சனி, 8 செப்டம்பர், 2018

வரலாற்றில் பேட்டை - 1

நெல்லையப்பர் கோயிலின் செயல் அலுவலராக இருந்த திரு யக்ஞ நாராயணன், பழைய பேட்டையைப் பற்றி முக்கியமான வரலாற்றுத் தகவலை பகிர்ந்துள்ளார்.பழைய பேட்டையிலேயே நெல்லையப்பருக்கு பாரிவேட்டை மண்டபமும் அமைந்துள்ளது.

அதேநேரம் பேட்டை பற்றிய நூற்றாண்டு பழைமையான நூல்களில் திருமங்கை நகர் என்ற பேட்டை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. சைவப் பேரறிஞர் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளையின் தந்தை த.ஆறுமுக நயினார் பிள்ளை பேட்டைத் தலபுராணம் இயற்றியுள்ளார். அந்த நூலை கடந்த 18 ஆண்டுகளாகத் தேடி வருகிறேன். இதுவரை கிடைக்கவில்லை. அறிந்தவர்கள் தகவல் தாருங்கள்.
ஈசுரமூர்த்திப் பிள்ளையும் அவரது தந்தையும் தமது படைப்புகள் அனைத்திலும் தமது பெயரின் முன்னொட்டாக பேட்டையைச் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆறுமுக நயினார் பிள்ளை எழுதிய நுால்


திருவாவடுதுறை ஆதீனத்தில் 16ம் பட்டம் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் பட்டத்தில் இருந்தபோது, பேட்டையில் இருந்து ஒருவர் தம்பிரானாக சேர்ந்துள்ளார். அவரை சின்ன பண்டாரமாக நியமித்தார், சுப்பிரமணிய தேசிகர். ஆதீனத்தில் அவர் பேட்டைச் சாமிகள் என்றே அறியப்பட்டுள்ளார். இந்தத் தகவலை, த.ச.மீனாட்சி சுந்தரம் பிள்ளை,  ஆதீன வரலாற்றில் தெரிவித்துள்ளார். 


மேலகரம்  சுப்பிரமணிய தேசிகர், 16ம் பட்டம், திருவாவடுதுறை ஆதீனம்

பேட்டை வினைதீர்த்த விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த வெ.மு.சிவசுப்பிரமணிய பிள்ளை, நெல்லையப்பர் கோயில் தருமகர்த்தராக இருந்துள்ளார். அவர் அந்தப் பொறுப்பில் இருந்த போதுதான் வேணுவன புராணத்தை மு.ரா.அருணாசலக் கவிராயர் அச்சிட்டு வெளியிட்டார்.

1914ல் வெளியான வேணுவன புராணம்

பேட்டையில் இஸ்லாமியர்கள் குடியேற்றம், வேளாளர் குடியேற்றம், பேட்டை மீனாட்சிசுந்தரம் செட்டியார் பண்ணையார் குடும்ப வரலாறு, பால்வண்ணநாத சுவாமி கோயில் வரலாறு, நவாப் பள்ளிவாசல் வரலாறு ஆகியவற்றை தொகுத்தால் பேட்டையின் முழு வரலாறு கிடைக்க வாய்ப்புள்ளது.
பேட்டையைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 20ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் தங்கள் மதம் தொடர்பாக பல நூல்கள் செய்துள்ளனர். செய்வித்துள்ளனர். பேட்டை பரிமளக்கார வீதியில் இருந்த வங்காளத்தைச் சேர்ந்த மகுதண ராவுத்தர், மிகுறாசு நாமா, சக்கூன் படைப் போர், சாசீம் மாலையும் இமாம்காசீம் படைப் போரும், தஜ்ஜால் நாமா இஸ்லாம் பற்றிய பல நுால்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அவை அனைத்தும்  திருவொற்றியூரில் அச்சிடப்பட்டுள்ளன என்பது கவனிக்கத் தக்கது.இதுபற்றிய முழுமையான ஆய்வும் தேவை.
தகவல் தெரிந்தோர் பகிர வேண்டுகிறேன்.

கீழ்க்கண்ட பதிவு, திரு.யக்ஞநாராயணன் தனது முகநுால் பக்கத்தில் எழுதியது. 
ஒரு ஆச்சர்யமான உண்மை ஆவணத்தில் உள்ளது டாக்டர். நெல்லையப்பர் கோயிலில் உள்ள ஒரு தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட செப்பேட்டில் (காலம் கி.பி.1600-1700க்கு இடைப்பட்டது) ஒரு சொத்தின் நான்கெல்லைகளில் ஒன்றாக பழையபேட்டை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வரலாற்றாசிரியர்கள் பலர் பேட்டையின் வரலாற்றுப் பெயர் திருமங்கை நகர் என்கிறார்கள். ஆனால் வரலாற்றாவணத்திலேயே பழைய பேட்டை என்ற பெயரே உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் இத்திருக்கோயிலுக்கு வந்திருந்த போது அவரைத் தெலுங்கு எழுத்துகளை வாசிக்கச் சொல்லி எழுதி வைத்திருக்கிறேன். இந்தச் செப்பேட்டை நீதிமன்றத்தில் சான்றாவணமாக்கி நடைபெற்ற திருநெல்வேலி உரிமையியல் நீதிமன்றத்தில் 1955ம் ஆண்டில் நடைபெற்ற வழக்கொன்றில் செப்புப்பட்டயத்தில் குறிக்கப்பட்ட செய்திகட்கும், வழக்காடியவர் தந்த செய்திகட்கும் தொடர்பில்லை எனக் கூறி வழக்கு தள்ளுபடியாகியுள்ளது கூடுதல் தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Translate