ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -3

உழவாரப் பணி என்றால் என்ன? 

கி.பி.,6ம் நூற்றாண்டில், தமிழகத்தை, மகேந்திர வர்ம பல்லவ மன்னனும், நின்ற சீர் நெடுமாற பாண்டியனும் ஆண்ட காலத்தில் தோன்றியவர் தான் அப்பர் அடிகள் என்ற திருநாவுக்கரசு நாயனார். இவர் சமண சமயத்தில் நீண்ட காலம் இருந்து பின் திருவருளால் சைவ சமயத்திற்கு வந்தார்.


அக்காலகட்டத்தில், சமணர்களின் ஆதிக்கம் ஆட்சியில் இருந்ததால் பல கோயில்கள் பாழ்பட்டுக் கிடந்தன. அதனால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக, அப்பர் அடிகள், தம் திருக்கரங்களால் கோயில்களில் முளைத்திருந்த புல் பூண்டுகளைக் களைந்து திருப்பணி செய்தார்.


புல் பூண்டுகளைக் களைவதற்காக அவர் திருக்கரங்களில் தாங்கிய கருவிதான் "உழவாரம்'. அக்கருவியால் செய்யப்பட்ட பணி, உழவாரப் பணி. இதுதான் நமது கோயில்களின் இன்றைய சீர்திருத்தத்திற்குத் தேவையான ஆயுதம்.

சைவ மரபில் சரியையின் நோக்கம் 


இந்திய ஞான மரபில், தனி மனிதனுக்குத் தான் முக்கியத்துவம் உண்டு. தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம் என்பதால், ஒருவன் ஒழுங்கான வாழ்க்கை வாழ்வதைப் பார்க்கும் அடுத்தவனும் ஓரளவேனும் தன் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வான் என்ற அடிப்படையில் அமைந்தவை தான் சமயம் சார்ந்த சடங்குகள்.


அவ்வகையில், சைவ சமயத்தில், தனிமனிதன், இறைவனை அடைவதற்கு நான்கு படி நிலைகள் கூறப்படுகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற இந்த நான்கு படிநிலைகளும், அரும்பு, மலர், காய், கனி என்ற நான்கு நிலைகளுக்கு ஒப்பிடப்படுகின்றன.


ஆன்மீக வாழ்வை அஸ்திவாரமாகக் கொண்டுதான் நம் உலகியல் வாழ்வு அமைகிறது. ஆன்மீக வாழ்விற்குப் பொறுமையும், பணிவும், பிறரை வெறுக்காமல் அன்பு செலுத்துதலும் தான் மிகவும் அவசியம்.


ஆன்மீகத்தின் அடிப்படைப் பாடமான பொறுமை, பணிவு, அன்பு இந்த மூன்றை நமக்கு அளிப்பதுதான் சரியை. "சர்' என்ற சம்ஸ்கிருத வேர்ச் சொல்லுக்கு "செய்தல்' என்று பொருள். "சரியா' என்பதற்கு செயல் என்று அர்த்தம். அதுதான் தமிழில் சரியை என்றானது.


ஆக, ஒரு செயல் செய்வதன் மூலம் நமக்குப் பொறுமை, பணிவு, அன்பு மூன்றும் வந்தால் அது சரியை. இதை நாம் வீட்டில் செய்வதை விட கோயிலில் செய்வது மிக எளிது.


தோத்திர சாத்திரமான திருமந்திரத்தில், ஐந்தாம் தந்திரத்தில் தாசமார்க்கம் என்ற தலைப்பில் ஐந்து பாடல்களில் சரியை பற்றி திருமூலர் விளக்குகின்றார். அவற்றில் ஒரு பாடலில்,

எளியநல் தீபம்இடல் மலர் கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி நிற்றல் பன்மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வதுதான் தாசமார்க்கமே  

என்று, சரியையின் பணிகளை வகைப்படுத்துகிறார்.


பொதுவாக, கோயில்களில், தரையைப் பெருக்குதல், ஒட்டடை அடித்தல், மாசு நீக்குதல், வெள்ளை அடித்தல், நீரால் கழுவி விடுதல், விமானங்கள் கோபுரங்களில் முளைத்துள்ள செடி கொடிகளை களைதல் போன்ற அனைத்து செயல்களையும் தான் நாம் உழவாரப் பணி என்று குறிப்பிடுகிறோம்.


இந்த உழவாரப் பணி தான், சைவ சாத்திர மரபில் சரியை எனப்படுகிறது. 


இப்பாடலில் மேற்குறிப்பிட்ட பணிகளோடு, விளக்கு ஏற்றல், மலர் கொய்து இறைவனுக்கு மாலை அளித்தல், இறைவனை வாயாரப் பாடுதல், இறைவனின் வாகனம் சுமத்தல், திருமஞ்சனம் செய்வித்தல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.


உழவாரப் பணியில் ஒவ்வொரு முறையும் புதிய நபர்கள் வருவர். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களோடு பணியாற்ற நேரும். தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து செயலாற்ற வேண்டி வரும். பிறர் மனம் நோகாதவாறு இறைபணிகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் இருக்கும்.


இவற்றால் எல்லாம், தனி மனிதனின் மனதில், பொறுமையும், பணிவும், பிறர்பால் அன்பும் உருவாகத் தானே செய்யும்! உழவாரப் பணியின் போது இவற்றிற்கு மாறான குணங்கள் ஒருவனிடம் உருவானால் அது அவனின் குற்றமே அன்றி அப்பணியின் குற்றமாகாது.


இப்பணிகளை ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் முயற்சி குன்றாமல், சோர்ந்து விடாமல் செய்தால் அவன் மன மாசுகள் அகலும். உழவாரப் பணி என்னும் சரியை என்பது வாழ்நாள் பயிற்சி என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.


"நான் பல ஆண்டுகளாக உழவாரப் பணி மேற்கொண்டேனே! என் வாழ்வில் மாற்றம் எதுவும் இல்லையே' என்று பலர் கூறக் கூடும். மனதில் மாற்றம் ஏற்படுத்துவதுதான் உழவாரப் பணியின் உண்மையான நோக்கம்.


மனதில் மாற்றம் வந்தால் வாழ்வில் மாற்றம் நேரும். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தங்கள் மோசமான குணங்களை மாற்றிக் கொள்ளாதோர் அல்லது நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ளாதோருக்கு உழவாரப் பணி மட்டுமல்ல, வேறு எந்தப் பணியும் உதவாது.

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லாம்மனம் பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற்று அண்ணலை
நேசித்து இருந்த நினைவு அறியாரே 

என்று திருமூலர் இதைத் தான் குறிப்பிடுகிறார்.


"பாசி படிந்த குளத்தில், ஒரு கல்லை விட்டெறிந்தால், அக்கல் நீரில் விழும் போது மட்டும் பாசி விலகும். பின் மீண்டும் மூடிக் கொள்ளும். அதுபோல, ஒருவன், தன் மனத்தை மாற்ற வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், எவ்வளவுதான் இறைவன் புகழ் கூறும் நூல்களை வாசித்தாலும், பூசித்தாலும், மலர் பறித்துக் கொடுத்தல் போன்ற தொண்டுகளைச் செய்தாலும், அப்போதைக்கு வேண்டுமானால் இறைவனிடம் மனம் குவியும். பின் மீண்டும் உலக ஆசைகளிடம் திரும்பி விடும்' என்பதுதான் இப்பாட்டின் பொருள்.

ஆக, உழவாரப் பணியின் உண்மையான நோக்கம் மனமாற்றமே. 

இன்றைய நிலையில் உழவாரப் பணிக் களம் 

மேற்குறிப்பிட்ட பணிகளோடு, கோயில்கள் பற்றிய உண்மைத் தத்துவங்களை மக்களிடம் பரப்புதல், புனித நூல்களைப் படித்துப் பிறருக்குச் சொல்லல், சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் கோயில்களை நிர்வாகம் செய்தல், சமய வகுப்புகள் நடத்தல், தனி மனிதனின் பிரச்னைக்கு சரியான தீர்வை நாடும் வகையில் ஆலோசனை கூறல் போன்றவையும் இவை போன்ற பிற பணிகளும் உழவாரப் பணிகளாகக் கொள்ளத் தக்கவையே.


இதனால் உழவாரப் பணியின் களப் பரப்பு மேலும் விரிவடையும். கோயில்கள் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் நாம் உருவாக்க முடியும்.


நமது பண்பாடு இயற்கையைப் போற்றும் பண்பாடு. கோயில்கள் நம் பண்பாட்டின் மையங்கள். பண்பாட்டைக் காக்க வேண்டுமானால் கோயில்களைக் காக்க வேண்டும். இரண்டும் நமது இருவிழிகள் போன்றவை என்பதை நாம் உணர வேண்டும். 

2 கருத்துகள்:

  1. வணக்கம். தங்கள் பதிவுகளை படித்து இன்புற்றேன். தங்கள் சேவை தொடர எல்லா அருளும் தந்தருள என் சிவத்தை வேண்டிப் பணிகிறேன். நன்றி.

    'அன்பே சிவம்' அஷ்வின்ஜி,
    ப்ரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

    நேரம் கிடைக்கும் போது என் வலைப்பூக்களை நோட்டமிட அழைக்கிறேன்:
    வேதாந்த வைபவம்: www.vedantavaibhavam.blogspot.com

    வாழி நலம் சூழ: www.frutarians.blosgpot.com

    பதிலளிநீக்கு
  2. thanks to sokkalinga anna i am ulavarapani nellaiappar thirukovil bakthar peravai. all of them know or see to your web page . i am get lot of pani information.special thanks and [nellaiappar ,kandhimathy]
    ammaiappan arul.

    பதிலளிநீக்கு

Translate