ஞாயிறு, 26 ஜூன், 2011

உழவாரப் பணி - கேள்வியும் பதிலும் -2

இன்றைக்கும் கோயில்கள் தேவையா? 


ஆம். இன்றைக்குத் தான் கோயில்கள் அவசியம் தேவை. இன்று உலக நாடுகள் அனைத்திலும் பயங்கரவாதம் ஏதாவது ஒரு வடிவில் புகுந்திருக்கிறது. மனிதர்களுக்குள் பரஸ்பரம் அன்பு குறைந்து, பணத்தின் மீதான வெறி அதிகரித்துள்ளது.


மனிதன் தன் சுயநலத்திற்காக, இயற்கையைப் பலி கொடுத்து வருவதால், "உலக வெப்பமயமாதல்' உள்ளிட்ட பயங்கரப் பிரச்னைகள் உருவாகியுள்ளன.


இந்நிலையில் தான், மனிதனின் பிரச்னைகளுக்கு வன்முறை தீர்வாகாது; அன்பு ஒன்றுதான் தீர்வு என்பதை வலியுறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அன்பு வடிவமாகவே வாழ்ந்த 63 நாயன்மார்களையும், 12 ஆழ்வார்களையும் நம் வழிகாட்டிகளாகக் கொள்ள வேண்டும். அன்பைப் பெருக்குவதற்கு கோயில்கள் தான் மிகச் சிறந்த கருவிகள். 

கோயில்கள் மூலம் அன்பு பெருகுமா? 


ஏன் பெருகாது? வீட்டை விட்டு எங்கோ தொலைவில் பணியாற்றும் தந்தை ஒருவர், தன் குழந்தையின் புகைப்படத்தைப் பார்த்துப் பார்த்து அதன் மீதான அன்பை வளர்த்துக் கொள்வது சாத்தியம் என்றால், தினமும் கோயிலுக்குச் செல்வதன் மூலம் அன்பைப் பெருக்குவதும் சாத்தியமே.


ஆம். சாதி, இனம், மொழி, குலம், கோத்திரம், ஏழை, பணக்காரன், உள்ளவன், இல்லாதவன் என எவ்வித வேறுபாடும் இல்லாமல் அனைவரும் ஒன்று திரண்டு, கருவறை முன்பு நின்று மனமுருக இறைவனை வழிபடும் போது அன்புப் பெருகத் தான் செய்யும்.


எவ்விதப் பாகுபாடும் இன்றி, மக்கள் அனைவரும் திரண்டு, தேர் இழுக்கும் போது அன்பு பெருகத்தான் செய்யும்.


தீபாராதனை சமயத்தில் நாம் கும்பிட்டது போல, அடுத்தவரும் கும்பிடட்டும் என்று வழிவிடுகிறோமே, அது அன்பினால் அல்லவா! 


நாம் உண்டது போல பிறரும் உண்ண வேண்டும் என்று கோயிலில் அன்னதானம் வழங்குகிறீர்களே, அது அன்பினால் அல்லவா!


"கூட்டமாக நின்றால் அன்பு வந்து விடும் என்கிறீர்களா?' அல்ல;


கூட்டம் கூடினால் அன்பு பெருகும் என்றால், தியேட்டர்கள், மதுபான விடுதிகள், நவீன யுகத்தின் "பப்'கள், "நியூ இயர் பார்ட்டிகள்' போன்றவற்றில் எல்லாம் பரஸ்பரம் அன்பா விளைகின்றது? அடிதடிகளும், வெட்டுக் குத்துகளும் அல்லவா நடக்கின்றன!


இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? கோயிலின் வடிவமைப்பு அப்படி. அனைவரின் நோக்கத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கும் வேலையை கோயில் எளிதில் செய்து விடும். அனைவரும் சிறிது நேரம் தம்மை மறந்து, இன்பத்தில் லயிக்கும் பணி கோயிலில் தான் நடக்கும்.


ஆன்மாவை லயிக்க வைப்பதால் தான் "ஆலயம்' என்ற பெயர் கோயிலுக்கு வந்தது. கோயிலின் முக்கிய நோக்கம் பிறர்நலம். மற்ற இடங்களின் முக்கிய நோக்கம் சுயநலம். இன்றைய மொழியில் சொன்னால், வணிகநலன். சுயநலம் உள்ள இடத்தில் தான் பிரச்னைகள் தலைவிரித்தாடும்.


அதனால் தான் கோயிலில் நடக்கும் பூஜைகளுக்கு "பரார்த்த பூஜை' என்று பெயர் வைத்தனர் நம் முன்னோர். பர-பிறர்; அர்த்த-அவர்களுக்காக; மக்களுக்காக நடக்கும் பூஜை என்பது பொருள்.


சமூகத்தில் கோயிலுக்கு மாற்றாக எத்தனையோ அமைப்புகள் உருவானாலும் அவை தமது நோக்கத்தை நிறைவேற்றவில்லை. அதற்கு காரணம், அவற்றை உருவாக்கியோர் சாதாரண மனிதர்கள். ஆனால் கோயில்களை உருவாக்கியோர் ஞானிகள்.


அதனால் தான் கோயில்களைப் பாதுகாப்பது நமது தலையாய கடமை என்கிறோம்.

கோயில்களை எப்படிப் பாதுகாப்பது? 


அளவிலும், பரப்பிலும் பெரிய கோயில்களைப் பாதுகாப்பது இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் மிக எளிதுதான். ஆனால் அப்படி நாம் செய்தால் அவை வெறும் வரலாற்றுக் கட்டடங்களாக மட்டுமே நிற்கும்.


நாம் செய்ய வேண்டியது அது அல்ல; கோயில்களுக்கு உயிர் ஊட்டுவதுதான். ஆம். தமிழகத்தில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், அரசின் நிர்வாகத்தில் உள்ளன. இவை போகத் தனியார் கோயில்கள் வேறு உள்ளன.


36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில், ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்களில் இன்று ஒரு கால பூஜை கூட நடக்கவில்லை.
வெள்ளைக்காரன் இந்நாட்டில் நுழையும் முன், குறைந்தது 8 பேர் பணியாற்றிய கோயில்களில் இன்று ஒரே ஒரு அர்ச்சகர் மட்டும்தான் பூஜை செய்கிறார். அவரும் ஒரு நாளைக்கு 8 கோயில்களுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை.


நம் கோயில் சிற்பங்கள், செப்புத் திருமேனிகளைப் பார்த்து வெளிநாட்டவர் வியந்து பாராட்டுகின்றனர். ஆனால் அவற்றைத் திருடி, சில ஆயிரங்களுக்காக சிலை கடத்தல்காரர்களிடம் விற்கும் இழிநிலையில் நம்மவர்கள் உள்ளனர்.


கல்லில் கலை வண்ணம் கண்டோரின் பரம்பரையில் வந்த நாம், அவற்றின் மீது கிறுக்கியும், உடைத்தும்,சேதப்படுத்தியும், காதலி/காதலன் பெயர் எழுதியும் அற்ப மகிழ்ச்சி அடைகிறோம்.


இந்த அவல நிலைக்கு எது காரணம்? யார் மீது குற்றம்? தமிழகத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக நின்று நிலவி வரும் திராவிட இயக்கங்களின் விளைவுகள் தான் இவை.


இக்குற்றச்சாட்டு இட்டுக் கட்டியதல்ல. வரலாறு அறிந்தோர், சீனாவில், 1950களில், சீனப் பாரம்பரியத்தின் மீது மாவோ நடத்திய கடும் தாக்குதலை, தமிழகத்தின் இன்றைய அவல நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பர். சீனா இன்று மீண்டும் மதத்தை நோக்கிய தன் தேடலைத் துவங்கி விட்டது. நாம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறோம்.


அதேநேரம், கோயில்கள் உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக, ஞானிகள் காட்டிய பாதையில் இருந்து விலகி, முற்றிலும் சுயநலம் சார்ந்த, ஜோதிடத்தின் பெயரால், ஏற்றுக் கொள்ள முடியாத செயல்கள் இன்று கோயில்களின் நடக்கின்றன. இவற்றுக்கு "பக்தி' முலாமும் பூசப்படுகிறது. ஆன்மீகத்தின் அரிச்சுவடி அறியாத பத்திரிகைகள் அனைத்தும், இதற்கு பக்கவாத்தியம் வாசிக்கின்றன.


கோயிலின் தேவை, அர்த்தத்தை உணராமல் அவற்றை இகழ்வது, சேதப்படுத்துவது ஒரு பக்கம். அதேபோல், கோயிலின் நோக்கத்தை அறியாமல், "பக்தி' என்ற பெயரால், பரிகசிக்கத் தக்க காரியங்கள் நடப்பது இன்னொரு பக்கம்.


இந்த இரு துருவச் செயல்களையும் ஒழித்துக் கட்டி, கோயில்களைச் சீர் செய்வதற்கு நாம் கையில் எடுக்க வேண்டிய ஆயுதம் தான் உழவாரப் பணி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate