வெள்ளி, 29 ஜூன், 2012

சுவாமி வாகனங்களை சுமக்கும் தண்டுகள்

இறைவன், இறைவி எழுந்தருளும் வாகனங்களைச் சுமந்து செல்வோருக்கு சீர்பாதம் தாங்கிகள் அல்லது ஸ்ரீபாதம் தாங்கிகள் என்ற அருமையான பெயர் உண்டு. இதில், சீர்பாதம் அல்லது ஸ்ரீபாதம் என்பது இறைவனின் திருவடிகளைக் குறிப்பவை.



இந்த வாகனங்கள் கோவில்களைச் சார்ந்து, அளவில் வேறுபடும். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆகிய கோவில்களில் அளவில் பெரிய பிரமாண்டமான வாகனங்கள் உண்டு.

இந்த வாகனங்களைத் தாங்கும் தண்டு அல்லது தண்டையங்கள் திருவிழாக்களில் முக்கிய இடம் பெறுகின்றன. ஸ்ரீரங்கம் மற்றும் திருவாரூரில், உற்சவ மூர்த்திகளான நம்பெருமாளையும், தியாகராஜரையும் சுமக்கும் தண்டுகளுக்கு, தோளுக்கினியான், பிள்ளைத் தண்டு என்றே சிறப்புப் பெயர்கள் உண்டு.





இவற்றில் பிள்ளைத் தண்டு சிறப்பு வடிவமைப்புடன் கூடியது. திருவாரூர், திருவான்மியூர் உள்ளிட்ட சில தலங்களில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தின் தென்பகுதியில், இந்தத் தண்டுகளுக்கு பெரிய மூங்கில்களைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் வடபகுதியில், அவற்றுக்குப் பதிலாக, கனத்த ஆலம் விழுதுகளைப் பயன்படுத்துகின்றனர்.

மிக நீளமாய், உருண்டு திரண்டு, யானையின் தும்பிக்கை போல உள்ள ஆலம் விழுதுத் தண்டுகள் மயிலை கபாலீசுவரர் கோவிலில் பயன்படுத்தப்படுகின்றன. மிகப் பெரிய அளவிலான வெள்ளி மற்றும் பிற வாகனங்களை இந்தத் தண்டுகள் தான் தாங்கும்.

தண்டுகளை தயாரிப்பது பற்றி, கபாலீஸ்வரர் கோவில் சீர்பாதம் தாங்கிகள் குழுத் தலைவர் பாலாஜி கூறியதாவது:

40 ஆண்டுகள் வயசான ஆலம் மரத்தின் விழுதுகள் பெரிதாக இருக்கும். அவற்றை நீரில் ஊறவைத்து, வடிவமாகச் செதுக்குவோம். பின் வேப்பெண்ணெய், புங்க எண்ணெய் கலவையில் ஊறப் போடுவோம். இதைப் பாடம் பண்ணுதல் என்று கூறுவோம். புங்கம் எண்ணெய் நெகிழ்ச்சியைக் கொடுக்கும். வேப்பெண்ணெய், மரத்தில் பூச்சி அரிப்பதைத் தடுக்கும் வகையில் பயன்படுகிறது.

இந்தப் பாடத்திற்கே குறைந்தது மூன்றாண்டுகள் ஆகிவிடும். அப்போதுதான் அந்தத் தண்டு பலமிக்கதாக பல ஆண்டுகள் உழைக்கும். விரிசல் விட்ட தண்டுகளில், இரும்புக் கம்பிகளை பூண்களாகக் கட்டி விரிசலை சரிசெய்து விடுவோம்.

சாதாரண வாகனங்களுக்கு பனந்தண்டுகள் கூடப் பயன்படும். தற்போது, இதுபோன்ற ஆலம் தண்டுகள், எவ்வளவு விலை கொடுத்தாலும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் போதுமான நீளம் இருப்பதில்லை.

தற்போது மூங்கில்கள் கிடைப்பதில்லை என்பதால், ஆலம் தண்டுகளைப் பயன்படுத்துகிறோம். ஆலம் தண்டுகள் கிடைக்காத பட்சத்தில், செம்மரத் தண்டுகளையும் பயன்படுத்தலாம்.

இவ்வாறு பாலாஜி தெரிவித்தார்.


இவர் தலைமையில் 40 சீர்பாதம் தாங்கிகள், கபாலீசுவரர் கோவில் வாகனங்களைச் சுமக்கும் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த 40 பேரில் சிலர் அலுவலகம் செல்லக் கூடியவர்களாக இருந்த போதிலும், 10 நாட்களுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.

1 கருத்து:

Translate