில் சுற்றி வரும் வலிமையுடைய தங்கம், வெள்ளி, இரும்புக் கோட்டைகளை மூன்று அசுரர்கள் ஆட்சி செய்தனர்அவர்களின் அட்டூழியம் பெருகவே, இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வந்த போது, சிவபெருமான், அவற்றை நோக்கிப் புன்னகைத்தார். அந்தப் புன்னகையில் புறப்பட்ட நெருப்பு, முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியது. இது புராணக் கதை.

உயிரைப் பிடித்துள்ள ஆணவம், கர்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் இறைவன் நீக்கி, அந்த உயிரை தன் திருவடியில் சேர்த்து, அதற்கு பிறப்பு, இறப்புச் சுழலில் இருந்து விடுதலை அளிக்கிறார்இது சைவ சித்தாந்த நோக்கில் திருமந்திரம் கூறும் விளக்கம்.

மயிலை தேரில், கபாலீஸ்வரர் வில், அம்போடு காட்சியளிப்பதும் இதை நினைவுப்படுத்தத்தான்.

கபாலீஸ்வரர் தேரின் சிறப்பு

கபாலீஸ்வரர் கோவில் தேர், ஆகம விதிகளின் படி அமைந்துள்ளது. தேரின் அடிப்பகுதி இரு பிரிவுகளாக உள்ளது. கீழ்ப்பகுதி சதுரமாகவும், மேல் பகுதி எண்கோணமாகவும் உள்ளது. அதன் மேல் தான், கபாலீஸ்வரர் எழுந்தருளும் பீடம் உள்ளது.தேரின் முன்பக்கத்தில், இறைவனின் ஊர்த்துவ தாண்டவம், அருகில் இறைவி நிற்பது ஆகிய சிற்பங்கள் உள்ளன.

தாண்டவத்தின் போது, தெய்வங்கள் பலர் பலவிதமான இசைக்கருவிகளை வாசித்தனர் என புராணம் கூறுவதற்கேற்ப, தேரின் பிற பக்கங்களில், வீணை வாசிக்கும் நாரதர், தும்புரு, சரஸ்வதி, குடமுழா வாசிக்கும் பாணாசுரன், முழவம் வாசிக்கும் நந்திதேவர், உடுக்கை அடிக்கும் விஷ்ணு ஆகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.


பூம்பாவையும் சம்பந்தரும்

தேரின் மேற்குப் பக்கத்தில், மயில் வடிவில் அம்மை, இறைவனை வழிபடும் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது

தேரின் நான்கு மூலைகளிலும், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிற்பங்களும் உள்ளன.மேலும், தேரின் பின் பகுதியில், சம்பந்தர் பாட, பூம்பாவை மீண்டும் உயிருடன் வந்து, சம்பந்தரை கைகூப்பி வணங்கும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

தேரின் எண்கோணப் பகுதியில், எட்டு மூலைகளிலும், எட்டு திசைக்கான தெய்வங்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.

ஒப்பீட்டளவில் இந்த தேரில் குறைந்தளவு சிற்பங்களே இருந்தாலும், அவை ஒரு கோர்வையான முறையில் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுத்தமாகுமா தேர்?

ஆண்டுதோறும் தேரோட்டத்தின் போது, பராமரிப்பு என்ற பெயரில் தேரின் மீது குறிப்பிட்ட எண்ணெய் கலவை தொடர்ந்து பூசப்பட்டு வருவதால், சிற்பங்கள், அடையாளம் தெரியாத அளவிற்கு எண்ணெய் மக்குப் படிந்து காட்சியளிக்கின்றன.

மதுரை மீனாட்சியம்மன் கோவில் தேர் சுத்தம் செய்யப்பட்டது போல, மயிலை தேரும் சுத்தம் செய்யப்படுமானால், இச்சிற்பங்கள் பக்தர்கள் மனதில் தங்கும் என்பதில் ஐயமில்லை.

1 கருத்து:

Translate