செவ்வாய், 10 மே, 2011

சிவஞானபோத மாபாடியம் - அச்சான கதை

(கடந்த 2000ம் ஆண்டில் முதன் முறையாக என் ஆசிரியர் ரத்னவேலன் ஐயாவை, சிதம்பரத்தில் வைத்துப் பார்த்தேன்.

அன்று மார்கழித் தேரோட்டம். அச்சமயம் நான் சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். மார்கழித் திருவாதிரைக்காக, விடுமுறை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வந்து விட்டேன்.

தேரோட்டத்தன்று, காலை, தேர் நிலையத்தில் வந்து நடராஜாவைத் தரிசித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்கு முன்பாக ரத்னவேலன் ஐயா நின்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

அதற்கு முன்பு, திருநெல்வேலியில் இருந்த போது அவரைப் பற்றி திருஞானசம்பந்தம் அவர்கள் நிறையச் சொல்லியிருந்தார். எனினும் ஐயாவை நேரில் அறிமுகம் செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் நேரவே இல்லை.

தொடர்ந்து பணி காரணமாக சென்னைக்கு வந்து விட்டேன். எனினும் அன்றைய சூழலில் சென்னை என்னை ரொம்பவே மிரட்டி விட்டது.

"எப்போதடா சென்னையை விட்டு ஊருக்குப் போவோம்' என்ற மனநிலையில் இருந்தேன்.

இதே மனநிலையில் தான் ஒருவித ஏக்கத்தோடு, சிதம்பரத்திற்குச் சென்றேன்.

ஐயாவிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

அன்று முழுவதும் சைவத்தைப் பற்றி என் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்த பல சந்தேகங்களை அவரிடம் கொட்டி பதில்களைப் பெற்றுக் கொண்டேன்.

தேரோட்டத்துக்கு மறுநாள், ஐயா, திருவாவடுதுறைக்குச் சென்றார். அவரது அனுமதியின் பேரில் நானும் அவருடன் சென்றேன்.

மாதவச் சிவஞான சுவாமிகள் தம் திருக்கரத்தால் எழுதியருளிய சிவஞானபோத மாபாடிய சுவடி இன்னும் அச்சாகவில்லை என்றும், தற்போது அச்சில் உள்ளவை பல்வேறு பிரதிகளில் இருந்து எடுக்கப்பட்டவை என்றும் ஐயா கூறினார்.

சிவஞான சுவாமிகள் மறைந்து, இரு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அச்சு வசதிகள் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆகி விட்ட நிலையில், இன்னுமா சுவாமிகளது கைப் பிரதி அச்சாகவில்லை என்ற கேள்வியை அப்போது கேட்கத் தோன்றவில்லை.

திருவாலங்காட்டு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தோம்.

நான் சமீபத்தில் தான் உ.வே.சா.,வின் என் சரித்திரம் படித்திருந்தேன். அதை ஐயாவிடம் ஏற்கனவே சொல்லியிருந்ததால்,"ஐயா! என் சரித்திரத்தில் இருந்த திருவாவடுதுறை இப்போது இல்லை. அதனால் திடமான மனதோடு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிக் கொள்ளுங்கள்' என்று ஐயா என்னிடம் கூறினார்.

ஒருவழியாக, திருவாவடுதுறை ஆதீனத்துள் புகுந்து, களைப்பாறி, குருமகா சந்நிதானத்தை தரிசித்தோம்.

அப்போது, சிவஞானசுவாமிகளது கைப்பிரதியை எப்படியாவது அச்சுக்குக் கொண்டு வர வேண்டும் என்று சந்நிதானம் கூறியது. ஐயாவும் பணிவுடன் "அப்படியே ஆகட்டும்' என்று கூறினார்.

மேலும் ஒருநாள் அங்கு இருந்தோம்.  அன்றைய நிலையில், ஆதீனத்தின் ஞானக் களஞ்சியமாகிய சரஸ்வதி நூலகம் இருந்த நிலையை இன்று நினைத்தாலும் வேதனை மனதைக் கவ்வுகிறது.

என்னென்ன நடந்தது என்பதை சந்தர்ப்பம் நேரும் போது பதிவிடுகிறேன்.

அதன் பின், 2001 விஜயதசமி அன்று ஐயா காலமானார். அவரோடு , சிவஞான சுவாமிகளது கைப் பிரதி கனவும் போய் விட்டதோ என்ற ஏக்கம் என்னுள் இன்றும் துடித்துக் கொண்டிருக்கிறது.

உண்மையான பிரதி அச்சாகும் நாள் என்று? தெரியவில்லை. அதன் பின் நான் பல்வேறு நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன்.

2003ல் பழைய புத்தகக் கடை ஒன்றில், யாழ்ப்பாணத்து வண்ணை நகர் சுவாமிநாத பண்டிதர் 1906 பராபவ வருடம், ஆனி மாதம் , சிவஞானபோத மாபாடியமும், சிற்றுரையும் சேர்த்து வெளியிட்ட புத்தகம் கிடைத்தது.

அதன் முகவுரையைப் படித்துப் பார்த்த போது, சைவ உலகத்திற்கு சுயநலம் இன்றி உழைத்த  பெரியோர்கள் எப்படி எல்லாம் துயரத்திற்கு ஆளாகினர் என்பதை அறிந்தேன். மனம் கவன்றேன்.

அந்நிலையில் இன்றும் பெரிய மாற்றம் ஒன்றில்லை.

அக்காலத்தில் கிடைத்த அளவு மாபாடிய உரையையும், மிச்சத்திற்கு சிவஞான சுவாமிகளின் சிற்றுரையையும் கலந்து சுவாமிநாத பண்டிதர் அச்சிட்டுள்ளார்.

இப்பதிப்பில் சுவாமிநாத பண்டிதர் கையாண்ட உத்திகள் என்னென்ன, அவரது பதிப்புக்கும் பிறரது பதிப்புக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன முதலியவற்றை இன்னோர் பதிவில் பதிவிடுகின்றேன்.

இன்று மாதவச் சிவஞான சுவாமிகள் குருபூசை. எத்தனையோ குருபூசைகள் கடந்துபோய்விட்டன. ஆனால் சுவாமிகள் திருக்கரத்தால் எழுதப்பட்ட சிவஞானபோத மாபாடிய பிரதி இதுவரை அச்சாகவில்லை என்பதும், உலகம்  தழுவிய சிவநெறிக் கொள்கையின் தத்துவார்த்தத்திற்கு அடிப்படையான ஒரு மாபாடியத்தின் செம்பதிப்பு இன்றுவரை வெளிவரவில்லை என்பதும், திராவிட மாபாடியத்தையும் வடமொழி மாபாடியங்களையும் ஒப்பிட்டு விரிவான ஆய்வு நூல்கள் எவையும் இதுவரை வரவில்லை என்பதும் தான் நாம் நம் மனத்தில் இருத்த வேண்டிய வலி மிகுந்த எண்ணங்கள்.
------------------------------------------
திருநந்திதேவர் 

சங்கரன் தெரிக்க மற்றுஅத் தனிச்சிவஞான போதப்
புங்கநூல் உணர்ந்து பின்னர்ப் பொலிவுறும் அகச்சந்தானப்
பங்கமில் புறச்சந் தான பரம்பரை அதனின்  வைத்து
நங்களுக்கு அளித்த நந்தி நளினமென் கழல்கள் போற்றி. 

(மற்று அ என்புழி அகரம் - பண்டறி சுட்டு)

சிவஞானபோதச் சிறப்பு

வேதம் பசுஅதன்பால் மெய்ஆக மம்நால்வர்
ஓதும் தமிழ்அதனின் உள்ளுறுநெய் போதமிகு
நெய்யின் உறுசுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான்
செய்ததமிழ் நூலின் திறம். 

அகண்டாகார நித்த வியாபக சச்சிதானந்தப் பிழம்பாகிய சிவபெருமான் தாம், "ஆரணம் ஆகமங்கள் அருளினால் உருவு கொண்டு' அருளிச் செய்யாது ஒழியில் "கதிப்பவர் இல்லையாகும்' எனத் திருவுளம் கொண்டு, "ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றும் இலர்' ஆயினும் ஆன்மாக்கள் மீது வைத்த கைம்மாறற்ற பெருங்கருணையினாலே "ஆயிரம் திருநாமம்' முதலியவற்றை உடையராய்ச் சகளீகரித்துச் சதாசிவ மூர்த்தியாய் நின்று தற்புருடம் முதலிய நான்கு முகங்களினால் இருக்கு முதலிய நான்கு வேதங்களையும் ஈசானமுகமாகிய உச்சிமுகத்தினால் காமிகம் முதலிய இருபத்தெட்டுச் சிவாகமங்களையும் பிரதம மகா சிருட்டி ஆரம்பத்திலே தோற்றுவித்தருளினார்.

அவ்வேத ஆகமங்கள் முறையே உலகர்க்கும் சத்தநிபாதர்க்கும் உரித்தாய பொதுநூலும் சிறப்பு நூலுமாம். அவை சூத்திரமும் பாடியமும் போறலின் ஒருபொருளனவேயாம். 

இக்கருத்துப் பற்றியே நீலகண்ட சிவாசாரியரும் வேதாந்த சூத்திரத்திற்குத் தாம் இயற்றிய பாடியத்துள் பதி அதிகரணத்திலே "யாம் வேத சிவாகமங்கட்குப் பேதம் காண்கின்றிலம், வேதமும் சிவாகமமாம்' என்று அங்ஙனம் கூறிப் போந்ததூஉம் என்க. வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவும் சிறப்பும்என்று உன்னுக
நாதன் உரையிவை நாடில் இரண்டு அந்தம்
பேதமது என்னில் பெரியோர்க்கு அபேதமே 

என்ற திருமூலநாயனார் திருவுள்ளக் கிடக்கையும் அதுவே.

வேதம் என்னும் சொல் அறிதற்கருவி எனப் பொருள்படும். எனவே, பதி பசு பாசம் என்னும் முப்பொருள்களையும் அறிதற்குக் கருவியாய் உள்ளது என்பது கருத்து. ஆகமம் என்பது (பரமாப்தரினின்றும்) வந்தது எனப் பொருள்படும். இன்னும் ஆ என்பது பாசம் எனவும், க என்பது பசு எனவும், ம என்பது பதி எனவும் பொருள்படுதலால் ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லட்சணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருள் என்க.

ஆ என்பது சிவஞானமும், க என்பது மோட்சமும், ம என்பது மலநாசமுமாம் ஆதலால் ஆன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணிச் சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தைக் கொடுத்தல் பற்றி ஆகமம் எனப் பெயராயிற்று என்று கூறுதலும் ஒன்று.

திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள் என்னும் சைவ சமயாசாரியர்கள் நால்வரும் சிவபிரான் திருவருளினாலே தமிழ்நாடு உய்தல் பொருட்டுத் திருஅவதாரம் செய்தருளி அவ்வேத ஆகமங்களின் சாரத்தை ஒருங்கு திரட்டித் தேவார திருவாசகங்களாகிய திராவிட வேதங்களாக அருளிச் செய்தனர்.

அதன்பின் மெய்கண்டதேவ நாயனார் திருவெண்காட்டடிகள் திருவருளினால் சாமுசித்தராய் (சாமுசித்தர் ஆவார், முற்பிறப்பிலே சரியை கிரியை யோகங்களைச் செய்து நிருமல அந்தக்கரணராகி மீளப் பிறக்கும்பொழுது அந்த ஞானத்தோடு பிறந்து சிவபாவனை பண்ணுவோர்.) திரு அவதாரம் செய்து வேத ஆகமங்களினதும் தேவார திருவாசகங்களினதும் சாரத்தில் சாரமாயுள்ள சிவஞானபோத நூலைத் தமிழில் மொழிபெயர்த்துக் கூறி வார்த்திகம் எனப்படும் பொழிப்புரையும் செய்தருளினார்.இச்சிவஞானபோதத்தை முதல் நூலாகக் கொண்டு திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானசித்தியார், இருபாஇருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதின்மூன்று சாத்திரங்களும் தோன்றின.

சிவஞானபோதம் முதலிய இப்பதினான்கும் சைவசித்தாந்த சாத்திரங்கள் என்று அவ்வாறு உயர்த்துக் கூறப்படுவன.

சிவஞானபோதம் ஏனைப் பதின்மூன்று சாஸ்திரங்களுக்கும் தாயகமாய் இருத்தலின் அவற்றைக் கற்றலால் பெறும் பேறு இஃது ஒன்றனைக் கற்றலால் பெறுதல் ஒருதலை என்று உணர்க.

இனித், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முதலிய சமயாசாரியர்களும் மெய்கண்டதேவ நாயனார் முதலிய சித்தாந்த நூலாசிரியர்களும் "காணும் கரணங்கள் எல்லாம் பேரின்பம் எனப்  பேணும் அடியார்' ஆகலின், அவர் பசுகரணம் பதிகரணமாக நிகழப் பெற்றவர் என்பதூஉம், "நம் செயல் அற்று இந்த நாம் அற்றவர்' ஆகலின், அவர் தம் செயல் எல்லாம் சிவன் செயல் என்பதூஉம் பெறப்பட்டன. 

படவே, அவர் அருளிச் செய்த நூல்கள் எல்லாம் பதிவாக்கியம் என்பது தாமே போதரும். போதரச் சிவபிரானே ஆன்மாக்களின் அறிவு ஆற்றல் ஆயுள் முதலியவற்றிற்கு ஏற்பக் காலம்தோறும் முப்பொருள் இயல்பு கூறும் நூல்களை விரித்தும் தொகுத்தும் அங்ஙனம் அருளிச் செய்தார் என்பது கடைப்பிடிக்க.

"அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்  பொருள் நூல் தெரியப் புகின்' எனத் திருவருட்பயனுள் ஓதப்படுதலின், வேத ஆகமம் முதலிய எல்லா நூல்களும் பஞ்சாக்கரத்தால் உணர்த்தப்படும் பதி பசு பாசம் என்னும் திரிபதார்த்த இலக்கணங்களையே கூறப் புகுந்தன என்பது தெற்றென விளங்கும்.

அவை எல்லாம் முப்பொருளின் தடத்த சொரூபங்களாகிய பொது இயல்பு சிறப்பு இயல்புகளைத் தனித் தனியும் சரித வாயிலாகவும் கூறுவனவாக, இச்சிவஞானபோதம் அவ்விரண்டு இயல்புகளையும் ஒருங்கு வைத்து நேரே கூறுதலான் அவ்வெல்லா நூல்கட்கும் சிரத்தானமாய்ச் சிறந்து விளங்கும் அரும்பெரும் திவ்விய மகத்துவ நூலாம் என்பது சத்தியம்.

இன்னும், ஆகமப் பொருள்கள் ஒன்றோடு ஒன்று முரணுவனவாக மலைந்து வினவிய நந்திபெருமானுக்கு அம்மலைவு தீர்தல் பொருட்டுச் சிவபெருமான் உபதேசித்தருளப் பெற்றதும் இச்சிவஞானபோதமே.

கண்ணுவர், கருக்கர் முதலிய பண்ணவர் கணங்கட்கு வேதப் பொருளை அறிவுறுத்தல் பொருட்டு எழுந்தருளி வந்த தட்சிணாமூர்த்தி தமது அருமைத் திருக்கரத்தில் தரிக்கப் பெற்றதும் இச்சிவஞானபோதமே.

திருக்கைலாசபதியாகிய சிவபெருமான், மாணிக்கவாசக சுவாமிகளை ஆட்கொண்டருளித் தீக்கைப் பேறு அளித்துத் திருவடி ஞானம் வாயிலாகச் சிவமாம் தன்மைப் பெரும்பேறு எய்துவிக்கத் திருவுளம் கொண்டு, மாநுடச் சட்டை சாத்திப் பரமாசாரிய மூர்த்தியாய் அக்கைலையினின்றும் எழுந்தருளி வந்து, திருப்பெருந்துறையில் குருந்த விருக்கத்தின் கீழ் வீற்றிருந்து அருளிய பொழுது, தமது அருமைத் திருக்கரத்தில் தாங்கப் பெற்றதும் இச்சிவஞானபோதமே.

மாணிக்கவாசக சுவாமிகள், அங்ஙனம் எழுந்தருளியிருந்த பரமாசாரிய மூர்த்தியாகிய சிவபிரானைத், திருவருள் செலுத்தச் சென்று அடைந்தமாத்திரத்தே "செங்கைமீது பொருத்தம் உறும் புத்தகம் ஏது ஐயா' என்று வினவ, அப்பிரானார் தமது அருமைத் திருவாக்கினாலே "பொய்ம்மையிலாச் சிவஞானபோதம்' என்று விடையிறுக்கப் பெற்றதூஉம், "என்றலுமே சிவம் ஏது ஞானம் ஏது இங்கு இலங்கியிடும் போதம் ஏது இயம்புவீரேல் அன்று வட நீழலில் வந்திருந்தார் நீரே அடியேனும் உமக்கடிமை ஆவேன்' என்று சுவாமிகள் விண்ணப்பம் செய்ய, "நின்றசிவம் ஒன்று அதனைத் தேர்தல் ஞானம் நிகழ்போதம் தேர்ந்துஅதனைத் தெளிதலாம்' (இதற்குச் சிவஞானபோத மாபாடியகாரர் கொண்ட கருத்து வேறு என்பதைச் "சிவஞானபோதம் என்பதூஉம் இக்காரணத்தால் பெற்ற பெயர் என்பது வடமொழிச் சிவஞானபோதத்து இறுதி சூத்திரத்து ஓதியவாறு பற்றி உணர்க' எனக் கூறியதனால் அறிக.) என்று நற்பொருள் வினவி நிற்கும் அச்சுவாமிகள் சிந்தை உருகும்படி அப்பிரானால் பொருள் அருளிச் செய்யப் பெற்றதூஉம் இச்சிவஞானபோதமே.

மலர்தலை உலகில் புற இருளின் நீக்கிப் பொருள்களைக் கண்ணுக்குக் காட்டுதற்குப் பன்னிரு வகைத்தாய ஞாயிறு போல, அநாதி மூல மல இருளின் நீக்கிச் சிவபரம் பொருளை ஆன்மாவிற்குக் காட்டி அநுபூதியின் நிலை பெறுவித்தற்குப் பன்னிரு சூத்திர ஞான ஞாயிறாய் எழுந்ததும் இச்சிவஞானபோதமே.

இன்னும், இது பிறவிப் பிணி தீர்த்தற்குத் திவ்விய ஒளடதமாய் உள்ளது. ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் இவற்றை உணர்த்துதலில் சிவசங்கிதை என்னும் பொதுப் பெயர் பெறுதற்கும் உரியது. 

பதி பசு பாசம் என்னும் திரிபதார்த்தமாகிய அபிதேயத்தோடு (பெயரிட்டு வழங்கப்படுவது) அபிதாயகமாகும் (பெயரிட்டு வழங்குவது) சம்பந்தமும் உடையது.

திரிபதார்த்தலக்கணமாகிய விடயம் உடையது. திரிபதார்த்த ஞானத்தால் சாதிக்கப்படும் தீக்கை முதலியவற்றை உணர்த்தும் முகத்தானே நித்திய நிரதிசயாநந்தப் பெருவாழ்வாகிய மோட்சமே பயனாக உடையது.

இத்துணை விசேட நூலாகிய இச்சிவஞானபோதத்தை நாடோறும் அன்புடன் அருச்சித்துப் பாராயணம் செய்வோர் சகலபாவங்களினின்றும் விடப்பட்டு நித்தியானந்தப் பெருவாழ்வாகிய முத்தியைப் பெறுவர்கள்.

முத்திக்கு உபாயம் இதற்கு மேலாகச் சொல்லற்பாலன வேறொரு நூலிலும் இல்லை. இது சத்தியம்! சத்தியம்! முக்காலும் சத்தியம்.

இதற்குப் பிரமாணம் (இவ்விடத்தில், சுவாமிநாத பண்டிதர் மேற்கோள் காட்டியுள்ள சுலோகம், கிரந்த எழுத்தில் உள்ளது. விரைவில் அதை இங்கு தேவநாகரியின் தமிழ் வடிவில் இட முயலுகிறேன்)

"எவன் சிவசங்கிதையைத் தினந்தோறும் நியமம் உடையவனாய் ஓதுகின்றானோ அவன் சகலபாவங்களையும் சூரியன் இருளை நீக்குமாறு போலக் கெடுக்கின்றான்'

சிவஞான சித்தியார்

ஞானநூல் தனைஓதல் ஓது வித்தல்
  நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருள்அதனைச் சிந்தித்தல் ஐந்தும்
  இறைவன்அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை
ஊனமிலாக் கன்மங்கள் தபம்செபங்கள்  தியானம்
  ஒன்றுக்கொன்று உயரும்இவை ஊட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனை
  அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்,இந்நூலில் கூறப்படும் பன்னிரண்டு சூத்திரத்துள், முதல் இரண்டு மூன்று என்னும் மூன்றையும் பிரமாண இயல் என வைத்து, முதல் சூத்திரத்தால் உலகிற்கு நிமித்த காரணனாகிய பதி உண்மைக்குப் பிரமாணமும், இரண்டாம் சூத்திரத்தால் பாச உண்மைக்குப் பிரமாணமும், மூன்றாம் சூத்திரத்தால் பசு உண்மைக்குப் பிரமாணமும்,

நான்கு ஐந்து ஆறு என்னும் மூன்றையும் இலக்கண இயல் என வைத்து, நான்காம் சூத்திரத்தால் பசு இலக்கணமும், ஐந்தாம் சூத்திரத்தால் பாச இலக்கணமும், ஆறாம் சூத்திரத்தால் பதி இலக்கணமும்,

ஏழு எட்டு ஒன்பது என்னும் மூன்றையும் சாதன இயல் என வைத்து, ஏழாம் சூத்திரத்தால் சாதித்துப் பெறுதற்குரிய அதிகாரம் உடையது இது என்பதும், எட்டாம் சூத்திரத்தால் சிறந்த கருவி எனப்படும் சாதனம் இது என்பதும், ஒன்பதாம் சூத்திரத்தால் சாதகம் செய்யுமாறு இது என்பதும்,

பத்துப் பதினொன்று பன்னிரண்டு என்னும் மூன்றையும் பயன் இயல் என வைத்து, பத்தாம் சூத்திரத்தால் பெத்த நீக்கப் பயனும், பதினோராம் சூத்திரத்தால் முத்திப் பயனும், பன்னிரண்டாம் சூத்திரத்தால் பெத்த நீக்கமும் முத்தியும் பெற்றவர்க்குச் சீவன் முத்தி நிலைக்கண் நிகழும் இயல்பும் வகுத்துக் கூறப்படும்.

இத்துணைப் பெருமை வாய்ந்த அருமருந்தன்ன இச்சிவஞானபோதத்திற்கு ஆதியிலே திருநாரையூரில் எழுந்தருளியிருக்கின்ற பொல்லாப் பிள்ளையாரால் சூர்ணி ஆகிய கருத்துரையும் மெய்கண்டதேவ நாயனாரால் வார்த்திகம் எனப் பெயரிய பொழிப்புரையும் செய்தருளப்பட்டன.

பின்னர்ப் பாண்டிப் பெருமாள் என்னும் ஆசிரியரால் ஓர் உரை இயற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர்த் திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து மாதவச் சிவஞான யோகிகளால் ஒரு சிற்றுரையும் சிவஞானபோத மாபாடியம் எனப் பெயரிய ஒரு பேருரையும் செய்தருளப்பட்டன.

இப்பேருரை, இச்சிவஞானபோதத்திற்கும் இதன் முதல் நூலாகிய வடமொழிச் சிவஞானபோதத்திற்கும் வழிநூல் சார்புநூல்களாகிய ஏனைச் சித்தாந்த சாத்திரங்களுக்கும் உள்ள பொருள் ஒருமையை இனிது விளக்கி இதற்குச் சிறந்த ஓர் அணிகலனாய் உள்ளது.


வேதாந்த சூத்திரத்திற்கு நீலகண்டபாடியம் முதலியனபோலப் பொருள்களை, விஷயம், சம்சயம், பூர்வபட்சம், சித்தாந்த நிர்ணயம், சங்கதி என்னும் ஐந்து உறுப்புக்களையும் உடைய அதிகரணங்களாகப் பகுத்து, எவரும் ஒருசிறிதும் சந்தேகம் உறாவண்ணம், தருக்க வியாகரண மீமாஞ்சைகள் கொண்டும் வேத ஆகமங்களாகிய அதிப் பிரபலப் பிரமாணங்கள் கொண்டும் நன்கு தெளியுமாறு கடாவிடைகளால் இனிது விளக்கிக் காட்டுதலின் திராவிட மாபாடியம் என்று எவராலும் சிறப்பித்துச் சொல்லப்படுவது.

சுவேதாச்சுவதரம் முதலிய சைவ உபநிடதங்கள் எல்லாம் சுத்தாத்துவித சித்தாந்தப் பொருளையே சாதிப்பன என்பதை அவ்வவற்றின் வாக்கியங்களால் இனிது விளக்கி, வேதமும் சிவாகமமும் வேறு என்று கூறிப் பிணங்குவோர் பிணக்கை மாற்றுவது.
சிவாகம வாக்கியங்களைத் தத்தமக்கு வேண்டியவாறு எல்லாம் இடர்ப்படுத்தி நலிந்து பொருள் கொண்டு அதனையே மெய்ப்பொருள் என்று காட்டி வஞ்சிக்கும் சமவாத சைவர் கொள்கையை வேரோடு களைவது.

எல்லா மதங்களின் சொரூபங்களையும் தன்னுள் அடக்கிக் காட்டுவது. 

புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்னும் சமயக் கொள்கைகளை அளவைகளான் மறுத்துச் சுத்தாத்துவித சித்தாந்தத்தைத் தாபிப்பது.

தேவாரம், திருவாசகம் முதலிய பன்னிரண்டு திருமுறையில் உள்ள திருப்பாடல்களை ஆங்காங்கு எடுத்துக் காட்டி அவற்றின் மெய்ப்பொருளை வெள்ளிடை மலைபோல் தெள்ளிதில் புலப்படுத்துவது. 

இலக்கண இலக்கியப் பொருள் திறவுகோலாய் உள்ளது.

கற்போர்க்கு உண்ண உண்ணத் தெவிட்டா தெள்ளமுதம் போன்றது.

பத்திரசமும் முத்திரசமும் பழுத்து ஒழுகும் பான்மையது.

சைவ சமயிகளுக்கு எல்லாம் கிடைத்தற்கரிய பெரிய சிந்தாமணியாய் உள்ளது.

இன்னோர் அன்ன பிற மகத்துவங்களும் வாய்க்கப் பெற்ற இப்பாடியத்தின் முதலில் உள்ள சில பாகங்கள் இற்றைக்கு இருபது  வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் சைவ வித்தியாசாலை முதல் உபாத்தியாயர் ஆகிய ஸ்ரீமத் மா. வைத்தியலிங்க பிள்ளை அவர்களிடத்து யான் பெற்றுப் பார்த்த பொழுது அதன் பொருள் நுணுக்கம் முதலியன எனக்குக் கழிபேருவகை பயந்தமையின் அதனை முற்றும் பெற்று வாசித்து உணர்ந்து பெரும்பயன் அடைய வேண்டும் என்னும் வேணவாவினால் விழுங்கப்பட்டிருந்தேன்.

பின்பு இந்தியாவுக்கு வந்த காலம் தொடங்கி அதனைப் பெற முயன்று ஆங்காங்கு விசாரணை செய்து வருகையில் ஸ்ரீமத் சபாபதி நாவலர் அவர்களிடம் அப்பாடியம் இருப்பதாகக் கேள்வியுற்று அவர்கள்பால் சென்று அதைக் குறித்துக் கலந்து பேசினேன்.


அவர்கள் இரண்டாயிரம் ரூபாவுக்குக் குறைந்தால் பிரதி கொடுக்கப்பட மாட்டாது என்றார்கள். அத்தொகை கொடுத்து வாங்குதற்கும் சம்மதம் உள்ளவன் ஆயினேன். அஃது அங்ஙனமாக, அதனை அறிந்த எனது அந்தரங்க நண்பர் ஒருவர் அந்நாவலர் அவர்களுக்கு அப்பாடியத்தை எழுதிக் கொடுத்தவர் மூலமாக விலைக்குக் கொடுக்கப்படும் பிரதி பல விஷயங்கள் நீக்கியும் பல பிழைகள் செறித்தும் எழுதப்பட்டமையை அறிந்து அவ்வுண்மையை எனக்குத் தெரிவித்து அவர்களிடத்துள்ள மூன்று பிரதிகளையும் ஒருங்கு கேட்கும்படி கூறினர்.

அங்ஙனம் கேட்டபொழுது அதற்கு அவர்கள் உடன்படாமையினால் யான் வாங்க விரும்பிய கருத்தைத் தவிர்ந்தேன்.

பின் ஒரு வித்துவானிடம் இப்பொழுது அச்சிட்ட பாகம் முழுதும் இருக்கின்றதெனக் கேள்வியுற்று அவரிடத்துச் சென்று ஒரு பெருந்தொகைப் பொருள் கொடுத்து வாங்கி அதனை ஒரு பிரதி பண்ணிக் கொண்டு மூலப் பிரதியை அவரிடம் கொடுத்து விட்டேன்.

இங்ஙனம் பெருந்தொகைப் பொருள் கொடுத்து அரிதில் பெற்ற பிரதி பூர்த்தி உடைத்தன்று ஆயினும், செல் முதலியவற்றால் கேடுறுமாயின் பின் அதுதானும் பெறுதற்கு அரிது எனக் கருதியும், வேத உப பிருங்கணங்களாகிய புராணம் முதலியனவே சைவ நூல்கள் எனவும், அவைகளில் உள்ள வர்ணனைகளும் குறிப்பான் வேறு பொருள் உணருமாறு கூறப்பட்ட சரிதங்களுமே சுத்தாத்துவித சைவ சித்தாந்தத்து உண்மைப் பொருள் எனவும் கொண்டு மயங்குவார்க்கு அம்மயக்கம் நீங்கிச் சைவ நூல் உணர்ச்சி தலைப்படல் பொருட்டும் அவ்வொரு பிரதியையே பரிசோதனை செய்து என் சிற்றறிவிற்கு எட்டிய வண்ணம் ஒருவாறு செப்பம் செய்து அச்சிட்டு முடித்தேன். குருவினாலே செயற்பாலனவாகிய பரீட்சைகள் எல்லாம் செய்யப்பட்டுப் பக்குவம் உடையராய்ச் சமயம் விசேடம் நிருவாணம் என்னும் மூன்று தீக்கையும் பெற்றவரே இந்த ஞான நூலை ஓதுதற்கு அதிகாரிகளாவர்.

இதனைக் குருமுகமாய் அறிதலின்றித் தமது மதி நுட்பத்தால் ஆராயப் புகுவோர் சந்தேக விபரீதமறத் தெளிந்து கொள்ளார். 

அதுவன்றியும் பதி வாக்கியங்களில் குற்றம் ஏற்றித் தாம் நரகத்திற்கு ஆளாவர். இதுபற்றியன்றே இவைகளைக் குருவினிடத்தே பெறுக எனச் சைவாகமங்கள் விதித்ததூஉம் என்க. 

அநுபவம் உடைய தேசிகர் உணர்த்த உணர்தற்பாலதாகிய இந்நூலுரையைச் சிற்றறிவுடைய பசுவர்க்கத்துட்பட்ட சிறியேன் அச்சிடத் தொடங்கியது அறிவான் ஆன்ற பெரியோர்க்கு எல்லாம் ஏ ஏ இவன் அறிவு இருந்தவாறு என்னை? என்று எள்ளி நகையாடற்கு ஏதுவாம்.அறிஞர்கள் இப்பதிப்பில் காணப்படும் பிழைகளையும் அவற்றின் திருத்தங்களையும் பெருந்தயை கூர்ந்து தெரிவிப்பார்களாயின் அந்நன்றியை மறவாது அவற்றை இரண்டாம் பதிப்பில் பிரசுரம் செய்து யாவர்க்கும் பயன்படச் செய்வேன்.

இப்பாடியம் அச்சிட ஆரம்பித்த காலத்திலே அதற்கு மாறாகச் சிலர் திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ மகாசந்நிதானத்திற்கு நேரிலும் கடித வாயிலாகவும் கற்பித்து வெளிப்படுத்திய கோள்களைப் பொருட்படுத்தாது அவர் நாணுமாறு தமது பெருந்தகைமையும் பேருபகாரமும் பொதுநன்மையும் முன்பின் மாறுபடா வண்ணம் உற்றுநோக்கி விடையளித்தருளிய அச்சந்நிதானத்தின் அதி துல்லிய நுட்ப புத்தியும், பெருங்கருணையும் என்னாலும் மற்றெவராலும் எக்காலத்தும் மறக்கற்பாலன அல்ல. சைவ சமயிகள் எல்லாருக்கும் பயன்படும்படி தொடங்கிய இவ்வரிய பெரிய நற்கருமத்திற்கு விபூதி ருத்திராட்சத்திற்கு உரிமை பூண்ட சைவர்களாகிய சிலர் செய்த பேரிடையூறுகள் எல்லாவற்றையும் நீக்கி இதனை நிறைவேறும்படி செய்தருளிய எல்லாம் வல்ல முழுமுதற்கடவுளாகிய பரமசிவனுடைய திருவடிகளை மனம் வாக்குக் காயங்களால் சிந்தித்து வந்தித்து வணங்குகின்றேன்.

                                                         இங்ஙனம்
                                                     சுவாமிநாத பண்டிதர்.


2 கருத்துகள்:

 1. நான் சைவ சித்தாந்தம் குறித்து சில நூல்களைப் படித்தும் கேட்டும் இருக்கிறேன்.பாடல்கள் மற்றும் உரைகளின் பொருகள் புரியாமல் அளிக்கப்பட்ட விளக்கங்களில் தேடினால் அவை மேலும் சிக்கலான தமிழில் தருகிறார்கள். தமிழில் அதிக புலமை உள்ளவர்களுக்கே சரியாக அறிய முடியுமோ என்று அனைக்கத்தோன்றும்.

  எளிய தமிழில் விளக்க்ங்கள் தந்தால் படிபவர்களுக்கு பயன் படும் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்தப் பிரச்னையின் பின்னணியைச் சற்று கவனிக்க வேண்டும். கடந்த 200 ஆண்டுகளில் இந்தியக் கல்வி முறை குறிப்பாக தமிழகத்தில் கல்வி முறை முற்றிலும் மாறியுள்ளது.
   இதுபோன்ற தத்துவ படிப்பு மற்றும் ஆய்வுகளில் முற்காலத்தில் நடைமுறையில் இருந்த கல்வி முறை வேறு. இப்போது இருப்பது வேறு.
   முற்காலத்தில் இளம் வயதிலேயே தமிழில் இலக்கண, இலக்கிய பயிற்சிகள் அளிக்கப்படும். இது பின்பு பல இலக்கியங்களையும் அது தத்துவ இலக்கியமாக இருந்தால் கூட புரிந்து கொள்ள மிகவும் பயன் உடையதாக இருக்கும்.
   இலக்கிய, இலக்கணம் படித்த ஒருவர் தத்துவத் துறையில் நுழைய விரும்பினால் அதற்கு என தனி ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களின் வீடுகளில், கோயில்களில், மடங்களில், தனியார் சத்திரங்களில் அதற்கான பாடங்கள் நடக்கும்.
   உதாரணத்திற்கு கோடக நல்லுõர் சுந்தர சுவாமிகள் வரலாற்றைப் படித்தால் இது புரியும். இந்த போதனை முறை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை வலிமையுடன் இயங்கி வந்தது. ஆனால் அதன் பின் கொஞ்சம் கொஞ்மாக வலுவிழந்து தற்போது மிகச் சில இடங்களில் குறிப்பாக எனக்குத் தெரிந்த வரை திருநெல்வேலி, மதுரை, சென்னை, திருப்பேரூர் (கோவை) போன்ற இடங்களில் மட்டும் நடக்கிறது. அதுவும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் விரும்பினால் தான்.
   வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் இந்த தத்துவ ஆசிரிய மரபு சைவத்தைப் பொருத்தமட்டில், மாதவச் சிவஞான சுவாமிகளிடம் இருந்து பரவியது. அவர் காலத்திலும் அவருக்குப் பின்பும் வேறு பலரும் சித்தாந்த பாடம் எடுத்தனர். ஆக இவர்களிடம் கற்றோர், கற்றவர்களிடம் கற்றோர் என ஒரு சங்கிலித் தொடர்ச்சியாக இந்த போதனை முறை வந்து கொண்டிருந்தது.
   திராவிட இயக்கம், அதன் தொடர்ச்சியாக வந்த ஆங்கிலக் கல்வி முறை, தற்போதைய நுகர்வுக் கலாச்சாரம் இத்தனையும் தாண்டி இந்த போதனை முறை இப்போதும் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது.
   உங்கள் கேள்வி நியாயம் தான். ஆனால் சைவம் மட்டுமல்ல, சங்கர வேதாந்தம் ஆகட்டும், ராமானுஜ சித்தாந்தம் ஆகட்டும், வட மாநில தத்துவங்கள் ஆகட்டும் அனைத்துமே அவற்றுக்குரிய தொழில்நுட்ப மொழியில் தான், பரிபாஷையில் தான் இருக்கும். இருக்க வேண்டும்.
   ஆர்வம் உடையவர்கள் அவற்றைப் படிப்பதற்கு முன்பாக, கருவி நுõல்கள் சிலவற்றையாவது வாசிக்க வேண்டியது அவசியம். சித்தாந்தத்தைப் பொருத்தவரை, திருமுறைகளை எவ்வளவு ஆழ்ந்து ஓதுகிறோமோ அவ்வளவு துõரம் சித்தாந்தம் புரிய வாய்ப்புண்டு.
   திருமுறைகளைத் தொடர்ந்து, முதலில் உண்மை விளக்கம், திருவுந்தியார் என வரிசையாகப் படிக்க வேண்டிய நுõல்களின் பட்டியலே உண்டு. கட்டக்கடைசியில் தான் சிவஞான போதமும், பாஷ்யமும். இப்போதெல்லாம் எடுத்த உடனே சிவஞான போதத்தைப் படிப்போரும் உண்டு.
   நல்ல <விளக்க நுõல்களைத் தேடும் ஆர்வம், இத்துறையில் சிறந்த அறிஞரைத் தேடி அவரிடம் பாடம் கேட்கும் ஆர்வம் இவையும் அவசியம். மேலோட்டமான அணுகுமுறை தத்துவத் துறையைப் புரிய வைக்காது. சிக்கலாக்கவும், பீதியை அதிரிக்கவும் மட்டுமே அந்த அணுகுமுறை பயன்படும்.
   இது தத்துவத் துறைக்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும் பொருந்தும். தத்துவத் துறை வெகுஜனங்களுக்கானதல்ல. அவர்களையும் கடந்து ஓரளவு வாழ்வைப் பற்றி, அதன் போக்கைப் பற்றி சிந்திப்போருக்கு மட்டுமே தத்துவத் துறையில் ஆர்வம் பிறக்கும் என்பது நீங்கள் அறியாததல்லவே.

   நீக்கு

Translate