திங்கள், 26 நவம்பர், 2012

சித்த மருத்துவத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு : மண்ணின் மருத்துவத்திற்கு மகிமை குறைகிறதா?

செருப்படை, மசை இழுவன், நின்றார் சிணுங்கி, பவளப் புற்று, சீந்தில்.... இவையெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா?

 ஆட்கொல்லி நோயான எய்ட்ஸ், வெறிநாய்க்கடி, பால்வினை நோய்கள், மகப்பேறின்மை போன்ற நோய்களை தீர்க்கும் மூலிகைகள்.


மூலிகைகள் 


இவற்றைப் பயன்படுத்தி நோய் தீர்க்கும் சித்த மருத்துவத்தின் வளர்ச்சி இன்று என்ன நிலையில் உள்ளது?

தமிழக சித்தர்களால் உருவாக்கப்பட்ட சித்த மருத்துவத்திற்கு தொன்மை உண்டு.

அகத்தியரைத் தலைமையாகக் கொண்ட, 18 சித்தர்களின் அரிய கண்டுபிடிப்பான இம்மருத்துவம், இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கியமானது.

அகத்தியர் 


ஆங்கில முறை மருத்துவத்திற்கு மாற்றாக திகழ்கிறது. ஆங்கில முறை மருத்துவத்தால் கட்டுப்படுத்தப்படுவதாகக் கூறப்படும் புற்றுநோய், மஞ்சள் காமாலை, பால்வினை நோய், இதய நோய்கள் போன்ற முக்கியமான நோய்கள் சித்த மருத்துவத்திலும் தீர்க்கப்படுகின்றன.

ஆனால் மக்களும், அரசும் சித்த மருத்துவத்தை எவ்விதம் அணுகுகின்றனர் என்பதை வைத்தே, அதன் தற்போதைய வளர்ச்சியை நாம் அறிந்து கொள்ள முடியும்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் "ஆயுஷ்' துறை, ஆயுர்வேதா, யோகா, இயற்கை வழி மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவங்களை ஒருங்கிணைத்து செயல்படுகிறது.

நான்காம் இடத்தில்... 

இந்த துறை தெரிவித்த 2010 வரையிலான புள்ளிவிவரங்களின்படி, தேசிய அளவில், மருத்துவமனைகள், படுக்கைகள், மருந்தகங்கள், பதிவு செய்து கொண்ட டாக்டர்கள், கல்லூரிகள் என அனைத்து அளவிலும் ஆயுர்வேத மருத்துவம் முன்னணியில் உள்ளது.

இரண்டாம் இடத்தில், ஹோமியோபதியும், அதையடுத்து யுனானியும் அதைத் தொடர்ந்து நான்காம் இடத்தில் தான் சித்த மருத்துவ முறை உள்ளது.

 தேசிய அளவில், ஆயுர்வேதத்தில், நான்கு லட்சத்து 78 ஆயிரத்து 750 பதிவு செய்து கொண்ட டாக்டர்களும், இரண்டு லட்சத்து 46 ஆயிரத்து 772 ஹோமியோபதி டாக்டர்களும், 51 ஆயிரத்து 67 யுனானி டாக்டர்களும் உள்ளனர்.

நான்காம் இடத்தில் ஏழாயிரத்து 195 சித்தா டாக்டர்கள் உள்ளனர். இவர்களில் ஐயாயிரத்து 790 பேர் தமிழகத்திலும், ஆயிரத்து 401 பேர் கேரளாவிலும், நான்கே பேர் கர்நாடகாவிலும் பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் பாராமுகம் 

 இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளில், ஆயுர்வேதத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை சித்த மருத்துவ முறைக்கு மத்திய அரசு அளிப்பதில்லை என்பது, சித்தா டாக்டர்களின் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது.

பொதுவாக நாட்டின் வடபகுதியில் ஆயுர்வேதமும், தெற்கில் சித்தாவும் பழக்கத்தில் இருப்பதாக "ஆயுஷ்' இணையதளம் சொல்கிறது.

ஆனால், நடைமுறையில் தெற்கில் தமிழகம், கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு சித்த மருத்துவம் சென்றடையவில்லை என்றே சித்தா டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

என்ன காரணம்?  

வட மாநிலங்களில் மட்டுமின்றி உலக அளவில் சித்த மருத்துவம் சென்று சேராததற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.

ஆயுர்வேதம் மற்றும் யுனானிக்கான மருத்துவ நூல்கள் சமஸ்கிருதத்திலும், உருதிலும் இருந்தாலும், இவற்றிற்கு தேவநாகரி எழுத்துரு தான் பொது.

அதேநேரம் இவையிரண்டும் அதிகளவில், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படுகின்றன.

சித்த மருத்துவ நூல்களோ தமிழில் மட்டுமே உள்ளன. இவை பெருமளவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்படவில்லை.

சுவடிகள்


அதேபோல், சித்த மருத்துவம் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டுமே தீர்வு தரும் என்ற கருத்தும் நிலவி வருகிறது. ஆனால், அனைத்து வகை நோய்களையும் சித்த மருத்துவத்தால் தீர்க்க முடியும் என, அடித்துக் கூறுகின்றனர் சித்தா டாக்டர்கள்.

குறிப்பாக, எய்ட்ஸ் நோய்க்கு தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், சித்த மருத்துவத்தின் அடிப்படையில் "ரான் தெரபி' என்ற சிகிச்சை அளிக்கப்படுவதை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதில் "ஆர்' என்பது ரசகந்தி மெழுகையும், "ஏ' என்பது அமுக்குரா சூரணத்தையும், "என்' என்பது நெல்லிக்காய் லேகியத்தையும் குறிக்கும்.

புற்றுநோய், எய்ட்சுக்கு சித்தா  

இதயநோய்களுக்கு மதுமேகச் சூரணத்தை ஆங்கில முறை டாக்டர்களே பரிந்துரைத்து வருவதையும் சித்தா டாக்டர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவை தவிர இன்றைய காலகட்டத்தில் மிகப் பரவலாகக் காணப்படும் புற்றுநோய், மகப்பேறின்மை, கருப்பை நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ரசகந்தி மெழுகு, நந்தி மெழுகு, சந்தரச பற்பம், பால சஞ்சீவி மருந்து, கற்பூராதி
சூரணம் போன்ற மருந்துகளால் புற்றுநோய் தீர்க்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

விழிப்பு இல்லை 

 பக்கவிளைவுகளை அள்ளித் தரும் ஆங்கில முறை மருத்துவத்திற்கு சவால் விடும் வகையில் சித்த மருத்துவம் தீர்வுகளை தந்தாலும், மக்கள் மத்தியில் அதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்றே சித்தா டாக்டர்கள் வேதனைப்படுகின்றனர்.

அவசர கால யுகத்தில், பக்கவிளைவு வந்தாலும் பரவாயில்லை, உடனடியாக நோய் தீர வேண்டும் என்ற பரபரப்பால் தான் சித்த மருத்துவத்தை மக்கள் நாடுவதில்லை என்கின்றனர்.

அதேநேரம், இன்றைய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாத்திரை, "டானிக்' என, சித்த மருத்துவமும் முன்னேறியுள்ளது.

பக்க விளைவுகளற்ற சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவம், இன்று சர்வதேச அளவில் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.

ஆங்கில மருத்துவத்தில் நோயைக் கண்டறிந்து, சித்தா போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளை அணுகி நோய் தீர்க்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.

என்னென்ன நோய்களுக்கு சிசிச்சைகள்? 

தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில்,
நீரிழிவு , அடிநா அழற்சி (டான்சில்), குருதி அழல் நோய் (ஹைபர் டென்ஷன்), காமாலை (ஜான்டிஸ்), கல்லீரல் நோய், பித்தப்பை கல் , கல்லடைப்பு, நபும்சகம் (ஆண்மையின்மை), மலடு (மகப்பேறின்மை), சூலக நீர்க் கழலை (ஓவரியன் சிஸ்ட்), நடுக்கு வாதம் (பார்க்கின்சன் நோய்), முகவாதம் (பேஷியல் பாரலிசிஸ்), கண் நோய்கள் உள்ளிட்ட பல முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் புற்றுநோய், "சொரியாசிஸ்', மஞ்சள் காமாலை, வெண்படை, நீரிழிவு, வலி குன்மம் (பெப்டிக் அல்சர்) போன்ற நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீடிக்கும் தடைகள் 

இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் சித்த மருத்துவப் பிரிவுத் துணைத் தலைவர் ஸ்டான்லி ஜோன்ஸ் கூறுகையில்,"சித்த மருந்துகளைத் தயாரிக்கும் முறையில் சில தடைகள் இன்னும் நீடிக்கின்றன. கஸ்தூரி, புனுகு போன்ற மருந்துகள் இப்போது கிடைப்பது அரிதாகி வருகிறது. அதேநேரம், ஆமை ஓடு, மான் கொம்பு போன்றவற்றை சேகரிக்க முடியாதபடி வனத்துறை சட்டப்படி அரசு தடை விதித்துள்ளது. இதனால், சில மருந்துகளின் உரிய பொருட்களை சேர்க்க முடியாத நிலை உள்ளது' என்றார்.

அதிகரிக்கும் நம்பிக்கை 

டாக்டர் என்ற அங்கீகாரம், ஆங்கில முறைக்கு இணையான நல்ல சம்பளம், அரசுப் பணியிடங்களில் வேலை கிடைக்கும் வாய்ப்பு, அவ்வாறு வேலை கிடைக்காவிட்டாலும் கூட தானே மருத்துவமனை
அல்லது மருத்துவ சேவை துவங்கி நடத்தும் வாய்ப்பு இவற்றால் தான் சித்த மருத்துவ படிப்புக்கு வந்ததாக பல மாணவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம், பாரம்பரிய சித்த மருத்துவத்தை மேற்கொண்டு வரும் குடும்பங்களில் இருந்தும் மாணவர்கள் இத்துறையில் படித்து வருகின்றனர்.

உள்கட்டமைப்பு மேம்படுமா? 

சித்த மருத்துவ டாக்டர்கள் சுரேஷ், அருள் செல்வம் ஆகியோர் கூறுகையில்,"அரசு சித்தா கல்லூரிகளில் நிரப்பப்படாத டாக்டர் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். பல கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். சித்த மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகம் சீரமைக்கப்பட வேண்டும். அரசின் தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின் கீழ் உள்ள வருமுன்காக்கும் திட்டத்தில் சித்தா டாக்டர்களை நியமிக்கலாம்' என்று தெரிவித்தனர்.

(தினமலரில் வெளியான நாள்: 24-04-2012)

2 கருத்துகள்:

Translate